Verified Web

பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது மிக மோசமான ஜனநாயக மீறலாகும்

10 days ago Administrator

Q: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு பாரா­ளு­மன்­றத்தில் 7 உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றனர். தற்­போ­தைய அர­சியல் நிலைமை குறித்து உங்­க­ளது நிலைப்­பாடு என்ன?

பதில்: அதி­யுயர் சபை­யான பாரா­ளு­மன்­றத்தை நடாத்திச் செல்லும் மாலுமி என்ற வகையில், பாரா­ளு­மன்­றத்தை மீண்டும் அவ­ச­ர­மாக கூட்­டு­கின்ற காரி­யத்தை நிறை­வேற்றித் தரு­மாறு சபா­நா­ய­க­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளோம். நாங்கள் தனி­யா­கவும், கூட்­டா­கவும் விடுத்த வேண்­டு­கோளின் அடிப்­ப­டையில் இன்­றைய கலந்­து­ரை­யா­டலை அவர் ஏற்­பாடு செய்­தி­ருந்தார். எங்­க­ளுக்கு தேவை­யான பெரும்­பான்­மை­யை­விட கூடு­த­லாக இருப்­ப­தாக அவ­ரிடம் சுட்­டிக்­காட்­டினோம்.

Q: சபா­நா­ய­க­ரிடம் எப்­ப­டி­யான கோரிக்­கை­களை நீங்கள் முன்­வைத்­தீர்கள்?

பதில்: தற்­போது ஏற்­பட்­டுள்ள அரா­ஜக நிலையை கட்­டுப்­ப­டுத்தி, நாட்டில் நீதியை நிலை­நி­றுத்­து­வ­தற்கு, எங்கள் உரி­மை­களை பாது­காக்­கின்ற அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யாக கூட்­ட­வேண்­டு­மென அனை­வரும் கடு­மை­யாக வலி­யு­றுத்­தி­யுள்ளோம். எங்­க­ளது பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்ற ஜனா­தி­பதி அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான ஒரு விட­யத்தை செய்­துள்ளார் என்ற குற்­றச்­சாட்­டைத்தான் நாங்கள் எல்­லோரும் முன்­வைத்­தி­ருக்­கிறோம்.

பாரா­ளு­மன்­றத்தில் ஒரு பிர­த­ம­ருக்கு இருக்கும் பெரும்­பான்மை ஆத­ரவை நிரூ­பிப்­ப­தற்­கான வாய்ப்பை வழங்­காமல், வேண்­டு­மென்றே பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தி வைத்­தி­ருக்கும் ஜனா­தி­ப­தியின் செயற்­பாடு மிக மோச­மான ஜன­நா­யக மீற­லாகும். பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டு­வ­தற்கு சபா­நா­ய­க­ருக்கு தார்­மீகப் பொறுப்பு மாத்­தி­ர­மல்ல நீதியின் கட­மையும் அவ­ருக்கு இருக்­கி­றது.

நாட்டு மக்­களை தலை­ந­க­ருக்கு கூட்­டி­வந்து, ஆர்ப்­பாட்­டங்கள் நடாத்தி, தலை­களைக் காட்டி தங்­க­ளது நியா­யங்­களை சொல்­கின்ற அர­சியல் தலை­மைகள், பாரா­ளு­மன்­றத்தில் பிர­த­ம­ருக்கு ஆத­ரவு தெரி­விக்கும் தலை­களை எண்­ணு­வ­தற்­கான வாய்ப்பை ஏன் இல்­லாமல் செய்­கி­றார்கள் என்று நாங்கள் அவர்­களை தீவி­ர­மாக கண்­டிக்­கிறோம். பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டு­வ­தன்­மூலம் நாளுக்­குநாள் அதி­க­ரித்து வரு­கின்ற அரா­ஜக நிலை­மையை கட்­டுப்­ப­டுத்­து­வ­துடன், நாட்டில் ஜன­நா­ய­கத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்ட முடியும்.

Q: சபா­நா­யகர் உங்­க­ளுக்கு என்ன உத்­த­ர­வா­தங்­களை தந்­தி­ருக்­கி­றார்?

பதில்: தான் ஜனா­தி­ப­தி­யிடம் பேசி­ய­தற்­கி­ணங்க, பார­ாளு­மன்­றத்தை கூட்­டு­வ­தற்கு இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக அறி­வித்தார். ஆனால், பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டு­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. விரை­வாக பாரா­ளு­மன்­றத்தை கூட்டத் தவ­றினால், நாங்­க­ளாக சபா­பீ­டத்­துக்குள் நுழை­வ­தற்கு தயங்­க­மாட்டோம் என்று அவ­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளோம்.

அர­சியல் குழப்­ப­நி­லையை உண்­டு­பண்­ணி­ய­வர்கள், பாரா­ளு­மன்­றத்தின் தலை­க­ளுக்கு விலை­பே­சு­கின்ற மிக மோச­மான, கீழ்த்­த­ர­மான ஒரு கலா­சா­ரத்தை உரு­வாக்கி வரு­கி­றது. காலம் செல்லச் செல்ல இந்த நிலைமை இன்னும் மோச­ம­டையும் என்­ப­தினால், இந்த நாட்டில் கெள­ர­வ­மான நிம்­ம­தி­யான அர­சி­யலை செய்ய விரும்­புப­வர்கள் என்ற அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டு­வதைத் தவிர வேறு வழி­யில்லை.

