Verified Web

வினைத்திறனாகுமா மிம்பர் ஊடகம்

7 days ago Administrator

எம்.எம்.ஏ.ஸமட்

முஸ்­லிம்­களின் சமூக, பொரு­ளா­தார, அரசியல்  உட்­பட பல்­வே­று­பட்ட விட­யங்கள் குறித்­தான அபி­லா­ஷைகள், தேவைகள், பிரச்­சி­னைகள், கருத்­துக்கள் என்­ப­வற்றை வெளிக்­கொ­ணர்­வ­தற்­காக சமூ­கத்­திற்­கான அச்சு, இலத்­தி­ர­னியல், இணை­யத்­தள ஊட­கங்கள் காணப்­பட்­டாலும் அவை வினைத்­தி­ற­னு­டனும், வினைத்­தி­ற­னின்­றியும் செயற்­பட்­டாலும், வாரா வாரம் முஸ்­லிம்­களை இஸ்லாம் மார்க்­கத்தின் வழியில் நெறிப்­ப­டுத்தி, அத்­தூய நெறிப்­ப­டுத்­தலின் வழியே சமூக, சமய, அர­சியல், பொரு­ளா­தாரம், கல்வி, தொழில் என அத்­தனை விட­யங்­க­ளி­னதும் அன்­றாட செயற்­பா­டு­களை இஸ்­லாத்தின் சட்ட வரை­ய­றைக்­குள்­ளி­ருந்து முன்­னெ­டுப்­ப­தற்கு முறைப்­ப­டுத்தி,  வழி­காட்டும் கருத்­துக்­க­ளையும், அறி­வு­ரை­க­ளையும், விழிப்­பு­ணர்­வு­க­ளையும் மக்­க­ளி­டையே முன்­வைப்­ப­தற்கு பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்பு  அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சக்­தி­மிக்க ஊட­கம்தான் பள்­ளி­வா­சல்­க­ளி­லுள்ள ‘மிம்பர்’ மேடை­க­ளாகும். இந்த மிம்பர்  மேடை­க­ளி­லி­ருந்து ஒலிக்கும் பேரு­ரைகள் பய­னுள்­ள­தாக அமைய வேண்­டுமே தவிர, பய­னற்­ற­தா­கவும், விமர்­ச­னத்­திற்­கு­ரி­ய­தா­கவும் அமை­யக்­கூ­டாது. 

ஒரு­சில பள்­ளி­வா­சல்­களின் மிம்பர் ஊடக மேடை­க­ளி­லி­ருந்து ஒலிக்கும் ஜும்ஆ பேரு­ரைகள் ஜும்­ஆ­வுக்கு சமு­க­ம­ளிக்­கின்­ற­வர்­களை தூக்­கத்தில் ஆழ்த்தி விடு­வதைக் காண முடி­கி­றது. இந்தப் பேரு­ரைகள் இறை­வ­னுக்குப் பயந்து, நபி வழியில் வாழ்­வியல் விட­யங்­களை முன்­ந­கர்த்­து­வ­தற்கும் சமூக மட்­டத்தில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­தா­கவும் அமைய வேண்டும். ஆனால், அவ்­வாறு அமை­கி­றதா என்றால் இல்­லை­யென்ற பதி­லைத்தான்; இந்த ஜும்­ஆ­விற்கு சமு­க­ம­ளித்­த­வர்­க­ளி­ட­மி­ருந்து கேட்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளன.

மிம்பர் மேடை மிகவும் அவ­தா­னத்­தோடு பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டி­ய­தொரு சிறந்த இட­மாகும். இச்­சி­றந்த இடத்தில், அடுக்கு மொழி­களோ, கலப்பு மொழி­களோ, நடிப்பு மொழி­களோ, கட்­டுக்­க­தை­களோ, அழு­வது போன்ற பாசாங்­கு­களோ ஜும்ஆ பேரு­ரையின் பயனைக் கெடுத்­து­வி­டலாம் எனக் கூறப்­ப­டு­கி­றது. இறை­யச்­சத்தை ஏற்­ப­டுத்தும் விதத்தில் சரி­யான வர­லாற்று சம்­ப­வங்­களை, உரிய ஆதா­ரங்­க­ளுடன் மேற்கோள் காட்டி, சந்­தர்ப்­பத்­திற்­கேற்ப, சுருக்­க­மாக பேரு­ரைகள் அமைய வேண்­டு­மென  சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. 

