Verified Web

வட மாகாண முஸ்லிம்களின் துன்பியல் வாழ்வுக்கு இருபத்தெட்டு வயது

15 days ago Administrator

சத்தார் எம் ஜாவித் 

வடக்கில் தனி­நாடு கோரி போரா­டிய விடு­தலைப் புலி­களால் 1990ஆம் ஆண்டு தமது போராட்­டத்தின் வெற்றிக் கன­விற்­காக வட­மா­காண முஸ்­லிம்­கள் வடக்­கி­லி­ருந்து ஒரு­த­லைப்­பட்­ச­மாக முற்­றாக விரட்­டப்­பட்டு இம்­மா­தத்­துடன் 28 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன.

அன்று தொடக்கம் இன்று வரை வட­மா­காண முஸ்­லிம்கள் வடக்­கிற்கு வெளியே அக­திகள் என்ற நாமத்­துடன் பல்­வே­று­பட்ட துன்­பங்­க­ளையும், இடர்­க­ளையும் அனு­ப­வித்­த­வர்­க­ளாக பல­வா­றான ஏற்றத் தாழ்­வு­க­ளுடன் நாட்டின் பல­பா­கங்­க­ளிலும் வாழ்ந்து வரு­வ­துடன் அதி­க­மா­ன­வர்கள் அன்று தொடக்கம் இன்­று­வரை புத்­தளம் மாவட்­டத்தில் நிலை­யான வரு­மா­ன­மற்­ற­வர்­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர்.

நாளாந்தம் சிறு­சிறு தொழில்­களைப் புரிந்தும், அரச ஊழி­யர்­க­ளாக இருந்­த­வர்கள் தமது சம்­ப­ளத்தில் சிறு தொகை­களை சேமித்தும், வங்­கி­க­ளிலும், தனியார் நிறு­வ­னங்­க­ளிலும் கடன்­களைப் பெற்றும் தமது சொந்தச் செலவில் 10 பேர்ச்சஸ் நிலத்­துண்­டுக்குள் சிறிய வீடு­களை அமைத்து தமக்­கான ஒரு இடத்தை அடை­யா­ளப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளாக இன்று வரை மீள் குடி­யேற்றம் என்ற கன­வு­ட­னேயே ஒரே வீட்­டுக்குள் பல குடும்­பங்கள் வாழ்ந்து வரும் அவலம் தொடர் கதை­யா­கவே இருக்­கின்­றது.

இவ்­வாறு துன்­பப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் மக்­களை அவர்­களின் பிரச்­சி­னை­களை இனங்­கண்டு சரி­யான முறை­மையில் மீள் குடி­யேற்ற முடி­யாத நிலையில் அர­சாங்கம் கண்டும் காணா­த­துபோல் 28 வரு­டங்­க­ளாக இழுத்­த­டிப்புச் செய்து வரு­கின்­றமை அந்த மக்கள் மனங்­களில் அழி­யா­ததும், மறக்க முடி­யா­த­து­மான வடுக்­க­ளா­கவே இருந்து வரு­கின்­றது. ஒவ்­வொரு விடி­காலைப் பொழு­திலும் தாம் சொந்த இடத்­திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆதங்­கத்­து­ட­னேயே எழு­கின்­றனர். என்­றாலும் அந்த ஆதங்கம் எல்லாம் நாளொ­ரு­மே­னியும் பொழு­தொரு வண்­ண­மு­மாக கானல்நீரான விட­ய­மா­கவே இருந்து வரு­கின்­றது.

ஒன்­றுமே அறி­யாத வட­மா­காண முஸ்­லிம்கள் விடு­தலைப் புலி­களால் 1990ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத இறுதிக் காலத்தில் ஒட்­டு­மொத்­த­மாக ஆயுத முனையில் எந்­த­வொரு பொருட்­க­ளை­யுமே கொண்டு செல்­லா­த­வாறு உடுத்­திய உடுப்­புக்­க­ளுடன் விரட்­டப்­பட்ட வர­லாறு வட­மா­காண சகல முஸ்­லிம்கள் மத்­தி­யி­லி­ருந்தும் அழிக்க முடி­யாத வடுக்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றது. அந்தக் காரிருள் சூழ்ந்த அந்த நேரத்தில் என்ன செய்­வது? எங்கு செல்­வ­தென்று தெரி­யாது அந்த மக்கள் தட்­டுத்­த­டு­மாறி இரவும் பகலும் உயிரைக் கையில் பிடித்­த­வாறு மழை­யிலும், வெயி­லி­லு­மாக காடு­க­ளுக்­குள்­ளாலும், ஆழ்­கடல் வழி­யா­கவும் தப்பிச் சென்ற வர­லாறே உள்­ளது. இந்த நாட்டில் எந்­த­வொரு சமூ­கமும் அனு­ப­வித்­தி­ராத துன்­பத்தை முதன் முத­லாக அனு­ப­விக்க வைத்த படு­பா­தகச் செயலை விடு­தலைப் புலிகள் செய்து விட்­டமை வட­மா­காண முஸ்­லிம்­களால் வர­லாற்றில் மறந்­து­விட முடி­யாத ஒன்­றாகும்.

