ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறி செயற்பட்டுவிட்டார். அவர் குற்றவாளி என்பது இப்போதே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. நீதிமன்றம் ஜனாதிபதிக்கு எதிரான தீர்ப்பொன்றினை வழங்கும்பட்சத்தில் அவர் குற்றவாளி என்பது சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுவிடும். ஆகவே ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை மட்டுமல்ல, அவரது குடியுரிமையையே பறிக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். நிறைவேற்று அதிகார நாற்காலியில் மைத்திரி மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க அமர்ந்தாலும் நாட்டினை நாசமாக்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி முன்னெடுத்த அரசியல் மாற்றத்துடன் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்த மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 26 ஆம் திகதி எடுத்த அரசியல் நகர்வுக்கு பின்னர் இந்த நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தீர்மானம் ஊழலுக்கு, குற்றங்களுக்கு எதிரானது என்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சி மாநாட்டில் தெரிவித்திருந்தார். ஊழல் குற்றங்களுக்கு எதிராக தீர்மானம் எடுத்தார் என்றால் மத்தியவங்கி ஊழல் இடம்பெற்ற நேரத்தில் ஒரு வாரகாலத்தில் ஆணைக்குழு அமைத்து குற்றவாளிகளை தண்டித்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை குற்றவாளிகளை தண்டிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் இலஞ்ச ஊழலுக்கு எதிராக தான் செயற்படுவதாக கூறியது உண்மை என்றால் முதலில் மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் முதல் குற்றவாளியாக மஹிந்த ராஜபக் ஷவின் பெயரே உள்ளது. அதேபோல் ரோஹித போகொல்லாகம, விமல் வீரவன்ச, பியசிறி ஆகியோர் அனைவரும் உள்ளனர். அவர்கள் எவருக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக குற்றவாளிகளுக்கு அமைச்சுக்களும், பிரதம அமைச்சும் கொடுத்துள்ளார். ஊழல் குற்றவாளிகள் என்ற பட்டியலில் உள்ள பலர் இன்றும் அரசாங்கத்தில்தான் உள்ளனர். சிறையில் இருக்க வேண்டிய பலர் பாராளுமன்றத்தில் அவருடன் இணைந்துள்ளனர்.
அதேபோல் அவர் ஐந்து வர்த்தமானி அறிவித்தல் விடுத்ததாகவும், அவை அனைத்துமே நாட்டுக்காக எடுத்த முடிவு எனவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் அவர் விடுத்த வர்த்தமானி அறிவித்தலில் நான்கு வர்த்தமானி அறிவித்தலும் சட்டவிரோதமானது. குறிப்பாக அப்போதைய பிரதமரை நீக்கியது அரசியலமைப்புக்கு முரணானது. ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இல்லை, அதேபோல் சட்டவிரோதமாக ஒருவரை நீக்கிவிட்டு ஒருவரை நியமித்தமையும் சட்ட விரோதமானது. பாராளுமன்றத்தை ஒத்திவைத்தது சட்டத்துக்கு இணக்கமாக இருக்கலாம். ஆனால் ஜனநாயக விரோதமானது, பாராளுமன்றத்தை கலைப்பது 19 ஆம் திருத்தத்துக்கமைய முரணானது. ஆகவே அரசியலமைப்பினை அவர் இப்போதே மீறிவிட்டார். ஒரு தடவை அல்ல பல தடவைகள் அவர் அரசியலமைப்பினை மீறிவிட்டார். அமைச்சரவை நியமனம், மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் இருவரை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டும் ஜனாதிபதி அதை செய்யவில்லை. ஆகவே அரசியலமைப்பினை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீறி தன்னிச்சையாக செயற்பட்டுவிட்டார். இன்று உயர் நீதிமன்றத்தில் ஒன்பது பேரில் ஏழு பேரே உள்ளனர். இருவரை நியமிக்க வேண்டுமென அரசியலமைப்பு சபை கூறியும் ஜனாதிபதி நியமிக்காது உள்ளார். ஆகவே ஜனாதிபதி குற்றவாளியாகிவிட்டார்.
இப்போது நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினை நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த வழக்கில் ஜனாதிபதி செய்தது தவறு என தீர்ப்பு வந்தால் ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறி தனிச்சையாக செயற்பட்டுவிட்டார் என்பது நீதிமன்றத்தின் மூலமாகவே நிரூபிக்கப்படும். ஆகவே ஜனாதிபதியால் நீதிமன்ற தீர்ப்பை மீறி செயற்பட முடியாது. ஆகவே ஜனாதிபதி இப்போதே அரசியலமைப்பினை மீறியவராக குற்றவாளியாகிவிட்டார். ஆகவே இனியும் அவருக்கு ஜனாதிபதி ஆசனத்திலிருந்து செயற்படும் அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழும். கடந்த மூன்றரை ஆண்டுகள் அவர் ஊழலுக்கு எதிராக செயற்பட்டதாக கூறியதுடன் ரணில் நாட்டையும், மக்களையும், கட்சியையும் நாசமாக்கியதுடன் தன்னையும் நாசமாக்கினர் என கூறுகின்றார். அப்படியென்றால் ரணில் விக்ரமசிங்கவிற்கு இரண்டு மைத்திரிகளையும் அடையாளம் காண தெரியாது போய்விட்டதா என்ற சந்தேகம் எழுகின்றது. என்ன அர்த்தத்தில் இதனைக் கூறினார். இருவருக்கிடையில் உள்ள மோதலில் நாட்டு மக்களை எப்படி தண்டிக்க முடியும். இருவருக்கு எதிரான கோபத்தில் நாட்டினை தீ வைக்கும் செயலை ஜனாதிபதி செய்துள்ளார். முழு நாட்டினை தீ வைத்துவிட்டு நீரோ மன்னரைப்போல பிடில் வாசித்துக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றும் இல்லை, அர்த்தமில்லாத பேச்சுவார்த்தையே அவருடனான பேச்சுவார்த்தை என்பதே எமது நிலைப்பாடு. அதேபோல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து மஹிந்த அணியாக இருந்தாலும் அதனை தூண்டியது மைத்திரி அணியே. அதேபோல் இன்று நாம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றினோம். ஆனால் மூன்றவது தடவையாக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர மைதிரியே காரணம். ஏன்? நாம் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் முதல் சரத்தை நீக்கிவிட்டு கொண்டுவாருங்கள் என கூறினார். இரண்டாவது சரத்து இருக்கட்டும் என்றார். பிரதமை நீக்கியது சட்ட விரோதமானது, நியமிக்கப்பட்ட பிரதமரும் அங்கீகாரம் இல்லாதவர் என்பதே முதல் சரத்து. மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது அமைச்சரை அங்கீகாரம் இல்லாதது என்பதே இரண்டாம் சரத்து. இதில் முதல் சரத்தை நீக்கக்கோரினார். அதன் அர்த்தம் என்ன. சட்டவிரோத செயலை செய்த என்னை விட்டுவிடுங்கள், என்னை காப்பாற்றுங்கள், மஹிந்த ராஜபக் ஷவை நீக்குவது, அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் எனக்கு பிரச்சினை இல்லை என்பதே அவரது நிலைப்பாடு. மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிரான என்ன செய்தாலும் பரவாயில்லை என்னை காப்பாற்றுங்கள். நாளை எனக்கு எதிரான குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் எனக்கு சிக்கல் வரும் என்பதே அவரது கருத்து.
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை மட்டுமல்ல அவரது குடியுரிமையை பறிக்க முடியும். அவர் செய்துள்ள தவறு சாதரணமானதல்ல. அதனால் தான் ஜனாதிபதி அச்சத்தில் இவ்வாறு தடுமாறுகின்றார். அதனால் தான் தொடர்ச்சியாக இதனைக் கூறி வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவந்துள்ளார். இதில் முதல் சரத்து நீக்கபட்டுள்ளது. இதனை எவ்வாறு நீக்க முடியும்? இவர்கள் டீல் ஒன்றினை போட்டுவிட்டனர். ஜனாதிபதியின் கதைக்கு இணைங்கி இவர்கள் இதனை செய்துள்ளார். அதனை செய்ய முடியாது. அவர் குற்றவாளியாகிவிட்டார். இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியுடன் டீல் போட்டுக்கொண்டு செயற்படுகின்றனர். அன்று ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவும் இன்று மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே.
