Verified Web

மாகாண சபை தேர்தலை துரிதப்படுத்த வேண்டும்

18 days ago Administrator

மாகாண சபைத்தேர்தலை இந்த வருட இறுதிக்குள் நடத்துவோம் என அரசாங்கம் தொடராகக் கூறி வந்த நிலையில் மாகாண சபைத்தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதையடுத்து அரசாங்கம் மௌனித்து விட்டது.

மாகாண சபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று ஊகிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

ஓய்வு பெற்ற முன்னாள் நிலஅளவையாளர் நாயகம் கே.தவலிங்கம் தலைமையிலான குழுவினரால் தயாரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையே மாகாண சபைகள் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளது. அறிக்கைக்கு ஆதரவாக எவரேனும் வாக்களிக்கவில்லை. அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அமைச்சர் பைசர் முஸ்தபாவே அதற்கு எதிராக வாக்களித்தமை வரலாற்றுச் சம்பவமாகும்.

 இதனையடுத்து அடுத்த கட்ட நகர்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்கு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 எல்லைநிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கையை நிராகரித்ததுடன் மாகாண சபைத் தேர்தல் புதியமுறையிலன்றி பழைய முறையிலே நடத்தப்பட வேண்டும் என்று தங்களது உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினார்கள். எல்லை நிர்ணயத்தில் சிறுபான்மை சமூகத்துக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

எல்லை நிர்ணய மீளாய்வுக்குழு, அரசியல் கட்சிகளின் தலைவர்களை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் போதும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தார்கள்.

 மீளாய்வுக் குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளது என்றாலும் மீளாய்வுக்குழு தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க வேண்டிய இறுதித்தினம் அக்டோபர் மாதம் 7 ஆம் திகதியாகும். இக்கால எல்லையை மேலும் இரு மாதங்களால் நீடிக்கும்படி மீளாய்வுக்குழு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. என்றாலும் சபாநாயகர் இதுவரை கோரிக்கைக்கு சாதகமான பதில் வழங்கவில்லை.

 நாட்டின் அதியுயர் சபையினால் முற்றும் முழுதாக நிராகரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையே மீளாய்வு செய்யப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  மீளாய்வுக்குழு அறிக்கை சட்டரீதியாக தயாரிக்கப்பட்டுள்ளதா? எல்லை நிர்ணயத்தில் பிரச்சினைகள் காணப்படுகின்றனவா? தரவுகள் சரியானவையா? என்பது பற்றி ஆராயும்.

மீளாய்வுக்குழு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலம் மேலும் இரண்டு மாதங்களால் நீடிக்கப்பட்டால் காலஎல்லை டிசம்பர் 7 ஆக அமையும். இவ்வாறான தாமதங்கள் மாகாணசபைத் தேர்தலை தாமதப்படுத்துவதாகவே அமைகிறது.

 மீளாய்வுக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதும் ஜனாதிபதி வர்த்தமானியில் வெளியிடுவார். அதன் பின்பே மாகாணசபைத் தேர்தல் தொடர்பான நகர்வுகள் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறான நிலையில் தேர்தலை மேலும் தாமதப்படுத்தாது அரசாங்கம் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டு பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமே புதிய முறையில் தேர்தல் நடாந்த வேண்டும் என விடாப்பிடியாக இருக்கிறது. ஏனைய அரசியல் கட்சிகள் பழைய முறையில் தேர்தலை விரும்புவதால் அதற்கான சட்டமூலத்தை அங்கீகரித்துக் கொள்ள முடியும்.

 தேர்தல் மக்களின் ஜனநாயக உரிமை. எனவே அரசாங்கம் தேர்தலை துரிதப்படுத்துவதற்கு செயலில் இறங்கவேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli