Verified Web

சகோதர சமூகங்கள் எங்கேயோ போய்விட்டன தமிழ் மக்கள்தான் அபிவிருத்தியில் பின் நிற்கிறார்கள்

8 days ago Administrator

Q: யாரை ஆத­ரிப்­பது என்ற முடிவை கூட்­ட­மைப்பு எடுப்­ப­தற்கு முன்­பா­கவே நீங்கள் மஹிந்த பக்கம் சாய்ந்­தது ஏன்?

2015 செப்­டம்பர் முதலாம் திகதி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வந்­த­தி­லி­ருந்து 3 ஆண்­டு­க­ளா­கி­விட்­டன. இந்த மூன்று ஆண்­டு­களில் ஐக்­கிய தேசியக் கட்சி கொண்­டு­வந்த வரவு - செலவுத் திட்டம் ஒவ்­வொன்றும் தீர்­மா­னத்­திற்கு விடும்­போது கைகளை உயர்த்­தி­யி­ருக்­கிறோம். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீது நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போ­து­கூட, அவரைப் பாது­காக்க எதிர்க்­கட்சி வரி­சையில் இருந்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு தெரி­வித்­தி­ருக்­கி­றது. நாங்கள் அர­சியல் தீர்­வுக்­காக பல விஷ­யங்­களை விட்­டுக்­கொ­டுத்­தி­ருக்­கிறோம், ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கிறோம், ரணில் அரசைப் பாது­காத்­தி­ருக்­கிறோம். ஆனால், எங்­க­ளுக்குக் கிடைத்­தது என்ன? அர­சியல் கைதி விடு­விப்பு, காணி விடு­விப்பு என எத்­த­னையோ உட­ன­டி­யாக செய்ய வேண்­டிய பிரச்­சி­னை­களில் எந்தத் தீர்வும் கிடைக்­க­வில்லை. இதற்­கி­டையில், கிழக்கு தொடர்­பாக நான் முன்­வைத்த மூன்று கோரிக்­கை­களில் இரண்­டுக்கு சாத­க­மான பதிலைத் தந்தார் ஜனா­தி­பதி.

ஆகவே, கிழக்கின் அபி­வி­ருத்­தியை மையப்­ப­டுத்தி, ஜனா­தி­ப­தியின் அழைப்பின் பேரில் கிழக்கு அபி­வி­ருத்­தியின் பிர­தி­ய­மைச்­ச­ராக நான் பொறுப்­பேற்­றி­ருக்­கிறேன். தவிர, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­லுள்ள சில­ரது செயற்­பா­டுகள், குறிப்­பாக தமி­ழ­ரசுக் கட்­சியில் உள்ள சில­ரது செயற்­பா­டு­களால் பல கால­மா­கவே மன அழுத்­தத்­திற்கு உள்­ளா­கி­யி­ருக்­கிறோம்.

தேர்தல் நடக்கும் காலத்­தி­லேயே எங்­களை ஆயுதக் குழுக்கள், ஒட்­டுக்­கு­ழுக்கள் என்­றெல்லாம் இவர்கள் விமர்­சித்­தார்கள். அவர்­கள்தான் இப்­போது எங்­களை துரோ­கிகள் என்­கி­றார்கள். உரிமை கேட்டோம். அதுவும் கிடைக்­க­வில்லை. அபி­வி­ருத்­தியும் கிடைக்­க­வில்லை. சகோ­தர சமூ­கங்­க­ளான இஸ்­லா­மி­யர்­களும் சிங்­க­ள­வர்­களும் எங்­கேயோ போய்­விட்­டார்கள். அவர்கள் வசிக்கும் இடங்கள் இங்­கி­லாந்தைப் போலவும் நாங்கள் வசிக்கும் இடங்கள் சோமா­லி­யாவைப் போலவும் இருக்­கின்­றன. நிலைமை இப்­ப­டியே நீடிக்கும் பட்­சத்தில் ஐந்து வரு­டங்­க­ளுக்குப் பிறகு மக்­க­ளிடம் போய் நின்றால் மக்கள் செருப்பால் அடிப்­பார்கள்.

 

Q: மஹிந்த கடந்த காலங்­களில் தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்வில் எந்த விட்­டுக்­கொ­டுப்­பையும் செய்­த­வ­ரல்ல. இப்­போது அவ­ரது அமைச்­ச­ர­வையில் இணைந்து என்ன செய்ய முடி­யு­மென நினைக்­கி­றீர்கள்?

நான் மஹிந்­தவின் அழைப்பின் பேரில் இணை­ய­வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழைப்பின் பேரில்தான் நான் இணைந்­தி­ருக்­கிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம் சந்­தித்­த­போது, எது­வுமே நடக்­க­வில்லை, எதையும் செய்­ய­வில்லை என்­றீர்­களே, இப்­போது வந்து இணை­யுங்கள் என்றார். அதனால், கிழக்கு அபி­வி­ருத்­தியை நான் கேட்டுப் பெற்றேன்.

Q: மைத்­திரி அழைத்து அமைச்­ச­ர­வையில் இணைந்­தாலும் உங்கள் பிர­தமர் மஹிந்­ததான். இறுதிப் போரின்­போது மனித உரிமை மீறல், போர்க்­குற்றம் உட்­பட பல குற்­றச்­சாட்­டுகள் அவர் மீது இருக்­கின்­றன.

போர்க் குற்­றத்தைப் பொறுத்­த­வரை, நாங்கள் ஒரு நாளும் பின்­வாங்­க­மாட்டோம். தவறு செய்தால் குரல் கொடுப்போம். மனோ கணேசன் ஆளும் தரப்பில் இருந்­தாலும் அரசின் பிழை­களை அவர் சுட்­டிக்­காட்­டினார். ஆனால், எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து எப்­போ­தா­வது சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றார்­களா? எல்­லா­வற்­றுக்கும் ஆத­ரவு கொடுத்­த­துதான் மிச்சம்.

Q: நீங்கள் பத­விக்­கா­கவும் பணத்­திற்­கா­கவும் இடம் மாறி­யி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுகள் இருக்­கின்­றன..

அது அவர்கள் கருத்து. என்னைப் பொறுத்­த­வரை 30 ஆண்­டுகள் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஏதா­வது செய்ய வேண்டும். தொடர்ந்து அர­சி­யலில் 50--60 வருடம் இருந்தேன் என சொல்­வது பெரு­மை­யல்ல. 7 மாதம் அர­சி­யலில் இருந்­தாலும் என்ன செய்தேன் என்­ப­துதான் முக்­கியம். இஸ்­லா­மி­யர்­களைப் பாருங்கள். தொடர்ந்து அபி­வி­ருத்­திக்­காக போராடி, சிறப்­பாக இருக்­கி­றார்கள். நாங்கள் அர­சியல் உரி­மைக்­காகப் போராடி பல­வற்றை இழந்தோம். உரி­மையும் இல்லை, அபி­வி­ருத்­தியும் இல்லை.

 

Q: நீங்கள் கட்சி மாறும் தரு­ணத்தில் புளொட் தலைமை தொடர்ந்து உங்­களை தொடர்பு கொள்ள முயற்­சித்­த­போது, உங்­களை தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை. அந்த நேரத்தில் என்ன நடந்­தது?

நான் கனடா சென்­றி­ருந்தேன். அங்­கி­ருந்து புளொட் தலைவர் சித்­தார்த்­த­னுடன் பேசினேன். அங்­கி­ருந்து புதன்­கி­ழமை புறப்­பட்டேன். அது­வரை அவ­ருடன் தொடர்­பி­லி­ருந்தேன். வியா­ழக்­கி­ழமை நள்­ளி­ரவில் இங்கு வந்து சேர்ந்தேன். அப்­போது என் வாகன சார­திக்கு அவர் அழைத்தார். அப்­போது நான் பேச­வில்லை. ஆனால், அதற்குள் நான் ஒரு தீர்க்­க­மான முடி­வெ­டுத்­தி­ருந்தேன். அப்­போது அவ­ரோடு பேச விரும்­பில்லை.

Q: இப்­படி பணமும் பத­வியும் கொடுத்து மஹிந்த ஆத­ரவைத் திரட்­டு­வது சரியா?

என்னைப் பொறுத்­த­வரை நான் ஒரு­வ­ரி­டமும் பணம் வாங்­க­வில்லை. இதே­போ­லத்தான், நாங்கள் ரணி­லுக்கு ஆத­ரவு கொடுக்க 20 மில்­லியன் வாங்­கி­ய­தாக சொன்­னார்கள். நாங்கள் அப்­படி ஏதும் வாங்­க­வில்லை. குறிப்­பாகச் சொன்னால், நான் பணம் பெற­வில்லை. இன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் மட்­டக்­க­ளப்பில் ரணி­லுக்கு ஆத­ர­வா­கவும் மஹிந்­த­வுக்கு எதி­ரா­கவும் ஓர் ஆர்ப்­பாட்­டத்தை நடத்­தி­யி­ருக்­கி­றார்கள். அந்தக் கூட்­டத்தில் பேசி­ய­வர்கள் நான் 30 கோடி ரூபா வாங்­கி­ய­தாக சொல்­லி­யி­ருக்­கி­றார்கள். என் மீது குற்றம் சுமத்­தி­ய­வர்கள் விப­ரங்­களைத் திரட்­டி­யி­ருக்­கிறேன். சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வி­ருக்­கிறேன்.

