Verified Web

ஜனாதிபதியின் செயல் நியாயமானதா

17 days ago Administrator

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் நெருக்கடியான அரசியல் சூழல் ஒன்றுக்கு நாடு முகங்கொடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, தனது அரசியல் எதிரியாக கருதப்பட்ட மஹிந்த ராஜபக்சவை அப் பதவியில் அமர்த்தியுள்ளமையே இந்த நெருக்கடிகளுக்கு காரணமாகும்.

இந்த நியமனமானது முற்றிலும் அரசியலமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமானது என பல்வேறு தரப்புகளும் குற்றம்சுமத்தியுள்ளன. எனினும் நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பதவி நீக்கமும் புதிய பிரதமர் நியமனமும் முற்றிலும் சட்ட வரம்புகளுக்கும் அரசியலமைப்புக்கும் உட்பட்டது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துள்ள புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தனது நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றும் தனக்கு பாராளுமன்றத்தில் 120 உறுப்பினர்களுடன் கூடிய பெரும்பான்மை ஆதரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான ஒத்துழைப்புடன், மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து நின்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். இதற்கமைய ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார். சரியாக மூன்று வருடங்களின் பின்னர் தனது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து விட்டது தன்னை எதிர்த்து நின்ற மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இவ்வாறானதொரு பாரதூரமான தீர்மானத்தை எடுப்பதற்கு காரணம் ரணில் விக்ரமசிங்கவின் தன்னிச்சையான, முரட்டுத்தனமான செயற்பாடுதான் என நேற்றைய உரையில் பல இடங்களில் குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னுடன் கலந்தாலோசிக்காது, ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைக் கூட தன் வசப்படுத்தி ரணில் செயற்பட்டதாகவும் மத்திய வங்கி உள்ளிட்ட பல மோசடிகளுக்கு ரணில் துணை போனதாகவும் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும் ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் பலத்த அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. அரசியலமைப்பை மீறும் வகையிலும் கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய, சர்வதேச அரங்கில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுத்துள்ள ஒருவரை பிரதமராக நியமித்துள்ளமையானது இலங்கையின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல எனும் கருத்தை பலரும் முன்வைத்துள்ளனர். மேலும் சபாநாயகருடன் கலந்தாலோசிக்காது பாராளுமன்றத்தை 20 நாட்களுக்கு ஒத்திவைத்த ஜனாதிபதியின் செயற்பாடும் கண்டனங்களைத் தோற்றுவித்ததுள்ளது.

தேசிய அரசாங்கத்தில் பங்கெடுத்த ஐ.ம.சு.கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தரப்புகளுக்கிடையில் சரியான புரிந்துணர்வு ஆரம்பம் முதலே இருக்கவில்லை. எனினும் இரு தரப்பும் ஏதோவொரு விட்டுக்கொடுப்பின் அடிப்படையிலேயே அரசாங்கத்தை நடத்தி வந்தன. எனினும் தேசிய அரசாங்கத்தின் உடன்படிக்கையை முறித்துக் கொள்வதற்காக ஜனாதிபதி கையாண்ட வழிமுறை எந்தளவு தூரம் ஜனநாயகபூர்வமானது என்பதே இன்று எழும் கேள்வியாகும். கிட்டத்தட்ட ஓர் அரசியல் சதிப்புரட்சிக்கு ஒப்பானதொரு காய்நகர்த்தலையே ஜனாதிபதி செய்து முடித்துள்ளார். தன்னை நம்பி வாக்களித்த சுமார் 62.5 இலட்சம் மக்களினதும் நம்பிக்கை, எதிர்பார்ப்புக்கு ஜனாதிபதி மாறு செய்துள்ளதாகவே தெரிகிறது.

ரணில் விக்ரமசிங்க தரப்பில் ஏராளமான குறைபாடுகள், குளறுபடிகள் இருக்கின்ற போதிலும் அதைவிடவும் சிறந்த தெரிவாக மஹிந்த தரப்பை எவ்வாறு அடையாளம் கண்டார் என்ற கேள்விக்கு நேற்றைய உரையில் எந்த பதிலையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை. ஆக, அடுத்துவரும் நாட்கள் இலங்கையின் அரசியலில் மிகவும் குழப்பமும் கொந்தளிப்பும் நிறைந்ததாகவே அமையப் போகின்றன. எனினும் இந்த குழப்பங்கள் எந்த விதத்திலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையையோ நாட்டின் அமைதியையோ பாதிக்க இடமளிக்காதிருப்பது ஜனாதிபதியின் பொறுப்பு என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli