Verified Web

புலமைப்பரிசில் பெறுபேறும் மாணவர்களின் எதிர்காலமும்

8 days ago Administrator

ஐந்தாம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்சைப் பெறு­பே­றுகள் கடந்த வாரம் வெளி­யி­டப்­பட்­டன. இதற்­க­மைய நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளையும் சேர்ந்த மாணவ மாண­விகள் தேசிய ரீதி­யாக முதல் மூன்று இடங்­க­ளையும் பெற்று சாதனை படைத்­துள்­ளனர். அதே­போன்று மாவட்ட ரீதி­யா­கவும் பலர் முன்­னிலை வகிக்­கின்­றனர். அந்த வகையில் இப் பரீட்­சைக்குத் தோற்றி சித்தி பெற்ற, சித்தி பெறாத சகல மாண­வர்­க­ளுக்கும் எமது வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக் கொள்­கிறோம்.

புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையை பொறுத்­த­வரை இதில் சித்தி பெற்ற மாண­வர்­க­ளையும் சித்தி பெறாத மாண­வர்­க­ளையும் பிரித்து நோக்­கு­வது ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தாகும்.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் மாண­வர்கள் மிகக் குறைந்த வயதில், போட்டிப் பரீட்சை ஒன்றை எதிர்­கொள்­வ­தற்­கான உள­வியல் முதிர்ச்­சியைப் பெற்றுக் கொள்­ளாத பரு­வத்தில் தோற்றும் தேசியப் பரீட்சை இது­வே­யாகும். இப் பரீட்­சையில் சித்தி பெறு­வதோ சித்தி பெறாமல் விடு­வதோ எந்த வகை­யிலும் ஒரு மாண­வனின் வாழ்க்­கையில் பாரிய தாக்­கத்தைச் செலுத்தப் போவ­தில்லை.

எனினும் இன்று இப் பரீட்சை பெற்­றோர்­களின் கௌர­வத்தை அளந்து பார்ப்­ப­தற்­கான அளவு கோலாக மாற்­றப்­பட்­டி­ருப்­பதே கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

பிள்­ளைகள் நாம் ஏன் இப் பரீட்­சைக்குத் தோற்­று­கிறோம்? இதன் பிர­தி­பலன் என்ன? என்­பதை சரி­வரப் புரிந்து கொள்ளும் வயதில் இல்லை. ஆனால் பெற்­றோரும் பாட­சா­லை­களும் தமது மாண­வர்கள் இப் பரீட்­சையில் சித்தி பெறு­வ­தா­னது தமது கௌர­வத்­துடன் சம்­பந்­தப்­பட்­டது என நோக்­கு­கின்­றனர்.

இதன் கார­ண­மாக பாரிய அழுத்­தங்­களை தமது பிள்­ளைகள் மீது பிர­யோ­கிக்­கின்­றனர். ஒரு மாண­வரின் இய­லு­மையைப் பார்க்­கிலும் கூடு­த­லான எதிர்­பார்ப்பை அவர் மீது வைக்­கின்­றனர்.

ஈற்றில் குறித்த மாண­வனோ மாண­வியோ பரீட்­சையில் சித்­தி­ய­டையத் தவ­றும்­பட்­சத்தில் அவர்­களை வார்த்­தை­களால் திட்­டு­கின்­றனர். சில சம­யங்­களில் வன்­மு­றை­க­ளையும் கையா­ளு­கின்­றனர். ஏனைய பிள்­ளை­க­ளோடு ஒப்­பிட்டுப் பேசு­வதன் மூல­மாக பிஞ்­சு­களின் மன­சு­களை நோக­டிக்­கின்­றனர்.

இது பின்­னாளில் பிள்­ளைகள் மத்­தியில் கல்வி மீதான வெறுப்பைத் தோற்­று­விக்­கி­றது. இதனால் 6 ஆம் தரத்­தி­லி­ருந்து சாதா­ரண தரம் வரை­யான காலப் பகு­தியில் அவர்கள் கல்வி மீது அக்­க­றை­யற்­றி­ருக்­கின்­றனர். இது அவர்­க­ளது உயர்­தர கல்­வி­யிலும் தாக்கம் செலுத்­து­கி­றது.

இலங்கை கல்­வித்­திட்­டத்­தின்­படி ஒரு மாண­வனின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் பிர­தான பரீட்­சை­க­ளாக சாதா­ரண தரப் பரீட்­சையும் உயர் தரப் பரீட்­சை­யுமே விளங்­கு­கின்­றன.

ஆனால் இவற்­றுக்கு கொடுக்கும் முக்­கி­யத்­து­வத்தை விட 5 ஆம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கே பெற்றோர் அதிக முக்­கி­யத்­து­வ­ம­ளிக்­கின்­றனர். ஆர்வம் காட்­டு­கின்­றனர். இந்­நிலை மாற்­றப்­பட வேண்டும்.

இம் முறை புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­களை கௌர­விக்­கிறோம் என்ற போர்­வையில் சித்தி பெற்­ற­வர்கள், சித்தி பெறா­த­வர்கள் என தரம் பிரித்து நோக்­கு­வதை விடுத்து சகல மாண­வர்­க­ளையும் ஒரே ஸ்தானத்தில் வைத்து நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் பாடசாலை நிர்வாகங்கள் சிந்திக்க வேண்டும். அதேபோன்று இப் பரீட்சைக்குத் தோற்றி சித்தி பெறவில்லையே என்ற கவலையில் வாடுகின்ற மாணவர்களுக்குத் தேவையான ஆற்றுப்படுத்தல்களை வழங்கவும் முன்வர வேண்டும்.
-Vidivelli