Verified Web

ஹஜ்: முறைப்பாடுகளை துரிதப்படுத்துவது அவசியம்

23 days ago Administrator

 இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஹஜ்ஜாஜிகள் தாம் பயணித்த ஹஜ் முகவர் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதாயின் அவற்றை எதிர்வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறு அரச ஹஜ் குழு அறிவித்துள்ளது.

 முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெறும் ஹஜ் முகவர் நிலையங்கள் மீதான முறைப்பாடுகள் விசாரணைக்குழுவொன்றினால் விசாரிக்கப்படுகின்றன. இதற்கென ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதியொருவரின் தலைமையில் மூவரடங்கிய குழுவொன்று இயங்கி வருகிறது. இக்குழு முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்படுகிறது.

 வருடாந்தம் திணைக்களத்தினால் நேர்முகப் பரீட்சையொன்றின் பின்பு நியமிக்கப்படும் சுமார் 90 ஹஜ் முகவர் நிலையங்கள் ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. வருடாந்தம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்படும் முகவர் நிலையங்களுக்கே ஹஜ் கோட்டா பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

 ஹஜ் யாத்திரிகர்கள் தாம் தெரிவு செய்யும் முகவர் நிலையங்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டே பயணிக்கின்றனர். இந்த ஒப்பந்தத்தில் சவூதி அரேபியாவில் ஏற்பாடு செய்யப்படும் தங்குமிடங்கள், உணவு ஏற்பாடுகள், பயணகால எல்லை என்பன உள்ளடக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் முகவர்களால் மீறப்படும் போதே ஹஜ்ஜாஜிகள் அது தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர்.

 இவ்வருடம் இலங்கையிலிருந்து 3000 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். ஹஜ் யாத்திரிகர்களில் சிலர் இவ்வருடம் சவூதி அரேபியாவில் ஹஜ் கடமையை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சவூதி சென்றிருந்த அரச ஹஜ் உறுப்பினர்களிடம் ஹஜ் முகவர்கள் சிலர் தொடர்பில் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர். அம்முறைப்பாடுகள் உடனடியாக சவூதியில் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஹஜ் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு சுயாதீனமாகவே இயங்கி வருகிறது. விசாரணைகளில் எந்தத் தலையீட்டுக்கும் இடமளிக்கப்படுவதில்லை.

ஹஜ் விசாரணைக்குழு விசாரணைகளின் முடிவில் முறைப்பாடுகளின் தன்மைகளுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கி வருகிறது. முறைப்பாடுகள் விசாரணையின் போது நிரூபிக்கப்பட்டால் அவை பாரதூரமான முறைப்பாடு அல்லாதிருந்தால் சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

 பணம் தொடர்பான முறைப்பாடென்றால் குறிப்பிட்ட பணத்தை மீளச்செலுத்துமாறு தீர்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் ஹஜ் கோட்டா குறைப்பும் செய்யப்படுகிறது. பாரதூரமான முறைப்பாடுகள் செய்யப்பட்டு அவை நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர்களின் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படுகிறது.

 ஹஜ் முறைப்பாடு விசாரணைக்குழுவிற்கு கடந்த வருடம் 16 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இவற்றில் 6 முகவர் நிலையங்களுக்கெதிரான முறைப்பாடுகள் விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டன. இவற்றில் 4 முகவர் நிலையங்களுகெதிரான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை என்பதால் அவர்களது அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டது. இரு முகவர் நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஹஜ்ஜாஜிகள் ஹஜ் முகவர்களுக்கு எதிராக முன்வைக்கும் முறைப்பாடுகள் உரிய ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட வேண்டும். அவ்வாறென்றாலே குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக் கூடியதாக இருக்கும்.

ஹஜ்ஜாஜிகள் முகவர் நிலையங்களால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் ஹஜ் முறைப்பாடு விசாரணைக் குழுவுக்கு தவறாது முறைப்பாடு செய்யவேண்டும். இதேவேளை ஹஜ் முகவர் நிலையங்கள் தம்முடன் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளைக் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli