கொவிட் ஆபத்தில்லாத பகுதிகளிலுள்ள வீடுகளில் நிகழும் மரணங்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை

அகில இலங்கை திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் எம்.ஏ. எம். பர்ஸான்

0 1,337

அகில இலங்கை திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளரும் குருநாகல் நீதி நிர்வாகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கான திடீர் மரண விசாரணை அதிகாரியாக சுமார் பத்து வருடங்களாக சேவையாற்றுபவருமான எம்.ஏ. எம். பர்ஸான் கொவிட் 19 காலத்தில் வீடுகளில் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில்  விடிவெள்ளிக்கு வழங்கிய நேர்காணல்.

நேர்கண்டவர்: யு.எல். முஸம்மில், குருநாகல் நிருபர்  

கே: திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் கடமை பற்றி சற்று விளக்குவீர்களா?

நீதி அமைச்சினால் திடீர் மரண விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள எமக்குள்ள பொறுப்பில் மரண விசாரணைகள் இரண்டு வகைப்படுகின்றன. ஒன்று இயற்கை மரணம் மற்றையது திடீர் மரணம். இயற்கை மரணம் என்பது ஒருவர் நோயாளியாகவே இருந்து வீடுகளில் மரணிப்பதாகும். இதன்போது  நாம் சென்று விசாரணை நடாத்துவதில்லை. அது கிராம சேவகருடன் சம்பந்தப்பட்டதாக விடயம் முடிந்து விடுகிறது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் மரணித்தால் சிகிச்சை பெற்றதற்கான சான்றுகளை வைத்து பொதுவான விசாரணைகளை மேற்கொண்டு விட்டு சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைப்போம்.

அடுத்து திடீர் மரண விசாரணை. இது விபத்தொன்றில் சிக்கி மரணிப்பது, நீரில் மூழ்கி மரணிப்பது, கொலை, தற்கொலைகள். இத்தகைய மரணங்கள் பிரேத பரிசோதனை (postmortem) மேற்கொண்டு மரண விசாரணை நடாத்தப்படும்.

இது தவிர இயற்கையாக இடம்பெறும்  மரணங்களுக்கும்  பிரேத பரிசோதனை செய்து மரண விசாரணை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

உதாரணமாக நீண்ட நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு பிரேத பரிசோதனை நடாத்த வேண்டியதில்லை. எனினும் மரணமானவர் குறிப்பிட்ட நோயினால் மரணித்தாரா அல்லது வேறு ஏதும் காரணத்தினால் மரணித்தாரா என்ற சந்தேகம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டால் அதற்கு பிரேத பரிசோதனை செய்யப்படுவதுண்டு. அடுத்து ஒரு பெண் குழந்தையை பிரசவிக்கும்போது மரணமானாலும்,  குழந்தையை பிரசவித்து நூறு நாட்களுக்குள் மரணித்தாலும் அதற்கும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மரண விசாரணை நடாத்தப்படும்.

பொதுவாக எழுபது வீதம் இயற்கை மரணங்களாகும். ஏனைய முப்பது வீதம் திடீர் மரணங்களாகும். இவற்றுக்கு பிரேத பரிசோதனை செய்து  மரண விசாரணை நடாத்தப்படுகிறது.

கே:  சாதாரண நாட்களில் வீட்டில் ஒருவர் மரணமடைந்தால் நாம் முதலில்  என்ன செய்ய வேண்டும்? ஒருவர் வீட்டில் மரணமடைந்தால் மரணமடைந்துவிட்டார் என்று நாம் எப்படி தெரிந்து கொள்வது?

நாம் வைத்தியர் ஒருவரை வரவழைத்து மரணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது அப்பகுதியில் உள்ள அனுபவசாலிகளைக் கொண்டும் மரணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

வைத்தியர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினால் அதை உடனடியாக செய்ய வேண்டும்.

மரணித்தவர் வைத்தியரிடம் சிகிச்சை பெற்ற ஒருவராயின் அல்லது வைத்தியருக்கு அறிமுகமான ஒருவராயின் மரணத்தை உறுதிப்படுத்தி கடிதமொன்றை வழங்குவார். அதை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

கே:  வைத்தியர் உறுதிப்படுத்திய உடனேயே  ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யலாமா?