Q: பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வ­தாக சொல்­லப்­பட்ட திக­திகள் தள்­ளிக்­கொண்டே செல்­வ­தற்கு என்ன காரணம்?

பதில்: தேவை­யான தலை­களை அவர்­களால் இன்னும் சேக­ரிக்க முடி­ய­வில்லை. இன்னும் பல தலை­க­ளுக்கு விலை­பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இத­னால்தான் பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டு­வதில் அவர்கள் காலத்தை இழுத்­த­டிக்­கி­றார்கள். எங்­க­ளது தலை­க­ளுக்கு விலை­பேசும் இந்த கலா­சா­ரத்தை முடி­வுக்கு கொண்­டு­வர வேண்டும். எங்­க­ளது நேர்­மையை, சுய­கெ­ள­ர­வத்தை, அர­சியல் உரி­மையை பாது­காத்து தரு­மாறு சபா­நா­ய­கரை வேண்­டி­யி­ருக்­கிறோம்.

Q: இப்­ப­டி­யான சந்­தர்ப்­பங்­களில் சிறு­பான்மைக் கட்­சிகள் அர­சாங்கம் அமைக்­கப்­படும் பக்­கத்­துக்கு தாவு­வ­தான குற்­றச்­சாட்­டு­களும் இருக்­கின்­றனவே?

பதில்: அர­சியல் ரீதி­யாக பேரம்­பே­சு­வதும் தேர்­த­லுக்கு முன்­னரோ, பின்­னரோ எங்­க­ளது கோரிக்­கை­களை பிர­தான கட்­சி­யிடம் ஜன­நா­யக ரீதி­யாக முன்­வைப்­பதும் நடந்­து­வ­ரு­கி­றது. ஆனால், இப்­போது நடந்­தி­ருப்­பது அவ்­வா­றா­ன­தல்ல. இது அப்­ப­டி­யா­ன­தொரு கால­கட்­ட­மல்ல. பாரா­ளு­மன்­றத்தை கூட்­டாமல் ஒத்­தி­வைப்­ப­தி­னூ­டாக அரா­ஜகம் மேலோங்கும் சூழ்­நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. வேண்­டு­மென்றே அர­சி­ய­ல­மைப்பை மீறி இந்த சட்­ட­வி­ரோத செயல் நடந்­தி­ருக்­கி­றது.

பாரா­ளு­மன்­றத்தை கூட்­டாமல் ஒத்­தி­வைப்­பதன் மூலம் மேலு­மொரு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் தற்­போது ஸ்திரத்­தன்­மை­யற்ற நிலைமை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அர­சியல் கட்சி என்ற முறையில் இத்தகைய முறை­கே­டான செயற்­பாட்டை ஒன்­று­பட்டு கண்­டிப்­ப­தற்கு எங்­க­ளுக்கு ஒரு பொறுப்பு இருக்­கின்­றது. விலை­பே­சு­வதை விட்­டு­விட்டு, முன்னர் இருந்த இடத்­துக்குச் செல்­வது அவ­சி­ய­மாகும்.

Q: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் யாரை ஆத­ரிக்கும்?

பதில்: எங்­க­ளது நிலைப்­பாட்டில் மாற்றம் எதையும் கொண்­டு­வ­ர­வில்லை. சட்­ட­பூர்­வ­மான பிர­த­மரை உரு­வாக்கும் உரிமை பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் மாத்­தி­ரம்தான் இருக்­கி­றது. சட்­டத்தை மீறிச் செய்­யப்­பட்ட இந்த விட­யத்தை அவர்கள் சட்­ட­பூர்­வ­மா­ன­தாக மாற்­று­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தை கூட்­டா­ம­லி­ருப்­பதன் மூலம் சட்­ட­பூர்­வ­மற்ற பிர­த­ம­ரா­கத்தான் நிய­மிக்­கப்­பட்ட பிர­தமர் இருந்­து­கொண்­டி­ருக்­கிறார். பாரா­ளு­மன்­றத்தில் யார் பிர­தமர் என்ற வாக்­க­ளிப்பு வரும்­போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தனது நிலைப்­பாட்டை தெளி­வாக தெரி­விக்கும்.

Q: நீங்கள் இன்னும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைத்தான் ஆத­ரிக்­கி­றீர்­களா?

பதில்: ஆம். அதில் மாற்றம் எது­வு­மில்லை என்­பது மிகத் தெளி­வான விடயம்.

Q: உங்­க­ளது கட்­சி­யி­லுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பிரித்­தெ­டுப்­ப­தற்­காக பேரம் பேசப்­ப­டு­வ­தாக சொல்­லப்­ப­டு­கி­றதே?

