Verified Web

இனச்சுத்திகரிப்பும் வடக்கு முஸ்லிம்களும் தொடர் 3

29 days ago Administrator

முஹம்மத் ஜான்

நேற்றைய தொடர்ச்சி

முல்­லைத்­தீவு புலி­களின் இரா­ணுவ முக்­கி­யத்­துவம் வாய்ந்த இட­மா­கவும் இறுதி யுத்தம் நடந்த இட­மா­கவும் இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. வட­மா­கா­ணத்தில் முஸ்­லிம்கள் வாழ்ந்த இன்­னொரு மாவட்­ட­மாக முல்­லைத்­தீவு காணப்­பட்­ட­துடன் அங்கு 1990இல் 7,000 முஸ்­லிம்கள் வாழ்ந்­தனர். முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஐந்து மஸ்­ஜி­து­களும் இரண்டு முஸ்லிம் பாட­சா­லை­களும் அமைந்­தி­ருந்தன. இவை­களில் முல்­லைத்­தீவு முஸ்லிம் மகா­வித்­தி­யா­லயம் மற்றும் 16ஆம் நூற்­றாண்டில் கட்­டப்­பட்ட மஹ்பூப் சுப்­ஹானி மஸ்ஜித் என்­பன முல்­லைத்­தீவு நக­ரிலும் தண்­ணீ­ரூற்று பெரிய மஸ்ஜித், முஸ்லிம் மகா­வித்­தி­யா­லயம் என்­பன தண்­ணீ­ரூற்று நக­ரிலும் அமைந்­தி­ருந்­தன. மேலும் நீரா­விப்­பிட்டி பகு­தியில் மஸ்ஜித் நூரா­ணி­யாவும்  ஹிஜ்­ரா­புரம் பகு­தியில் மஸ்ஜித் மொஹிதீன் தக்­கி­யாவும் அமைந்­தி­ருந்­தன. இக்­கட்­டி­டங்கள் உட்­பட முஸ்­லிம்­களின் அனைத்து சொத்­துக்­களும் சிதை­வ­டைந்த நிலையில் தற்­போது காணப்­ப­டு­கின்­றன.

தற்­போது முல்­லைத்­தீவு முஸ்­லிம்கள் இலங்­கையின் பல பகு­தி­களில் அதிலும் குறிப்­பாக முல்­லை­நகர், கட்­ட­மு­றிப்பு, நுரைச்­சோலை, ஆலங்­குடா, புத்­தளம், கற்­பிட்டி போன்ற பிர­தே­சங்­களில் அக­தி­க­ளாக வாழ்­கின்­றனர். இவர்கள் கூட்­டுக்­கு­டும்ப வழி­மு­றையைக் கொண்­டி­ருந்­தார்கள். முல்­லைத்­தீவு மாவட்ட முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­ட­போது 552 கல் வீடு­களையும், 994 தோட்­டக்­கா­ணி­க­ளையும் கொண்­டி­ருந்­தனர். இவற்றின் பெறு­மதி 1990 இல் 200 மில்­லியன் ரூபாய்­க­ளாகும் (3.5 மில்­லியன் டாலர்கள்). இவர்­க­ளிடம் கொள்­ளைய­டிக்­கப்­பட்ட நகை, பணம், வாகனம் மற்றும் அசையும் சொத்­துக்­களின் பெறு­மதி 240 மில்­லியன் ரூபாய்­க­ளாகும் (4 மில்­லியன் டாலர்கள்) என தர­வுகள் தெரி­விக்­கின்­றன.

கிளி­நொச்சி இலங்­கையின் வட­மத்­திய பிர­தே­சத்தில் வட­மா­கா­ணத்தில் வவு­னியா - யாழ். போக்­கு­வ­ரத்துப் பாதையில் இரா­ணுவ முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஓரி­டத்தில்   அமைந்­துள்­ளது. இம்­மா­வட்­டத்தில் நாச்­சிக்­குடா முஸ்­லிம்கள் 1400 வருட வர­லாற்­றையும் அபீ­சீ­னிய (எதி­யோப்­பியா) வழி­வந்த அர­பி­களின் சந்­த­தி­யி­ன­ரையும் கொண்ட ஒரு பிர­தே­ச­மாகும். வட்­டக்­கச்சி மற்றும் 55ஆம் கட்டை போன்­றன குறு­கி­ய­கால வர­லாற்­றை கொண்­டுள்­ளன. வட­மா­கா­ணத்தில் முஸ்­லிம்கள் சிறு தொகை­யி­ன­ராக வாழ்ந்த மாவட்­ட­மாக கிளி­நொச்சி  காணப்­பட்­ட­துடன் அங்கு 1990இல் 400 முஸ்­லிம்கள் வாழ்ந்­தனர். இம்­மா­வட்­டத்தில் 5 பள்­ளி­வா­சல்கள் 1990இல் காணப்­பட்­டன.

கிளி­நொச்சி  மாவட்ட முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­ட­போது 236 கல் வீடு­க­ளையும்  40 க்கும் மேற்­பட்ட வயல் மற்றும் தோட்­டக்­கா­ணி­க­ளையும் கொண்­டி­ருந்­தனர். இவற்றின் பெறு­மதி 1990இல் 60 மில்­லியன் ரூபாய்­க­ளாகும் (1 மில்­லியன் டாலர்கள்). இவர்­க­ளிடம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட நகை, பணம், வாகனம் மற்றும் அசையும் சொத்­துக்­களின் பெறு­மதி 45 மில்­லியன் ரூபாய்­க­ளாகும் (0.75 மில்­லியன் டாலர்கள்) என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வவு­னியா இலங்­கையின் வட­மத்­திய பிர­தே­சத்தில் வட­மா­கா­ணத்தில் அனு­ரா­த­புரம் – யாழ் போக்­கு­வ­ரத்துப் பாதையில் இரா­ணுவ முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஓரி­டத்தில்   அமைந்­துள்­ளது. இம்­மா­வட்­டத்தில் பாவற்­குளம்,  சாளம்­பைக்­குளம், சூடு­வெந்­த­பு­லவு, பட்­டா­னிச்சூர், காக்­கை­யன்­குளம், வவு­னியா நகரம் போன்ற முஸ்லிம் குடி­யி­ருப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. 16ஆம் நூற்­றாண்டில் போர்த்­துக்­கீ­சரின் அட்­ட­கா­சங்­களால் பாதிப்­ப­டைந்த சில யாழ். பெரி­ய­கடை மற்றும் கோட்டை பகு­தி­களில் முன்பு வாழ்ந்த  குடும்­பங்கள் பாவற்­கு­ளத்தில் வந்து குடி­யே­றி­யுள்­ளனர். இரண்டாம் கட்­ட­மாக நல்­லூரில் வாழ்ந்த முஸ்­லிம்கள் ஒல்­லாந்தர் துணை­யுடன் 1740களில் வெளி­யேற்­றப்­பட்­ட­போது சில முஸ்லிம் குடும்­பங்கள் வந்து குடி­யே­றிய இட­மாக வவு­னியா காணப்­ப­டு­கி­றது. இவர்கள் யாழ் முஸ்­லிம்­க­ளுடன் இரத்த உறவைக் கொண்­டுள்­ளார்கள்.   வட­மா­கா­ணத்தில் முஸ்­லிம்கள் சிறு தொகை­யி­ன­ராக வாழ்ந்த மாவட்­ட­மாக வவு­னியா காணப்­பட்­ட­துடன் அங்கு 1990 இல் 4000 முஸ்­லிம்கள் வாழ்ந்­தனர். இம்­மா­வட்­டத்தில் 12 பள்­ளி­வா­சல்கள் 1990 இல் காணப்­பட்­டன. 1990இல் எல்­லோரும் புலி­களால் வெளி­யேற்­றப்­பட்ட போதும் இவர்­களில் சிலர் இரா­ணுவம் வவு­னி­யாவைக் மீண்டும் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­ததும் மீளக்­கு­டி­யே­றினர். இவர்கள் திரும்­பி­ய­வேளை வீடுகள் அனைத்தும் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்டும் உடைக்­கப்­பட்டும் காணப்­பட்­டன. யாழ்ப்­பாண மற்றும் மன்னார் முஸ்­லிம்­க­ளுக்கு இடம்­பெ­யர்வின் பின்னர் உழைப்­புக்கு கைகொ­டுத்த பெருமை இப்­பி­ர­தே­சத்தைச் சாரும்.

வவு­னியா   மாவட்ட முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்ட போது 2106 வீடு­க­ளையும்  100 க்கும் மேற்­பட்ட வயல் மற்றும் தோட்­டக்­கா­ணி­க­ளையும் கொண்­டி­ருந்­தனர். இவற்றின் பெறு­மதி 1990இல் 2000 மில்­லியன் ரூபாய்­க­ளாகும் (34 மில்­லியன் டாலர்கள்). இவர்­க­ளிடம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட நகை, பணம், வாகனம் மற்றும் அசையும் சொத்­துக்­களின் பெறு­மதி 120 மில்­லியன் ரூபாய்­க­ளாகும் (2 மில்­லியன் டாலர்கள்) என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்தப் பகு­தியில் மில்­லியன் டொலர்­களில் தரப்­பட்­டுள்ள தர­வுகள்  முஸ்­லிம்­களால் இழக்­கப்­பட்ட சொத்­துக்கள் ஆத­னங்கள், வாக­னங்கள் போன்­ற­வற்றை  2018இல் மீள அமைப்­ப­தற்கு  அல்­லது புதி­தாக வாங்­கு­வ­தற்கு ஏற்­படும் செலவின் தற்­போ­தைய பெறு­ம­தி­யாகும். 

