Verified Web

ஹக்கீம் ரிஷாத் அணிகளின் வருகைக்காக காத்திருக்கும் மைத்திரி மஹிந்த அணி

6 days ago Administrator

ருஷ்தி அகமட்

நாட்டில் அர­சியல் களம் ஒரு­புறம் பர­ப­ரப்­பா­க­வி­ருக்­கின்ற நிலையில் மறு­புறம் முஸ்லிம் அர­சியல் களமும் பர­ப­ரப்­பா­கவே இருந்து கொண்­டி­ருக்­கி­றது. ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் என்ன முடி­வெ­டுக்கப் போகின்­றன எனும் கேள்வி இன்று முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளையும் தொற்றிக் கொண்­டுள்­ளது.

''நாம் ரணி­லுக்­குத்தான் ஆத­ரவு'' என இரு முஸ்லிம் தலை­வர்­களும் பகி­ரங்­க­மாகச் சொன்­னாலும் கூட அதனை முழு­மை­யாக நம்பி ஏற்றுக் கொள்­வ­தற்கு முஸ்லிம் அர­சியல் குறித்த அறிவும் அனு­ப­வமும் உள்­ள­வர்கள் தயா­ரில்லை. எதிர்­வரும் 14 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கூடி வாக்­கெ­டுப்பு ஒன்று நடந்தால், அதில் வாக்­க­ளிக்கும் கணப்­பொ­ழுது வரை முஸ்லிம் தலை­வர்­க­ளி­னதோ அல்­லது எம்.பி.க்களி­னதோ வாக்­கு­று­தி­களை நம்ப முடி­யாது எனும் பட்­ட­றிவே இதற்குக் காரணம்.

இரு கட்­சி­களின் தலை­வர்­களும் இந்த முடிவில் உறு­தி­யாக இருக்­கி­றார்கள் என்று சொன்­னாலும் கூட அவர்­க­ளது எம்.பி.க்கள் என்ன டீல்­களைப் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்­களோ என்­பது யாருக்கும் தெரி­யாது. ஏன் தலை­வர்­க­ளுக்குக் கூட தெரி­யாது. அதற்கு நல்ல உதா­ர­ணம்தான் அ.இ.ம.கா. தேசியப் பட்­டியல் எம்.பி. இஸ்­மா­யிலின் கதை. (அது பற்றி கீழே விரி­வாகப் பேசுவோம்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு தலை­வ­ருடன் சேர்த்து 7 எம்.பி.க்கள் இருக்­கி­றார்கள். அகில இலங்கை மக்கள் காங்­கி­சுக்கு அதன் தலைவர் அடங்­க­லாக 5 எம்.பி.க்கள் இருக்­கி­றார்கள். இந் நிலையில் இரு கட்சித் தலை­வர்­களும் தமது எம்.பி.க்கள் மஹிந்த அணியின் வலையில் வீழ்ந்­தி­டா­தி­ருக்க பலத்த 'பாது­காப்பு' ஏற்­பா­டு­களைச் செய்­தி­ருக்­கி­றார்கள்.

முஸ்லிம் காங்­கிரஸ்

ரணில் விக்­ர­ம­சிங்க பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டு,  மஹிந்த ராஜ­பக்ச பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்ட சமயம் மு.கா.தலைவர் சென்­னையில் கலைஞர் கரு­ணா­நி­தியின் நினைவு நிகழ்வில் பங்­கேற்­றி­ருந்தார். இலங்­கையில் நடந்த இந்த அதி­ரடி அர­சியல் மாற்றம் பற்றி அறிந்த ஹக்கீம், தனது ஏனைய நிகழ்ச்சி நிரல்­களை இரத்துச் செய்­து­விட்டு அடுத்த விமா­னத்தில் ஏறி மறுநாள் அதி­கா­லை­யி­லேயே கொழும்பை வந்­த­டைந்­து­விட்டார்.

''நான் கொழும்பு வந்­த­வுடன் சகல எம்.பி.க்களும் என்னைச் சந்­திக்க வாருங்கள்'' என்ற தக­வலை முன்­கூட்­டியே அனுப்­பி­விட்டே அவர் விமான நிலை­யத்தை வந்­த­டைந்தார். தனது எம்.பி.க்களுடன் கலந்­து­ரை­யா­டி­விட்டு அலரி மாளிகை சென்ற அவர் ரணில் விக்­ர­ம­சிங்­கவைச் சந்­தித்து தனது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தினார். மஹிந்­தவின் நிய­மனம் சட்­ட­வி­ரோ­த­மா­னது என்றும் ஊடக மாநாட்டில் அறி­வித்தார்.

நிலைமை இவ்­வா­றி­ருக்­கை­யில்தான் மஹிந்த அணி­யினர் தமக்கு பாரா­ளு­மன்றில் 113 ஆச­னங்­களைப் பெறு­வ­தற்­கான காய் நகர்த்­தல்­களை ஆரம்­பித்­தனர். அச் சமயம் அமைச்­ச­ரவை கலைக்­கப்­பட்­டி­ருந்­ததால் தமது பக்கம் இணைந்து கொள்ளும் சக­ல­ருக்கும் அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­படும் என அறி­வித்­தனர். கபினட் அமைச்சு, இரா­ஜாங்க அமைச்சு, பிர­தி­ய­மைச்சு ஆகிய பத­விகள் இந்த எம்.பி.க்கள் முன் வைக்­கப்­பட்­டன.

 இல­கு­வாக தம்­பக்கம் ஈர்க்­கலாம் எனக் கரு­தப்­படும் எம்.பி.க்கள் பற்­றிய விப­ரங்­களை மஹிந்த அணி­யினர் தம் வசம் வைத்­தி­ருந்­தனர். உட­ன­டி­யாக தொலை­பேசி அழைப்­புகள் பறந்­தன. இர­க­சிய சந்­திப்­புகள் நடந்­தன. அவற்றில் சில முஸ்லிம் காங்­கிரஸ் எம்.பி.க்களும் அடங்­குவர்.

இது பற்றி அறிந்த மு.கா. தலைவர் சகல எம்.பி.க்களையும் தனது கண்­கா­ணிப்பில் வைத்­தி­ருக்க விரும்­பினார். காலை முதல் மாலை வரை தனது வீட்­டி­லேயே அனை­வ­ரையும் தங்­கி­யி­ருக்கச் செய்தார். அவ­சர தேவை­க­ளுக்­கா­க­வன்றி எம்.பி.க்கள் வெளியில் செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. எனினும் அமைச்­சரின் இல்­லத்­துக்கு பலரும் வந்து போவதால் எம்.பி.க்கள் அனை­வரும் அங்­கேயே இருப்­பது பொருத்­த­மா­ன­தல்ல எனக் கருதி சக­லரும் கொழும்­பி­லுள்ள பிர­பல ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்­கப்­பட்­டனர். இது கடந்த வருடம்  தமி­ழ­கத்தில் அ.இ.அ.தி.மு.கா. கட்சி எம்.பி.க்கள், சசி­கலா தரப்­பி­னரால் சென்­னை­யி­லுள்ள  விடுதி ஒன்றில் பல நாட்கள் அடைத்து வைக்­கப்­பட்ட சம்­ப­வத்­தையே நினைவு கூர்­வ­தாக இருந்­தது. இவ்­வாறு தாம் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்­கப்­பட்­டி­ருப்­பதை மு.கா. எம்.பி.க்களே தமது முகநூல் பதி­வுகள் மூலம் வெளிப்­ப­டுத்­தினர்.

இத­னையும் தாண்டி மு.கா. எம்.பி.க்களுடன் மஹிந்த அணி­யினர் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­தவே செய்­தனர். ஆனாலும் எந்­த­வொரு எம்.பி.யும் தனது கையை மீறிச் சென்­று­வி­டா­தி­ருப்­பதில் தலைவர் ஹக்கீம் குறி­யா­க­வி­ருந்தார்.

இதற்­கி­டையில் மு.கா. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்­லா­கம மற்றும் இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் அ.இ.ம.கா. எம்.பி. இஸ்­மாயில் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யா­டலில் பங்­கேற்ற புகைப்­படம் ஒன்று வெளி­யா­கி­யி­ருந்­தது. எனினும் கட்சி தாவும் நோக்கில் அவர் அங்கு செல்­ல­வில்லை என்றும் சினே­க­பூர்வ கலந்­து­ரை­யா­ட­லுக்­கா­கவே சென்­ற­தா­கவும் மௌலானா தரப்பு கூறி­யது. மு.கா.வும் இதனைப் பெரி­து­ப­டுத்­த­வில்லை.

இதற்­கப்பால் தேசிய சூறா சபையும் மு.கா. தலை­வ­ரையும் எம்.பிக்­க­ளையும் சந்­தித்து ஜன­நா­ய­கத்தை பாது­காக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யது. அம்­பாறை மாவட்­டத்தைச் சேர்ந்த உல­மாக்கள் குழு ஒன்றும் கொழும்பு வந்து மு.கா. தலை­வரைச் சந்­தித்து பேசி­யது. (எனினும் இதில் பங்­கேற்ற உல­மாக்கள் பலர் மு.கா.வின் வெளிப்­ப­டை­யான ஆத­ர­வா­ளர்கள் என்­பது இங்கு கவ­னிக்­கப்­பட வேண்­டி­ய­தாகும். கடந்த காலங்­களில் மு.கா. கட்சி மாறும் தீர்­மா­னங்­களை எடுக்கும் போது இவ்­வா­றான உல­மாக்­களின் ஆசீர்­வா­தத்­துடன் தான் தீர்­மா­னத்­துக்கு வந்­த­தாக அறி­வித்­த­தையும் இங்கு ஞாப­க­மூட்­டு­வது நல்­லது.)

இதற்­கி­டையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விசேட கூட்­டத்தில் பங்­கேற்ற பின்னர் கருத்து வெளி­யிட்ட மு.கா. தலைவர் தாம் ரணிலை ஆத­ரிக்கும் தீர்­மா­னத்தில் உறு­தி­யா­க­வி­ருப்­ப­தாகக் கூறி­யி­ருந்தார்.

இந் நிலையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட நிசாந்த முத்­து­ஹெட்­டி­கம எம்.பி., முஸ்லிம் காங்­கிரஸ் மஹிந்த தரப்­புக்கு ஆத­ர­வ­ளிக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­வித்தார். எனினும் இதனை ஹக்கீம் உட­ன­டி­யாக மறுத்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்டார்.

இவ்­வா­றான பர­ப­ரப்­பான சர்ச்­சை­க­ளுக்கு மத்­தி­யில்தான் தலைவர் அடங்­க­லாக 7 மு.கா. எம்.பி.க்களும் நேற்று முன்­தினம் உம்­ரா­வுக்­காக சவூதி அரே­பியா நோக்கிப் பய­ண­மா­கினர்.

நாட்டில் அர­சியல் நெருக்­க­டி­யான சூழ்­நி­லைகள் ஏற்­ப­டும்­போது முக்­கிய தீர்­மா­னங்­களை எடுப்­ப­தற்கு முன்­ன­ராக உம்ரா கட­மைக்­காகச் செல்­வது மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்­ரபின் வழக்­க­மாகும். அதே பாணியைப் பின்­பற்றி கடந்த காலங்­களில் ரவூப் ஹக்­கீமும் பல தட­வைகள் உம்­ரா­வுக்குச் சென்­றுள்ளார். இந் நிலை­யில்தான் தற்­போதும் சகல எம்.பி.க்களையும் அழைத்துக் கொண்டு மு.கா. தலைவர் உம்­ரா­வுக்குச் சென்­றுள்ளார்.

இதன்­போது மஹிந்த அணிக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்­கான தீர்­மா­னங்­களை எடுப்­பார்­களா? அல்­லது தொடர்ந்தும் ரணிலை ஆத­ரிப்­ப­தற்­கான தீர்­மா­னத்தை உறு­திப்­ப­டுத்­து­வார்­களா? என்­பதைப் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

எனினும் புனித கஃப­துல்­லாஹ்வின் முன்னால் வைத்து தாம் தலை­வரின் தீர்­மா­னத்தை மீறி, கட்­சியை உடைத்துக் கொண்டு செல்­ல­மாட்டோம் என உறு­தி­மொழி எடுக்கும் நிகழ்வு நடக்கும் என்­பது மட்டும் உண்மை.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ்

மு.கா. தலை­வரைப் போன்றே தனது எம்.பி.க்களையும் பாது­காக்க வேண்­டிய பெரும் நெருக்­க­டியில் ரிஷாத் பதி­யுதீன் உள்ளார். ஆனாலும் அவ­ரது அணி­யி­லி­ருந்து ஒருவர் வேலியைத் தாண்­டிய சம்­பவம் கடந்த வாரம் இடம்­பெற்­றது.

தேசியப் பட்­டியல் எம்.பி.யாக நிய­மிக்­கப்­பட்ட தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழக முன்னாள் உப வேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்­மாயில், கடந்த வெள்­ளிக்­கி­ழமை மஹிந்த அணிக்கு ஆத­ர­வ­ளிக்கும் வகையில் ஜனா­தி­பதி இல்­லத்­துக்குச் சென்றார். இதற்­கான ஏற்­பா­டு­களை கிழக்கு மாகாண ஆளு­நரும் முஸ்லிம் இரா­ஜாங்க அமைச்சர் ஒரு­வரும் மஹிந்த அணியின் முக்­கிய எம்.பி. ஒரு­வரும் மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இஸ்­மாயில் இவ்­வாறு அங்கு செல்லும் வரை அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு இது பற்றித் தெரிந்­தி­ருக்­க­வில்லை. இந்த தகவல் கிடைத்­ததும் அதிர்ச்­சி­ய­டைந்த ரிஷாத், உட­ன­டி­யாக ஜனா­தி­பதி மைத்­திரி மற்றும் பிர­தமர் மஹிந்த தரப்பை தொடர்பு கொண்டு தனது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தினார். ''தயவு செய்து எனது கட்­சியை பிள­வு­ப­டுத்­தா­தீர்கள். இஸ்­மாயில் எம்.பி.க்கு பிர­தி­ய­மைச்சு பதவி வழங்கி அவரை உங்கள் பக்கம் ஈர்த்தால் எதிர்­கா­லத்தில் எமது கட்­சியின் ஆத­ரவு எந்­த­வ­கை­யிலும் உங்­க­ளுக்கு கிடைக்­காது. உங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டு­மானால் நாங்கள் எல்­லோரும் கூட்­டாக தீர்­மா­னித்து 5 பேரு­மாக வரு­கிறோம். இப்­போ­தைக்கு இஸ்­மாயில் எம்.பி.யை திருப்பி அனுப்­புங்கள். எமது முடிவை விரைவில் அறி­விப்போம்.'' என்றார்.

இத­னை­ய­டுத்து கல­வ­ர­ம­டைந்த மஹிந்த - மைத்­திரி தரப்­பினர் இஸ்­மாயில் எம்.பி.யை திரும்பிச் செல்­லு­மாறும் அமைச்சர் ரிஷாத் உட்­பட சக­ல­ரையும் அழைத்துக் கொண்டு வரு­மாறும் கோரினர். ஆனால் தலை­வ­ருக்குத் துரோ­க­மி­ழைத்­து­விட்டு, அவ­ரது அனு­ம­தி­யின்றி மஹிந்த தரப்­புக்கு ஆத­ர­வ­ளிக்கச் சென்ற குற்ற உணர்வில் இஸ்­மாயில் எம்.பி. அந்த நிமி­டத்­தி­லி­ருந்து தலை­ம­றை­வானார். அவ­ரது கைய­டக்கத் தொலை­பேசி நிறுத்தி வைக்­கப்­பட்­டது. கட்­சி­யினர் எங்கு தேடியும் அவரைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

இந் நிலையில் கடந்த  செவ்­வாய்க்­கி­ழமை ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட கட்சித் தலைவர் ரிஷாத், இஸ்­மாயில் எம்.பி.யை சிலர் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக கடத்தி தடுத்து வைத்­தி­ருப்­ப­தா­கவும் இதன் பின்­ன­ணியில் கிழக்கு மாகாண ஆளுநர் இருப்­ப­தாக சந்­தே­கிப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந் நிலையில் மறுநாள் புதன் கிழமை இஸ்­மாயில் எம்.பி. கண்­டு­பி­டிக்­கப்­பட்டார். அ.இ.ம.கா. முக்­கி­யஸ்­தரும் முன்னாள் கல்­முனை மேய­ரு­மான சிராஸ் மீரா­சாஹிப், இஸ்­மாயில் எம்.பி.யை அழைத்துச் சென்று மீண்டும் ரிஷாத் பதி­யு­தீ­னுடன் இணைத்து வைத்தார். இரு­வரும் ஆரத்­த­ழுவி முஸா­பஹாச் செய்து கொண்­டனர்.