 

Q: நீங்கள் புளொட்டை விட்டு நீக்­கப்­பட்­டி­ருக்­கி­றீர்கள். இனி மட்­டக்­க­ளப்பு அர­சி­யலில் எதிர்­காலம் உண்டா?

மக்­களின் அபி­வி­ருத்தி சார்ந்த விஷ­யங்­களில் எந்தக் கட்சி வேக­மாக செயல்­ப­டு­கி­றதோ, அத­னோடு இணைந்து நான் பய­ணிப்பேன். கட்சி நல­னுக்­காக, தனிப்­பட்ட நல­னுக்­காக நான் செயற்­பட்டால் பிறகு வாக்­க­ளிக்­கவே மக்கள் இருக்­க­மாட்­டார்கள். உரி­மையைப் பெற்றுத் தரு­கிறேன் என்று தொடர்ந்து கூறி, மக்­களை ஏமாற்­றக்­கூ­டாது. எங்கு போனாலும் மக்கள் என்ன செய்­தீர்கள் எனக் கேட்­கி­றார்கள். மக்கள் வறு­மையில் மதம் மாறு­கி­றார்கள். அவர்­களை துரோ­கிகள் என்று சொல்­லப்­போ­கி­றோமா?

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் பிள்­ளை­யானின் கட்­சி­யான தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கூடுதல் வாக்­கு­களைப் பெற்­றி­ருக்­கி­றது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அதிக வாக்­கு­களைப் பெற்­றுள்­ளது. இவர்கள் எல்­லோரும் அபி­வி­ருத்­தியை மட்­டுமே பேசி­ய­வர்கள். கடந்த தேர்­தலில் ஒரு இலட்­சத்து 20 ஆயிரம் வாக்­கு­க­ளுக்கு மேல் பெற்ற கூட்­ட­மைப்பின் வாக்கு 40,000 அள­வுக்கு சரிந்­தி­ருக்­கி­றது.

 

Q: நீங்கள் சொல்­வதைப் பார்த்தால் இனி அபி­வி­ருத்­தியைப் பற்றி மட்டும் பேசுவோம்.. உரி­மை­களைக் கேட்க வேண்டாம் என்­பதைப் போல இருக்­கி­றது..

நான் அப்­படிச் சொல்­ல­வில்லை. உரி­மை­களை மட்டும் கேட்டால் காணாமல் போய்­வி­டுவோம். அபி­வி­ருத்­தி­யையும் சேர்த்துப் பேசுவோம் என்­கிறேன்.

 

Q: கூட்­ட­மைப்பின் சார்பில் பாரா­ளு­மன்­றத்­திற்குள் சென்­று­விட்டு, இப்­போது மஹிந்­த­வுக்கு ஆத­ர­வ­ளிப்­பது துரோ­க­மென நினைக்­க­வில்­லையா?

எனக்கு வாக்­க­ளித்த சுமார் 40,000 மக்­க­ளோடு இணைந்து பணி­யாற்­றி­ய­வர்­க­ளிடம் நான் தொடர்ந்து பேசினேன். அவர்­கள்தான் அபி­வி­ருத்­திக்­காக செயற்­ப­டுங்கள் என்றார்கள். அவர்களைக் கேட்டே இந்த முடிவை எடுத்தேன்.

 

Q: உங்களை அடையாளம் கண்டு முன்னிறுத்தியவர் சித்தார்த்தன். அவரைக் கைவிட்டிருக்கிறீர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஆறு கட்சிகள் இருந்தன. இன்றைக்கு வெறும் மூன்று கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. கடைசியாக ஈபிஆர்எல்எஃப்பும் வெளியேறியது. ஏன் வெளியேறினார்கள்? எனக்கு வாய்ப்பளித்ததற்காக சித்தார்த்தனுக்கு நன்றி கூறுகிறேன். ஆனால், அவரிடம் பல முறை பேசியிருக்கிறேன். அபிவிருத்திக்காக ஏதாவது செய்யுங்கள் என்றேன். ஆகவே அவருக்கு நிலைமை தெரியும். கிழக்கின் நிலை வேறு. யாரும் எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும். சித்தார்த்தன் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறுகிறேன். ஆனால், அவரோடு தொடர்ந்து இந்தக் கூட்டுக்குள் இருக்க மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.
-Vidivelli