எதோ ஒரு வழியில் தலைதூக்க முயற்சித்துவந்த மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் இணைத்துக்கொண்டு அவருக்கு அமைச்சுப் பதவிகளை கொண்டுத்து முழுமையாக நாசமாக்கிவிட்டார். அவருடனிருந்து அப்பம் சாப்பிட்டு இறுதியில் அவருக்கே துரோகம் செய்ததை போல இன்றும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மூலமாக துரோகம் செய்யவே முயற்சி எடுத்து வருகின்றார். மஹிந்த ராஜபக் ஷ இப்போதாவது இந்த சூழ்ச்சிகளை அறிந்துகொள்ள வேண்டும். நாட்டின் ஜனாதிபதி செய்யும் செயல் அல்ல இது. இந்த நாட்டினை நாசமாக்கிவிட்டு , அரசியலமைப்பினை மீறி, பொருளாதாரத்தை வீழ்த்திவிட்டு இப்போது அனைவரையும் இணையக் கூறுகின்றார். இதற்கு எவரும் இணக்கம் தெரிவிக்க மாட்டார்கள். இன்று ஸ்ரீலங்காகாரர்களே விமர்சிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
மஹிந்த ராஜபக் ஷவிற்கு பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அவர்களுக்கு பெரும்பான்மை காட்ட முடியாத காரணத்தினால் சபாநாயகரை சாட்டாக வைத்துகொண்டு பாராளுமன்றத்தை புறக்கணித்து வருகின்றனர். பொய்யாக சில காரணிகளை கூறிக்கொண்டு பாராளுமன்றத்தை நிராகரித்து தாம் ஒளிந்துகொண்டுள்ளார். அவர்களின் இயலாமையை மூடி மறைக்கவே முயற்சித்து வருகின்றனர். இது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது. எத்தனை நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இப்போதாவது மைத்திரி, மஹிந்த அணியினர் தமது தோல்வியை ஏற்றுக்கொண்டு பாராளுமன்றத்தை இயங்க அனுமதிக்க வேண்டும். பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது, அரச சேவை பாரிய நெருக்கடியில் உள்ளது. வரவுசெலவு திட்டம் முன்வைக்கப்படவில்லை. அடுத்த ஆண்டுக்கான திட்டம் ஒன்றும் இல்லை. இப்போதுள்ள நீதிமன்ற இடைக்கால தடை நீங்கும் வரை மத்தியவங்கி கடன் வாங்கவும் முடியாது. ஆகவே பாரிய நெருக்கடிக்கு இப்போது அனைவரும் முகங்கொடுக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் ஜனாதிபதிக்கு பிரச்சினையாக தெரியவில்லை. பாராளுமன்ற அராஜகத்தை அங்கீகரிக்கும் ஜனாதிபதியாக மாறிவிட்டார்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு வழங்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இது புலிகளை ஆதரிக்கும் பிரேரணையல்ல. அப்போது மஹிந்த அணியினர் இனவாதத்தை தூண்டி தடுக்கும் நடவடிக்கை எடுத்தனர், ஆனால் அவர்களே இன்று விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதாக கூறுகின்றனர். அதையே நாம் அன்று கூறும்போது இனவாதம் பேசினார். இன்று அதையே அவர்களும் செய்கின்றனர். புலிகள் அனைவருக்கும் பணம் தருவதாக கூறுகின்றனர். நாம் அதற்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் அன்று எதிர்த்தவர்கள் இன்று அதையே கூறி தமது அரசியல் சுயரூபத்தை காட்டி வருகின்றனர். இன்று வடக்கில் மாவீரர் தினம் நடக்கும் போது இவர்கள் வாய் திறக்கவில்லை. பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டதற்கும் முன்னைய ஆட்சியாளர் காரணம் என கூறினர். சுட்டுக்கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் விமானப்படை முகாம் உள்ளது. ஆகவே இவர்கள் பொய்யிலும் புரளியிலும் ஆட்சியை செய்து வருகின்றனர். சர்வாதிகார முறையில் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
நிறைவேற்று அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை காவோலை என விமர்சித்தனர். காவோலை எவ்வாறு இன்று தனது சர்வாதிகர்த்தை கையாண்டு வருகின்றது என்பது வெளிப்பட்டுவிட்டது. இந்த ஆசனத்தில் ரணில் விக்கிரமசிங்க அமர்ந்தாலும் இதே போன்று சர்வாதிகார ஆட்சியே நிகழ்ந்திருக்கும். நபர் அல்ல இந்த ஆசனமே பிரச்சினை. ஆகவே புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாகினால் ஆரோக்கியமானது தான். ஆனால் அவ்வாறு ஒன்று உருவாகப்போவதில்லை. ஆகவே 20 ஆவது திருத்தம் ஒன்றினை நாம் முன்வைத்துள்ளோம். இதன் தன்மையை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும் . இப்போதாவது நாம் அனைவரும் இணைந்து 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவோம். நாளைய எதிர்காலத்திற்கு இது ஆரோக்கியமானதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli