Verified Web

அளுத்கம : சமூகத்திற்காக கால்களை இழந்ததில் பெருமைதான்...

2015-06-16 10:56:45 Administrator

-பிஷ்ரின் முஹம்மத்-

பௌத்த கடும்­போக்கு சக்­தி­க­ளாலும் கடந்த ஆட்­சி­யா­ளர்­களின் துணை­யு­டனும் கடந்த வருடம் அளுத்­கமை மண்ணில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக பாரிய இனக்­க­ல­வரம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டதை யாராலும் இலகுவில் மறந்து விட முடி­யாது. இரத்தக் கறைபடிந்த இந்த வரலாற்றுக்கு இன்றுடன் சரியாக ஒரு வருடமாகிறது.

 நாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­திலும் கூட இந்த கல­வ­ரத்தில் முஸ்­லிம்கள் முகம் கொடுத்த காயங்­களும் வடுக்­களும் கார­ண­மாக அமைந்­தன.

கடந்த ஆட்­சியில் சிங்­கள பேரி­ன­வாதம் தூண்­டப்­பட்டு சிறு­பான்மை முஸ்லிம் தமிழ் சமூ­கங்கள் ஒடுக்­கப்­பட்­டன. முப்­பது வருட யுத்­தத்தை வெற்றி கொண்ட முன்னாள் ஆட்­சி­யாளர்கள் தனது ஆட்­சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் யுத்­தத்­திற்கு பின்னர் இன்­னொரு சிறு­பான்­மை­யான முஸ்லிம் சமூ­கத்தின் மீது கோர வெறி­யாட்­டத்தை ஆரம்­பித்தனர். 

அரசின் அனு­ச­ர­ணை­யுடன் இக்­கா­லப்­ப­கு­தியில் ஆரம்­பிக்­கப்­பட்ட பொது பல­சேனா அமைப்பின் முழு­மை­யான ஆத­ர­வு­டனும், அனு­ச­ர­ணை­யு­ட­னுமே இந்த கல­வரம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­தற்­கான ஆதா­ரங்கள் இன்று அம்­ப­ல­மாகி விட்­டன. 

பொது­ப­ல­சேனா அமைப்பின் முக்­கிய அங்­கத்­த­வ­ராக செயற்­பட்டு அவ்­வ­மைப்பின் போக்குப் பிடிக்­காமல் அதி­லி­ருந்து விலகிச் சென்ற இலங்கை சிற்­றுண்­டிச்­சா­லைகள் சங்கத் தலைவர் அசேல சம்­பத்தின் வாக்கு மூலம் அதற்கு ஆதா­ர­மாக அமை­கின்­றது. 

''அளுத்­கமை கல­வ­ரத்­துக்கு முழு­மை­யாக வகை சொல்ல வேண்­டி­யது பொது­பல சேனா தான். தேவை­யில்­லாத பிரச்­சினை ஒன்றை ஏற்­ப­டுத்தி இன்­னொரு இனத்­த­வ­ருடன் குரோத எண்­ணத்தை உருவாக்கிப் பெரும் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தினர்.

அந்த அமைப்பு பிர­பல்யம் அடையும் நோக்­கி­லேயே இந்த மிகப் பெரிய அழிவை அளுத்­க­மையில் ஏற்­ப­டுத்­தினர். இரா­ணு­வமே இந்த இடத்­துக்கு தற்­போது சென்று புனர்­நிர்­மாணப் பணி­களைச் செய்­கி­றது என்றால் இரா­ணு­வத்­துக்கும் இக்­க­ல­வ­ரத்­துக்கும் தொடர்­புள்­ளது'' என அசேல குறிப்பிடுகிறார். 

இக் கல­வரம் நடந்து இன்று சரி­யாக ஒரு வருடம் பூர்த்­தி­ய­டைந்­துள்ள நிலையில் இந்த பிரச்­சி­னையால் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­களின் நிலை குறித்து அறியும் நோக்கில் அப்­பி­ர­தே­சத்­துக்கு நாம் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டாம். இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலரையும் நேரில் சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடினோம்.

