Verified Web

இதயத்தை இறைவனின் தீர்மானங்களுடன் இணைப்போம்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

13 days ago T.M.Mufaris Rashadi

நம்மைச் சூழ நடை­பெ­று­கின்ற மாற்­றங்கள், நடப்­புக்கள் யாவும் நாம் நினைப்­பது போன்று சடு­தி­யா­கவோ, திடீ­ரென்றோ நடப்­ப­வை­க­ளல்ல, அவை எம்மைப் படைத்துப் பரி­பாலிக்­கின்ற அந்த ரப்புல் ஆல­மீ­னா­கிய அல்லாஹ் எழுதி வைத்த பிர­கா­ரமே நடை­பெ­று­கின்­றன.

அல்லாஹ் தனது திரு­ம­றையில் கூறு­கிறான்;

அல்லாஹ் எங்­க­ளுக்கு விதித்­ததைத் தவிர எங்­க­ளுக்கு வேறு எதுவும் ஏற்­ப­டாது. அவன் எங்கள் அதி­பதி. நம்­பிக்கை கொண்டோர் அல்­லாஹ்­வையே சார்ந்­தி­ருக்க வேண்டும்'' என்று கூறு­வீ­ராக! (திருக்­குர்ஆன் 9:51)

இந்தப் பூமி­யிலோ, உங்­க­ளி­டமோ எந்தத் துன்பம் நிகழ்ந்­தாலும் அதை நாம் உரு­வாக்­கு­வ­தற்கு முன்பே பதி­வேட்டில் இல்­லாமல் இருக்­காது. இது அல்­லாஹ்­வுக்கு எளி­தா­னது. (திருக்­குர்ஆன் 57:22)

ஏதேனும் ஒரு காரி­யத்தில் நீர் இருந்­தாலும், குர்­ஆ­னி­லி­ருந்து எதை­யா­வது நீர் கூறி­னாலும், நீங்கள் எந்தச் செயலைச் செய்­தாலும் அதில் நீங்கள் ஈடு­படும் போது உங்­களை நாம் கண்­கா­ணிக்­காமல் இருப்­ப­தில்லை. பூமி­யிலும், வானத்­திலும் அணு­வ­ளவோ, அதை விடச் சிறி­யதோ, அதை விடப் பெரி­யதோ உமது இறை­வனை விட்டும் மறை­யாது. (அவை) தெளி­வான பதி­வேட்டில் இல்­லாமல் இருப்­ப­தில்லை. (திருக்­குர்ஆன் 10:61)

உங்­க­ளுக்குத் தவறி விட்­ட­தற்­காக நீங்கள் கவ­லைப்­ப­டாமல் இருப்­ப­தற்­கா­கவும், அவன் உங்­க­ளுக்கு வழங்­கி­யதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்­ப­தற்­கா­கவும், (விதியை ஏற்­ப­டுத்­தி­யுள்ளான்) கர்­வமும் பெரு­மையும் கொண்ட ஒவ்­வொ­ரு­வ­ரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்­குர்ஆன் 57:23)

இன்று எமது நாட்டில் நடந்து கொண்­டி­ருப்­பவை எது­வுமே புதி­தா­கவோ திடீ­ரென்றோ நடப்­ப­வை­க­ளல்ல அவை திட்­ட­மி­டப்­பட்ட படியே நடந்து கொண்­டி­ருக்­கின்­றன, யார் ஆட்சி செய்­தாலும் யார் ஆட்­சிக்கு வந்­தாலும் எந்த சூழ் நிலை­யிலும் எப்­போதும் எமது ரப்­புடன் எமது தொடர்பு சீராகி விட்டால்  எம்­மு­டைய ரப்பு என்றும் எம்­மோடு இருப்பான் என்­ப­தனை நாம் தெளி­வாக புரிந்து கொள்ள வேண்டும்.

அதை விட்டு விட்டு எதிர் காலத்தில் நடக்கப் போவது பற்­றியும் எதைப் பற்றி எமக்கு தீர்க்­க­மான அறி­வில்­லையோ அது பற்­றியும் கருத்துச் சொல்­கிறோம் என்ற பெயரில் வீணாக கற்­ப­னை­களைக் கொட்டிக் கொள்­வதில் எவ்­வித பலனும் எமக்கு கிடைக்­கப்­போ­வ­தில்லை.