அத்­துடன், ஜும்ஆ பேருரை நிகழ்த்தும் உல­மாக்கள் தங்­க­ளது ஆற்­றல்­க­ளையும், திறன்­க­ளையும் வளர்த்­துக்­கொள்ள வேண்­டு­மென ஆலோ­சனை வழங்­கப்­ப­டு­கி­றது. ஏனெனில், ஒரு சில பேருரை வழங்கும் உல­மாக்­க­ளி­டையே மார்க்க அறிவில் காணப்­படும் ஆழ­மான திறன் சம­கால நடப்­புக்கள், பொது­வான விட­யங்கள் தொடர்பில் காண முடி­யா­தி­ருப்­பதை அவர்­க­ளது குத்பா உரை­களில் அவ­தா­னிக்க முடி­கி­றது.

இதற்கு  அவர்கள் கற்­றுக்­கொண்ட மத்­ர­ஸாக்­களின் கலைத்­திட்­டமும் ஒரு கார­ண­மாக இருக்­கலாம். ஒவ்­வொரு மத்­ர­ஸாவும் ஒவ்­வொரு கலைத்­திட்­டத்தின் பிர­காரம் தங்­க­ளது கற்றல் கற்­பித்தல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­த­னா­லேயே சமூ­கத்தின் மத்­தியில் கொள்கைப் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமை­கின்­றன. இத­னால்தான் இக்­கட்­டு­ரை­யாளர் உட்­பட சமூ­கத்­தி­லுள்ள பலர் இந்­நாட்­டி­லுள்ள அனைத்து மத்­ர­ஸாக்­க­ளிலும் ஒரே கலைத்­திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­வ­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

பன்­மொழிப் பாண்­டி­த்­தியம், பரந்த வாசிப்பு, சம­கால நிகழ்­வுகள் போன்ற பல விட­யங்கள் குறித்த அவ­தானம்  ஜும்ஆ பேருரை நிகழ்த்­து­கின்ற உல­மாக்­க­ளுக்கு தற்­கா­லத்தில் அவ­சி­ய­மா­க­வுள்­ளன. முழு வாழ்க்­கைக்கும் வழி­காட்­டி­யாக இருக்­கின்ற குர்­ஆனின் விஞ்­ஞான, தத்­துவ வச­னங்கள் சம­கால விஞ்­ஞா­னி­க­ளி­னதும், தத்­து­வவா­தி­க­ளி­னதும் கண்டு பிடிப்­புக்­க­ளி­னாலும் கூற்­றுக்­க­ளி­னாலும் உண்­மைப்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. குர்ஆன் கூறும் விஞ்­ஞானம் தொடர்­பிலோ அல்­லது ஏனைய விட­யங்கள் தொடர்­பிலோ ஆய்வுத் தக­வல்­க­ளி­னூ­டாக முன்­வைக்­கின்ற பேரு­ரை­க­ளாக ஜும்ஆ பேரு­ரைகள் அமை­வ­தில்லை என்­பதை ஓர் உதா­ர­ணத்­திற்குக் குறிப்­பிட முடியும், 

ஏனெனில், 1438 வரு­டங்­க­ளுக்கு முன்னர்  இறக்­கப்­பட்ட குர்ஆன் கூறிய விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி ஆய்­வு­களை மேற்­கொண்டு விஞ்­ஞா­னிகள் பல தக­வல்­களை வெளி­யி­டு­கின்­ற­போது அத்­த­க­வல்கள் ஆச்­ச­ரி­யத்­துடன் நோக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால்,  குர்ஆன் கூறும் விஞ்­ஞானம் நம்­மக்கள் மத்­தியில் அறி­யப்­ப­ட­வில்லை. அவை தொடர்பில் எத்­தி­வைக்­கப்­ப­ட­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். 

