Verified Web

போட்டிப் பரீட்சைக்கு மௌலவிமார் தயாரா

2018-09-27 05:13:34 Administrator

நாட்டின் தேசிய பாடசாலைகளிலும் மற்றும் மாகாண பாடசாலைகளிலும் இஸ்லாம் பாடத்தைக் கற்பிப்பதற்காக நிலவும் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை 3 – 11 தரத்திற்கு மௌலவி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு திறந்த போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்படவுள்ளது.

இதற்காக கல்வி அமைச்சு அரசாங்க வர்த்தமானி மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. விண்ணப்பிப்பதற்குத் தேவையான கல்வித் தகைமையாக க.பொ.த. (சா/த) பரீட்சையில் சித்தி, க.பொ.த (உ/த) பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தி மற்றும் மௌலவி சான்றிதழ் என்பன வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது 2018.09.28 ஆம் திகதியன்று 18 வயதுக்குக் குறையாமலும், 35 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌலவி ஆசிரியர் நியமனங்கள் நீண்ட காலமாக வழங்கப்படவில்லை. எட்டு வருட கால நீண்ட இடைவெளியின் பின்பு, பல்வேறு அழுத்தங்களின் பின்பு தற்போது மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மௌலவி ஆசிரியர் நியமனம் இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டே வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நவம்பர் மாதம் அதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது. 5000 க்கும் மேற்பட்டோர் பரீட்சை எழுதினார்கள்.

அன்று மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 424 வெற்றிங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டும், 148 பேருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டது. ஆனால், பரீட்சையில் 400க்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றிருந்தனர். 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்தும், நியமனங்கள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டவர்கள் இன்று வயது கடந்துவிட்ட நிலையில் ஏமாற்றமடைந்துள்ளார்கள். இவர்களுக்கு கல்வி அமைச்சு நியமனம் வழங்க வேண்டும்.

கடந்த எட்டு வருட காலமாக நியமனம் வழங்கப்படாத நிலையில் மௌலவி சான்றிதழ் பெற்றவர்கள் பலர் குறிப்பிட்ட வயதெல்லையான 35 வயதைக் கடந்த நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த வயதெல்லையை 45 ஆக அதிகரிக்கும்படி கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார். கல்வி அமைச்சின் இஸ்லாம் மத ஆலோசனை சபையும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

இதேவேளை, அல் ஆலிம் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களும், மௌலவி ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அல் ஆலிம் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது மெளலவி ஆசிரியரின் தரத்தினை மேம்படுத்துவதாக அமையும்.

இறுதியாக மௌலவி ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சைக்கு 2008 ஆம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டபோது சுமார் 5000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இன்று இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருக்கும். எனவே போட்டிப் பரீட்சை மிகவும் கடுமையாக அமையுமென எதிர்பார்க்கலாம்.

போட்டிப்பரீட்சையில் பரீட்சார்த்திகள் நுண்ணறிவு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அத்தோடு பொது அறிவு வினாக்களுக்கு பதிலளிக்கம் வேண்டும். எமது மௌலவிகள் பொது அறிவில் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள். இது கவலைக்குரியதாகும். போட்டிப் பரீட்சையில் சித்தி பெறுவதற்கு அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் அனைத்து மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களை எமது அரசியல் தலைவர்கள் பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
-Vidivelli