இந்த உல­கத்­தையும் மனி­தர்­க­ளையும் படைப்­ப­தற்கு முன்பே இது இப்­ப­டித்தான் நடக்கும் என்று அந்த ரப்புல் ஆலமீன் எழுதி விதித்து விட்­ட­தைப்­பற்றி இன்று நம்மில் அத­க­மானோர் அது இப்­படி இருந்தால் இது அப்­படி அமைந்தால் என அங்­க­லாய்த்துக் கொண்டும் ஆய்வு நடத்திக் கொண்டும் இருக்­கின்றோம், அல்லாஹ் விதித்த, எழு­தி­விட்ட விட­யங்­களில் நமது பகுத்­த­றிவை நுழை­விப்­பது தவ­றான காரி­ய­மாகும்.

நாட்டில் ஏற்­பட்­டி­ருக்­கின்ற அர­சியல் ரீதி­யி­லான மாற்­றங்கள் குறித்து பலரும் பல­வி­த­மாக பேசு­கின்­றனர், அது பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்­ப­டு­கின்­றனர், அடிப்­ப­டையில் இது தவ­றான ஒன்­றல்ல, எனினும் அல்­லாஹ்வை ஈமான் கொண்­டி­ருக்கும் எமக்கு அர­சியல் பற்றிப் பேசு­வ­திலும் கருத்துச் சொல்­வ­திலும் இருக்கும் ஆர்­வத்தை விட அல்­லாஹ்வைப் பற்றி அவனும் அவ­னது தூதரும் விளக்­கிய அடிப்­ப­டையில் அறி­வ­திலும் இருக்க வேண்டும், அர­சியல் வாதி­க­ளிடம் உள்ள நம்­பிக்­கையை விட கோடான கோடி மடங்கு, அர­சர்­க­ளுக்­கெல்லாம் அர­ச­னா­கிய அந்த ரப்புல் ஆல­மீ­னிடம் இருக்க வேண்டும், இந்த அடிப்­ப­டையை நாமும் அறிந்து நம்மைச் சூழ­வுள்­ள­வர்­க­ளுக்கும் நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

மறை­வா­ன­வற்றின் திற­வு­கோல்கள் அவ­னி­டமே உள்­ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரை­யிலும், கட­லிலும் உள்­ள­வற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்­தாலும் அதை அவன் அறி­யாமல் இருப்­ப­தில்லை. பூமியின் இருள்­களில் உள்ள விதை­யா­னாலும், ஈர­மா­னதோ காய்ந்­ததோ ஆனாலும் தெளி­வான ஏட்டில் இல்­லாமல் இல்லை. (திருக்­குர்ஆன் 6:59)

அவன் அனு­ம­தி­யின்றி மரத்­தி­லி­ருந்து ஒரு காய்ந்த இலை கூட விழு­வ­தில்லை என்ற அம்­சத்தை அவனே எமக்கு கற்றுத் தந்­தி­ருக்­கிறான், அல்­லாஹ்வின் நாட்­ட­மின்றி ஆட்­சி­யா­ளர்­களோ அர­சி­யல்­வா­தி­களோ அதி­காரம் படைத்­த­வர்­களோ செல்­வந்­தர்­களோ யாருமே எமக்கு எந்த ஒரு இலா­பத்­தையோ நஷ்­டத்­தையோ கடு­க­ள­வேனும் செய்­து­விடப் போவ­தில்லை என்­ப­தனை எமது இத­யங்­களில் ஆழப்­ப­தித்­துக்­கொள்ள வேண்டும்.

ஒரு­வரின் படைப்பு அவ­ரது தாய் வயிற்றில் நாற்­பது நாட்­களில் ஒருங்­கி­ணைக்­கப்­ப­டு­கி­றது. பின்னர் அவ்­வாறே கருக்­கட்­டி­யாக மாறு­கி­றது. பின்னர் அவ்­வாறே சதைக் கட்­டி­யாக மாறு­கி­றது. பின்னர் ஒரு வான­வரை அல்லாஹ் அனுப்பி இவ­ரது செயல்­பா­டு­களைப் பதிவு செய்! இவ­ரது செல்­வத்தைப் பதிவு செய்! இவ­ரது மரண வேளையைப் பதிவு செய்! இவர் நல்­ல­வரா கெட்­ட­வரா என்­பதைப் பதிவு செய்!'' என நான்கு கட்­ட­ளைகள் பிறப்­பிக்­கப்­ப­டு­கி­றது. பின்னர் அவ­ருக்கு உயிர் ஊதப்­ப­டு­கி­றது. உங்­களில் ஒரு மனி­த­னுக்கும் சொர்க்­கத்­துக்கும் இடையே ஒரு முழம் தவிர இல்லை என்ற அள­வுக்கு அவர் (நல்ல) செயல்­களைச் செய்வார். முடிவில் விதி அவரை வென்று நர­க­வா­சி­களின் செயலைச் செய்து விடுவார். உங்­களில் ஒரு மனி­த­னுக்கும் நர­கத்­துக்கும் இடையே ஒரு முழம் தவிர இல்லை என்ற அள­வுக்கு அவர் (கெட்ட) செயல்­களைச் செய்வார். முடிவில் விதி அவரை வென்று சொர்க்­க­வா­சி­களின் செயலைச் செய்து விடுவார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்.