அடம்பன் கொடியும், திரண்டால் மிடுக்­கு என்பதுபோல் இருந்த தமிழ், முஸ்லிம் உற­வுகள் தமிழ் இளை­ஞர்­களின் ஆயுதப் போராட்­டத்தால் சின்னா பின்­ன­மாக்­கப்­பட்டு வர­லாற்றில் ஒற்­று­மை­யாக இருந்த சமூ­கங்­களை ஒரு­வருக்கொருவர் விரோ­தி­க­ளா­கவும், பகை­வர்­க­ளா­கவும் பார்க்கும் ஒரு யுகத்தை விடு­தலைப் புலிகள் ஏற்­ப­டுத்தி விட்­டனர். அது மட்­டு­மல்­லாது வட­மா­கா­ணத்­திற்குள் எக்­கா­லத்­திலும் செல்ல முடி­யா­த­வா­றான தமது ஆக்­கி­ர­மிப்­புக்­க­ளை ­கூடச் செய்து முஸ்லிம் சமூ­கத்தின் சகல உட­மை­க­ளையும், காணி­க­ளையும் சுவீ­க­ரித்து சிறு­பான்­மைக்குள் சிறு­பான்­மை­யாக  இருந்த முஸ்லிம் சமூ­கத்தின் சக­ல­வி­த­மான ஜன­நா­யக உரி­மை­க­ளையும், சுதந்­தி­ரங்­க­ளையும் சூறை­யா­டியதன் பய­னாக செல்வச் செழிப்­பு­டனும், சந்­தோ­ச­மா­கவும் வாழ்ந்த சமூ­கத்­தினை பிச்­சைக்­கா­ரர்­க­ளாக விரட்­டிய வர­லாற்றை அவர்­களின் செயல்­க­ளுக்கு இரை­யா­ன­வர்கள் எவ­ராலும் மறந்­து­விட முடி­யாது.

அமை­தி­யா­கவும், சமா­தா­ன­மா­கவும் இந்த நாட்டின் ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளுக்கோ, உரி­மை­க­ளுக்கோ பங்கம் ஏற்­ப­டாது வாழ்ந்த சமூ­கத்­தினை ஈவி­ரக்­க­மற்ற வகையில் விரட்­டி­ய­டித்து வரா­லற்றில் பெரும் தவறைச் செய்து விட்­டனர். அன்று தொடக்கம் இன்று வரையும் அந்த மக்கள் கண்­ணீ­ரு­டனும், கவ­லை­க­ளு­ட­னுமே வாழ்ந்து வரு­கின்­றனர். இந்தச் செயற்­பா­டுகள் பிற்­கா­லத்தில் அவர்­களின் விடு­தலைப் போராட்­டத்தின் பின்­ன­டை­வுக்கு வழி­வ­குத்­தது எனலாம்.

விடு­தலைப் புலிகள் வட­மா­காண முஸ்­லிம்­க­ளுக்கு இழைத்த கொடு­மையின் பய­னாக அவர்­களின் போராட்ட வர­லாறு ஒட்­டு­மொத்­த­மா­கவே 2009 ஆம் ஆண்டு மே மாதம் முற்­றா­கவே தோற்­க­டிக்­கப்­பட்­ட­மையை மறந்­து­விட முடி­யாது. விடு­தலைப் புலிகள் வட­மா­கா­ணத்தில் இருந்து முஸ்­லிம்­களை விரட்­டா­தி­ருந்தால் இன்று தமிழ் சமூகம் ஒரு சிறந்த பெறு­பேற்றைப் பெற்­றி­ருக்கும் என சமூக ஆர்­வ­லர்­களும், அர­சியல் ஆய்­வா­ளர்­களும் தெரி­விக்­கின்­றனர். விடு­தலைப் புலிகள் ஒரு­தலைப் பட்­ச­மாக எடுத்த முடி­வின் கார­ண­மாக வட­மா­காண முஸ்­லிம்­களை விரட்­டி­ய­மையே முத­லா­வது பிழை­யான சம்­ப­வ­மாகும்.

விடு­தலைப் புலி­களால் பாதிக்­கப்­பட்ட வட­மா­காண முஸ்­லிம்கள் விட­யத்தில் அரசு இது­வ­ரைக்கும் பேச்­ச­ளவில் இருக்­கின்­றதே தவிர செயலில் இல்லை என்ற குற்­றச்­சாட்டு தொடர்­க­தை­யாக இருக்­கின்­றது. கடந்த காலங்­களில் ஆட்­சிக்கு வந்த அர­சாங்கங்கள் எல்­லாமே இந்த மக்கள் விட­யத்தில் காத்­தி­ர­மான எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்கவில்லை. தேர்தல் காலங்­களில் வாக்­கு­களைப் பெற்­றார்­களே தவிர இந்த மக்­களைக் கண்டு கொள்ளவில்லை. தேர்தல்­க­ளுக்­காக ஏமாற்­றப்­பட்ட மக்­க­ளா­கவே இவர்கள் இருந்து வரு­கின்­றனர்.

மீள் குடி­யேற்றம் என்ற வகையில் ஒரு சிறு சத­வீத மக்­களே மீள் குடி­யே­றி­யுள்­ளனர். இதில் ஒரு தொகு­தி­யினர் தமது தொழில்­க­ளுக்­காக சென்­ற­வர்கள். இவர்­களில் பலர் இன்னும் பல தேவைப்­பா­டு­க­ளுடன் இருப்­ப­துடன் இவர்கள் விட­யத்தில் இது­வரை கவனஞ் செலுத்­தப்­பட வில்லை. இன்னும் கிட்­டத்­தட்ட 70 சத­வீ­த­மா­ன­வர்கள் புத்­தளம் உள்­ளிட்ட நாட்டின் பல பாகங்­க­ளிலும் பல்­லா­யிரக் கணக்­கான குடும்­பங்­க­ளாக பெருகி அக­தி­க­ளா­கவே வாழ்ந்து வரு­கின்­றனர்.

இவர்­களில் பல­ருக்கு தமது இடங்­களில் சொந்தக் காணி­களும் இல்லை, வீடு­களும் இல்லை. இவர்­களின் இடங்கள் எல்லாம் வடக்கில் ஏனை­ய­வர்­க­ளாலும், படை­யி­ன­ராலும் சூறை­யா­டப்­பட்­டுள்­ளன. இன்று இட­மின்றி இவ்­வாறு இருப்­ப­வர்­களை அரசோ, அல்­லது அர­சியல்வாதி­களோ அல்­லது அரச அதி­கா­ரி­களோ அல்­லது இந்­திய அர­சாங்­கமோ கண்டு கொள்­ளா­தி­ருப்­பது வேத­னை­ய­ளிக்­கின்­றது. அத்­துடன் வீட்டுத் தேவை­யுடன் இருக்கும் இவர்­க­ளுக்கு வீடு­கள்­கூட வழங்­கு­வதில் பார­பட்­சமும், எதிர்ப்­புக்­களும் காட்­டப்­ப­டு­கின்­றன.

இதே­வேளை வட­மா­காண மக்­க­ளுக்கு என ஆட்­சியில் இருந்த வட­மா­காண சபை முஸ்­லிம்­க­ளுக்கு கடு­க­ள­விலும் ஒன்றும் செய்ய வில்லை. அவர்கள் செய்­தது எல்லாம் முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்­றத்­தையும், வீட­மைப்புத் திட்­டங்­க­ளையும் இல்­லாது செய்ததேயாகும். நூற்­றிற்கு நூறு வீதம் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு அக­தி­க­ளாக இருக்­கின்ற வட­மா­காண முஸ்­லிம்கள் என்று தெரிந்­தி­ருந்தும் வட­மா­காண சபை கடந்த தமது ஐந்து வரு­ட­கா­லத்­தி­லும்­கூட வடக்கு முஸ்­லிம்­களை அர­வ­ணைக்க வில்லை.

தமக்­கான உத­வி­களைச் செய்­யுங்கள், எங்­க­ளுக்கும் வீட­மைப்புத் திட்­டங்­களைத் தாருங்கள் என்­றெல்லாம் கேட்டுச் சென்­ற­போது அவர்கள் இவர்கள் விட­யத்தில் தட்­டிக்­க­ழிப்­புக்­க­ளையும், அலைச்­சல்­க­ளை­யுமே கொடுத்­துள்­ளனர். சில வேளை­களில் நேர­டி­யான மறுப்­புக்­க­ளைக்­கூட தெரி­வித்த பல சம்­ப­வங்கள் நடந்­தே­றி­யுள்­ளன.

அர­சாங்­கத்­தினால் ஒதுக்­கப்­பட்ட நிதியில் பல மில்­லி­யன்­களை செல­வ­ழிக்­காது வைத்­தி­ருந்­த­துடன், முஸ்லிம் சமூ­கத்­திற்கு செல­விட வேண்­டிய தொகை­க­ளைக்­கூட செல­வி­டாது பார­பட்­ச­மாக செயற்­பட்­ட­தையும், அதற்கு ஒரு­சில வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளும் அரச அதி­கா­ரி­களும் செயற்­பட்ட விட­யங்கள் எல்லாம் நாட­றிந்த உண்­மை­க­ளாகும்.

தமக்குள் இருக்கும் சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளுக்கு செய்ய வேண்­டி­யதைச் செய்­யாத தமிழ் தலை­மை­களும், முன்னாள் வட­மா­காண சபையும், அதன் அங்­கத்­த­வர்­களும் பெரும்­பான்மை சிங்­கள சமூகம் தமக்குச் செய்யவில்­லையே என்று எந்த முகத்­துடன் குறை­கூற முடியும்? வட­மா­கா­ணத்தைப் பொறுத்­த­வரை அமைச்சர் றிஷாத் பதி­யு­தீனால் பல­ருக்கு வீடுகள் வழங்­கி­ய­தாக கூறப்­ப­டு­கின்­றது. நல்ல விடயம் அவர் செய்­கின்றார் என்­றாலும் அங்கு தற்­போது இருப்­ப­வர்­க­ளுக்­குத்தான் வழங்­கப்­ப­டு­கின்­றது என்ற விடயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கில் வீடு இருந்­தால்­தானே அங்கு சென்று வசிக்க முடியும். ஆனால் அங்கு வந்து இருப்­ப­வர்­க­ளுக்­குத்தான் வீடுகள் என்றால் 70 சத­வீ­த­மா­ன­வர்கள் வடக்கில் மர­நி­ழல்­க­ளுக்கு கீழ்தான் போய் வாழ வேண்டும். இது நியா­ய­மான செயற்­பாடு அல்ல. ஒவ்­வொரு ஊரிலும் இருந்­த­வர்­களின் விப­ரங்கள் திரட்­டப்­பட்டு விரும்­பியோ விரும்­பா­மலோ அவர்­களின் பெயர்­களில் ஒரு வீட்டைக் கொடுக்க வேண்­டிய கடப்­பா­டுகள் அர­சாங்­கத்­திற்­கு­ரி­யது. இடம் பெயர்ந்­த­வர்கள் என்ற வகையில் இது­வி­ட­யத்தில் அர­சாங்­க­மா­வது நியா­ய­மான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

இதனால் பலர் ஒன்­றுமே இல்­லாது மீள் குடி­யேற முடி­யாது திண்­டா­டு­கின்­றனர். ஒரே குடும்­பத்திற்கு பல வீடுகள் வழங்­கப்­பட்­டுள்ள விட­யத்தை அரசு கவ­னத்திற் கொண்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்­கப்­பட்டு இன்­று­வரை ஒன்றும் கிடைக்­கா­த­வர்கள் கோரு­கின்­றனர். இது நியா­ய­மான கோரிக்கை. இவ்வாறு வீடுகளைப் பெற்றவர்களின் விண்ணப்பங்களை அரசு மீள் பரிசீலனை செய்து வீடுகள் இல்லாதவர்களுக்கு அவரவர் இடங்களிலேயே வீடுகளைக் கொடுத்து ஒரு பூரணமான மீள் குடியேற்றத்தை ஏற்படுத்தி அகதிகள் அற்ற ஒரு இலங்கையை உருவாக்க வேண்டும்.

சுமார் மூன்று தசாப்தங்களை நெருங்கி வரும் வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் அவர்களின் நியாயமான விடயங்களை கண்டறிய வேண்டும். குறிப்பாக வடக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும். இதற்காக அந்தந்த ஊர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கலப்பற்ற குழுக்களை உருவாக்கி எவருக்கும் அநீதி இழைக்கப்படாது நியாயமான முறையில் வீடுகளை வழங்கி மீள்குடியேற்ற வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் அரசாங்கத்திற்கு உரியது.

எனவே இதுவரை காலமும் இந்த மக்களுக்கு மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கி அவர்களின் அகதி வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து இடம் பெயர்ந்த அனைவரையும் முழுமையாக மீள் குடியேற்றி இதுவரை காலமும் இருளில் இருந்து வரும் அந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றி இயல்பு வாழ்வு வாழ நியாயமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வடமாகாண முஸ்லிம்கள்  வினயமாக விடுக்கின்றனர்.
-Vidivelli