Verified Web

இந்தியா தொடர்பான ஜனாதிபதியின் கருத்து

28 days ago Administrator

இந்திய உளவு அமைப்பான ‘ரோ’ தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

‘‘இந்தியா - இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய உளவு அமைப்பான 'ரோ' எனப்படும் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவு என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை’’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்ததாக நேற்றைய தினம் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின் நிலையில் ஜனாதிபதியின் இந்தக் கருத்து வெளிவந்தமையானது பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்திய ஊடகங்களில் நேற்றைய தினம் இந்த செய்தி முக்கிய இடம்பிடித்திருந்த நிலையில், தற்போது ஜனாதிபதி அவ்வாறான கருத்து எதனையும் கூறவில்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பில் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ''ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைசெய்வதற்கான சதியொன்றில்  இந்திய புலனாய்வு சேவை தொடர்புபட்டதாகக் கூறப்படும் செய்தி தொடர்பில் வெளியான ஊடக அறிக்கைகள் அடிப்படையற்றவை'' என்று வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

''இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள், இந்திய அரசாங்கத்தின் உயர் மட்டங்கள் மற்றும் உளவுத்துறை பரிமாற்றங்கள் உட்பட பல்வேறு துறைகளை உள்ளடக்கியவாறு பலமாகவுள்ளன என்பதை வலியுறுத்துவதற்கு அமைச்சு விரும்புகின்றது. ஆகையால் ஜனாதிபதியின் கருத்துக்களில் இருந்து ஒருபகுதியை மாத்திரம் மேற்கோள்காட்டி  திரித்துக்கூறப்பட்ட உண்மைக்குப் புறம்பான ஊடக அறிக்கையானது, ஏனைய ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரவுவதற்கு வழிவகுத்திருப்பதும் பொது மக்களிடையே புரியாத ஓர் அச்சத்தினை ஏற்படுத்தியிருப்பதும் வருத்தம் தருகின்றது'' என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தியர் ஒருவர் ஜனாதிபதியைக் கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் ஜனாதிபதியைக் கொலை செய்வதற்காக திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தையடுத்து பொலிஸ் மா அதிபருக்கும் ஜனாதிபதி தரப்புக்குமிடையில் முறுகல் நிலையும் தோன்றியுள்ளது. பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. மறுபுறம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையிலான உறவிலும் இந்த விவகாரம் பெரும் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.

இப் பின்னணியிலேயே ஜனாதிபதி மேற்படி பாரதூரமான குற்றச்சாட்டினை 'ரோ' மீது முன்வைத்திருக்கக் கூடும். எனினும் தற்போது தாம் அவ்வாறு கூறவில்லை என ஜனாதிபதி தரப்பு மறுப்பதானது இந்தியாவுடனான உறவில் இக் கருத்து பெரும் தாக்கத்தைச் செலுத்தும் என்பதனாலேயே ஆகும்.

ஜனாதிபதி மீதான கொலை முயற்சி குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதன் பின்னணியில் இந்தியாவுக்குத் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த நீண்ட காலம் செல்லலாம். அதுவரை இவ்வாறான கருத்து மோதல்கள் தொடரவே செய்யும்.
-Vidivelli