முடியாது. வைத்தியர் சான்று தந்தாலும் அடிக்கழுவவோ உடை மாற்றவோ வேறு எதனையும் செய்யவோ கூடாது. உடனடியாக பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம சேவகருக்கு அறிவிக்க வேண்டும். அவர் அவ்விடத்துக்கு வருவார. அல்லது தொடர்ந்து என்ன செய்ய வேண்டுமென்று ஆலோசனை வழங்குவார். அவரது ஆலோசனைப்படி மேற்கொண்டு கடமைகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது அவர் உடனடியாக வந்தால் மையத்தை பார்த்துவிட்டு விசாரணை செய்து நோய்க்கு சிகிச்சை மேற்கொண்டது பற்றிய விபரங்களையெல்லம் கேட்டறிந்துவிட்டு துண்டொன்றை வழங்கிவிட்டு செல்வார். மரண சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு தேவையான அந்த துண்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

கிராம சேவகர் வருவதற்கு முன் மையித்திற்கு எதுவும் செய்யக்கூடாது என்று ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு சிலர் கிராம சேவகர் வருமுன் மையத்தை அடிக் கழுவி அல்லது குளிப்பாட்டி இருந்தால் கிராம சேவகருக்கு ஏதும் சந்தேகம் வர வாய்ப்புண்டு. இயற்கையாக மரணமடைந்திருந்தாலும் இது கொலையாக இருக்கலாம், அடையாளங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வர வாய்ப்புண்டு.

அவ்வாறு சந்தேகம் ஏற்பட்டால் பொலிஸார், மரண விசாரணை அதிகாரி ஆகியோர் அழைக்கப்பட்டு அவ்விடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடியுமாயின் மையத்தை அவ்விடத்தில் ஒப்படைப்பார்கள். சந்தேகம் வலுத்தால் பிரேத பரிசோதனையொன்றை மேற்கொள்வதற்காக ஜனாஸாவை வைத்தியசாலைக்கு அனுப்புவார்கள். இத்தகைய அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்வதற்காகவே முதலில் கிராம சேவகரை நாட வேண்டும் என்கிறேன்.

இதில் மற்றொரு முக்கியமான விடயம், கிராம சேவை அதிகாரியோ திடீர் மரண விசாரணை  அதிகாரியோ மரணம் சம்பவித்த இடத்துக்கோ வைத்தியசாலையில் மரண விசாரணை அறைக்கோ வந்தால் இறந்தவரின் சிகிச்சை பெற்ற விபரங்கள், மருந்து துண்டுகள் தெரிந்திருந்தால் பாவித்த மருந்து வகைகள் என்பவற்றோடு நோய்கள் பற்றிய விபரங்களையும் வழங்க வேண்டும்.

இதை குடும்பத்தில் ஒருவரோ இருவரோ தான் செய்ய வேண்டும். குடும்பத்தினர் எல்லோருமாக விபரங்களை தெரிவிக்க முனைந்தால் முரணான கருத்துகள், விபரங்கள் தெரிவிக்கப்படலாம்.

முன்பின் முரணான விபரங்கள் தெரிவிக்கப்பட்டாலும், சிலர் மரணமானவருக்கு எந்த நோயுமிருக்கவில்லை, மருந்தே பாவிக்கவில்லை என்று பொய் சொன்னாலும் பிரேத பரிசோதனை மேற்கொண்டு விசாரணை நடாத்த வேண்டியேற்படும்.

 கே:  கிராம சேவை அதிகாரிக்கு அழைப்பு கொடுத்து அவர் வரவில்லையாயின்?

எக்காரணம் கொண்டும் அவருக்கு வராமல் இருக்க முடியாது. கிராம சேவை அதிகாரியோ, திடீர் மரண விசாரணை அதிகாரியோ விடுமுறையில் இருந்தாலும் பதில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியும் இல்லாவிடின் கிராம சேவகர் இல்லாதது பற்றி பிரதேச செயலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

கே:  நீங்கள் தெரிவித்த விபரங்கள் எல்லாம் பொதுவான நாட்களில் நடைமுறையில் உள்ளவை. ஆனால் தற்போதைய கொரோனா பரவல் காலத்தில் இறுக்கமான விதிகிகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா?

