ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கடந்த சனிக்கிழமை அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போது தனக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய, ஜனாதிபதி கோத்தாபய ஆகிய இரு பக்கங்கள் பற்றியே அவர் சுட்டிக்காட்டியிருந்தார். பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்தபோது நாட்டின் விவகாரங்களில் தான் எவ்வாறு கடுமையாக நடந்து கொண்டேனோ அதேபோன்று ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலத்திலும் நடந்து கொள்ள வேண்டும் என சில பௌத்த பிக்குகள் தன்னிடம் வேண்டுகோள்விடுத்திருந்ததாகவும் தேவையேற்படின் தான் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டி வரும் என்றும் எச்சரிக்கைவிடுக்கும் பாணியில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார். அத்துடன் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது பிரபாகரனின் சடலத்தை எவ்வாறு இழுத்து வந்தோம் என்பதைப் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார். ஜனாதிபதியின் இந்தக் கருத்துகள் இந்த வார அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளாகியுள்ளன.
அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் பெயரைக்குறிப்பிட்டு, அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து பாராளுமன்றத்தில் உரையொன்றை ஆற்றியிருந்தார். இதற்கு பதலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதியின் அம்பாறை உரை அமைந்திருந்தது. ஜனாதிபதியின் மேற்படி உரையைத் தொடர்ந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஹரீன் எம்.பி. பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
அரசாங்கத்தின் அண்மைக்கால நகர்வுகளை நோக்கும் போதும் ஜனாதிபதியின் கருத்துக்களை வைத்து நோக்கும் போதும் எதிர்காலம் குறித்த அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. நேற்றைய தினம் வெளியான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அறிக்கையில், இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் புதிய அரசாங்கத்தின் கீழ் மோசமடைந்துள்ளதாக குறிப்பிட்டிருப்பது இந்த அச்சத்தை மேலும் உறுதி செய்வதாகவுள்ளது.
கடந்த வாரம் வடக்கு கிழக்கில் சிறுபான்மை மக்களின் ஆத்திரத்தை தூண்டிய மற்றுமொரு செயல்தான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டமையாகும். மேலிடத்து உத்தரவின் பேரில் பல்கலைக்கழக உபவேந்தரின் உத்தரவினால் இந்த நினைவுத் தூபி உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்களும் வடக்கு தமிழ் அரசியல்வாதிகளும் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பினர். மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்தனர். வழக்கத்துக்கு மாறாக இம்முறை முஸ்லிம் அரசியல், சிவில் சமூகத்தினரும் தமது கண்டனங்களைப் பதிவு செய்ததுடன் மறுநாள் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற ஹர்த்தாலுக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தினர். இந் நிலையில் சம்பவம் இடம்பெற்ற மறுநாளே குறித்த நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் உபவேந்தர் மற்றும் மாணவர்களின் பங்கேற்புடன் நடப்பட்டதுடன் இந்த விவகாரம் அமைதியடைந்தது.
இந்த சம்பவம் வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் தங்களுக்குள் பிளவுபடாது இணைந்து செயற்பட வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரத்தில் கணிசமான தமிழ் தலைமைகளும் பொது மக்களும் தமது கண்டனத்தை வெளியிட்டு முஸ்லிம் சமூகத்தின் போராட்டத்திற்கு ஆதரவளித்திருந்தனர். இந்தப் போக்கு தொடர வேண்டியது அவசியமாகும்.
நாட்டின் மனித உரிமை நிலைவரங்கள் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மென்மேலும் அதிகரிக்கும் சமிக்ஞைகளே தெரிகின்றன. இந் நிலையில் இதனை எதிர்கொள்வதற்கு சிறுபான்மை சமூகங்கள் தமக்குள் ஒற்றுமையாக செயற்பட வேண்டியது அவசியமாகும். அதேபோன்று பெரும்பான்மை சமூகத்தில் உள்ள நீதிக்காக குரல் கொடுப்பவர்களின் ஆதரவையும் பெறுவதன் மூலமே எதிர்காலத்தில் நமது உரிமைகளை மேலும் தக்க வைத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
கடந்த இரு வாரங்களாக ஜனாஸா எரிப்பு தொடர்பான போராட்டங்கள் சோபையிழந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. புதிய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறியதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் இனவாத முகம் வெளிச்சத்து வந்தது. இந் நிலையில் இதன் பிறகும் அரசாங்கத்திடமிருந்து நியாயமானதொரு தீர்வை எதிர்பாக்க முடியாது என்ற கவலையில் அனைவரும் உள்ளனர். எனினும் இப் போராட்டத்தை நாம் கைவிட்டுவிடக் கூடாது. ஜனாஸா அடக்க உரிமையை வென்றெடுப்பதற்கான முயற்சிகள் தொடர வேண்டும். அது இந்த நாட்டில் நீதியை நிலைநாட்ட விரும்புகின்ற சகல சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும். அதன் மூலம் அடக்கும் உரிமையை வென்றெடுக்க வேண்டும். – Vidivelli