இக் கலவரம் வெடித்தமைக்கான பின்னணியை பேரு­வளை பிர­தேச சபை உறுப்­பினர் ஏ.ஆர். எம். பதி­யூதீன் இவ்வாறு விளக்குறார்.
'' கடந்த வருடம் ஜூன் மாதம் 12 ஆம் திகதி அளுத்­கமை பிர­தே­சத்தில் முஸ்லிம் இளை­ஞர்கள் சிலர் தேரர் ஒருவர் சென்ற வாக­னத்தின் சார­தியை தாக்­கி­யதை அடுத்தே இந்த பிரச்­சினை ஆரம்­ப­மா­னது. 

இத­னை­ய­டுத்து அடுத்த நாள் வெள்­ளிக்­கி­ழமை அன்­றைய பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் அதி­கா­ரிகள் எம்மை சந்­தித்­தனர். அதன் பின்னர் நானும் மேலும்  சில முக்­கி­யஸ்­தர்­களும் முன்னாள் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரான அனுர சேனா­நா­யக்­கவை  சந்­தித்தோம்.

இன்று வெள்­ளிக்­கி­ழமை ஜும்­ஆ­வுக்கு பிறகு எந்­த­வொரு ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் ஈடு­ப­டக்­கூ­டாது என அவர் எங்­க­ளிடம் வேண்டிக் கொண்டார்.

அதனை நாங்கள் ஏற்­றுக்­கொண்டு அன்­றைய தினம் ஜும்­ஆவின் பின்னர் எந்­த­வொரு ஆர்ப்­பாட்­டமும் நடக்­காமல் பார்த்­துக்­கொண்டோம். 

15 ஆம் திகதி பொது பல சேனாவின் ஆர்ப்­பாட்டம் ஒன்று நடக்கப் போகி­றது என்பதை அறிந்து அதனை தடுக்­கு­மாறு அவ­ரிடம் நாங்கள் வேண்­டினோம். அது மேலி­டத்து உத்­த­ரவு. அதனை எங்­களால் தடுக்க முடி­யாது. உங்கள் பிர­தேச பாது­காப்­புக்­காக 1100 பொலி­ஸாரை அனுப்­புவோம் என அனுர சேனா­நா­யக்க எம்மிடம் தெரிவித்தார்.

14 ஆம் திகதி தர்கா நகரில் பதற்­ற­மா­னதோர் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. பெரும்­பான்மை சமூ­கத்­தினர் பெரிய பள்­ளியை உடைக்கப் போவ­தாக கதை பர­வி­யி­ருந்­தது. 15 ஆம் திகதி அளுத்­க­மையில் பொது­ப­ல­சே­னாவின் கூட்டம் 2.30 மணிக்கு ஆரம்­ப­மா­னது.

அதில் சுமார் 3500 முதல் 4000 பேர் கலந்து கொண்­டி­ருந்­தனர். கூட்டம் முடிந்து பள்­ளியை உடைக்­கப்­போ­வ­தாக கதை பர­வி­யதை அடுத்து முஸ்லிம் இளை­ஞர்கள் பள்­ளியை பாது­காக்கும் நோக்கில் பள்­ளியில் ஒன்று கூடினர்.

கூட்­டத்தின் பின்னர் சுமார் 5.30 மணி­ய­ளவில் அவர்கள் ஊர்­வ­ல­மாக வந்து  சீன­வத்தை என்ற பிர­தே­சத்தில் பெரும்­பான்மை இனத்தவர்களுக்கு மத்­தியில்  உள்­ள 5, 6 முஸ்லிம் வீடுகளை தாக்­கினர். 

பின்னர் ஊர்­வ­லத்தில் வந்­த­வர்கள் அப் பகுதியில் உள்ள பள்ளி மீது தாக்­கினர். அதன் பின்­னரே  கல­வரம் ஆரம்­ப­மா­னது. இரவு முழு­வதும் தாக்­குதல் இடம்­பெற்­றது. முஸ்­லிம்­களின் உட­மைகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. தாக்­கப்­பட்­டன.

11 பேர் துப்­பாக்கி சூட்­டுக்கு இலக்­காகி காய­முற்­றனர். இருவர் உயி­ரி­ழந்­தனர்.  மாலை 5.30  மணிக்கு இச்­சம்­பவம் இடம்­பெற்­றதையடுத்து 5.55 மணியளவில் பொலிஸ் ஊர­டங்குச் சட்டம் போடப்­பட்­டது. அந்த நேரம் சுமார் 500 அதி­ர­டிப் ­ப­டை­யினர் பாது­காப்பு கட­மை­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

ஊர­டங்கு சட்டம் போடப்­பட்­டி­ருந்த  நிலை­யி­லேயே  இந்த தாக்­குதல்கள் இடம்பெற்றன '' என்றார். 

