Verified Web

மிக மோசமான அரசியல் கலாசாரம்

9 days ago Administrator


மிக மோசமானதொரு அரசியல் கலாசாரத்துக்கு இலங்கைத் தேசம் தற்போது முகங்கொடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மில்லியன் டொலர்களில் பேரம் பேசப்படுகின்ற ஆதாரபூர்வமான செய்திகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பிற்பாடு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் மைத்திரி-மஹிந்த தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். அதற்கு வசதியாகவே பாராளுமன்றமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் 5 ஆம் திகதி என்றும் பின்னர் 7 ஆம் திகதி என்றும் வாய்வழியாக கூறி வந்த நிலையில், தற்போது 14 ஆம் திகதியே பாராளுமன்றம் கூட்டப்படும் என ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 

இந் நிலையில் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றிலிருந்து சிலர் கட்சி தாவியுள்ளனர். ஏனைய கட்சிகளிலிருந்தும் பலரை பிரித்தெடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமக்கு ஆதரவளிக்க முன்வருவோருக்கு தேவையானதை வழங்குவதற்கு தாம் தயாராகவிருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவிடம் தொலைபேசியில் கூறும் ஒலிப்பதிவு நாடாக்கள் தற்போது ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறான பேரம் பேசல்களில் ஏனைய சிலர் ஈடுபடும் ஒலிப்பதிவுகளும் தற்போது வெளிவந்துள்ளன.

இது இலங்கை அரசியலில் எந்தளவு தூரம் ஊழல்களாலும் இலஞ்சத்தினாலும் ஆட்கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு சிறந்த உதாரணமாகும். அப்பாவி மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் தெரிவானவர்கள் அவற்றை பணத்துக்காக மொத்த வியாபாரம் செய்வது கண்டிக்கத்தக்கதாகும். அதேபோன்றுதான் அவர்களை இவ்வளவு கூடுதல் தொகை பணம் கொடுத்து வாங்குவதற்கு நாட்டின் தலைவரும் அவர் சார்ந்த தரப்பினரும் முயற்சிப்பதும் மிகவும் வெட்ககரமான செயற்பாடாகும்.

அது மாத்திரமன்றி தமக்கு ஆதரவளிக்க முன்வருவோருக்குத் தேவையான அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி தயார் நிலையிலுள்ளார். பிற கட்சியிலிருந்து தம்மை ஆதரிக்க முன்வருவோருக்கே அமைச்சுப் பதவிகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் மிகப் பெரிய அரசியல் இலஞ்சமே அன்றி வேறில்லை.

கடந்த ஆட்சியாளர்கள் ஊழல் செய்தார்கள், களவெடுத்தார்கள் எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி இன்று அதே ஊழல்வாதிகளையும் கள்வர்களையும் சரி கண்டு மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வந்திருப்பதே இவ்வாறான பேரம் பேசல்கள் பகிரங்கமாக நடப்பதற்குக் காரணமாகும். அந்த வகையில் இவ்வாறான மிக மோசமான அரசியல் சீரழிவு நிலைக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும்.

இந்த பேரம் பேசல்களுக்குள் இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து ஒரு எம்.பி. அடுத்த தரப்புக்குச் செல்ல முயற்சி செய்த நிலையில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். எனினும் இவ்வாறு ஏனையோரையும் தம் பக்கம் ஈர்ப்பதற்கான  முயற்சிகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்னெடுத்துள்ளன.

இந்த ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை அடகு வைக்க முஸ்லிம் எம்.பி.க்கள் ஒருபோதும் துணை போகக் கூடாது. அவ்வாறு எவருக்கேனும் ஆதரவளிக்க வேண்டுமாயின் சமூகத்தின் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகளை முன்னிறுத்திய எழுத்து மூல பகிரங்க ஒப்பந்தங்களின் அடிப்படையில் கட்சியின் ஏகோபித்த தீர்மானத்துடனேயே முஸ்லிம் எம்.பி.க்கள் ஆதரவளிக்க வேண்டும்.

அவ்வாறன்றி பின்கதவால் பணத்தையோ அமைச்சுப் பதவிகளையோ பெற்றுக் கொண்டு தமது தனிப்பட்ட நலன்களுக்காக மாத்திரம் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.

இவ்வாறான செயற்பாடுகளில் இரு முஸ்லிம் கட்சிகளிதும் எம்.பி.க்கள் எவரும் ஈடுபடமாட்டார்கள் என நம்புகிறோம்.
-Vidivelli