எனினும் அன்­றி­ரவு ஏனைய எம்.பி.க்களுடன் உம்ரா கட­மைக்குச் செல்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை ரிஷாத் பதி­யுதீன் மேற்­கொண்­டி­ருந்தார். அதில் இஸ்­மாயில்  எம்.பி.யை இணைத்துக் கொள்ள முடி­ய­வில்லை. மறுநாள் அதா­வது நேற்­றைய தினம் இஸ்­மாயில் எம்.பி.யும் சிராஸ் மீரா­சா­ஹிபும் உம்­ரா­வுக்குச் சென்று கட்­சியின் ஏனைய எம்.பி.க்களுடன் இணைந்து கொள்­வ­தாக அறி­வித்­தி­ருந்­தனர்.

மு.கா. போன்றே ஏக காலத்தில் அ.இ.ம.கா. எம்.பி.க்களும் உம்­ரா­வுக்குச் சென்­றுள்­ளனர். இவர்­களும் தீர்க்­க­மான தீர்­மானம் ஒன்றை எடுக்கக் கூடும். எனினும் முன்னர் நாம் கூறி­யது போல ''தலை­வரின் தீர்­மா­னத்தை மீறி, கட்­சியை உடைத்துக் கொண்டு செல்­ல­மாட்டோம் '' என உறு­தி­மொழி எடுக்கும் நிகழ்வு இங்கும் நடக்கும் . விசே­ட­மாக இஸ்­மாயில் எம்.பி.யிடம் ரிஷாத் சத்­திய உறு­தி­மொ­ழியை விசே­ட­மாகப் பெற்றுக் கொள்ளக் கூடும்.

காத்­தி­ருக்கும் அமைச்சுப் பத­விகள்

புதிய அர­சாங்­கத்தில் நேற்று வரை பல அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­பட்­டாலும் மேலும் சில அமைச்­சுக்கள் இன்­னமும் சில­ருக்­காக வைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றில் ஹக்கீம் வகித்து வந்த நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சும் ரிஷாத் பதி­யுதீன் வகித்து வந்த வர்த்­தகம் மற்றும் கைத்­தொழில் அமைச்சும் முக்­கி­ய­மா­னவை.

உம்ரா கட­மையை முடித்­து­விட்டு நல்ல தீர்­மா­னத்­துடன் இரு கட்­சி­களும் வரக் கூடும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரியும் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்­சவும் நம்­பிக்­கை­யுடன் காத்­தி­ருக்­கின்­றனர். கடந்த வாரம் ரவூப் ஹக்­கீமும் ரிஷாத் பதி­யு­தீனும் கூட்டாக ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர். இருவரையும் தனித்தனியாகவும் மைத்திரி, மஹிந்த ஆகியோர் அணுகியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

''நாம் இரு முஸ்லிம் கட்சிகளுடனும் பேசி வருகிறோம். எம்முடன் இணையாவிட்டால் இரு கட்சிகள் மீதும் கைவைப்போம்'' என எஸ்.பி. திசாநாயக்க எம்.பி. நேற்றுப் பகிரங்கமாகவே எச்சரித்திருக்கிறார். இப்படி மஹிந்த தரப்பு இன்னும் நம்பிக்கையுடனேயே இருக்கிறது.

எனினும் விரைவில் தேர்தல் ஒன்று நடக்கலாம் அல்லது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காது மஹிந்த தரப்பு தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில் மிகக் குறுகிய ஆயுட்காலத்தைக் கொண்ட இந்தப் புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது புத்திசாதுரியமானதல்ல எனும் தீர்மானத்தை இக் கட்சிகள் எட்டலாம். இன்றைய தருணத்தில் மஹிந்த தரப்புக்கு ஆதரவளிப்பது என்பது மு.கா.வுக்கும் அ.இ.ம.கா.வுக்கும் அரசியல் தற்கொலைக்குச் சமமானது என்பதே முஸ்லிம் அரசியலை கூர்ந்து நோக்குபவர்களின் அவதானம். இரு கட்சிகளும் உம்ராவிலிருந்து வந்து என்ன சொல்லப் போகின்றன? அதுவரை நாமும் காத்திருப்போம்.
-Vidivelli