கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா
நாளையென்பது என்றுமே இன்றின் நகலல்ல. மாற்றம் என்ற ஒன்றைத்தவிர மற்ற எல்லாமே மாறுவன. எனவே இலங்கையின் அரசியல், பொருளாதாரம், சமூக நிலை எல்லாமே நாளை மாற்றமடைவது நிச்சயம். அது எவ்வாறு மாற்றமடையும் என்பதுதான் ஆராயப்பட வேண்டியதொன்று. எவ்வாறு மாற்றமடைந்தாலும் முஸ்லிம்களும் அதற்கேற்ப மாறவேண்டியது அவசியம். நேற்றும் இன்றும் முஸ்லிம்கள் இலங்கையில் அனுபவித்தவைகளைப் பாடங்களாகக் கொண்டு இம்மாற்றங்கள் ஏற்படவேண்டும். அவ்வாறான மாற்றங்களையிட்டுச் சில சிந்தனைகளை இக்கட்டுரை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
நாளைய இலங்கை இரண்டு விதமாக அமையலாம். ஒன்று, எல்லா இனமக்களும் சம உரிமைகளுடன் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு ஜனநாயக நாடாக மீளலாம். அல்லது பாகிஸ்தான் போன்றோ மியன்மார் போன்றோ ஒரு குறிப்பிட்ட மதத்தையே அரசமதமாக அமைத்து இராணுவத்தின் அனுசரணையுடன் ஆட்சிசெய்யும் ஓர் அரசாங்கத்தைக் கொண்ட நாடாக மாறலாம். தற்போது நிலவும் அரசியல் நிலமைகளை நோக்கின் அவை இரண்டாவது திசையையே சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறான ஒரு மாற்றத்தைத் தடுப்பதற்கு இன்றிருக்கும் எதிரணிகள் பலமிழந்து காணப்பட்டாலும் நாட்டின் பொருளாதாரமே கொறோனாவுடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்வதற்குக் களமிறங்கியுள்ளதுபோற் தெரிகிறது.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கடந்த பத்து மாதங்களுக்கு முன் இருந்த நிலையைவிட இன்று நிலைமை மோசமாகி விட்டது. ஆகவே, கொறோனாவைத் தடுப்பதற்காகக் இப்போது கடும் கட்டுப்பாடுகளை விதித்தால் பொருளாதாரக் கஷ்டங்கள் பெருகுமே ஒழிய குறையாது. ஆனால் பொருளாதாரத்தை வளர்ப்பதற்காக நாட்டை முற்றாகத் திறந்துவிட்டால் கொறோனா அதன் புதிய உருவத்தில் பரவுவதைத்தடுக்கவும் முடியாது. ஆட்சியினர் இருதலைக் கொள்ளி எறும்பாகிச் செய்வதறியாது திண்டாடுகின்றனர்.
கொறோனாவும் பொருளாதாரமும் ஒன்றாக இணைந்து மக்களிடையே அரசாங்கத்தின்மேலுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்வதுமல்லாமல் எதிர்ப்பையும் வளர்க்கும். அந்த எதிர்ப்பு வருமென்று அவர் முன்கூட்டியே அறிந்துவைத்துள்ளார். அதனாலேதான் பல காரணங்களைச் சாட்டாகக்கூறி இராணுவத்தின் நடமாட்டத்தை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பொது மக்களின் எதிர்ப்பு பெருகும்போது அதனைத் திசை திருப்புவதற்காக ஒரு புதிய எதிரியை இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது. அந்த எதிரிதான் முஸ்லிம்கள்.
இந்த ஆபத்தை உணர்ந்து ஜனநாயக அடிப்படையிலான ஓர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சிங்கள பௌத்தர்களிடையே பல சக்திகள் இப்போது உருவாகின்றன. சிறந்த கல்விமான்கள், யதார்த்த சிந்தனையாளர்கள், பௌத்த துறவிகள், சமூகநல ஆர்வலர்கள், சர்வமானிட உணர்வு கொண்ட எழுத்தாளர்கள் என்றவாறு பல துறையினர் ஜனநாயக மாற்றம்வேண்டிக் குரலெழுப்புகின்றனர். அவர்களின் குரல்கள் பொதுமக்களின் செவிகளை எட்டாவண்ணம் தடுப்பதற்கு ஆட்சியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அத்தடைகளையும் மீறி அக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
முஸ்லிம்களை எதிர்நோக்கும் கேள்வி இதுதான். இராணுவ அதிகாரத்தைக் கொண்டு ஏதேச்சதிகாரத்துடன் இயங்கும் நாளைய இலங்கையில் கைகட்டி வாய்பொத்தி, கூனிக்குறுகி, எல்லாம் இறைவனின் செயல் என்று பாரத்தை இறைவன்மேல் சுமத்திவிட்டு ஒதுங்கி இருப்பதா, அல்லது ஜனநாயக மாற்றம் வேண்டும், அங்கே யாவரும் அவரவர்களின் கலாச்சாரத் தனித்துவத்துடன் சுதந்திரமாகவும் சம உரிமைகளுடனும் நீதிக்குத் தலை வணங்கி வாழ்வதற்காக மாற்றம்காணத் துடிக்கும் பௌத்த, கிறித்தவ, இந்து மார்க்க மக்கள் குழுக்களுடனும் எந்த மார்க்கத்தையுமே தழுவாது யதார்த்த சிந்தனையுள்ள மனிதர்களுடனும் சேர்ந்து வெளியிறங்கிப் போராடுவதா?