இச்­சம்­ப­வத்தில்  தனது காலொன்றை இழந்த அப்கார் என்ற இளைஞரை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தோம்.
'' இரவு எட்டு மணிக்கு  எனது சிங்­கள நணபர் ஒருவர் எனக்கு அழைப்­பேற்­ப­டுத்­தினார். STF  எங்­க­ளுக்கு ஒரு மணி நேரம் தந்­துள்ளார்கள்.

நீங்கள் சென்று பள்­ளியை தாக்கி விட்டு வாருங்கள் என்று கூறி­யுள்­ளனர் என்றார். அந்த அழைப்பை தொடர்ந்து  நான் பள்ளி அருகில் சென்றேன்.

என்­னைபோல் பல இளை­ஞர்கள்  அந்த இடத்தில் குவிந்­தி­ருந்­தனர். எட்டு மணி அளவில் தாக்­கு­தல்கள் ஆரம்­ப­மா­கின. மின்­சாரம்  துண்­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு பெரும்­பான்­மை­யினர் கற்­களால் தாக்­கினர். நாங்­களும் தாக்­கினோம். இவ்­வாறு இரண்டு தட­வைகள் இடம்­பெற்­றன.

அதி­காலை 12.30 அல்லது1.00 இருக்கும். பெருந்­தி­ர­ளான பெரும்­பான்­மை­யினர் வீடுகளை உடைத்து கொண்டு வந்­தார்கள். நாங்­களும் தாக்­கினோம். பின்னர் அவர்கள் திரும்பிச் சென்­றனர்.

அவர்கள் வந்த பக்­கத்தில் இருந்து பாரிய 'ப்ளாஷ் லைட்'  ஒன்றின் வெளிச்சம்  அடிக்­கப்­பட்­டது. பின்னர் அதி­ர­டிப் ­ப­டை­யினர் சர­மா­ரி­யாக துப்­பாக்­கியால் சுட்­டனர்.  பலர்  துப்­பாக்கி சூட்­டுக்கு இலக்­கா­கினர். திடீரென எனது காலில் இருந்து இரத்தம் வந்­தது.

சிலர் என்னைத் தூக்கி கொண்டு பள்­ளிக்குச் சென்­றனர். அதன் பின்னர் தான் துப்­பாக்கிச் சூடு இடம்­பெற்­றுள்­ளமை தெரியவந்தது. ஊரடங்குச் சட்டம் போட்­டி­ருந்­ததால் பல கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் நாகொடை வைத்­தி­ய­சா­லைக்கு துப்­பாக்கி சூடு இடம்­பெற்ற மூன்று மணி நேரத்தின் பின்னரே கொண்டு செல்­லப்­பட்டேன்.

அந்த வைத்­தி­ய­சா­லையில் கூடி­யி­ருந்த பெரும்­பான்மை சமூ­கத்­தினர் சிற்­றூ­ழி­யர்கள் ''உங்­க­ளுக்கு வைத்­தியம் செய்ய முடி­யாது'' என்று ஏசினர். எனக்கு ஒருவர் சேலைன் ஏற்ற முயற்­சித்த போது அங்­கி­ருந்த ஒரு பௌத்த தேரர் அதனைத் தடுத்தார்.

பின்னர் அப்­ப­டியே மயங்கி விட்டேன். பகல் நேரம் என்னை அம்­பி­யூ­லன்ஸ்ஸில் எங்கோ  கூட்­டிச் ­சென்­றனர். அதில் இருந்­த­வர்­க­ளிடம் எங்கே கூட்டி செல்­கின்­றீர்கள் என்று கேட்டேன். ''வாயை மூடிக்­கொண்டு வா  கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­கின்றோம்'' என்­றனர்.

ஓராண்டின் பின்னரான வாக்குமூலம்

அங்கு வைத்­தியர் பரி­சோ­தித்தார். எனது கால்­களில் இரு பக்­கமும் கிழிக்­கப்­பட்டு வெறும் பென்டேஜ் ஒன்றால் கட்­டப்­பட்­டி­ருந்­தது.