இந்த நாட்களிலும் முன்பு சொன்ன விடயங்களைத் தான் கடைப்பிடிக்கப்பட வேண்டும். எனினும், மேலதிகமாக  சுகாதார பரிசோதகர்களின் (PHI) தொடர்பும் பேணப்பட வேண்டும். இது தொடர்பான புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2020.11.17 என திகதியிடப்பட்ட DGHS/ COVID 19/ 347,2020 என்ற சுற்று நிருபத்தில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கும் வீட்டில் மரணமான ஒருவராயின் வைத்தியரை அழைத்து மரணத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எனினும் தற்போதைய சூழ்நிலையில் வைத்தியர்கள் வீடுகளுக்கு வருவதில்லை. இதுவும் பாரியதொரு பிரச்சினைதான். அனுபவசாலிகளைக் கொண்டு மரணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எனினும் வைத்தியசாலைக்கு  எடுத்துச் செல்வது தான் சிறந்தது. மரணமாகிவிட்டார் என்று வீட்டில் வைத்திருப்பதைவிட  வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மரணமாகிவிட்டார் என்று நினைத்திருந்தவரை பிழைக்க வைக்க முடிந்தால் அது எவ்வளவு பெரிய விடயம். அங்கு கொண்டு சென்றதன் பின்பு மரணமானால் PCR எடுப்பதா, தகனம் செய்வதா, அடக்கம் செய்வதா என்பதைப்பற்றியெல்லாம் பிறகு பார்க்கலாம்.

தகனம் செய்வதற்கு அஞ்சி மரணத்துடன் போராடும் ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலே வைத்திருப்பது கொலை செய்தது போலாகிவிடும். மரணமானவரின் மரணத்துக்கு காரணம் கொரோனாதான் என்றிருந்தாலும் அது யார் செய்த குற்றமுமல்ல. மரணித்தவரையும் குற்றம் சொல்வதற்கில்லை. மரணமானவரின் உறவினர்களும் குற்றவாளிகளல்ல. அந்த மையித்தை தகனம் செய்வதென்பதும் எமது குற்றமில்லையே! அது அரசாங்கம் எடுத்துள்ள முடிவு. அரச சட்டத்துக்கு கட்டுப்படவேண்டுமென்ற அடிப்படையில்  அது எமக்கு பாவமாகவும் மாட்டாது.

கே. இந்த புதிய சுற்று நிருபத்தின்படி வீட்டில் ஒருவர் மரணமானால் என்ன செய்யவேண்டுமென கூறப்பட்டுள்ளது?

கொரோனா தொற்றின் அடிப்படையில் நாட்டின் பகுதிகள் தற்போது பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதிக ஆபத்தான பிரதேசம், முடக்கப்பட்ட பிரதேசம், சுயதனிமைப்படுத்தல் பிரதேசம், கொரோனா நிலையங்கள் அமைந்துள்ள பிரதேசம் என்பனவே அவை. இந்த பிரதேசங்களில் ஒருவர் மரணமானால் கட்டாயம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக நாம் செய்ய வேண்டிய முதல் வேலை கிராம சேவகருக்கு அறிவிக்க வேண்டும். அவர் புதிய சுற்று நிருபம் பற்றி அறிந்திருந்தால் அவர் சுகாதார பரிசோதகர் (PHI) அல்லது MOH அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும். அவர்களில் ஒருவர் வந்து வீட்டிலேயே PCR பரிசோதனைக்கான மாதிரிகளை பெற்றுக் கொள்வார்கள். இல்லையெனின் உடல் பையில் (Body Bag)சடலத்தைப் போட்டு PCR பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பார்கள். அனுப்புவதற்கிடையில் அவ்விடத்துக்கு திடீர் மரண விசாரணை அதிகாரியும் வரவேண்டும். அவரின் உத்தரவின் பேரிலேயே சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வைத்தியசாலைக்கு ஜனாஸாவை எடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பும் PHIக்கே உள்ளது. இதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். கொண்டு சென்றதன் பின்பு அங்கு PCR  பரிசோதனை மேற்கொண்டு அதன் பெறுபேற்றை அனுப்பவேண்டிய இடங்களுக்கு அனுப்பிவைப்பார்கள். PCR பரிசோதனை மேற்கொள்ள வசதியற்ற இடங்களாயின் மாதிரிகளை உரிய இடங்களுக்கு அனுப்பி பெறுபேற்றை பெற்றுக்கொள்வார்கள்.

பெறுபேறு நெகடிவ் ஆக இருந்தால் தேவையாயின் திடீர் மரண விசாரணை அதிகாரி பிரேத பரிசோதனை மேற்கொண்டு அல்லது பிரேத பரிசோதனையின்றி மரண விசாரணை நடாத்தி சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பார்.

