Verified Web

ஆரம்பித்த சர்ச்சையை முடித்துவைப்பாரா ஜனாதிபதி

10 days ago Administrator

சுதந்­தி­ரத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் மிகவும் நெருக்­க­டி­யான அர­சியல் சூழல் ஒன்­றுக்கு நாடு முகங்­கொ­டுத்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­ர­ம­சிங்­கவை நீக்­கி­விட்டு, தனது அர­சியல் எதி­ரி­யாக கரு­தப்­பட்ட மஹிந்த ராஜ­பக்­சவை அப் பத­வியில் அமர்த்­தி­யுள்­ள­மையே இந்த நெருக்­க­டி­க­ளுக்கு கார­ண­மாகும்.

இந்த நிய­ம­ன­மா­னது முற்­றிலும் அர­சி­ய­ல­மைப்­புக்கும் ஜன­நா­ய­கத்­துக்கும் விரோ­த­மா­னது என பல்­வேறு தரப்­பு­களும் குற்­றம்­சு­மத்­தி­யுள்­ளன. குறிப்­பாக சர்­வ­தேச சமூகம் இந்த நிலைப்­பாட்­டி­லேயே உள்­ளது. எனினும் நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில், பதவி நீக்­கமும் புதிய பிர­தமர் நிய­ம­னமும் முற்­றிலும் சட்ட வரம்­பு­க­ளுக்கும் அர­சி­ய­ல­மைப்­புக்கும் உட்­பட்­டது என ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியின் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புடன், மஹிந்த ராஜ­பக்­சவை எதிர்த்து நின்று மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக வெற்றி பெற்றார். இதற்­க­மைய ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக நிய­மித்தார். சரி­யாக மூன்று வரு­டங்­களின் பின்னர் தனது வெற்­றிக்கு உறு­து­ணை­யாக நின்ற ரணில் விக்­ர­ம­சிங்­கவை பதவி நீக்கம் செய்து விட்டு தன்னை எதிர்த்து நின்ற மஹிந்த ராஜ­பக்­சவை பிர­த­ம­ராக நிய­மித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் இவ்­வா­றா­ன­தொரு பார­தூ­ர­மான தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்கு காரணம் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் தன்­னிச்­சை­யான, முரட்­டுத்­த­ன­மான செயற்­பா­டுதான் என குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருந்தார். தன்­னுடன் கலந்­தா­லோ­சிக்­காது, ஜனா­தி­ப­திக்­கு­ரிய அதி­கா­ரங்­களைக் கூட தன் வசப்­ப­டுத்தி ரணில் செயற்­பட்­ட­தா­கவும் மத்­திய வங்கி உள்­ளிட்ட பல மோச­டி­க­ளுக்கு ரணில் துணை போன­தா­கவும் ஜனா­தி­பதி குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

எனினும் ஜனா­தி­ப­தியின் இந்த செயற்­பா­டா­னது உள்­நாட்­டிலும் சர்­வ­தேச அரங்­கிலும் பலத்த அதி­ருப்­தியைத் தோற்­று­வித்­துள்­ளது. அர­சி­ய­ல­மைப்பை மீறும் வகை­யிலும் கடந்த காலங்­களில் பல்­வேறு முறை­கே­டுகள், அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுடன் தொடர்­பு­டைய, சர்­வ­தேச அரங்கில் மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்ள ஒரு­வரை பிர­த­ம­ராக நிய­மித்­துள்­ள­மை­யா­னது இலங்­கையின் எதிர்­கா­லத்­திற்கு நல்­ல­தல்ல எனும் கருத்தை பலரும் முன்­வைத்­துள்­ளனர். மேலும் சபா­நா­ய­க­ருடன் கலந்­தா­லோ­சிக்­காது பாரா­ளு­மன்­றத்தை 20 நாட்­க­ளுக்கு ஒத்­தி­வைத்த ஜனா­தி­ப­தியின் செயற்­பாடும் கண்­ட­னங்­களைத் தோற்­று­வித்­த­துள்­ளது. பாரா­ளு­மன்­றத்தை 7 ஆம் திகதி கூட்­டு­வ­தாக அளிக்­கப்­பட்ட உறு­தி­மொ­ழியும் ஜனா­தி­ப­தியால் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

இந்த நெருக்­க­டிக்­கான பின்­ன­ணியைப் பொறுத்­த­வரை, தேசிய அர­சாங்­கத்தில் பங்­கெ­டுத்த ஐ.ம.சு.கூட்­ட­மைப்பு மற்றும் ஐக்­கிய தேசிய முன்­னணி தரப்­பு­க­ளுக்­கி­டையில் சரி­யான புரிந்­து­ணர்வு ஆரம்பம் முதலே இருக்­க­வில்லை.  இரு தரப்பும் ஏதோ­வொரு விட்­டுக்­கொ­டுப்பின் அடிப்­ப­டை­யி­லேயே அர­சாங்­கத்தை நடத்தி வந்­தன. எனினும் தேசிய அர­சாங்­கத்தின் உடன்­ப­டிக்­கையை முறித்துக் கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி கையாண்ட வழி­முறை எந்­த­ளவு தூரம் ஜன­நா­ய­க­பூர்­வ­மா­னது என்­பதே இன்று எழும் கேள்­வி­யாகும். கிட்­டத்­தட்ட ஓர் அர­சியல் சதிப்­பு­ரட்­சிக்கு ஒப்­பா­ன­தொரு காய்­ந­கர்த்­த­லையே ஜனா­தி­பதி செய்து முடித்­துள்ளார். தன்னை நம்பி வாக்­க­ளித்த சுமார் 62.5 இலட்சம் மக்­க­ளி­னதும் நம்­பிக்கை, எதிர்­பார்ப்­புக்கு ஜனா­தி­பதி மாறு செய்­துள்­ள­தா­கவே தெரி­கி­றது.

ரணில் விக்­ர­ம­சிங்க தரப்பில் ஏரா­ள­மான குறை­பா­டுகள், குள­று­ப­டிகள் இருக்­கின்ற போதிலும் அதை­வி­டவும் சிறந்த தெரி­வாக மஹிந்த தரப்பை எவ்­வாறு அடை­யாளம் கண்டார் என்ற கேள்­விக்கு   எந்த பதி­லையும் ஜனாதிபதி இதுவரை முன்வைக்கவில்லை.

இந் நிலையில் இலங்கையின் அரசியல் மிகவும் குழப்பமும் கொந்தளிப்பும் நிறைந்ததாக மாறியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல கோடிகளில் இலஞ்சம் கொடுத்து தமது பக்கம் ஈர்க்கின்ற நிலைமை தோன்றியுள்ளது.இது மிக மோசமான அரசியல் நிலைவரமாகும். இந்த நிலைக்கு இட்டுச் சென்றவர் ஜனாதிபதியே என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. இதற்கு ஜனாதிபதி எவ்வாறு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-Vidivelli