சிங்களத்தில்: லங்கா பத்திரிகை
தமிழில் : எம்.எச். எம் நியாஸ்
கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடக கலந்துரையாடலொன்றை நடத்தினர். 20 ஆம் யாப்புத்திருத்தத்துக்கு வாக்களித்தமைக்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக்கோரும் நோக்கத்திலேயே இக்கலந்துரையாடல் நடத்தப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட அந்தக் கலந்துரையாடலில் அவ்வாறான விடயம் பேசப்படவில்லை. மாறாக ‘முஸ்லிம்களது கொரோனா மரணத்தின்போது அவ்வுடல்களை எரிப்பதில்லை’ என்ற வாக்குறுதியை நம்பியே தாம் இருபதாவது யாப்புத் திருத்தத்துக்கு வாக்களித்ததாக அவர்கள் கூறினார்கள்.
இருபதாவது யாப்புத் திருத்த வாக்களிப்பு நடைபெறும்போது அது பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. ‘நாமே நாட்டுப்பற்றுமிக்கவர்கள் ‘என்று மார்தட்டிப் பேசிய எவரும் அந்த விடயம் பற்றி மூச்சுக்கூட காட்டவில்லை. ஆனால் இப்போது உண்மை வெளியாகிவிட்டது.
இருபதை பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிகொள்ள ஜனாதிபதி எந்த அளவில் கீழிறங்கி வந்துள்ளார் என்பதை இப்போது எமக்கு விளங்கிக் கொள்ள முடியும். இருபதாவது யாப்புத்திருத்தத்தை வாக்களிப்புக்கு விடும்போதே அதற்குத் தேவையான பெரும்பான்மை வாக்குகள் கிடைக்குமென்பதை அரசு ஏற்கனவே அறிந்து வைத்திருந்தது. அதைப் பெற்றுக் கொள்வதற்காக இரட்டை பிரஜாவுரிமை பற்றி போடப்பட்டிருந்த நிபந்தனைகளைக்கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களது உச்சகட்ட வாக்குகள் தமக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கையே அதற்கான காரணமாகும்.
முஸ்லிம்களது கொரோனா மரணங்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்பதல்ல இங்குள்ள பிரச்சினை. அது ஒரு அரசியல் துரும்பொன்று மட்டுமே. அதை இன்னும் பல ‘டீல்’களுக்காக பயன்படுத்திக் கொள்ளவே இந்த முயற்சி நடைபெறுகிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தின் கலாசார உரிமையொன்றை அரசியல் சூதாட்டத்தில் பந்தயம் கட்ட வைப்பதே அதன் நோக்கம். வெட்கம், மானம், சூடு, சொரணையற்ற இந்த ஆட்சி அதை செய்து முடித்தது. தனிச் சிங்கள அரசொன்றுக்காக வாக்களித்த வாக்காளர்கள் அப்பாவிகளாக ஓரங்கட்டப்பட்டனர். பொதுசன முன்னணியின் ஆரம்ப காலம் தொடக்கம் தமது அதிகாரத் தேவைகளுக்காகவே இந்தப் துரும்பு பயன்படுத்தப்பட்டது. அதற்கு சஹ்ரானின் குண்டு ஒரு அருளாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற கருத்து வித்திடப்பட்டது. முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள இனவாத உணர்வுகள் மேலோங்குவற்கும் அந்தக் காரணம் உச்ச மட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.
அதன் பின்னணியில் ‘மலட்டுக்கொத்து’, மலடாவதற்கான சத்திர சிகிச்சை, மலடாவதற்கான மாத்திரை போன்ற கதைகள் பரப்பப்பட்டன. அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மிக மோசமான வழியில் இனவாதம் தூண்டப்பட்டது. அதன் பெறுபேறாகவே ஜனாதிபதித் தேர்தலும் வெற்றி கொள்ளப்பட்டது.
இருபதுக்கு வாக்களிப்பதன் மூலம் இரு சாராரும் அரசும் ‘டீல்’களை செய்துகொண்டனர். அடுத்த பக்கத்தில் ராஜபக்ஷாக்கள் ‘டீல்’ வைத்துக் கொண்டனர். இவற்றை அறியாத சிங்கள மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் இரண்டாகப் பிரிந்துகொண்டனர்.