நூல் : புகாரி 3208 , 3332, 6594, 7454

அல்லாஹ் மனி­தனை இவ்­வு­ல­கிற்கு அனுப்­பு­வ­தற்கு முன்பே அவ­னது காரி­யங்கள் குறித்து எழுதி விடு­கிறான், நமது நம்­பிக்­கையும் உறவும் அல்­லாஹ்­வோடு மாத்­திரம் மிகச்­ச­ரி­யா­ன­தா­கவும் சீரா­ன­தா­கவும் இருக்க வேண்டும், அவனை திருப்திப் படுத்­து­வதே எமது தலை­யாய இலக்­காக இருக்க வேண்டும்.

அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்; ஆதம் (அலை) அவர்­களும் மூசா (அலை) அவர்­களும் தம் இறைவன் அருகில் தர்க்கம் செய்­தார்கள். அப்­போது மூசா (அலை) அவர்­களை ஆதம் (அலை) அவர்கள் தோற்­க­டித்து விட்­டார்கள். மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் தனது கையால் உங்­களைப் படைத்து, உங்­க­ளுக்குள் தனது உயிரை ஊதி, தன் வான­வர்­களை உங்­க­ளுக்குச் சிரம்­ப­ணியச் செய்து, உங்­களைச் சொர்க்­கத்தில் குடி­யி­ருக்கச் செய்த ஆதம் நீங்கள் தானே! பிறகு நீங்கள் உங்­க­ளது பாவத்தின் மூலம் (உங்கள் வழித் தோன்­றல்­க­ளான) மனி­தர்­களை பூமிக்கு இறங்கச் செய்து விட்­டீர்கள்'' என்று கூறி­னார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "அல்லாஹ் தன் தூதுத்­துவச் செய்­தி­களைத் தெரி­விக்­கவும் தன்­னிடம் உரை­யா­டவும் உம்மைத் தேர்ந்­தெ­டுத்து, அனைத்துப் பொருட்­களைப் பற்­றிய விளக்­கமும் உள்ள பல­கை­களை உமக்கு வழங்கி, தன் அருகில் வரச்­செய்து இர­க­சி­ய­மாக உரை­யா­டிய மூசா நீர் தானே! நான் படைக்­கப்­ப­டு­வ­தற்கு எத்­தனை ஆண்­டு­க­ளுக்கு முன் அல்லாஹ் தவ்­ராத்தை எழு­தி­ய­தாக நீர் கண்டீர்?'' என்று கேட்­டார்கள்.அதற்கு மூசா (அலை) அவர்கள், "நாற்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னால்'' என்று பதி­ல­ளித்­தார்கள். "அதில், ஆதம் தம் இறை­வ­னுக்கு மாறு செய்தார். எனவே, அவர் வழி தவ­றினார் என்று எழு­தப்­பட்­டி­ருந்­ததா?'' என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், "ஆம்' என்­றார்கள். "அவ்­வா­றாயின், என்னைப் படைப்­ப­தற்கு நாற்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்பே எதை நான் செய்வேன் என்று இறைவன் என்­மீது விதி­யாக்கி விட்­டானோ அதைச் செய்­த­தற்­காக என்னை நீங்கள் பழிக்­கி­றீரா?'' என்று ஆதம் (அலை) அவர்கள் கேட்­டார்கள்.

(இந்தக் கேள்­வியின் மூலம்) மூசா (அலை) அவர்­களை ஆதம் (அலை) அவர்கள் தோற்­க­டித்து விட்­டார்கள்.

