விசாரணை செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை
அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் வாதம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கடந்த 9 ஆம் திகதி 2096/70 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய நேற்று உயர் நீதிமன்றில் வாதிட்டார். அதனால் அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணை செய்யாது தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது நேற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதியின் செயற்பாட்டை நியாயபப்டுத்தி மன்ரில் வாதங்களை முன்வைத்து சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய இந்த வாதங்களை முன்வைத்தார்.
பிரதம நீதியரசர் நலின் பெரேராவின் கீழ் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, புவனேக அலுவிஹார, விஜித் மலல்கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்ணான்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் இம்மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
சொலிசிட்டர் ஜெனரால் தப்புல டி லிவேரா, மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே ஆகியோருடன் மன்றில் நேற்று ஆஜரான சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய சுமார் மூன்றரை மணி நேரம் இந்த வாதங்களை தொடர்ந்தார்.
மனுதாரர்கள் தமது அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளதாகவும், அப்படியானால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறினால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசியலமைப்பின் 38 (2) ஆம் உறுப்புரையில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாகவும், அதன்படி அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.
-Vidivelli