எனக்கு துப்­பாக்கிச் சூடு தான் பட்­டி­ருக்­கி­றது. ஆனால் பின்னர் வைத்தியசாலையில் காலின் இரு பக்­கமும் கிழிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அவ்­வாறு கால் கிழிக்­கப்­பட்டு காலில்  வைரஸ் உட்­பு­குந்­த­தா­லேயே கால் அகற்­றப்­படும் நிலை ஏற்­பட்­ட­தாக வைத்­தியர் கூறினார்''   என அப்கர் தனது நிலையை விபரித்தார். 

இக்ரா  தொழில்­நுட்பக் கல்­லூ­ரியில்  கற்று விட்டு பயிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே இவர் இக்­க­ல­வ­ரத்தில் தன் காலை இழந்தார். 

தற்­போது செயற்கைக்கால் அணிந்­த­வ­ராக முச்­சக்­க­ர­வண்டி ஓட்­டிக்­கொண்­டி­ருக்­கின்றார். சம்­பவம் இடம்­பெற்­ற­போது பலர் உத­வினர் என்றும் கூறினார். 

வெளி­நாடு சென்று நான்  படித்த துறையில்  வேலை செய்­வ­தற்கு தயா­ராக இருந்தேன். ஆனால் எனது கனவுகள் கலைந்து விட்டன.  தற்­போது என்னால் அதனை செய்ய முடி­யாது.  இருந்தாலும் சமூ­கத்­துக்­காக  எனது ஒரு காலை இழந்­ததை பெரு­மை­யாகவே நினைக்­கின்றேன்'' என்றார் அப்கார்.

இந்த சம்­ப­வத்தில் தனது ஒரு காலை இழந்த மற்றொரு 19 வய­து இளைஞரான அஸ்ஜதையும் சந்தித்தோம். இப்போது அவர் செயற்கைக் காலின் உதவியுடன் முச்சக்கர வண்டி ஓடி குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்.

ஆறு பேரை கொண்ட இவ­ரது குடும்­பத்தில் அவ­ரது மூத்த சகோ­த­ரரின் உழைப்­பிலும் இவரது முச்­சக்­கர வண்டி சம்பாத்தியத்திலுமே  குடும்பம் நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

கடந்த வருடம் இதே நாளில்  தான் காலை இழந்த கதையை எம்­மோடு பகிர்ந்து கொண்டார். 

'' நான் முச்­சக்­க­ர­வண்டி பழு­து­பார்க்கும் தொழில்தான் செய்தேன். வேலை முடித்து விட்டு வீட்­டுக்கு வந்தேன். பள்­ளிக்கு அடிக்­கப் ­போ­வ­தாக அறிந்து கொண்டு அந்த இடத்­துக்கு இரவு 8.00 மணி­ய­ளவில் சென்றேன். பெரும்­பான்­மை­யினர்  எங்கள் மீது தாக்­கி­னார்கள். நாங்­களும் கற்­களால் தாக்­கினோம். இரவு 12.00-/12.30 மணி இருக்கும்.

பெரிய லைட் வெளிச்சம் ஒன்று வந்­தது. பின்னர் எங்களை நோக்கி துப்­பாக்­கிச்­சூடு நடந்­தது. பட்­டாசு வெடிக்கிறது என்­றுதான் நாங்கள் முதலில் நினைத்தோம். ஆனால் அது துப்­பாக்­கிச்­சூடு.

திடீ­ரென எனது கால் அப்­ப­டியே முறிந்­தது. நான் கீழே விழுந்து விட்டேன். பின்­னர்தான் எனக்கு தெரியும் எனது காலில் துப்­பாக்­கிச்­சூடுபட்­டுள்­ளது என்று. எனது நண்பர் ஒருவர் புடவை ஒன்றால் எனது காலைக்­கட்­டினார். இரவு 2–3 மணி இருக்கும். தர்கா நகர் அரச வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றனர். அங்கே ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று சொல்ல அம்­பி­யு­லன்ஸில் நாகொட வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றனர்.

அங்கு என்­னுடன் எனது சகோ­தர் ஒரு­வரும் வந்தார். அவரை வைத்­தி­ய­சா­லையில் இருந்து வெளியே அனுப்பி விட்­டனர். உடலில் இருந்த ஆடை­களை களைந்து என்­னையும் அப்­க­ரையும் உடலில் ஒட்­டுத்­ து­ணியும் இல்­லாமல் நிர்­வா­ண­மாக ஒரு மூலையில் போட்டு வைத்­தி­ருந்­தனர்.