அறி­விப்­பவர்: அபூ­ஹு­ரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4795

இறைவன் ஏற்­க­னவே எழுதி, விதித்து விட்ட விட­யங்­களில் மனித சிந்­த­னையை பயன்­ப­டுத்­து­வது பொருத்­த­மான காரி­ய­மல்ல என்­பனை இந்த நபி­மொழி எமக்கு உணர்த்­து­கி­றது.

இறைவன் அவ்­வப்­போது ஏற்­ப­டுத்­து­கின்ற மாற்­றங்­களை ஒவ்­வொ­ரு­வரும் தமது அறிவு , ஆன்­மீக தரத்­திற்கு ஏற்ப அணு­கு­கின்­றனர். அதில் சரி­யான, பிழை­யான பார்­வைகள் உண்டு, எனினும் உண்­மை­யான இறை­வி­சு­வாசி எல்லா நேரங்­க­ளிலும் அவ­னது ரப்­பையே சார்ந்­தி­ருக்க வேண்டும், அவ­னது உத­வி­யையே நாட வேண்டும் அவ­னது பொருத்­தத்­தையே இலக்­காகக் கொண்­டி­ருக்க வேண்டும்.

இறை­வனின் படைப்­புக்­களில் சில­வற்றின் இயற்­கைக்கு மாறான நட­வ­டிக்­கை­களின் போது கூட நபி­க­ளாரின் செயற்­பா­டு­க­ளிலும் வணக்க வழி­பா­டு­க­ளிலும் சிறு மாற்­றமும் இறைவன் மீதான ஆழ்ந்த பிணைப்­புமே அதிகம் தென்­பட்­டது.

ஹுதைபா (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள்; திடுக்­கிடும் நிகழ்வு ஏதும் ஏற்­பட்டால் நபி­களார் உடனே தொழு­கையின் பால் விரைந்து செல்­வார்கள். (நூல்:- அபூ தாவுத் 1319)

அபூ பக்ரா (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள்;

நாங்கள் நபி (ஸல்) அவர்­க­ளுடன் இருந்­த­போது சூரிய கிர­கணம் ஏற்­பட்­டது. உடனே நபி (ஸல்) அவர்கள் தங்­களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்­ளிக்குள் நுழைந்­தார்கள். நாங்­களும் நுழைந்தோம். கிர­கணம் விலகும் வரை எங்­க­ளுக்கு இரண்டு ரக்­அத்கள் தொழுகை நடத்­தி­னார்கள். பிறகு 'சூரி­ய­னுக்கும் சந்­தி­ர­னுக்கும் எவ­ரு­டைய மர­ணத்­திற்­கா­கவும் கிர­கணம் பிடிப்­ப­தில்லை. எனவே நீங்கள் கிர­க­ணங்­களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்­தி­யுங்கள்' என்று இறைத்­தூதர்(ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (நூல்:- புஹாரி 1040)

உதா­ர­ணத்­துக்­காக நாம் மேலே பதிவு செய்­துள்ள இரண்டு நபி­மொ­ழி­களும் கால மாற்­றங்கள், சூழ்­நிலை மாற்­றங்கள், பொது­வாக வழ­மைக்கு மாற்­ற­மாக எது நடந்­தாலும் நபி­களார் அல்­லாஹ்­வுடன் தமது உறவை அதி­கப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள் என்­ப­தற்­கு­ரிய மிகப்­பெரும் ஆதா­ரங்­க­ளாகும். கிர­க­ணமோ நில­ந­டுக்­கமோ சுனா­மியோ இவை மட்­டு­மல்ல அது உலகின் எவ்­வகை செயற்கை மாற்­றங்­க­ளா­யினும் எமது உறவு எம்மைப் படைத்­த­வ­னுடன் இறுக்­க­மாக இருக்க வேண்டும் என்­ப­த­னையே இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே மரிக்­க­மாட்­டானே அந்த நித்­திய ஜீவ(னாகிய அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்” (திருக்குர்ஆன் 25:58)

"எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன், திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்” (திருக்குர்ஆன் 65:3)

எது நடந்தாலும் யார் எதைச் சொன்னாலும் யார் எமக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தந்தாலும் யார் எமக்கு ஆதரவு தருகிறோம் என்று கூறினாலும் நமது முழு நம்பிக்கையும் உள்ளார்ந்த தொடர்பும் எம்மை எம் தாயை விட பன்மடங்கு நேசிக்கின்ற அந்த ரப்போடு மாத்திரமே இருக்க வேண்டும்.
-Vidivelli