வெலிகமயில் இரண்டரை மாத குழந்தையின் ஜனாஸா பலவந்தமாக எரிப்பு

0 619

எம்.ஏ.எம்.அஹ்ஸன்

முஹம்மத் என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தை மாத்தறை பொது வைத்தியசாலையில் உயிரிழந்து போனதை குழந்தையின் தந்தை மொஹமட் நியாஸிற்கு (வயது 39) தெரிவித்த அதிகாரிகள் “கொஞ்சம் பொறுமையா இருங்க, பிள்ளையின் பி.சி.ஆர் மாதிரியை காலிக்கு அனுப்பியிருக்கோம். இரண்டு மணி நேரத்தில் பெறுபேறு வந்துரும். நாங்க ஜனாஸாவ கொண்டு போக அம்புலன்ஸ் ஒண்டும் தாறோம்” என்று ஆறுதலாக பேசியதாக குழந்தையின் தந்தை கண்ணீர் மல்க கூறுகின்றார்.

இந்நிலையிலேயே தந்தை நியாஸிற்கோ அவரது மனைவிக்கோ எந்தவித அறிவித்தலும் வழங்காமல் கையொப்பம் எதுவும் பெறாமல் குழந்தையை எரித்திருப்பதாக தந்தை நியாஸ் கூறுகின்றார்.

குழந்தை உயிரோடு இருக்கும்போது மாத்தறையில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நெகடிவ் என்று இருக்க குழந்தை இறந்த பின்னர் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பெறுபேறில் பொஸிடிவ் பெறுபேறு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் அதற்கான பெறுபேறு அறிக்கையை இதுவரை தனக்குக் காட்டவில்லை என்றும் தந்தை கூறுகின்றார்.

மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பிரதேசத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமையன்றே இந்த வேதனைக்குறிய சம்பவம் நடந்துள்ளது.

ஒக்டோபர் 30 அன்று மாத்தறை வைத்தியசாலையில் பிறந்த முஹம்மத், பிறக்கும்போதே ஒரு சில இதயக் கோளாறுகளுடன் பிறந்த குழந்தை ஆவார்.

மாத்தறை, காலி மற்றும் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைகளில் குழந்தை சிகிச்சை பெற்று வந்துள்ளது. மீலாதுன் நபி விழா அன்று பிறந்ததால் குழந்தைக்கு முஹம்மத் என்று பெற்றோர்கள் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்து ஒன்பது வருடங்களின் பின்னர் பிறந்த குழந்தையே முஹம்மத் ஆவார்.

தாய்க்கு கொரோனா!

குழந்தையின் தாய் நீரிழவு மற்றும் குருதி அழுத்தம் போன்றவற்றுக்காக சிகிச்சை பெறுபவர். இதற்கான சிகிச்சைகளை தொடர்ச்சியாக பெற்றுவரும் அவர் கடந்த மாதம் 25 ஆம் திகதி தீடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் தனியாக இயங்க முடியாத அவருக்கு உதவியாக இருக்க 2500 ரூபாய் செலவில் பெண் ஒருவரை நியாஸ் நியமித்திருந்தார். 26 ஆம் திகதி மாத்திரமே அந்தப் பெண் நியாஸின் மனைவியோடு இருந்தார்.

நான்கு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நியாஸின் மனைவி ஓரளவு சுகமடைந்து கடந்த இரண்டாம் திகதி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார். ஏழாம் திகதி நியாஸிற்கு வந்த தெலைபேசி அழைப்பில் நியாஸின் மனைவிக்கு உதவியாக இருந்த பெண்ணிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் பணிக்கப்பட்டார். இந்நிலையில் நியாஸின் மனைவிக்கு எந்தவித கொரோனா அறிகுறிகளும் இல்லாத நிலையில் அவர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். குழந்தையை நியாஸ் வீட்டில் வைத்து பராமரித்து வந்தார்.

நியாஸிற்கு செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று சொல்லப்பட்டது. நியாஸின் மனைவிக்கு கொரோனா பொஸிடிவ் என்று சொன்னபோதும் அதற்கான பெறுபேறு அறிக்கையை நியாஸிடம் காட்டவில்லை. இப்போது தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் தாய்க்கு குழந்தை இறந்த விடயமும் அவர் எரிக்கப்பட்ட விடயமும் தெரியாது.

“நான் அவக்கு அதிகமா கோல் எடுக்குறதில்ல. எப்ப கோல் எடுத்தாலும் பிள்ள என்ன செய்துன்டுதான் கேட்பா. எனக்கு என்ன சொல்றதுன்டு தெரியயில்ல” என்று முஹம்மதின் தந்தை தனது கையறுநிலையை தெரிவிக்கிறார்.

எப்படியும் குழந்தையை எரிக்கத்தான் போகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட நியாஸின் உறவினர்கள் மற்றும் அவரின் மனைவியின் சகோதரர்கள் என்போர் தகனம் செய்யும் இடத்திற்குச் சென்று ஜனாஸா தொழுகையை மாத்திரம் நிறைவு செய்திருக்கிறார்கள். இது குழந்தையின் உடலை எப்போது தருவார்கள் என்று பிணவறைக்கு வெளியே நியாஸ் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தருணங்கள் ஆகும்.

முஹம்மதின் ஜனாஸாவை எப்படியாவது அடக்கம் செய்ய வேண்டும் என்று நியாஸின் உறவினர்கள் சகல விடயங்களையும் பின்தொடர்ந்து கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் என்போர் ஜனாஸாவை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகளை செய்தனர். அவையெல்லாம் தோல்வியில் முடியவே நியாஸின் உறவினரும் மௌலவியுமான ஆபிர் என்பவர் தகனம் செய்யும் இடத்தில் ஜனாஸா தொழுகையை நிறைவு செய்ய முஹம்மதின் ஜனாஸா அக்கினியில் சங்கமம் ஆனது.

இதேவேளை இக்குழந்தையின் ஜனாஸாவை அடக்கம் செய்ய தருமாறு வெலிகம நகர சபை தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளருமான ரெஹான் ஜயவிக்ரம பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் தனது முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டமை கவலை தருகிறது என அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெலிகம பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் எனினும் அடக்கம் செய்வதற்கு எந்தவித வழிகளுமில்லை என அவர் தெரிவித்ததாகவும் ரெஹான் மேலும் குறிப்பிட்டுள்ளார். இக் குழந்தையின் தந்தை இரண்டு மாத காலமாக தொழிலை இழந்துள்ள நிலையில் அவருக்கு நிதியுதவி செய்யும் வேலைத்திட்டம் ஒன்றையும் நகர சபை தலைவர் ரெஹான் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இக் குழந்தையின் ஜனாஸா விடயத்தில் முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரியவும் முயற்சிகளை மேற்கொண்டதாக அறிய முடிகிறது.

இதனிடையே, இக்குழந்தையின் ஜனாஸா எரிக்கப்படும் காட்சி வீடியோ பதிவாக சமூக ஊடகங்களில் வெளிவந்தது. ஜனாஸாவை ஒரு சிறிய பெட்டியில் வைத்து அதனை மஞ்சள் நிற பொலித்தீன் பையினால் சுற்றியே தகனச் சாலைக்கு கொண்டுவந்திருந்தனர். பச்சிளம் குழந்தையின் ஜனாஸாவுக்கான இறுதி மரியாதையைக் கூட வழங்காத வகையில் நடந்து கொள்ளும் இவர்களது ஈவிரக்கமற்ற தன்மையை என்னவென்பது? – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.