வெளிச்சத்திற்கு வந்துள்ள அரசின் இனவாத முகம்

0 960

“கொவிட் 19 தொற்றுக்குள்ளான சடலங்களை எரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தில் மாற்றமில்லை” என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அறிவித்ததன் மூலம் அரசாங்கத்தின் இனவாத முகம் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சடலங்களை எரிக்க மட்டுமே முடியும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் சர்வதேச அளவில் கண்டனங்களைச் சந்தித்திருந்த நிலையில், அது தொடர்பில் நிபுணர் குழுவினர் ஆராய்ந்து வருவதாகவும் அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் தீர்மானம் மறுபரிசீலனைக்குட்படுத்தப்படும் என்றும் கடந்த 9 மாதங்களாக அரசாங்கம் கூறி வந்த நிலையிலேயே, நேற்றைய தினம் சுகாதார அமைச்சரின் இந்த திட்டவட்டமான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நியமித்த குழுவுக்கு மேலதிகமாக கொவிட் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே, 11 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்றை கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி நியமித்திருந்தார். குறித்த குழுவில் திறமைவாய்ந்த வைரஸ் தொடர்பான நிபுணர்கள் அங்கம் வகித்தனர். இவர்கள் தமது அறிக்கையை கடந்த வாரம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தனர். அதில் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என அனுமதி வழங்கியிருந்ததுடன் இதன் மூலம் நீர் மாசடைவதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

துரதிஷ்டவசமாக, இந்த அறிக்கையை ஏற்க மறுத்த அரசாங்கம் அவ்வாறானதொரு குழுவை தாம் நியமிக்கவில்லை என அப்பட்டமான பொய்யைக் கூறியது. அதே பொய்யையே சுகாதார அமைச்சர் நேற்றைய தினம் பாராளுமன்றத்திலும் பகிரங்கமாக கூறினார். இதுபற்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பிய போது, பதிலளிக்க முடியாமல் சுகாதார அமைச்சர் தடுமாறினார். குறித்த குழு ஒரு உப குழுவென்றும் அதன் அறிக்கையை தம்மால் ஏலவே நியமிக்கப்பட்ட பிரதான குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர்கள் அதனை ஆராய்ந்து வருவதாகவும் கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றார். இது மேலும் காலத்தைக் கடத்துவற்கான முயற்சியே அன்றி வேறில்லை. இதன் பிறகும் குறித்த குழுவிடமிருந்து முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பது நமது மடமையாகும்.

அந்தவகையில் இதுவரை காலமும் இந்த விவகாரத்தை விஞ்ஞான ரீதியாகவே கையாண்டு வருவதாக கூறிய அரசாங்கத்தின் இனவாத முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முழுக்க முழுக்க முஸ்லிம்களைப் பழிவாங்கும் நோக்கில் விஞ்ஞானத்திற்கும் இயற்கைக்கும் விரோதமான முறையில் அரசாங்கமும் அதன் நிபுணர் குழுவும் செயற்படுகின்றது என்பதையே இது காட்டி நிற்கிறது.

ஆக, அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை முதல் இலங்கையின் எதிர்க்கட்சி வரை விடுத்த வேண்டுகோள்களை அரசாங்கம் கிஞ்சித்தும் கணக்கிலெடுக்கவில்லை என்பது புலனாகிறது. தமது அரசாங்கத்திற்கு வாக்களித்த இனவாதிகளை திருப்திப்படுத்துவது மட்டுமே தமது நோக்கம் என்பதில் அரசாங்கம் குறியாகவுள்ளது. இதற்கான விலையை இந்த அரசாங்கம் மிகப் பாரிய அளவில் கொடுக்க வேண்டி வரலாம். குறிப்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கை கடும் சவால்களை சந்திக்க வேண்டி வரும். அத்துடன் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் எதிர்ப்பையும் அரசாங்கம் சந்திக்கப் போகிறது. இது பொருளாதார ரீதியான அழுத்தங்களையும் இலங்கைக்குக் கொண்டு வரலாம். அதன் மூலம் இலங்கை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படும்.

சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட பிரித்தானிய முஸ்லிம் கவுன்சிலின் ஸ்தாபக செயலாளர் சேர் இக்பால் சக்ரைன், “கொவிட் சடலங்களை எரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான தீர்மானமானது அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்படும் கூட்டுத் தண்டனையாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுவே யதார்த்தமுமாகும்.

இலங்கை அரசாங்கத்தின் இனவாத முகம் சர்வதேச உலகுக்கும் தெரியவர ஆரம்பித்துள்ளது. அதனை மறைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தையே சுகாதார அமைச்சர் நேற்று தவறவிட்டுள்ளார். இந்த தீர்மானத்தின் மூலம் மூலம் முஸ்லிம்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக நினைத்து, அவர் தனது அரசாங்கத்திற்கும் முழு இலங்கை மக்களுக்குமே தேவையற்ற நெருக்கடிகளையும் அவப் பெயரையும் தேடிக் கொடுத்துள்ளார் என்பதே நிதர்சனமாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.