தமிழினத்துக்காவது தட்டிக்கேட்கத் தமிழ்நாடும் அதனூடாக இந்தியாவும் இருக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை இரவோடிரவாக ஆட்சியாளர்கள் உடைத்தெறிந்ததும் மறுநாள் காலை அவசர அவசரமாகப் புதிய தூபிக்கு அடிக்கல் நாட்டியதும் இந்தியாவின் தலையீட்டினால் என்பது இப்போது தெளிவாகி விட்டது. இவ்வாறு முஸ்லிம்களின் சார்பாக அழுத்தம் கொடுக்க எந்த நாடும் இல்லை. இன்றிருக்கும் ஐம்பத்தேழு முஸ்லிம் நாடுகளும் தனித்தனியாகவோ ஒன்று சேர்ந்தோ உலக அரங்கில் ஓர் அணுவையேனும் அசைக்கமுடியாது. இந்த உண்மையை உலகெங்கும் வாழ்கின்ற சிறுபான்மை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
ஆகவே, இலங்கை முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளுக்கு இலங்கைக்குள்ளேதான் பரிகாரம் காண வேண்டி இருக்கிறது. அதற்கு ஒரே வழி இரண்டாவது வினா காட்டும் வழியே. நாளைய இலங்கையில் ஜனநாயகம் மறுபிறவி எடுக்க வேண்டும். அதற்கு முஸ்லிம்கள் பாடுபட வேண்டும். மற்றவர்கள் பாடுபட அதன் பயனை அனுபவிப்பவர்களாக முஸ்லிம்கள் இருக்கக்கூடாது.
நாளைய இலங்கையில் முஸ்லிம்களின் அடுத்த பிரச்சினை இனவொற்றுமை. அதாவது, முஸ்லிம்களுக்குள்ளே உள்ள ஒற்றுமைக்கும் மேலாக மற்றைய இனங்களுடன் எவ்வாறு முஸ்லிம்கள் இணைவது என்பதே முக்கியம். இதைப்பற்றி மேடைகளில் வாய்கிழியப் பேசியகாலம் முடிந்துவிட்டது. செயலிலே காட்டவேண்டிய காலம் வந்துவிட்டது. இது ஒரு புதிய பிரச்சினை. ஏனெனில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மற்றைய இனங்களுடன் இரண்டறக்கலந்து வாழ்ந்த முஸ்லிம்கள் அண்மைக் காலங்களில் ஒதுங்கிவாழத் தொடங்கியுள்ளனர். இந்த ஒதுக்கத்தை இலங்கைக்குள்ளேயே வாழும் முஸ்லிம்கள் உணராவிட்டாலும் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. அந்த ஒதுக்கத்தைத் தோற்றுவித்த காரணிகள் யாவை, அவற்றை எவ்வாறு நீக்கலாம் என்பவற்றை ஆராய்ந்து அதற்குரிய செயற் திட்டங்களைத் தீட்டுவது மிகமிக அவசியம். நாங்கள் எப்படியும் உடுப்போம், எப்படியும் பேசுவோம், எதனையும் நிர்மாணிப்போம், எங்கேயும் கூடுவோம், அது எங்கள் அடிப்படை மனித உரிமை என்று வாதாடுவதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால் அந்த வாதாட்டத்துக்கு மத்தியில் யாருடன் வாழ்கிறோம், யாருடைய உறவுகளை நாம் பாதிக்கிறோம், எங்களுடைய செய்கைகள் மற்றவர்களை எவ்வாறு புண்படுத்துகின்றன என்ற சமூகத்தைப் பற்றிய சிரத்தையும் சிந்தனையும் பாழ்படுகிறது. இந்தச் சிந்தனையற்ற போக்கே முஸ்லிம்களின் ஒதுக்கத்துக்கு முக்கிய காரணம்.
முடிவாக ஒன்று. நாளைய இலங்கையில் முஸ்லிம் பெண்களின் வகிபாகம் அளப்பரியது. தாயின் மடியிலே தனயனின் சொர்க்கம் என்று நபிகளார் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. அதனுள் அடங்கியுள்ள தத்துவம் கடல்போன்றது. இதற்கு முன் வெளிவந்த ஒரு கட்டுரையிலும் ஏன் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் ஐந்து பாடம் சித்தியடைந்த முஸ்லிம் பெண்களுக்கு ஆசிரியத் தொழில் வழங்கினாரென்று விளக்கப்பட்டது. நபி பெருமானாரின் போதனைதான் அவரைத் தூண்டியது. முஸ்லிம் தலைமைத்துவத்தில் அவர்களுக்கும் பங்குண்டு. கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் அவர்கள் அடைந்த முன்னேற்றம் வியக்கத்தக்கது. ஏன் அவர்கள் அரசியலுட் புகமுடியாது?