இருப்­பினும், சக்­தி­மிக்க மிம்பர் மேடைகள் முஸ்­லிம்­க­ளுக்­கான சிறப்­பு­மிக்க ஊட­க­மாக இருந்தும் அவை வினைத்­தி­ற­னற்­ற­தாக அல்­லது பய­னற்­ற­தாக உப­யோ­கப்­ப­டுத்துவது தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கமோ அல்­லது உலமா சபையோ கவ­னத்­திற்­கொள்­வ­தாகக் காண முடி­ய­வில்லை. சமூக ஒற்­று­மை­யையும், சமூக மாற்­றத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்­டிய மிம்பர் ஊடாக மேடைப் பேரு­ரைகள் சமூ­கத்­திற்குள் பிரி­வி­னை­யையும், புதுப்­புது குழப்­பங்­க­ளையும் ஏற்­ப­டுத்தி வரு­வதை சுட்­டிக்­காட்­டாமல் இருக்க இய­லாது. இவை தவிர்க்­கப்­பட வேண்­டு­மானால் ஜும்ஆ பேரு­ரைகள் கால நேரத்­திற்­கேற்ப வடி­வ­மைக்­கப்­ப­டு­வ­தற்­கான கட்­ட­மைப்­புக்கள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

மிம்பர் மேடையும் சமூக மாற்­றமும்
இஸ்­லா­மியப் போத­னை­க­ளுக்­காக அச்சு, இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள், இறு­வட்­டுக்கள், தனி­ந­பர்­க­ளி­னாலும், இயக்­கங்­க­ளி­னாலும் இயக்­கப்­ப­டு­கின்ற பல இணை­யத்­த­ளங்கள் என தற்­கால முஸ்லிம் சமூ­கத்தில் ஊட­கங்கள் பல்­கிப்­பெ­ருகிக் காணப்­ப­டு­வதைக் காணலாம். ஆனால், இவை­யெல்­லா­வற்­றிலும் சிறந்த ஊட­க­மாக இருப்­ப­துதான் அல்லாஹ் அமைத்துத் தந்த பள்­ளி­வாசல் மிம்பர் மேடை­க­ளாகும்.

ஜும்ஆ பேருரை நிகழ்த்­து­கின்ற உல­மாக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள ஓர் அமா­னி­த­மாக மிம்பர் மேடைகள் கணிக்­கப்­ப­டு­கின்­றன. மக்­களை நேர்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்­காக கிடைக்­கப்­பெற்ற அமா­னி­தத்தைப் பாது­காக்க வேண்டி பொறுப்பைச் சுமந்த சில உல­மாக்கள்; தங்­க­ளது இயக்கக் கொள்­கை­களைப் பரப்­பு­வ­தற்­கா­கவும், ஏனைய இயக்­கங்­களின் நட­வ­டிக்­கை­களைக் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும், பிறரைத் தூசிப்­ப­தற்­கா­கவும், சர்ச்­சைக்­கு­ரிய விடயங்­களை அரங்­கேற்றி சமூ­கத்தில்; புதிய புதிய குழப்­பங்­களை தோற்­று­விப்­ப­தற்­கா­கவும் இம்­மிம்பர் மேடை­களைப் பயன்­ப­டுத்­து­வதன் ஊடாக மிம்பர் ஊடக மேடையின் நோக்­கத்­தையும், இலக்­கையும் குழி­தோண்டிப் புதைக்க மற்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­துள்­ளது.

வல்ல இறை­வ­னதும், நபி (ஸல்) அவர்­க­ளி­னதும் செய்­தி­களை எடுத்துச் சொல்லி மக்­களை நேர்­வ­ழி­யின்பால் விழிப்­பு­ணர்­வூட்டி வாழ­வைக்க வாரத்தில் ஒரு நாள் அரை மணித்­தி­யா­லமோ அல்­லது அதை­விடக் கூடிய நேரமோ பேரு­ரைக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள இந்த மிம்பர் ஊடக மேடை நேரம் சமு­க­ம­ளிக்கும் மக்­களை நித்­தி­ரையில் ஆழ்த்­து­வ­தற்­கும் சிந்­தனைச் சித­றல்­களில் மனங்­களை உலா­வி­டு­வ­தற்கும், குழப்ப நிலையை அடை­வ­தற்கும் வழி­வ­குப்­பதை எந்­த­வ­கையில் ஏற்­றுக்­கொள்ள முடியும்.

மிம்பர் ஊடக மேடை, இறை அச்­சத்தை ஏற்­ப­டுத்­தவும், ஒற்­று­மைக்கு அழைப்பு விடுக்­கவும், பாவங்­க­ளி­லி­ருந்து தவிர்ந்து வாழவும், சமூக மாற்­றத்தை உரு­வாக்­கவும் வித்­திட வேண்­டி­யது என்­பது மறக்­கப்­பட்டு பிறரை ஏசித் திட்டித் தீர்க்­கவும், கொள்­கை­களைப் பரப்­பவும், மக்­களைக் குழப்­பவும் கூடிய ஊடக மேடை­யாக தொடர்ந்து மாற்­றப்­பட்­டுக்­கொண்­டி­ருப்­பது மறுப்­ப­தற்­கில்லை. 

நல்ல மனப்­பாங்­கு­களை உரு­வாக்க வேண்­டிய மிம்பர் ஊடக மேடை தனது கொள்கை சாரா­த­வர்­களை எதி­ரி­க­ளாக நோக்கத் தூண்­டு­மி­ட­மா­கவும் ஒரு சில உல­மாக்­களால் மாற்­றப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன என்­பது கவ­லை­யோடு சுட்­டிக்­காட்­டப்­பட வேண்­டி­ய­தாகும். 

இச்­செ­யற்­பா­டுகள் ஜும்­ஆ­விற்கு சமு­க­ம­ளிப்­போரின் நேரத்தை வீண­டிப்­பது மாத்­தி­ர­மின்றி, எவ்­வித விழிப்­பு­ணர்­வு­க­ளையும், பயன்­க­ளையும் பெற்­றுக்­கொள்­ளாது திரும்பிச் செல்லும் நிலையை உரு­வாக்­கு­வதை ஜும்ஆ பேருரை நிகழ்த்தும் குறித்த உல­மாக்கள் புரிந்து செயற்­பட வேண்டும் என்­பதும் சுட்­டிக்­காட்­டத்­தக்­க­தாகும்.

உள்­ளங்­களை ஒற்­று­மைப்­ப­டுத்­து­வ­தற்கு நபி (ஸல்) அவர்­க­ளுக்கு உத­வி­யது மிம்பர் மேடைதான் எனக் கூறப்­ப­டு­கி­றது. எதிர்­மறை மனப்­பாங்கு கொண்­டோரை, நேர்­மய மனப்­பாங்கு கொண்­டோ­ராக மாற்­றி­யதும் இம்­மே­டைதான். இறை­தூதர் அவர்கள் மிம்பர் மேடையைப் பயன்­ப­டுத்­திய முறைதான் அவர்­க­ளுக்குத் துணை­நின்­ற­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மிம்பர் மேடை எனும் சிறப்­பு­மிக்க ஊடகம், அதி­லி­ருந்து நிகழ்த்­தப்­படும் சிறப்­பு­ரை­களின் மூலம் அலங்­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. இம்­மேடை கொள்­கை­களைப் பரப்­பு­வ­தற்கு, பிற கொள்­கை­வா­தி­களை போட்­டுத்­தள்­ளு­வ­தற்கு, புதிய புதிய குழப்­பங்­கனை தோற்­று­விப்­ப­தற்கு வழங்­கப்­பட்­ட­தல்ல.

மாறாக, சமூ­கத்தின் மத்­தியில் பல்­வேறு பெயர்­களில் கரை­பு­ரளும் வட்டி, விப­சாரம், வர்த்தக மோசடி, போதைப்­பொருள், மது­பா­வனை, நம்­பிக்­கைத்­து­ரோகம், பொய், களவு, பொறாமை, பெருமை, வீண்­வி­ரயம், பாதை­க­ளி­னதும் அண்டை வீட்­டா­ரி­னதும் உரிமை மீறல்கள், அமா­னிதம் பேணாமை என மலிந்து கிடக்­கின்ற பாவச் செயல்­க­ளி­லி­ருந்து தவிர்ந்து நடக்க அவர்­களின் மனப்­பாங்­கு­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி இறை அச்­சத்­தோடு நபி (ஸல்) அவர்கள் காட்­டிய வழியில் வாழ்­வியல் விட­யங்­களை எடுத்துச் செல்­வ­தற்­கான சிறப்பு மிக்க ஊடக மேடை­யாக மிம்பர் மேடைகள் மாற்­றப்­பட வேண்டும். 

அதனால், இம்­மிம்பர் மேடை­யி­லி­ருந்து ஒலிக்கும் பேரு­ரைகள் அனைத்தும் பயன்­மிக்­க­தாக அமைய வேண்டும் என்­பதில் இம்­மே­டை­யி­லி­ருந்து பேரு­ரை­களை நிகழ்த்­துவோர் கரி­சனை காட்ட வேண்­டி­யது காலத்தின் தேவை­யெனச் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

ஏனெனில், சமூ­கத்­தி­லுள்ள இளை­ஞர்­களும், யுவ­தி­களும் மாற்று ஊட­கங்­களின் தாக்­கங்­க­ளி­னாலும் நவீன தொடர்பு சாத­னங்­களின் பயன்­பாட்­டி­னாலும்  வழி­த­வறிப் போய்க்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.   அவர்­களில் சிலரின் செயற்­பா­டுகள் சமூ­கத்­திற்கு தலை­கு­னிவை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. மாற்று சமூ­கத்­தி­னரால் இஸ்­லாத்தின் வழி­காட்­டல்­க­ளிலும் கேள்விக் கணை­களை எழுப்பி நிற்­கின்­றன. இவ்­வா­றான சூழலில் வார­ாவாரம் இம்­மிம்பர் மேடை­க­ளி­லி­ருந்து நிகழ்த்­தப்­படும் ஜும்ஆ பேரு­ரைகள் சிந்­த­னை­க­ளிலும், மக்­களின் மனப்­பாங்­கு­க­ளிலும், செயற்­பா­டு­க­ளிலும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும். 

வாரத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரம் அல்­லது அதை­விடக் குறை­வான நேரத்தில் வாழ்க்கை நெறிக்­கான அத்­தனை விட­யங்­க­ளையும் முன்­வைக்க முடி­யாது. என்­றாலும், கிடைக்­கின்ற நேரத்தை பழைய சரித்­தி­ரங்­களைப் பாடாது, சமூ­கத்தைக் குழப்­பாது, சமூ­கத்தில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­தவும், சமூக மாற்­றத்தை உரு­வாக்­கவும் உத­வக்­கூ­டிய சந்­தர்ப்­ப­மா­கவும், நேர­மா­கவும் மாற்­று­வ­தற்கு மிம்பர் மேடை என்ற சிறப்­பான ஊட­கத்தை பயன்­ப­டுத்தும் உல­மாக்கள் அல்­லாஹ்­வுக்கு பயந்­த­வர்­க­ளாக இறை­தூதர் பயன்­ப­டுத்­திய முறையில் பயன்­ப­டுத்­து­வ­தற்கு முனைய வேண்­டு­மென்­பது பல­ரது கோரிக்­கை­யாகும் என்­பதும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது, 

பள்­ளி­வா­சல்கள் மூலம் எதிர்­பார்க்­கப்­படும் சமூக மாற்றம், சன்­மார்க்கத் தெளிவு என்­பன உல­மாக்கள் மூல­மே­யன்றி வேறு எந்த வழி­யி­னா­லு­மல்ல என்­பது நிதர்­சனம். அந்த உண்­மையை நிலை­நாட்­டத்­த­வறும் ஒரு­சில உல­மாக்கள் நபி (ஸல்) அவர்கள் ஏறிய இட­மான மிம்பர் மேடையின்  கண்­ணி­யத்­தையும், இதன் நோக்­கத்­தையும் மறந்து தங்­க­ளது உரை­களை  நிகழ்த்­து­வ­துதான் கவ­லைக்­கு­ரிய விட­ய­மா­க­வுள்­ளது. 
மக்கள்  ஒரு­வ­ருடன் ஒருவர் பேசாது அமை­தி­யாக இருந்து காது தாழ்த்திக் கேட்கும் ஓர் உரை­யான மிம்பர் ஊடக மேடை­யி­லி­ருந்து ஒலிக்கும் ஜும்ஆப் பேரு­ரை­களை வினைத்­தி­ற­னு­டை­ய­தாக மாற்ற வேண்­டிய பொறுப்பு பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கத்­தி­னு­டை­யது என்­பதும் சுட்­டிக்­காட்ட வேண்­டி­ய­தாகும்.

பள்­ளி­வா­சல்­களும் நிர்­வா­கி­களும்
பள்­ளி­வா­சல்கள் என்­பது புனித தல­மாகும். 9.71 வீதம் முஸ்­லிம்கள் வாழும் இலங்­கையில் 2000க்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் காணப்­ப­டு­கின்­றன. சிறிய, பெரிய பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள், ஸாவி­யாக்கள், மர்­கஸ்கள் என ஒரு மாடி, இரு மாடி, என மாடி­க­ளாகப் பள்­ளி­வா­சல்கள் காணப்­பட்­டாலும், தொழு­வ­தற்கும் ஏனைய ஆகு­மாக்­கப்­பட்ட விட­யங்­களை புரி­வ­தற்கும் இப்­பள்­ளி­வா­சல்­களில் ஆட்கள் இல்லை என்­பதும் சம­கா­லத்தில் அவ­தா­னிக்கக் கூடிய விட­யங்­க­ளாகும். 

இப்­பள்­ளி­வா­சல்கள் ஒவ்­வொன்றும் தனக்­கென அமைத்­துக்­கொண்ட முறையில் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றன. இருப்­பினும், மஸ்ஜித் என்று வக்பு செய்­யப்­பட்ட பள்­ளி­வா­சல்கள் சகல முஸ்­லிம்­க­ளுக்கும் உரித்­தா­னது. 
அதில் உரிமை கொண்­டா­டவோ, அதி­காரம் செலுத்­தவோ எவ­ருக்கும் முடி­யாது என்­பது ஷரீஆ சட்­ட­வி­தி­யாகும் எனக் கூறப்­ப­டு­கி­றது.

ஆனால், ஒரு­சில பள்­ளி­வா­சல்கள் இயக்க ரீதி­யாக, ஜமாஅத் ரீதி­யாக உரி­மை­கோ­ரப்­பட்டு பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இவ்­வாறு ஏக­போக உரி­மை­யோடு பள்­ளி­வா­சல்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது சமூ­கத்தில்; பல பிரச்­சி­னைகளை உரு­வாக்­கு­வ­தற்கு வித்­தி­டு­வ­தையும் அவ­தா­னிக்­கலாம்.

அத்­துடன், பள்­ளி­வா­சல்கள் எப்­போதும் உள்­ளத்தில் அடக்­கத்­தையும், இறை அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்டும். ஆனால், தற்­கா­லத்தில் பள்­ளி­வா­சல்கள் பல மாடி­க­ளாகக் கட்­டப்­பட்டும் பல வர்­ணங்­க­ளாலும், மின்­வி­ளக்­கு­க­ளாலும் தேவைக்­க­தி­க­மாக அலங்­க­ரிக்­கப்­பட்டும் காணப்­ப­டு­வது உள்­ளத்தில் இறை அச்­சத்தை இல்­லாமல் செய்­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. “இறுதி நாள் அடை­யா­ளங்­களைச் சேர்ந்­ததே மனி­தர்கள் பள்­ளி­வா­சல்­களைக் கட்டி பெருமை பேசு­வது” என்றும் “நிச்­ச­ய­மாக யூத, கிறிஸ்­த­வர்கள் போன்று நீங்கள் பள்­ளி­வாசல்­களை அலங்­க­ரிப்­பீர்கள்” என்றும் நபி (ஸல்) அவர்­களின் அருள்­வாக்கு உள்­ளதை அபூ­தாவூத் ஹதீஸ் கிரந்­தத்தில் பதி­வா­கி­யி­ருப்­பதைக் காண­மு­டி­கி­றது.
பள்­ளி­வா­சல்கள் தொழு­கைக்­கு­ரிய இட­மாக மாத்­தி­ர­மின்றி தீனொளி பரப்பும் இட­மாக, ஒற்­று­மைக்கு வித்­திடும் இட­மா­கவும் இன்னும் என்­னென்ன விட­யங்கள் ஆகு­மாக்­கப்­பட்ட விட­யங்­க­ளாக இருக்­கி­றதோ அத்­தனை விட­யங்­களும் பள்­ளி­வா­சல்­களின் புனி­தத்­தையும், கண்­ணி­யத்­தையும், சிறப்­பையும் பாதிக்­கா­த­வி­தத்தில் நடந்­தே­று­வ­தற்கு நிர்­வாகம் வழி­யிட வேண்டும்.

பெரு­மைக்­காகக் கட்­டப்­பட்ட பல பள்­ளி­வா­சல்­களில் அடுக்கு மாடிகள் இருந்தும் அவற்றில் ஐங்­காலத் தொழு­கையில் குறிப்­பாக ஸுபஹுத் தொழு­கைக்கு ஒரு ஸப்­புக்­குக்­கூட ஆட்கள் இல்­லாத நிலையை தலை­ந­க­ரங்­களில் காண முடி­கி­றது. இரவு 10 மணிக்கு இழுத்து மூடப்­படும் பள்­ளி­வ­ாசல்கள் அதி­காலை 4 மணிக்கு பின்­னரே திறக்­கப்­ப­டு­கின்­றன.  நபி (ஸல்) அவர்­க­ளது காலத்தில் வாழ்ந்த மக்­களின் தொகைக்­கேற்ப பள்­ளி­வா­சல்­களின் பங்­க­ளிப்பு பரந்து காணப்­பட்­டது. இஸ்­லாத்தில் சேர விரும்பி வரு­வோரை அல்­லது ஏதேனும் உடன்­ப­டிக்கை செய்­து­கொள்ள வரு­வோரை வர­வேற்கும் இட­மாக பள்­ளி­வா­சல்கள் இருந்­தி­ருக்­கின்­றன. எந்த வச­தி­யு­மற்ற  மக்கள் தங்கி நிற்­கு­மி­ட­மாக பள்­ளி­வா­சல்கள் அமைந்­தி­ருந்­தன. இவ்­வாறு பல்­வேறு விட­யங்­க­ளுக்­காக பள்­ளி­வா­சல்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­வ­தி­லி­ருந்து பள்­ளி­வா­சல்­களின் சமூகப் பங்­க­ளிப்பு மிக விசா­ல­மா­னது என்­பதை அறி­ய­மு­டி­கி­றது.

இப்­பள்­ளி­வா­சல்கள் கல்வி கற்ற போதிய வச­தி­க­ளில்­லாத மாண­வர்கள் ஒழுக்க விழு­மி­யத்­துடன் கற்றல் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வ­தற்கு முறை­யான மேற்­பார்­வையின் கீழ் வச­தி­ய­ளிப்­பதன் மூலம் இப்­பள்­ளி­வா­சல்கள் சமூகத் தேவைக்கு பயன்­ப­டுத்தும் வாய்ப்பு ஏற்­ப­டு­கி­றது. ஏனெனில், நபி (ஸல்)   அவர்கள் கட்­டிய முதல் பள்­ளி­வாசல் கல்­விக்­கூ­ட­மாக இருந்­துள்­ளது. அது மாத்­தி­ர­மின்றி, பள்­ளி­வா­சல்கள் வழி­காட்டும் நிலை­ய­மாக என பல்­வேறு தேவை­க­ளுக்கு அக்­கா­லத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட பள்­ளி­வாசல்கள் இன்று தொழு­கைக்­கா­கவும், அவர் அவர் கொள்கை சார்ந்த விட­யங்­க­ளுக்­கா­கவும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தையும் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