ஆதாரம் : வடக்கு முஸ்­லிம்­களின் உரி­மைக்­கான அமைப்பின் பிர­தேச ரீதி­யான வெளி­யீ­டுகள் மற்றும் மணி­பல்­ல­வத்தார் சுவ­டுகள்.

மீள்­கு­டி­யேற்­றமும் தற்­போ­தைய நிலை­வ­ரமும்

மன்­னாரின் சில ஊர்­களில் குறிப்­பாக மன்னார் நகர், தாரா­புரம் மற்றும் எருக்­க­லம்­பிட்டி போன்ற பிர­தே­சங்­களில் சில குடும்­பங்கள் மீளக்­கு­டி­யே­றி­யுள்­ளன. மன்­னாரில் தற்­போது 6000 குடும்­பங்­களைச் சேர்ந்த 23000 முஸ்­லிம்கள் மீளக்­கு­டி­யே­றி­யுள்­ளனர். இப்­பி­ர­தே­சத்தில் எல்லா முஸ்லிம் பாட­சா­லை­களும் மீளி­யங்­கு­கின்­ற. மறிச்­சுக்­கட்டி பள்­ளி­வா­சலை மீள­மைக்க விடாமல் வில்­பத்து காட­ழிப்பு என்ற பிரச்­சினை கிளப்­பப்­பட்­டுள்­ளது. இன்னும் ஆயி­ரக்­க­ணக்­கான வீடுகள் மீள்­கு­டி­யேற விண்­ணப்­பித்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்காக அமைக்க வேண்­டி­யுள்­ளது. இதற்­கான பணி­களை அமைச்சர் றிசாத் பதி­யுத்தீன் அவர்கள் சிறப்­பாக மேற்­கொண்டு வரு­கிறார்.

யாழ்ப்­பா­ணத்தில் தற்­போது யாழ். சோன­க­தெரு, நயி­னா­தீவு, சாவ­கச்­சேரி மற்றும் மண்­கும்பான் போன்ற இடங்­களில் 820 குடும்­பங்­களைச் சேர்ந்த 2100 பேர் மீளக்­கு­டி­யே­றி­யுள்­ளனர். இவர்­களில் 200 குடும்­பங்­க­ளுக்கு மட்­டுமே வீட­மைப்பு உத­விகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. 300 குடும்­பங்கள் காணி­யற்­ற­வர்­க­ளாவர். 200 குடும்­பங்­க­ளுக்குச் சொந்­த­மான வீடுகள் இன்னும் அழி­வ­டைந்த நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன. அவர்­க­ளுக்­கான வீட­மைப்பு உத­விகள் கடந்த 7 வரு­டங்­க­ளாக இழுத்­த­டிக்­கப்­ப­டு­கின்­றன. மூன்று பாட­சா­லைகள் தற்­போது மீள ­இ­யங்­கு­கின்­றன. ஏனையோர் வீட­மைப்பு உத­விக்கு விண்­ணப்­பிக்­காமல் தமது சொந்த செல­வி­லேயே வீடு­களைத் திருத்தி வாழ்­கின்­றனர். பள்­ளி­வா­சல்­களில் ஒன்று இன்­னமும் மீள­மைக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.  யாழ்ப்­பாண மாவட்டச் செய­ல­கத்தால் 2016 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடத்­தப்­பட்ட நட­மாடும் சேவையில் 2100 குடும்­பங்கள் யாழ்ப்­பா­ணத்தில் மீளக்­கு­டி­யேற தமது விருப்­பத்தை தெரி­வித்­தி­ருந்­தன. அவர்­களில் 1800 பேர் காணி­யற்­ற­வர்­க­ளாவர். இதற்­கான ஆக்­க­பூர்­வ­மான செயற்றிட்­டங்கள் எத­னையும் வட­மா­காண சபையோ, யாழ் மாவட்ட அபி­வி­ருத்­திக்கு பொறுப்­பான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களோ, தமிழ் தேசிய கூட்­ட­மைப்போ அல்­லது மாவட்ட செய­ல­கமோ இது­வரை முன்­வைக்­க­வில்லை.

