கவிஞர் அஹ்னாப் சிறையில் உடல், உள ரீதியாகவும் பாதிப்பு
எலியும் கடித்துள்ளது; மன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இளம் கவிஞரான அஹ்னாப் ஜெஸீமை சிறையில் எலி கடித்துள்ளது. அவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் உளவியல் ரீதியிலும் உடலியல் ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தகுந்த வைத்திய உதவிகளை வழங்க வேண்டும் என அஹ்னாப் ஜெஸீமின் சார்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர கோரிக்கை விடுத்தார்.
அஹ்னாப் ஜெஸீம் எழுதிய நவரசம் எனும் புத்தகத்தில் தீவிரவாத கருத்துகள் அடங்கியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பொய். இந்தப் புத்தகம் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் தீவிரவாதத்தைப் போதிக்கும் எந்தக் கருத்தும் உள்ளடக்கப்படவில்லை என்றும் சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர சுட்டிக்காட்டினார்.
சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு பதில் நீதிவான் திலானி பெரேரா, கவிஞர் அஹ்னாப் ஜெஸீமுக்கு தகுந்த வைத்திய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இவரது வழக்கு விசாரணைகளை சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர தன்னிச்சையாக முன்வந்து ஆஜராகி நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வாதங்களை பரிசீலித்த நீதிவான் வழக்கினை மார்ச் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். – Vidivelli