நாகொட வைத்­தி­ய­சா­லையில் இருந்த முஸ்லிம் வைத்­தியர் ஒருவர் எனக்கு வைத்­தியம் செய்ய வந்தார். ஆனால் அங்­கி­ருந்த இரண்டு பிக்­குகள் அவரை விரட்டிவிட்­டார்கள் என்றார் அஸ்ஜத் கவலை தோய்ந்த குரலில். 

நான் வலியால் துடித்தேன். தண்ணீர் தண்ணீர் என்று அல­றி­ய­போது மூன்று வைத்­தி­ய­சாலை சிற்­றூ­ழி­யர்கள் வந்து ''தம்­பியா உனக்கு தண்­ணீரா வேண்டும்?'' என்று கன்­னத்தில் அறைந்­தனர்.

அப்­ப­டியே நான் மயங்கி விட்டேன். பின்னர் காலையில் கொழும்பு வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டேன். அது­வ­ரையில் உடம்பில் ஒட்­டுத்­து­ணி­யு­மில்­லாமல் நிர்­வா­ண­மா­கவே இருந்தேன். கொழும்பில் வைத்து முஸ்லிம் ஒரு­வரே எமக்கு சாரம் வாங்கி கொடுத்தார்.

வைத்­தியர் காலை பார்த்து விட்டு எதுவும் செய்ய முடி­யாது காலை அகற்ற வேண்டும் என்று சொன்னார்.  பொலிஸ் அதிரடிப்படையினர் தான் எம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனது காலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி ரவை அரசாங்க படையினருக்கு சொந்தமானது.

இந்த சம்­பவம் நடக்கும் போது வாப்பா வெளி­நாட்டில் இருந்தார். தற்­போது வாப்பா வெளி­நாட்டில் இருந்து வந்­துள்ளார். இத­ய நோய் ஏற்­பட்­டுள்­ளதால் அவ­ரால் தொழில் செய்ய முடியவில்லை. உம்­மாவும் நோய் வாய்ப்­பட்­டுள்ளார்'' என்று தனது கவ­லையை எம்­மோடு பகிர்ந்து கொண்டார்.

'' என்னால் தற்­போது ஆட்டோ திருத்தும் வேலை செய்ய முடி­யாது. முச்­சக்­க­ர ­வண்டி ஓடு­வதில் 1000 ரூபா வரை சம்­பா­திப்பேன். எனக்கு ஒரு நிரந்­தர தொழில்தான் தற்­போது தேவை­யாக உள்­ளது'' என்றும் கூறினார் அஸ்ஜத்.
அதே­வேளை இக்­ க­ல­வ­ரத்தில் உயி­ரி­ழந்தவர்களின்  வீடுகளுக்கும் நாம் விஜயம் செய்தோம்.

மூன்று பெண் பிள்­ளை­களின் தந்­தை­யான சஹ்ரான்  தாக்­குதல் இடம்­பெற்ற சில மணி நேரத்தில் உயி­ரி­ழந்­த­தாக அவ­ரது மைத்­துனர் எம்­மிடம் கூறினார். 

11, 4 மற்றும் ஒரு  வய­தான பெண் குழந்­தைகள், தாயி­னதும் குடும்­பத்­தி­ன­ரதும் அர­வ­ணைப்பில் வளர்­கின்­றனர்.  11 வய­தான மகள் தந்­தையின் ஆசைப்­படி மத்­ரஸா ஒன்றில் சேர்க்­கப்­பட்­டுள்ளார். பலர் உத­விகளை செய்­துள்ள போதும் அவ­ரது இழப்பை எதனாலும் ஈடு செய்ய முடி­யாமலே உள்­ளது.

இக்­க­ல­வ­ரத்தின் போது துப்­பாக்­கிச்­சூட்­டுக்கு இலக்­காகி ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்த துவான் என்­ப­வ­ரது இரண்டு பெண் குழந்­தையும் மனை­வியும் அவ­ரது பெற்­றோரும் வீடொன்றில் வசித்து வரு­கின்­றனர். சில உத­விகள் ஆரம்­பத்தில் இவர்­க­ளுக்கு  கிடைக்கப் பெற்­றுள்­ளன. துவானின் மனைவி தற்­போது தையல் தொழிலில் ஈடு­பட்டு வரு­கின்றார்.