மாற்றமாக பெறுபேறு பொசிடிவ் ஆக இருந்தால் IMO, PHI எல்லோருமாக ஆலோசனை செய்து அந்த ஜனாஸாவை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். இது தான் சட்டம். தற்போதைக்கு நாம் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.

கே: இந்த நாட்களில் மரணமடையும் எல்லா ஜனாஸாக்களையும் PCR பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமா?

நான் முன்பு கூறியது போல குறிப்பிட்ட இடங்களில் இடம்பெறும் மரணங்களை முடக்கப்பட்ட பிரதேசம் அல்லது அதிக ஆபத்தான பிரதேசம், தனிமைப்படுத்தல், சுயதனிமைப்படுத்தல் பகுதிகளில் மட்டுமே கட்டாயமாக PCR செய்ய வேண்டும். இது தவிர ஏனைய இடங்களில் இடம்பெறும் மரணங்களுக்கு PCR செய்ய வேண்டியதில்லை.

ஒரு சில கிராம சேவகர்கள் எல்லா மரணங்களுக்கும் PCR செய்ய வேண்டுமென்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கின்றனர். மரணத்தில் ஏதும் பிரச்சினைகள் சந்தேகங்கள் எழுந்தால் மட்டும் PCR எடுக்கப்படலாம். அத்தோடு சில தினங்களுக்கு முன்னர் சாதாரணமாக வீட்டில் மரணித்த மையத்தையும் பிரேத பரிசோதனைக்காக ஏன் எடுத்துச் செல்கிறார்கள் என பேருவளை பகுதியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவைகளுக்கெல்லாம் நாம் குழம்பிப்போக வேண்டியதில்லை. அப்பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரிக்கு ஏதும் சந்தேகம் வந்திருக்கலாம். அதனால் அவர் மையித்தை  பிரேத பரிசோதனை செய்வதற்கு உத்தரவிட்டிருப்பார்.

மரணத்தில் பிரச்சினைகள், சந்தேகம் இல்லாவிடின் பிரேத பரிசோதனை, PCR ஏதுவுமின்றி விசாரணையின் பின் மையித்தை தந்துவிடுவார்கள். அதன்பின் ஏனைய கடமைகளை நாம் நிறைவேற்றலாம். PCR எடுக்கத் தேவைப்பட்டால் பொது சுகாதார பரிசோதகர், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் உடல் பைகளில் (Body Bag) போட்டு சடலத்தை பாதுகாப்பான முறையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வார்கள். அதற்கான வாகன ஏற்பாடுகளையும் அவர்களே செய்ய வேண்டும். எனினும் அதற்கெல்லாம் அவர்கள் நீண்ட நேரத்தை எடுப்பார்கள். கால தாமதம் ஏற்படும். அதனால் நாம் தேவையான வாகன ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் கால தாமதத்தை தவிர்க்கலாம்.

சடலத்தை கொண்டு சென்று PCR எடுத்ததன்பின் மையித்தை எமக்கு தரமாட்டார்கள். PCR ரிப்போட் வரும்வரை வைத்தியசாலை குளிரூட்டியில் வைத்திருப்பார்கள். முடிவு நெகடிவ் ஆக இருப்பின் ஜனாஸாவை எம்மிடம் தருவார்கள்.

கே: தனியார்  இடங்களுக்கு சென்று தனிப்பட்ட முறையில் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமா? நிரந்தர நோயாளிகளாக இருப்போர் PCR பரிசோதனை எடுத்து வைத்துக்கொண்டிருந்தால் மரணமானதன் பின்னர் அதனைப் பயன்படுத்தலாமா?

விரும்பியவர்கள் தனியார் PCR பரிசோதனை நிலையங்களில் எடுக்கலாம்.  எனினும் மரணமான ஒருவருக்கு தனியார் இடங்களில் சென்று PCR பரிசோதனை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் மரணமானவருக்கு PCR எடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் பொது சுகாதார பரிசோதகர். அவருடன் சட்ட வைத்திய அதிகாரியும் (JMO) அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பது பற்றி புதிய சுற்று நிருபத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

PHI, JMO ஊடாக PCR பரிசோதனை பெற்றுக்கொண்டு வரும்போது கால தாமதம் ஏற்படுவதாலேயே நம்மவர்கள் தனியார் பரிசோதனை கூடங்களை நாட முயல்கிறார்கள். இதற்கு தீர்வு காண நமது தலைமைகள் தான் முன்வரவேண்டும். உரிய உயர் இடங்களில் இது பற்றி முறையிட்டு சட்ட அனுமதியை பெற்றுக் கொண்டால் அதனை செய்யலாம்.