அதன்பிறகு கொரோனாவின் முதலாம் அலை நாட்டுக்கு வந்தது. அத்துடனே முஸ்லிம்களது பிரேதங்களை எரிக்காது அடக்கம் செய்ய வேண்டுமென்ற பிரச்சினை தலை தூக்கியது. தனிமைப்படுத்தலின் பழைய சட்டவிதிமுறைகள் மாற்றப்பட்டு அதற்காக வேண்டி புதிய வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது. அதற்குப் பொருத்தமான முறையில் சுகாதாரப் பிரிவின் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அதுவும் அரசியலுக்குத் தேவையான வகையில் முடிவெடுக்கப்பட்டது. பொதுத் ‘தேர்தல்’ முடியும் வரை முன்பு போலவே நாடு பூராகவும் இனவாதம் ‘தூவப்பட்டது’. பகிரங்கமாக ‘எமக்கு முஸ்லிம்களது வாக்குகள் தேவையில்லை’யென்று கூறப்பட்டது. ஜனாதிபதி பதவியேற்பு வைபவத்தின் போது ‘சிங்கள மக்களுக்கான ‘ஒரே தலைவர்’, சிங்களவர்களுக்கான ‘ஒரே அரசை’ உருவாக்கியுள்ளேன் என்றெல்லாம் தைரியமாக பேசப்பட்டது. அவருக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சிக்கடலில் குளிக்கலானார்கள். அது மட்டுமன்றி சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் உச்சமட்டத்தில் அரசைப் பாராட்டினர்.
சில வாரங்கள் கடந்ததும் ஜனாதிபதி கோட்டாபய அரசியலமைப்பில் கை வைத்தார். பத்தொன்பதில் பெற்றுக்கொண்ட அதிகாரம் போதவில்லையென்று கூறி முழுமையான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இருபதைத் திருத்தியமைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அதற்காக நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் சற்று சிரமம் ஏற்பட்டது. அரசாங்கத்தில் இருக்கும் சிலர் முன்வைத்த நிபந்தனைகள் காரணமாகவே அந்நிலை ஏற்பட்டது. அவர்களிடம் ஏற்கனவே நூற்றி ஐம்பதுக்கு ஒன்று குறைவாக (149) வாக்குகள் மட்டுமே இருந்ததே அதற்கான காரணமாகும். அந்த நிலை தொடர்ந்திருந்திருக்குமாயின் அவர்களுக்கு அந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
தற்போதைய அரசாங்கத்தைப் பதவியில் அமரவைத்த சில கௌரவமிக்க பிக்குகள் கூட அரசுக்கு சில நெருக்கடிகளை ஏற்படுத்த முற்பட்டனர். எனினும் அவற்றில் எதனையும் பொருட்படுத்தாமல் தமக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உட்படுத்தி இருபதை வெற்றிகொள்வதில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வெற்றியும் கண்டது. முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, 156 வாக்குகளைப் பெற்று தமது நாடகத்தை அரசு வெற்றிகரமாக அரங்கேற்றியது. நாடு மிக மோசமாக முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கிக் கொண்டிருந்த வேளையில், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீனின் பாராளுமன்ற அங்கத்தவர்கள் ‘இருபதுக்கு’ சார்பாக வாக்களித்தமை இலங்கையில் நடைபெற்ற ஆச்சரியாமனதோர் அசம்பாவிதமாகும். தாமே மிகக்கடுமையாக எதிர்த்துக்கொண்டிருக்கும் ஒரு விடயத்தை துரும்பாகப் பாவித்து அரசு தமது நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டமை அரசு செய்த பாரதூரமான தவறாகும்.
சில மாதங்களுக்குப் பின்னர் இந்த விடயம் நாட்டுக்குப் பகிரங்கமாகிவிட்டது. அதிலும் ஒரு விடயம் மட்டுமே வெளியானது. இருபதுக்கு சார்பாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு மேலும் என்னென்ன கொடுக்கப்பட்டது என்பதும், எவற்றுக்காக அவர்கள் உடன்பட்டார்கள் என்பதும் இன்று வரை இரகசியமாகவே இருக்கிறது. கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்யவும் முடியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறியதன் பின்னர்தான் தாமதித்தேனும் பூனைகள் சாக்கிலிருந்து ஒவ்வொன்றாக வெளியே பாய்கின்றன. பிரதமர் அவ்வாறு கூறிய மறுநாளே அரசாங்கத்திலுள்ள மற்றுமொரு ராஜாங்க அமைச்சர் ஒருவர் ‘அவ்வாறான தீர்மானமொன்று இதுவரை எடுக்கப்படவில்லை’ என்று கூறினார். ஒரு சில தினங்களுக்குள் அது விடயம் பற்றிய அறிக்கை வெளியானது. அதன் தலைவர் பேராசிரியர் திருமதி ஜெனிபர் பெரேரா தமது அறிக்கையை கடந்த டிசம்பர் (2020) மாதமே அரசாங்கத்திடம் ஒப்படைத்ததாகவும், அதன்படி சில நிபந்தனைகளின் அடிப்படையில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி உண்டென்றும் விபரித்தார். ஆனால் அந்த ‘மாற்று முடிவுக்கான’ வர்த்தமானியை பிரசுரித்து ஏற்கனவே இது விடயத்தில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யாதிருப்பதே இப்போதுள்ள பிரச்சினையாகும். அது விடயம் சம்பந்தமாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க குறித்த குழுவுக்கு முடியும். ஆனால் ஜனாதிபதியின் கட்டளை வந்தால் மட்டுமே குறித்த அமைச்சருக்கு அது விடயத்தில் மாற்று நடவடிக்கை மேறகொள்ள முடியும். அது சம்பந்தமாக, இன்றுவரை ஜனாதிபதிக்கு முடிவெடுக்க நேரமில்லையோ தெரியவில்லை.
இந்தப் பிரச்சினையை மேன்மேலும் ஒரு அரசியல் துரும்பாக பயன்படுத்துவதற்காகத்தான் இந்த அளவில் தாமதம் ஏற்படுகின்றதோ தெரியவில்லை. ஆரம்பத்தில் இந்த விடயத்தை அரசு ‘உதைப்பந்தாக’ பாவித்தது. தமக்கு அதிகாரம் தேவைப்படும்போது, மக்களுக்குள் தமது கருத்தைத் ‘திணித்து’ மக்களிடமிருந்து வாக்குகளை அரசு பெற்றுக்கொண்டது. ‘இருபது’க்காக வாக்குகள் தேவைப்படும்போது அதை (முஸ்லிம்களது கொரோனா சடலங்களை எரிக்கத் தேவையில்லை என்ற விடயத்தை) மற்றுமொரு தடவை பயன்படுத்திக் கொண்டது. மீண்டுமொரு தடவை அரசு இது விடயத்தில் தமது ‘பணி’யை இவ்வாறே செய்து கொள்வதிலும் கரிசனை காட்டுகிறது. இவ்வாறே மக்களது பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அவற்றை முறையாகத் தீர்க்கும் முறையை அரசு கைவிட்டுக் கொண்டே வருகிறது. தற்போதைய அரசு மட்டுமன்றி வரலாற்று ரீதியாக இலங்கையை நீண்ட காலமாக ஆட்சி செய்துவரும் அனைத்து அரசுகளும் இவ்வாறுதான் தமது ‘பணி’களை மேற்கொண்டு வந்துள்ளன. வருகின்றன.
இது போன்ற விடயங்களால் இரு குழுக்களுக்கிடையில் இனவாதத்தையும் குரோதத்தையும் வளர்த்து அதன் மூலம் பயனடைவதே அரசின் நோக்கமாகும். அதன் மூலம் தமது அதிகாரத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே ‘டீல்’ வைத்துக் கொள்வதற்கு முயற்சிகள் மோற்கொள்ளப்படுகின்றன.
இருபதுக்கு வாக்களிப்பதன் மூலம் இரு சாராரும் அரசும் ‘டீல்’களை செய்துகொண்டனர். அடுத்த பக்கத்தில் ராஜபக்ஷாக்கள் ‘டீல்’ வைத்துக் கொண்டனர். இவற்றை அறியாத சிங்கள மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் இரண்டாகப் பிரிந்துகொண்டனர். சில வேளைகளில் அவ்விருசாராரும் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டனர். நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் ஒருவரோடொருவர் மோதிக்கொள்வர். இந்த அடிப்படையில் மக்களுக்கு மத்தியில் இனவாதத்தை பரப்பிக் கொண்டே ஆளும் கட்சியினர் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். இந்நிலை எதிர்காலத்திலும் தொடருமானால் அதன் மூலம் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். இது ஓரிரண்டு சம்பவங்களால் மட்டும் முற்றுப் பெறப்போவதில்லை.
பல மாதங்களாக இரகசியமாகப் பேணப்பட்ட இது போன்ற பில விடயங்கள் இருக்க முடியும். இப்போதாவது நாட்டின் பொதுமக்கள் இந்த விடயங்கள் பற்றி நன்கு தெளிவு பெற வேண்டும். இனவாதத்திற்கு உரமிடும் அரசின் தேவைகள் பற்றி நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். அவற்றை நன்கு புரிந்து கொள்வது மட்டுமன்றி அது போன்ற நடவடிக்கைகளை முறியடிக்க மும்முரமாக ஈடுபடவேண்டும். அதற்காக, இனவாதத்துக்கு எதிரான தேசிய ஒற்றுமையின் திசையில் வீறு நடைபோடும் அரசியலில் ஈடுபட வேண்டும். – Vidivelli