Verified Web

அன்றாட வாழ்வில் அல் இஹ்ஸான்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2018-10-12 05:46:16 T.M.Mufaris Rashadi

 

இஹ்ஸான் என்ற அர­புப்­பதம் நன்­றாக இருப்­பது, நன்மை புரிதல், தொடர்ந்து மிகச் சிறப்­பாக செய்தல், அழ­காக இருப்­பது, அன்­பாக இருப்­பது, பொருத்­த­மாக இருப்­பது, ஒழுங்­காக இருத்தல், சரி­யாக இருத்தல் என்ற பல்­வேறு கருத்­துக்­களில் இறை­செய்­தி­களில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும், வணக்க வழி­பா­டு­களில் இஹ்­ஸானின் உண்­மை­யான வடிவம் குறித்து சொல்­லப்­படும் பொழுது நாம் அல்­லாஹ்வை (நேரில்) காண்­பதைப் போன்று வணங்­கு­வ­தாகும். நாம் அவனைப் பார்க்­கா­விட்­டாலும் நிச்­ச­ய­மாக அவன் எம்மைப் பார்த்­துக்­கொண்டே இருக்­கிறான் என்ற எண்­ணத்தை எம்மில் ஏற்­ப­டுத்தி அத­ன­டிப்­ப­டையில் உயி­ரோட்­ட­மிக்க வணக்க வழி­பா­டு­க­ளாக எமது வணக்க வழி­பா­டு­களை மாற்றிக் கொள்­வ­த­னையே குறிக்­கி­றது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்­க­ளுக்­கி­டையில் இருந்­த­போது ஒருவர் அவர்­க­ளிடம் வந்து, ‘ஈமான் என்றால் என்ன?‘ என்று கேட்­ட­தற்கு, ‘ஈமான் என்­பது அல்­லாஹ்­வையும் அவ­னு­டைய வான­வர்­க­ளையும் அவ­னு­டைய சந்­திப்­பையும் அவ­னு­டைய தூதர்­க­ளையும் நீர் நம்­பு­வது. மேலும், மர­ணத்­திற்­குப்பின் எழுப்­பப்­ப­டு­வ­தையும் நீர் நம்­பு­வது’ எனக் கூறி­னார்கள். அடுத்து,

‘இஸ்லாம் என்றால் என்ன?‘ என்று கேட்­ட­தற்கு அவர்கள் கூறி­னார்கள். ‘இஸ்லாம் என்­பது அல்­லாஹ்­வுக்கு (எத­னையும்) நீர் இணை­யாகக் கரு­தாத நிலையில் அவனை நீர் வணங்­கு­வதும் தொழு­கையை நிலை­நி­றுத்தி வரு­வதும் கட­மை­யாக்­கப்­பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வரு­வதும் ரமழான் மாதம் நீர் நோன்பு நோற்­ப­து­மாகும்” என்று கூறி­னார்கள். அடுத்து,

‘இஹ்ஸான் என்றால் என்ன?‘ என்று அவர் கேட்­ட­தற்கு அவர்கள் கூறி­னார்கள்:

‘(இஹ்ஸான் என்­பது) அல்­லாஹ்வை (நேரில்) காண்­பதைப் போன்று நீர் வணங்­கு­வ­தாகும். நீர் அவனைப் பார்க்­கா­விட்­டாலும் நிச்­ச­ய­மாக அவன் உம்மைப் பார்த்­துக்­கொண்டே இருக்­கிறான் என்­றார்கள்’

அடுத்து, ‘மறுமை நாள் எப்­போது?‘ என்று அம்­ம­னிதர் கேட்­ட­தற்கு இறைத்­தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: அதைப்­பற்றிக் கேட்­கப்­பட்­டவர் (நான்) அதைப்­பற்றிக் கேட்­கிற உம்­மை­விட மிக்க அறிந்­த­வ­ரல்லர். (வேண்­டு­மானால்) அதன் (சில) அடை­யா­ளங்­களைப் பற்றி உமக்குச் சொல்­கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜ­மா­னாகப் போகி­ற­வனை ஈன்­றெ­டுத்தல், மேலும் கறுப்­பு­நிற ஒட்­ட­கங்­களை மேய்த்துக் கொண்­டி­ருந்த மக்கள் உயர்ந்த கட்­டி­டங்கள் கட்டித் தமக்குள் பெரு­மை­ய­டித்துக் கொள்ளல். ஐந்து விஷ­யங்­களை அல்­லாஹ்வைத் தவிர யாரும் அறி­ய­மாட்டார்” என்று கூறி­விட்டு, பின்­வரும் வச­னத்தை ஓதிக் காட்­டி­னார்கள். "மறுமை நாளைப் பற்­றிய ஞானம் அல்­லாஹ்­வி­டமே உள்­ளது.” (திருக்­குர்ஆன் 31:34)