யாழ்ப்­பா­ணத்தில் முஸ்­லிம்கள் மீளக்­கு­டி­யேறக் கூடிய ஒரு பிர­தே­ச­மாக பரச்­சேரி வெளி எனும் இடம் காணப்­ப­டு­கின்­றது. இது சுமார் 50 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வயல் நில­மாக இருந்­த­தாக சொல்­லப்­பட்­டாலும் பல தசாப்­தங்­க­ளாக இங்கு நெற்­செய்கை இடம்­பெ­ற­வில்லை. மேலும் இந்த நிலப்­ப­குதி அரு­கி­லுள்ள நாவாந்­துறை கடலின் தாக்­கத்தால் உவர் நில­மாக மாறி­யுள்­ளதால் இனிமேல் இந்த இடத்தில் விவ­சாயம் செய்­யவே முடி­யாது. மேலும் மரங்­களோ ஆரோக்­கி­ய­மான புற்கள் கூட இந்த வெளியில் முளைப்­ப­தில்லை. இந்த பிர­தே­சத்தை யாழ் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வாங்கி முஸ்­லிம்­க­ளுக்கு வழங்கி அதில் வீட­மைப்புத் திட்­டத்­தையும் அமைத்­தால் ஏங்கி நிற்கும் முஸ்­லிம்­க­ளுக்கு பிர­யோ­ச­ன­மாக இருக்கும். அல்­லது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இதற்­காக ஒரு அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை சமர்ப்­பித்து அமைச்­ச­ர­வையின் அனு­ம­தியை வாங்­கி­னாலும் அத­னூ­டாக 700 மில்­லியன் ரூபாய்­களை ஒதுக்­கினால் ஆகக் குறைந்­தது 500 வீடு­க­ளையும் ஒரு பள்­ளி­வாசல், பாட­சாலை, விளை­யாட்டு மைதானம், அஞ்சல் அலு­வ­லகம், சதோச நிறு­வனம்,  கலா­சார நிலையம் என்­ப­வற்றை அமைத்து ஒரு மாதிரிக் கிரா­ம­மாக இந்த பரச்­சேரி வெளியை மாற்ற முடியும். 

முல்­லைத்­தீவில் 650 குடும்­பங்­களைச் சேர்ந்த 2000 முஸ்­லிம்கள் மீளக்­கு­டி­யே­றி­யுள்­ளனர். முல்­லைத்­தீவு நக­ரிலும் தண்­ணீ­ரூற்று, நீரா­விப்­பிட்டி, ஹிஜ்ரத் புரம் போன்ற இடங்­களிலும் மக்கள் மீளக்­கு­டி­யே­றி­யுள்­ளனர். 4 பள்­ளி­வா­சல்கள் மீள­மைக்­கப்­பட்­டுள்­ளன. இரண்டு பாட­சா­லைகள் இயங்­கு­கின்­றன. மேலும் 500 குடும்­பங்­க­ளுக்கு வீட­மைப்புத் திட்டம் தேவைப்­ப­டு­கின்­றது.  

கிளி­நொச்­சியில் நாச்­சிக்­குடா, பள்­ளிக்­குடா, குளத்­தடி, 55ஆம் கட்டை, கரைச்சி குடி­யி­ருப்பு, வட்­டக்­கச்சி மற்றும் கும­ழ­மு­னையில்  தற்­போது 400 இக்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் மீளக்­கு­டி­யே­றி­யுள்­ளன. ஐந்து பள்­ளி­வா­சல்கள் மீள­மைக்­கப்­பட்­டுள்­ளன. ஒரு பாட­சாலை இயங்­கு­கின்­றது.  

வவு­னியா மாவட்­டத்தில் பாவற்­குளம்,  சாளம்­பைக்­குளம், சூடு­வெந்­த­பு­லவு, பட்டானிச்சூர், காக்கையன்குளம், வவுனியா நகரம் போன்ற முஸ்லிம் குடியிருப்புகளில் 3500 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன. இம்மக்களுக்கு மேலும் 1000 வீடுகள் தேவைப்படுகின்றது. பள்ளிவாசல்கள்,  பாடசாலைகள் என்பன மீளமைக்கப்பட்டுள்ளன.  

