Verified Web

கொலை சதியும் சந்தேகங்களும்

29 days ago Administrator

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவையும் கொலை செய்வதற்கான சதி முயற்சி அம்பலமாகியதையடுத்து பல்வேறு சந்தேகங்கள் பல்வேறு தரப்பினரால் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆட்சியை மாற்றியமைப்பதற்கான ஒரு சதி முயற்சியாகவும் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச்சதித்திட்டம் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப்பிரிவின் (ரி.ஐ.டி.) பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலைபேசியூடாக ஊழலுக்கு எதிரான படையின் பணிப்பாளர் நாமல்குமாரவுடன் கலந்துரையாடிய தகவல்கள் நாமல்குமாரவினாலேயே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் தொலைபேசி உரையாடல் மிகவும் பாரதூரமானவை. பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் அதிரடி நடவடிக்கைகளை உடன் மேற்கொண்டுள்ளமை பாராட்டத்தக்கதாகும். சம்பந்தப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உடன் அமுலுக்கு வரும் வகையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிலிருந்தும் பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சி.ஜ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஊழலுக்கு எதிரான படை எனும் அமைப்பின் பணிப்பாளர் நாமல்குமார வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கும், நாமல்குமாரவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி கலந்துரையாடல் பதிவுகள் அடங்கிய தொலைபேசி  சி.ஐ.டி.யின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

சி.ஜ.டி.யினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வரக்காபொலயில் உள்ள நாமல்குமாரவின் வீட்டுக்குச் சென்று அவரிடம் 7 மணிநேரம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமையும் அவரிடம் 8 மணிநேர விசாரணை இடம்பெற்றுள்ளது.

நாமல்குமார கண்டியில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் முழுமையான காணொளியை மாற்றம் செய்யாது சி.ஜ.டி.க்கு வழங்குமாறு நான்கு இலத்திரனியல் ஊடகங்களுக்குக் கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை நாமல்குமார மேலும் பல முக்கிய தகவல்களையும் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

ரோஹிங்ய அகதிகளான புகலிடக் கோரிக்கையாளர்கள் கல்கிசையில் வைத்துத் தாக்கப்பட்டார்கள். இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களான அரம்பேபொல ரத்னசார தேரர், சிந்தக சஞ்சீவ, டேன் பிரியசாந்த், ஜனிதமினிபே ஆகியோரை கைது செய்ய பொலிஸார் என்னிடம் உதவி கோரினார்கள். ஆரம்பத்தில் நான் உதவி செய்ய மறுத்தாலும் பின்பு உதவி செய்தேன். எனது தகவல்களுக்கு அமைவாக அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

கண்டி வன்செயல்களையடுத்தும் இவ்வாறே என்னிடம் உதவி கோரப்பட்டது. நான் மஹசொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்கவை நன்கறிவேன் என்பது பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு தெரியும். இது தொடர்பில் அவர் உதவி கோரினார். எனது தகவல்களுக்கமைய அவர்களும் கைது செய்யப்பட்டனர் என நாமல்குமார தெரிவித்துள்ளார். இதற்காகப் பொலிஸார் 5 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறு பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்வதற்குப் பொலிஸாருக்கு ஒத்துழைத்த நாமல்குமார ஏன் ஊடக மாநாடொன்று நடாத்தி பிரதி பொலிஸ் மா அதிபர் தன்னுடன் மேற்கொண்ட சதி முயற்சியொன்று தொடர்பான தொலைபேசி  உரையாடலை அம்பலப்படுத்த வேண்டும்? என்ற சந்தேகம் எழுகின்றது.

ஏனென்றால் பிரதி பொலிஸ்மா அதிபருடன் நாமல் குமார மிகவும் நெருங்கிச் செயற்பட்டவர். சி.ஜ.டி.யினர் நாமல்குமாரவின் முழுமையான வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்ட பின் இதற்கான காரணத்தைக் கண்டறிந்து நாட்டு மக்களுக்கு அதனை வெளிப்படுத்த வேண்டும். இந்த விடயம் தேசிய மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது பொலிஸ் மா அதிபரின் கடமையாகும்.
-Vidivelli