நிரந்தர நோயாளியாக இருப்பவருக்கு PCR அறிக்கை எடுத்து வைத்திருப்பது மரணமான பின் அதனை பயன்படுத்தலாமா என்று கேட்டீர்கள். அது பயனற்ற விடயம் என்று தான் நினைக்கிறேன். ஏனெனில் PCR எடுத்ததன் பின் உரியவர் எப்போது மரணமாவார் என்பது பற்றி யாருக்கு தெரியும்?

PCR எடுத்ததன்பின் இரண்டொரு நாளில் மரணித்தால் அந்த ரிப்போட்டை பயன்படுத்தலாம். எனினும் அந்த அறிக்கையை PHI ஏற்றுக்கொள்ள வேண்டுமே. PHI ஏற்றுக்கொள்ளாமல் எவ்வளவு செலவு செய்து PCR பரிசோதனை மேற்கொண்டு வைத்திருந்தாலும் எவ்வித பயனுமில்லை. வீட்டில் மட்டுமல்ல வைத்தியசாலையில் மரணித்தாலும் சில நேரம் வைத்தியர்கள் மீண்டும் PCR எடுக்க வேண்டுமென்றால் அதையும் எடுக்கத்தான் வேண்டும்.

இந்த விடயத்தில் பணம் கறக்கும் மாபியாவொன்றும் செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. வறிய நோயாளிகளுக்கு PCR எடுத்து வைக்க வேண்டும், அதற்காக உதவுங்கள் என்று சிலர் பணம் திரட்டுவதாக அறியமுடிகிறது. இந்த விடயத்தில் பொது மக்கள் மிக அவதானமாக செயல்பட வேண்டும்.

கே: எம்மவர்களில் மரணமான ஒருவரின் PCR  அறிக்கை பொசிடிவ் என்று வந்தால்  அதனை தகனம் செய்வதற்கு பெட்டி வழங்க வேண்டுமா?

முஸ்லிம் அல்லாதவர்கள் பிரேதங்களை நாள் கணக்கில் வைத்திருப்பார்கள். அதனால் அவர்களுக்கு பெட்டியொன்றின் அவசியம் உள்ளது. அவர்கள் கண்காட்சிக்காகவும் சடலங்களை வைத்திருப்பர். அதனால்தான் அவர்கள் பெட்டிகளுக்காக மட்டும் பல இலட்சம் ரூபாய்களை செலவு செய்கிறார்கள். எம்மைப் பொறுத்தளவில் அப்படியொரு தேவைப்பாடு இல்லை.

ஜனாஸாவின் உறவினர்கள் பெட்டியொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றோ, தகனம் செய்வதற்கான கூலியோ, சாம்பலை பெற்றுக்கொள்வதற்காக பணமோ கொடுக்க வேண்டுமென்று இல்லை. புதிய சுற்று நிருபத்திலும் அது பற்றி எதுவும் குறிப்பிட்டில்லை. தகனம் செய்வதாயின் உடல் பையில் போட்டுள்ள ஜனாஸாவை அப்படியே கொண்டு போய் தகனம் செய்து கொள்ளலாம். அதற்கென பெட்டியொன்று அவசியமற்றது என்று தான் நினைக்கிறேன்.

கே: ஜனாஸாவின் சொந்தக்காரர்கள் கவலையிலும் இக்கட்டான நிலையிலும் இருக்கும் போது பெட்டி வழங்கமுடியாது என்று ஒதுங்கிக் கொள்ள முடியுமா? பெட்டியை நாம் வழங்காவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?

பொதுவாக உறவினர்களோ வேறு எவருமோ பிரேதங்களை பொறுப்பேற்காத சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. தமது பெற்றோரின் பிரேதத்தை பொறுப்பேற்காத பிள்ளைகளும் உள்ளனர்.

