Verified Web

விபத்துகளை கட்டுப்படுத்த ஒன்றுபட வேண்டியது அவசியம்

29 days ago Administrator

Image result for accident vidivelli

நாட்டில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கும் உயிர்கள் அநியாயமாக இழக்கப்படுவதை தடுப்பதற்கும் சகலரும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வர வேண்டும் என சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர்   நளின் பண்டார அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.  ''நாட்டில் ஏதாவது ஒரு  இடத்தில் ஒரு மணித்தியாலத்திற்கு ஒருவர் வீதமாவது வீதி விபத்தினால் உயிரிழக்கின்றனர். இந்நிலைமை தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றதே தவிர  குறைவடையவில்லை. 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வீதி விபத்துகளின் காரணமாக  18491 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் இளைஞர்கள். இந்த எண்ணிக்கையானது நாட்டின் சனத் தொகையில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றது.

நடப்பாண்டில்  ஜனவரி தொடக்கம் இன்று வரை  2500 இற்கும் மேற்பட்டோர் வீதி விபத்துக்களினால் மரணித்துள்ளனர்.  அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்ற காரணத்தால்  தற்போது நெடுஞ்சாலை விபத்துக்கள் சடுதியாக குறைவடைந்துள்ளன. ஆனால் பெருந்தெருக்களில் வாகன சாரதிகளுக்கிடையில் காணப்படுகின்ற போட்டித் தன்மை மற்றும் மதுபாவனை போன்ற காரணிகளே  பாரிய விபத்துக்களுக்கு காரணம் என  அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாடுகளில் வீதி விபத்துக்களை தடுக்க செயற்படுத்தப்படுகின்ற நவீன  தொழினுட்பங்களை  நமது நாட்டிலும் வீதிப் போக்குவரத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் மற்றும் கட்சி பேதமின்றி  செயற்பட வேண்டும்'' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் வீதி விபத்­துக்கள் அதி­க­ரித்து வரு­கின்ற அதே வேளை வீதி விபத்­துக்­களால் பெறுமதிமிக்க  உயிர்­களும் காவு கொள்­ளப்­ப­டு­கின்­றன. வீட்­டி­லி­ருந்து வெளி­யாகி வீதியில் பய­ணிப்­ப­வர்கள் திரும்பி வீடு வந்து சேர முடி­யுமோ என்று யோசிக்­கின்ற அளவுக்கு வீதி விபத்­துக்­களால் அதிக மர­ணங்­களும் விபத்­துக்­குள்­ளா­ன­வர்கள் காயத்­துக்­குள்­ளாகி அவ­ய­வங்­க­ளையும், உடை­மை­க­ளையும் இழந்து வரும் நிலைமைகளும் தொடரவே செய்கின்றன.

பொலிஸ் மோட்டார் போக்­கு­வ­ரத்துப் பிரி­வி­னரால் பொது மக்கள்,பாட­சா­லைகள், அர­சாங்க ஊழி­யர்கள் என பல்­வேறு தரப்­பி­னர்­க­ளுக்கும் வீதி விபத்­துக்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்கள்,அவற்றைக் குறைப்­ப­தற்­காக  மேற்­கொள்ள வேண்­டிய உத்­திகள், வீதி ஒழுங்­குகள், சட்­டங்கள் உள்­ளிட்ட முக்­கிய விட­யங்கள் தொடர்பில் பல்­வேறு விழிப்­பு­ணர்­வுகள் செய்­யப்­பட்­டாலும் வீதி விபத்­துக்­களை குறைக்க முடி­யா­துள்­ளமை கவலைக்குரியதாகும்.

அந்தவகையில், வீதிப் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பில் வீதிப் போக்குவரத்துச் சட்டத்திற்குச் சகல வீதிப் பாவனையாளர்களும் மதிப்பளிப்பதோடு அவற்றைத் தவறாது பின்பற்றவும் வேண்டும். வீதிப் பாதுகாப்பு தொடர்பில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், வளர்ந்தவர்கள் மற்றும் முதியோர் தொடர்ச்சியாக அறிவூட்டப்படுவது அவசியமாகும். அதுமாத்திரமன்றி வீதி விபத்துக்களைக் குறைக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு சகலரும் அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஒத்துழைப்பு நல்க முன்வர வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.
-Vidivelli