பின்னர் அம்­ம­னிதர் திரும்பிச் சென்றார். "அவரை அழைத்து வாருங்கள்" என்­றார்கள் . சென்று பார்த்­த­போது அவரைக் காண­வில்லை. அப்­போது, ‘இவர்தான் ஜிப்ரீல். மக்­க­ளுக்கு அவர்­களின் மார்க்­கத்தைக் கற்றுக் கொடுக்க வந்­தி­ருக்­கிறார்’ என்று இறைத்­தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்” என அபூ ஹுரைரா (ரழி) அறி­வித்தார். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் பற்றி விவ­ரிக்கும் இந்த நபி­மொ­ழியில் இஹ்ஸான் என்­பது பற்­றிய தெளிவு வணக்க வழி­பா­டு­களை மையப்­ப­டுத்தி மிகச்­சு­ருக்­க­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது.  இஹ்ஸான் என்­பதன் பொருளை இன்னும் சற்று விரி­வாக நோக்­கும்­போது மேற்­கு­றிப்­பி­டப்­பட்­டது போன்று  ஒரு செயலை நன்­றாக, அழ­காக, முற்­றிலும் சரி­யாக, நேர்­மை­யாக, மிக நேர்த்­தி­யாக செய்­வ­தனை குறிக்­கி­றது. மேலும் இஸ்லாம் அல்­லது ஈமான் என்ற சொற்கள் இல்­லாமல் தனி­யாக பயன்­ப­டுத்­தும்­போது மார்க்கம் முழு­வ­தையும் குறிப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இஸ்லாம், ஈமான்  இரண்டில் ஒன்­றுடன் இணைத்துச் சொல்­லும்­போது, ஒரு­வ­ரு­டைய உள்ளம் சீர்­பெற்று அவ­ரது வெளிப்­ப­டை­யான செயற்­பா­டுகள் யாவும் அழகு பெறு­வதைக் குறித்து சொல்­லப்­ப­டு­கின்­றது.

நபி (ஸல்) அவர்கள் கூறி­ய­தாக ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரழி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள் : "நிச்­ச­ய­மாக அல்லாஹ் அனைத்து காரி­யங்­க­ளிலும் இஹ்­ஸானை விதி­யாக்­கி­யி­ருக்­கிறான். நீங்கள் வெட்­டினால் அழ­காக வெட்­டுங்கள், அறுத்துப் பலி­கொ­டுத்தால் நல்ல முறையில் நீங்கள் அறுத்துப் பலி­கொ­டுங்கள்.”  ஆதாரம் - முஸ்லிம்.

மற்­று­மொரு அறி­விப்பில் நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: "நிச்­ச­ய­மாக அல்லாஹ் அல் முஹ்ஸின், (பேரு­ப­காரி) அவன் எல்­லா­வற்­றிலும் இஹ்­ஸானை நேசிக்­கிறான். நீங்கள் வெட்­டினால் அழ­காக வெட்­டுங்கள், அறுத்துப் பலி­கொ­டுத்தால் நல்ல முறையில் நீங்கள் அறுத்துப் பலி­கொ­டுங்கள்.”  நூல்:  அத்­த­ப­ராணி, ஸஹீஹுல் ஜாமிஃ.

இஹ்­ஸா­னு­டை­ய­வர்­களின் சில பண்­புகள் குறித்து அல்லாஹ் திரு­ம­றையில் பின்­வ­ரு­மாறு கூறு­கிறான்: “இறை­யச்­ச­மு­டையோர் எத்­த­கையோர் என்றால் அவர்கள் இன்­ப­மான (செல்வ) நிலை­யிலும், துன்­ப­மான (ஏழ்மை) நிலை­யிலும் (இறை­வனின் பாதையில்) செல­வி­டு­வார்கள். தவிர, கோபத்தை அடக்கிக் கொள்­வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்­னித்து விடு­வார்கள். (இவ்­வாறு அழ­காக) நன்மை செய்­வோரை (முஹ்­ஸினீன்), அல்லாஹ் நேசிக்­கின்றான்." (திருக்­குர்ஆன் 3:134)