அது போன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. எனினும் அதிஷ்டவசமாக எமது சமூகத்தில் அப்படியான ஒரு நிலை இல்லை. மரணமான ஒருவர் முஸ்லிம் என்று தெரிந்தால் அநாதரவான ஜனாஸா என்றாலும் கூட நம்மவர்கள் ஜனாஸாவை பொறுபேற்று அதன் கடமைகளை நிறைவேற்றி நல்லடக்கம் செய்து விடுவார்கள். அநேகமான ஜனாஸா நலன்புரி சங்கங்கள் இவ்விடயத்தை கரிசனையோடு செய்கின்றன.

பொறுப்பேற்கப்படாத பிரேதங்களை அரச செலவிலேயே அடக்கம் செய்யப்படுகின்றன. சந்தேகத்துக்குரிய சர்ச்சைக்குரிய சடலங்களை  மோச்சரியில் நீண்ட நாட்கள் வைத்திருப்பதுண்டு. எனினும் தற்போது கொவிட்டினால் மரணமானவர்களின் சடலங்களை அப்படி நீண்ட நாட்கள் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. எட்டு அடிக்கு கீழ் அடக்கம் செய்தாலும் கிருமித்தொற்று பரவும் என்பவர்கள் மோச்சரியில் வைத்திருப்பார்களா?

தகனம் செய்யும் வேலையை செய்பவர்கள் உள்ளூராட்சி மன்றங்களே. இதற்கு அவர்களுக்கும் ஒரு செலவு இருக்கிறது. அதனால் பொதுவாக சடலமொன்றை தகனம் செய்வதற்கு சுமார் ஆறாயிரம் ரூபா முதல் ஏழாயிரம், எட்டாயிரம் என வேறுபட்ட தொகையை அறவிடுகின்றனர். இப்படியான சந்தர்ப்பத்தில் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் கீழ்மட்ட அதிகாரிகளிடமோ ஊழியர்களிடமோ நாம் தர்க்கித்து சண்டைபோட்டு வாத விவாதங்களை வளர்த்துக் கொள்வது அவ்வளவு உசிதமல்ல.

கே:  கொவிட் ஜனாஸாக்களை அடக்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கும் விடயத்துக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என நினைக்கிறீர்கள்?

எமது வாக்குகளைப் பெற்றுக்கொண்டு சுகபோகம் அனுபவிக்கும் அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர். மார்க்கத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் என பலரும் உள்ளனர். இவர்கள் ஒன்று சேர்ந்து சுகாதார உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரோடும் கலந்துரையாடி பேச்சுவார்த்தை மூலம் நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும்.

எமக்கு அடக்கம் செய்வதற்கான முடிவு வரும் வரை பெட்டி வழங்கமாட்டோம், சாம்பலுக்கு பணம் வழங்க முடியாது, கையெழுத்து வழங்க முடியாது, குறுகிய நேரத்திற்குள் PCR பரிசோதனை முடிவுகள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யவேண்டும், வீட்டில் மரணிக்கும் கொவிட் உடன் தொடர்பே இல்லாத ஜனாஸாக்களையேனும் குறுகிய நேரத்திற்குள் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தல், இதுபோன்ற விடயங்கள் பேசப்பட்டு சட்டமாக கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது வரை எமது ஜனாஸாக்களை தகனம் செய்வதாயின் செய்யட்டும். அவர்களுக்கு எமது ஒத்துழைப்புக்களை வழங்குவோம். பெட்டியொன்று இன்றி தகனம் செய்ய முடியாது என வாதிடுவார்களாயின் ஆகக்குறைந்த விலையில் பெட்டியொன்றை பெற்றுக் கொடுப்போம்.  எமது பொறுமையையும் எமது சிறந்த பண்புகளைக் கொண்டும் எதிர்வரும் நாட்களில் எமக்கு திருப்தியளிக்கும் முடிவுகள் கிடைக்குமென்று நம்பியிருப்போம்.

எனது பொறுப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் உள்ளனர். திடீர் மரண விசாரணை அதிகாரிகள், சுகாதார உத்தியோகஸ்தர்கள், பொது சுகாதார அதிகாரிகள், கிராம சேவகர்கள், JMO இவர்களில் அநேகர் மிக நல்லவர்கள். எம்முடன் நல்லமுறையிலும் ஒத்துழைப்போடும் சுமுகமாகவும் நடப்பவர்கள். நான் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் செயலாளராக ஐந்து வருடங்கள் இருப்பதே இதற்கு சான்று.

எம்மோடு நல்லவர்களாக இருப்போரை பகைவர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. தேவையற்ற வீடியோ மற்றும் ஒலிப்பதிவுகளைப் போட்டு மக்களை உசுப்பேற்றும் வேலையையும் சிலர் செய்கின்றனர். இப்படியானவர்களும் நிதானமாக நடந்து கொள்ளவேண்டும். நாம் தெரிவிக்கும் கருத்துகளின் பின் விளைவுகள் பற்றியும் அதன் நன்மை தீமை பற்றியும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

கே:  மரண விசாரணை அதிகாரி என்ற வகையில் உங்கள் அனுபவத்தில் சமூகத்திற்கு சொல்ல வேண்டிய ஏதேனும் செயதிகள் உள்ளனவா?

PHI அல்லது MOH போன்றவர்கள் காரியாலய நேரத்தில் மற்றும் வேறு பிரதேசங்களிலிருந்து வந்து வேலை செய்பவர்களாக இருப்பதால் திடீரென இரவு நேரத்தில் மரணம் நிகழ்ந்தால் அவர்களின் அறிக்கை பெறுவதில் நடைமுறை ரீதியிலான பிரச்சினை ஒன்று காணப்படுகிறது.

அதற்கான தீர்வொன்றை சுகாதார அமைச்சு செய்து தரும் வரையில், ஊரிலுள்ள ஜனாஸா சங்கங்கள் அல்லது முக்கியஸ்தர்கள் MOH மற்றும் PHI போன்றோருடன் அந்நியோன்ய தொடர்பொன்றை பேணிவருவது சிறந்தது. அத்தோடு அவர்களது தொடர்பிலக்கங்களை வைத்திருந்து அது தொடர்பாக அவர்களது உபதேசங்களைப் பெறுவது சிறந்தது.

அடுத்து பள்ளிவாயல்களின் நிர்வாகிகளுக்கும் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். எம்மில் அநேகமானோர் மரணித்தவர்கள் பற்றிய விபரங்களை அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்காது பள்ளிவாயலில் உள்ள அடக்கஸ்தலங்களில் அடக்கம் செய்கின்றனர்.  பள்ளி நிர்வாகிகள் கூட அவர்களது ஜமாஅத்தாராயின் அதற்கான அனுமதியை உடன் வழங்குகின்றனர். அவ்வாறின்றி அடக்கம் செய்வதற்கு முன்னர் நிர்வாகிகள் கவனம் செலுத்தவேண்டிய சில ஆவணங்கள் இருக்கின்றன.

ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கான அனுமதியுடனான இடத்தை குறிப்பிட்டு கிராமசேவை அதிகாரி அல்லது பிறப்பு, இறப்பு பதிவாளர் (Registrar) அல்லது நீதிமன்றம் மூலம் கடிதமொன்றை வழங்கியிருப்பர். இந்த அனுமதிக் கடிதம் இருக்கிறதா என்று பரிசீலித்த பின்பே அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்க வேண்டும். அத்துடன் அக்கடிதங்களின் நிழல் பிரதி (Photo Copy) ஒன்றையும் வைத்திருப்பதுடன் அவைகளை ஆவணமாக சேகரித்து வைக்கவேண்டும்.

குறித்த ஒழுங்கில் இல்லாது மேல்சொன்ன அரச அதிகாரிகள் எவருக்கும் தெரியாமல் ஜனாஸாவொன்று அடக்கம் செய்யப்பட்டால் மீண்டும் அதனை தோண்டி எடுக்க வேண்டிய வாய்ப்பும் உள்ளது.

அத்தோடு மரண அத்தாட்சிப்பத்திரத்தை பெற முடியாமல் போகும். மரண அத்தாட்சிப்பத்திரம் இல்லையெனின் குடும்பத்தினர் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி வரும்.

மரணித்தவரின் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் அதைப்பெறமுடியாது போகும். சொத்துப் பிரச்சினைகள் உருவாகும். இது போன்ற இன்னும் பல பிரச்சினைகள் வரும்.

ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு முன் பள்ளிவாயல் நிர்வாகிகள் குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தால் குறைந்த பட்சம் அவர்கள் அந்த நேரமாவது குறித்த அதிகாரிகளை அனுக வாய்ப்பிருக்கிறது. இதனால் பல்வேறு சிக்கல்களிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.  மரணங்கள் தொடர்பில் மேலதிக விபரங்கள்  தேவைப்படுவோர் 077 8000210 என்ற இலக்கத்தின் ஊடாக என்னை தொடர்பு கொள்ளலாம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.