பதில்: எங்­க­ளது உறுப்­பி­னர்கள் யாரும் விலை­போ­க­மாட்டார்கள் என்ற நம்­பிக்கை எனக்­கி­ருக்­கி­றது. தலை­வ­ருடன் இருந்­து­கொண்­டுதான் இதற்கு தீர்­வு­கா­ண­வேண்டும் என்­பதில் அவர்கள் தீர்க்­க­மாக இருக்­கி­றார்கள். நாங்கள் ஒரு­மித்து செயற்­ப­டு­வதில் தீவிரம் காட்­டி­வ­ரு­கிறோம்.

Q: ஜனா­தி­பதி, ஐ.தே.க. தலைமை மீது பல குற்­றச்­சாட்­டு­களை சுமத்­தி­யுள்ளார். அவ்­வா­றான ஒருவர் மீண்டும் பிர­த­ம­ராக வந்தால் நாட்டை முன்­கொண்டு செல்­ல­மு­டி­யுமா?

பதில்: அவரின் இந்தக் கூற்­றினால் அறிந்தோ, அறி­யா­மலோ இன்­னொரு இக்­கட்­டான நிலையை ஏற்­ப­டுத்­தப்­போ­கிறார். அதை­விட, கட்­சிக்குள் சீர்­தி­ருத்­தத்தை ஏற்­ப­டுத்தி அல்­லது தலை­மைத்­து­வத்தை மாற்­று­வ­தற்­கான முயற்­சி­யொன்றை மேற்­கொள்­வதன் மூலம் தீர்­வினை காண­மு­டியும். இப்­போ­து­கூட ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் இது­பற்றி கலந்­தா­லோ­சித்து வரு­கிறோம். ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளர்் என்ற வகையில் எங்­க­ளாலும் அதற்கு ஒத்­து­ழைக்க முடியும்.

Q: ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீண்டும் பிர­த­ம­ரானால் ஒரு மணித்­தி­யாலம் கூட பத­வியில் நீடிப்­ப­தில்லை என்று ஜனா­தி­பதி கூறி­யி­ருக்­கிறார். இது­பற்றி என்ன நினைக்­கி­றீர்கள்?

பதில்: அவர் இரா­ஜி­னாமா செய்தால், நாங்கள் பாரா­ளு­மன்­றத்­தினால் ஜனா­தி­பதி ஒரு­வரை பத­வியில் அமர்த்தும் நிலை ஏற்­படும்.

Q: கடந்த 3 வரு­டங்­களில் இந்த அர­சாங்கம் சாதித்­தது என்ன? அர­சாங்­கத்தின் ஸ்திரத்­தன்­மையை இல்­லாமல் செய்யும் காரி­யத்தில் ஈடு­பட்­ட­தாக கூறு­கி­றார்கள். இது­பற்றி என்ன கூறு­கி­றீர்கள்?

பதில்: அவ்­வா­றில்லை. இந்த நாட்டில் நல்­லாட்சி அர­சாங்­கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது மக்­களின் ஜன­நா­யகம், சுதந்­திரம், ஊடக சுதந்­திரம் என்­ப­வற்றை நிலவச் செய்­வ­தற்­குத்தான். அதற்­காக பாரா­ளு­மன்­றத்தில் மசோ­தாக்­களை கொண்­டு­வந்தும், செயற்­திட்­டங்கள் மூல­மா­கவும் அபி­வி­ருத்­திகள் மூல­மா­கவும் நிறையச் செய்­தி­ருக்­கிறோம்.

அது­மட்­டு­மல்ல இதற்கு முன்­னி­ருந்த அர­சாங்­கத்தை விட நாங்கள் கூடு­த­லான அபி­வி­ருத்­தி­களைச் செய்­தி­ருக்­கிறோம். ஆனால், ஊட­கங்­களில் அவற்­றுக்கு போதி­ய­ளவு ஒத்­து­ழைப்பு கிடைக்­க­வில்லை. இப்­போது கூட சில ஊட­கங்கள் மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­காமல், பக்கச்சார்பாக நடந்துகொள்வதையும் அவதானிக்க முடிகிறது.

Q: மஹிந்த ராஜபக்ஷவினால் பெற்றோல், டீசல் மற்றும் அத்தியவசியப் பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: வேறொன்றுமில்லை, இப்போதே அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு அவசர அவசரமாக பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் ஒன்றுக்குச் செல்லும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனூடாக அரசாங்கத்தின் முக்கிய பாத்திரமாக தன்னை பிரசித்தப்படுத்திக்கொள்ளும் காரியம் அரங்கேறி வருகிறது.

Q: தேர்தல் ஒன்றுக்கு சென்று பிரச்சினையை தீர்த்துக்கொள்வது உசிதம் என்று கருதுகிறீர்களா?

பதில்: அவ்வாறானதொரு சிக்கலான நிலைமை ஏற்பட்டால், இதைத்தவிர வேறு மாற்று வழியில்லை. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள அராஜக நிலைமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதியும், இந்த இழுபறியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் மொட்டு கட்சியின் சொந்தக்காரரும் சுமுகமாக பேசி ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும். அதற்கு ஒத்துழைக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்.