எனவே, வடமாகாண முஸ்லிம்கள் புலிகள் இயக்கத்தால் அச்சுறுத்தப்பட்டனர், செல்வந்தர்களும் வாலிபர்களும் கடத்தப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர், கொள்ளையடிக்கப்பட்டனர் இறுதியில் தமது பிரதேசத்தை விட்டு உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்டனர். எனவே, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் இனச்சுத்திகரிப்பு என்ற வரையறைக்குள் உள்ள எல்லா விடயங்களையுமே வடமாகாண முஸ்லிம்கள் அனுபவித்தனர். எனவே இது ஒரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இந்த முஸ்லிம்களில் மீளக்குடியேறுவோருக்கான  வீட்டுத் திட்டங்கள், காணி வழங்கல், நஷ்டஈடு என்பனவும் மீளக்குடியேறாமல் இடம்பெயர்ந்து வாழ்ந்த பிரதேசங்களில் தொடர்ந்து வாழ விரும்புவோருக்கான நஷ்டஈடு மற்றும் வீடமைப்புத் திட்டங்களை இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்ட மக்கள் என்ற வரையறை உருவாக்கப்பட்டு அந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4000 குடும்பங்கள் சொந்த வீடுகள் இன்றி பல்வேறு மாவட்டங்களிலும் வாழ்கின்றனர்.

வடமாகாண சபை வடக்கு முஸ்லிம்களுக்கு குறிப்பாக,  யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஒரு சில சலுகைகளைவிட ஆக்கபூர்வமாக எதுவுமே செய்யவில்லை. 2013 செப்டம்பரில் வடமாகாண சபை  பதவிக்கு வந்தது முதல் ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு உடைந்த ஒரு வீட்டைத் திருத்தக்கூட நிதி வழங்கப்படவில்லை. ஒரு கக்கூஸ் கூட கட்டிக் கொடுக்கப்படவில்லை. 2014 ஆம் ஆண்டு 1380 மில்லியன் ஒதுக்கப்பட்டது. அதில் 5 சதவிகிதம் ஒதுக்கியிருந்தாலும் 70 வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கலாம். 2018 ஆம் ஆண்டு 5800 மில்லியன் ரூபா மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட போதும் அதே நிலை தான். இந்த தொகையில் 5 சதவிகிதத்தை யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஒதுக்கியிருந்தால் கூட 300 வீடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களின் பெரிய பிரச்சினையை தீர்த்திருக்கலாம். ஆக, வடமாகாண சபையின் 5 வருடங்கள் செயற்றினற்ற முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையை தீர்க்க ஆளுமையில்லாத ஆண்டுகளாகவே கழிந்துள்ளன. எனவே தான் கறுப்பு ஒக்டோபர் நிகழ்வை அனுஷ்டித்து முஸ்லிம்களை வெளியேற்றிய அந்த இனச்சுத்திகரிப்பை உலகறியச் செய்வது கட்டாயமாகின்றது. 

வடமாகாணத்தில் நிலவும் முஸ்லிம் விரோதப்போக்கு அவர்களின் மீள்குடியேற்றத்துக்கு ஒரு போதும் உதவப்போவதில்லை என்பது தெளிவாகின்றது. அதேவேளை வடக்கில் காணப்படும் 60 இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை பாதுகாப்பதற்கும் இலங்கை  முஸ்லிம்களின் தொன்மை வரலாற்றைப் பாதுகாப்பதற்கும் வடக்கில் முஸ்லிம்கள் மீளக்குடியேற்றுவதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். இந்த விடயத்தை அமைச்சர்களாக உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலகுவாக செய்து முடிக்கலாம் என்ற போதிலும் அதனை வெற்றிகொள்ள பங்களிப்புச் செய்வது ஒன்று பட்டு செயற்படுவது என்பன எட்டாக் கனியாகவே உள்ளது.

எனவே, முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் ஒரு இனச்சுத்திகரிப்பு  என்றும் அதனடிப்படையிலேயே காணி ஒதுக்கீடு, மீள்குடியேற்ற உதவிகள், வீடமைப்புத் திட்டம் மற்றும் நஷ்டஈடு என்பன வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு அந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தீர்மானமொன்று  நிறைவேற்றப்பட்டு அதனூடாக வடக்கு முஸ்லிம்களை குறிப்பாக, வடமாகாண சபையின் இருதயபூமியாகிய யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை குடியேற்றுவதற்கான காணி ஒதுக்கீடு, அதில் வீடமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு என்பன அமைச்சரவை மூலமாக அங்கீகரிக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்தி முஸ்லிம்களின் தொன்மையையும் கௌரவத்தையும் காக்க முன்வாருங்கள்  என அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்வதோடு நீதியுடனும் நேர்மையுடனும் செயற்படக் கூடிய தமிழ் அரசியல் தலைவர்கள் இருப்பின் அவர்களையும் முஸ்லிம்கள் விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்பட முன்வருமாறு அழைத்து  இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன். 
-Vidivelli