குழந்­தைகள் இரண்­டையும் நல்ல நிலைக்கு கொண்டு வரு­வதே எனது கன­வாக உள்­ளது என்று துவானின் மனைவி கூறினார். 

இந்தக் கல­வ­ரத்தில் பாதிக்­கப்­பட்ட 223 வீடு­களும் 87 வியா­பார நிலை­யங்­களும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யினால்  வழங்­கப்­பட்ட 200 மில்­லியன் ரூபாவைக் கொண்டு மேஜர் ஜெனரல் உபய மெத­வெ­லவின் தலை­மையிலான இரா­ணு­வத்தால் புனர் நிர்­மாணம் செய்­யப்­பட்­டுள்­ளன.
பாதிக்­கப்­பட்ட வீடு­களில் 217 வீடுகள் முழு­மை­யாக தற்­போது புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்டு விட்­டது. 84 வியா­பார நிலை­யங்­களும் புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்டு மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­துடன் இம்­மாத இறு­திக்குள் எஞ்­சி­யுள்ள 6 வீடு­களும் 3 வியா­பார நிலை­யங்­களும் முழு­மை­ய­டைந்து விடும் என மேஜர் ஜெனரல் உபய மெத­வெல தெரி­விக்கிறார்.

இரா­ணு­வத்­தினர் பாதிக்­கப்­பட்ட வீடு­களை சிறப்­பாக அமைத்துத் தந்­துள்­ள­தாக பிர­தேசவாசிகள் தெரி­விக்கின்றனர்.

'' துர­திஷ்­ட­வ­ச­மா­கவே இந்த கல­வரம் இடம்­பெற்­றது. இவ்­வா­றான ஒரு சம்­பவம் இடம் பெற வேண்டும் என்று நாங்கள் ஒரு­போதும் நினைத்தும் பார்த்­த­தில்லை. எதிர்­கா­லத்­திலும் இப்­படி ஒரு சம்­பவம் ஏற்­பட்டு விடக்­கூ­டாது'' என்று பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் தற்­போது கூறு­கின்றார்.

ஆனால் இந்தக் கல­வரம் ஏற்­பட இவ்­வ­மைப்பின் செயற்­பா­டுதான் காரணம் என்­ப­தற்கு மக்­களே சாட்சி.

எது எவ்­வா­றிருப்பினும் இப்­பி­ரச்­சினை தொடர்பில் சரி­யான விசா­ர­ணைகள் இது­வரை இடம்­பெ­ற­வில்லை. இத்­ துப்­பாக்­கிச்­சூடு யாரால் நடாத்­தப்­பட்­டது என்­பது கூட இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவுமில்லை என்­பதும் கவ­லைக்­குரிய­தாகும். 

புதிய அர­சில் ஆணைக்­குழு ஒன்று அமைத்து விசா­ரணை நடாத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும் அதுவும் பகல் கனவாய் போனது. முஸ்­லிம்­களின் அனைத்து பிரச்சினைகள் தொடர்பிலும் விசாரணை நடாத்த வேண்டும் என மீண்டும் ஒரு கடிதத்தை ஜனாதிபதிக்கு கொடுத்துள்ளதாகவும் விரைவில் அது தொடர்பில் ஆணைக்குழு நியமிக்கப்படும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி தெரிவிக்கிறார். ஏதும் ஆக்கபூர்வமாக நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடம் கழிந்துள்ள இன்றைய நிலையில் சுமுகமான முறையில் அப்பிரதேசத்தில் இரு சமூகத்தினரும் வாழ்வதை அவதானிக்க முடிகின்றது.

பிரதேசவாசிகள், சமூக சேவை அமைப்புக்கள், அரச நிறுவனங்கள் என பல தரப்பினரும் அப்பிரதேசத்தில் சக வாழ்வைக் கட்டியெழுப்ப பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். 

எதிர்வரும் காலங்களில் வெ ளிச் சக்திகளின் தூண்டுதல்களால் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதிருக்க வேண்டும். பிரதேச மக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது நிலவி வருகின்ற சுமுகமான சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்வதே சாலச்சிறந்ததாகும்.