“பள்­ளி­வா­சல்கள் அல்­லாஹ்­வுக்­கென்றே நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன” என்ற குர்­ஆனின் வசனம் எடுத்­தி­யம்பும் போத­னையை நிலை­நி­றுத்த பள்­ளி­வா­சல்­களை நிர்­வ­கிப்­ப­வர்கள் இறை அச்சம் கொண்­ட­வர்­க­ளாக திகழ வேண்டும். 
“எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசித்து, தொழுகையையும் கடைப்பிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கின்றார்களோ அவர்கள் தாம் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களை நிர்வகிக்க தகுதியுடையவர்கள். (முஃமினான) இத்தகையவர்களே நேரான வழியிலிருப்பார்கள” (அல்குர்ஆன் 9:18) என அல்குர்ஆன் பள்ளிவாசல் நிர்வாகிகளின் தகைமை குறித்து போதிக்கிறது.

 அல்லாஹ் கட்டளையிட்டுள்ள இத்தகைய தகுதியுடையவர்களினால்தான் பள்ளிவாசலை சிறப்பாக நிர்வகிக்க முடியும். அல்லாஹ்வின் வீட்டை நிர்வகிக்கத் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாக நடக்கவும், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டல்களுக்கு முரணாகச் செயற்படவும் முடியாது.
ஆனால், நாட்டிலுள்ள 2000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை நிர்வகிக்கின்றவர்கள். நிர்வகிக்க உள்ளவர்கள் அல்லாஹ்,  ரஸூல் வகுத்த தகைமைகளில் எத்தனை  தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள் என்பதை பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் அவரவர் மனச்சாட்சியிடம் கேட்டால் விடை கிடைக்கும்.

அல்லாஹ்வும், ரஸூல் (ஸல்) அவர்களும் விதித்துள்ள தகைமைகளைக் கொண்டிராத பலரினால் பள்ளிவாசல்கள் நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதனால்தான் இப்பள்ளிவாசல்கள் அரசியல்வாதிகளினதும், ஏனையவர்களினதும் ஊடுருவல்களுக்குள்ளாகி அதன் புனிதம் மாசுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரச்சினைகளுக்கும், சமூகக் குழப்பங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

 இதனால், பள்ளிவாசல்களிலுள்ள மிம்பர் ஊடக மேடைகளில் ஒலிக்கும் பேருரைகள் வரையறை செய்யப்படாது நிகழ்த்தப்படுவதனால் வினைத்திறனற்றதாக்கப்படுகிறது. மிம்பர் ஊடக மேடை முஸ்லிம்களுக்கான சிறந்த ஊடகமாக மாற்றப்பட வேண்டுமானால், பள்ளிவாசல்கள் வல்ல இறைவன் வகுத்த தகைமையுடையோரினால் நிர்வகிக்கப்படுவதோடு, காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற வகையிலும், திட்டமிட்ட அடிப்படையிலும், இரத்தினச் சுருக்கமாகவும், சிந்தனை மாற்றத்தையும், சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடிய உலமாக்களால் இக்குத்பா பேருரைகள் மிம்பர் ஊடக மேடைகளிலிருந்து ஒலிக்கப்பட வேண்டும். அதனூடாக சிறப்புமிக்க மிம்பர்  மேடை முஸ்லிம்களுக்கான  உன்னதமான ஊடகமாக வினைத்திறனாக்கப்படும். 

இறைவன் வகுத்த தகுதியுடையோரினால்  நிர்வகிக்கப்படுகின்ற பள்ளிவாசல்களில் தொழுகை உள்ளிட்ட இறை கடமைகளை நிறைவேற்றவும் சிறந்த குத்பா பேருரைளைக் கேட்டு பயனடையவும் வல்ல இறைவன் என்றென்றும் துணைபுரிவானாக!
​-Vidivelli