அல்லாஹ்  கூறு­கிறான்: "எவர் தன் முகத்தை முற்­றிலும் அல்­லாஹ்வின் பக்­கமே திருப்பி, நன்மை செய்து கொண்­டி­ருக்­கி­றாரோ (முஹ்­ஸினீன்), அவர் நிச்­ச­ய­மாக உறு­தி­யான கயிற்றை பல­மாக பற்றிப் பிடித்­துக்­கொண்டார். இன்னும் காரி­யங்­களின் முடி­வெல்லாம் அல்­லாஹ்­வி­டமே உள்­ளது.” [அல்­குர்ஆன் 31:22]

ஈமான் கொண்டு, நற்­க­ரு­மங்கள் செய்­ப­வர்கள் (எதிர்­கா­லத்தில்) தங்­களைப் (பாவத்­தி­லி­ருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்­க­ரு­மங்கள் செய்து கொண்டும், (விலக்­கப்­பட்­ட­வற்றை விட்டுத்) தங்­களைப் (பின்­னரும்) பாது­காத்துக் கொண்டு, ஈமானில் உறு­தி­யாக இருந்து கொண்டும், மேலும் (அல்­லாஹ்­வுக்கு) அஞ்­சி­ய­வர்­க­ளாக அழ­கிய நன்­மை­களைச் செய்து வரு­வார்­க­ளானால், சென்ற காலத்தில் (இவ்­வி­தி­மு­றைகள் வருமுன்) தடுக்­கப்­பட்­ட­வற்றை அவர்கள் புசித்­து­விட்­டது குறித்து அவர்கள் மீது குற்­ற­மேற்­ப­டாத நன்மை செய்­கி­ற­வர்­க­ளையே (முஹ்­ஸினீன்) அல்லாஹ் நேசிக்­கிறான். [அல்­குர்ஆன் 5:93]

அல்­லாஹ்வைப் பற்­றிய பூரண அறிவை நாம் பெற்று அவனை நாம் நேசிக்க ஆரம்­பித்து, அவன் எம்மை எப்­பொ­ழுதும் உற்று நோக்கிக் கொண்­டி­ருக்­கிறான் என்று அறிந்­த­பி­றகு, அல்­லாஹ்வை மகிழ்­விப்­பதை நோக்கி எம்­மு­டைய உள்­ளங்கள் எம்மை தூண்டிக் கொண்­டே­யி­ருக்கும். வணக்க வழி­பா­டு­களில் இஹ்­ஸானின் நிலையை அடைய நாம் முயற்­சிக்­கும்­போது பொது­வான எமது வாழ்க்­கை­யிலும் கட­மை­யான, உப­ரி­யான, கூடு­த­லான, நற்­செ­யல்­களை சிறப்­பாக செய்­வது எளி­தா­கி­விடும். அதே­போன்று தடை­செய்­யப்­பட்­ட­வற்றை விட்டு வில­கு­வதும் மிக எளி­தாகி விடும்.

ஒருவர் இந்த நிலை­யி­லி­ருந்து அதில் மென்­மேலும் முயற்சி செய்து கொண்­டி­ருக்­கும்­போது, அல்­லாஹ்­வி­டமும், சுவ­னத்­திலும், அவ­ரு­டைய படித்­த­ரமும் உயர்ந்து கொண்­டே­யி­ருக்கும்.

இஹ்­ஸா­னு­டை­ய­வர்­க­ளுக்­கு­ரிய வெகு­ம­தியை அல்லாஹ் பின்­வ­ரு­மாறு தனது திரு­ம­றையில் வாக்­கு­று­தி­ய­ளிக்­கின்றான்.

'ஹல் ஜஸாவுல் இஹ்­ஸானி இல்லல் இஹ்ஸான்'  – நன்­மைக்கு நன்­மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? [அல் குர்’ஆன் 55:60]

அப்­ப­டி­யல்ல! எவ­ரொ­ருவர் தன்னை அல்­லாஹ்­வுக்கே (முழு­மை­யாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறாரோ அவருடைய நற்கூலி இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். [அல் குர்’ஆன் 2:112]

"நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை - நன்மை செய்வோரை - நேசிக்கின்றான்.” [அல் குர்’ஆன் 2:195]

இஹ்ஸான் என்ற பரந்த பகுதியை வணக்க வழிபாடுகள் முதல் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நடைமுறைப்படுத்துவதற்கும் அல்லாஹ் அடையாளப்படுத்துகின்ற இஹ்ஸான் சார்ந்த அடையாளங்களை அறிந்து அவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம் அதற்கு அவன் வழங்கியிருக்கின்ற வாக்குறுதிகளையும் வெகுமதிகளையும் பெற்றுக்கொள்ள நாம் முயற்சிப்போமாக!