(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கும் திருமண வயதை 18 ஆக மட்டுப்படுத்தவும் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதன் கிழமை நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச்சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்டமூலங்களை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 73 வருடங்கள் ஆகின்றன. இந்தப்பகுதியில் நாம் இலங்கையர் என்ற வகையில் ஒன்றாக இருந்து ஒற்றுமையைக் காண தவறிவிட்டோம். உலகில் பல நாடுகள் இன மத பிரதேச அடிப்படையில் பிரிந்து இருந்தன. பின்னர் அவற்றிலிருந்து பாடம் கற்றன. 73 ஆண்டுகள் கடந்தும் எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலான வேறுபாடு குறைந்ததாக தெரியவில்லை. வேறுபட்ட இனத்தை மதத்தை சேர்ந்தவராக இருப்பதாலோ வேறுபட்ட மொழியைப் பேசுவதால் எதிரிகள் ஆகிவிடுவதில்லை.
வேற்றுமையில் ஒற்றுமையை காண்பதையே அரசியலமைப்பும் நமது தேசிய கீதமும் வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையிலேயே பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இறந்தகாலத்தை திரும்பிப்பார்த்தால் அனைவரும் தவறு செய்த இடங்கள் பல இருக்கவே செய்கின்றன.
1958,1978 கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு, 1983 கலவரம், கெபித்திகொள்ளாவ தாக்குதல், காத்தான்குடி தாக்குதல், அண்மையில் இடம்பெற்ற சஹ்ரானின் தாக்குதல் எல்லாம் கரும் புள்ளியாக அமைந்தன. சமூகத்தை ஓரம்கட்டி இதற்கு தீர்வு காண்பது என்பது தவறான வழியைத் தான்காட்டும். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்திருப்பதா ஒன்றிணைந்து முன்னேறி செல்வதா என்று நாம் சிந்திக்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ள அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோன்று இந்தத் தாக்குதல் உடன் தொடர்பு இல்லாத எவருக்கும் தண்டனை வழங்கப்பட கூடாது என்பதிலும் நாங்கள் அவதானமாக இருக்கவேண்டும்
மேலும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கும் திருமண வயதை 18 ஆக மட்டுப்படுத்தவும் தேவையான திருத்தங்கள் செய்யப்படும். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக சிறந்த நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எல்லா சமூகத்தவர்களும் தவறு செய்துள்ளனர். கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்று ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். தென்னாபிரிக்காவில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும் என்றார்.- Vidivelli