Verified Web

தகுதியான ஆசிரியர்களே நியமிக்கப்பட வேண்டும்

30 days ago Administrator

Image result for ஆசிரியர் vidivelli

 

மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு தற்சமயம் முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். கடந்த பல வருடங்களாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள், போராட்டங்களைத் தொடர்ந்தே அரசாங்கம் சகல சமய பாடங்களுக்குமான ஆசிரியர்களை நியமிக்க முன்வந்துள்ளது. இதற்கமைய இஸ்லாம் சமயத்தை கற்பிக்க தகுதியான மௌலவி பட்டம் பெற்றோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தேசிய ரீதியாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ள போதிலும் சில மாகாணங்களில் மாத்திரம் மாகாண மட்டத்தில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2008 / 2009 இல் மௌலவிமார்களை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கு 29.08.2008 அன்று அரச வர்த்தமானியில் அகில இலங்கை ரீதியாக மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் காணப்பட்ட 424 வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

இதற்காக 22.11.2008 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் 5000க்கும் மேற்பட்டோர் பங்குபற்றினர். இந்தப் போட்டிப்பரீட்சை மூலம் சுமார் 400க்கு மேற்பட்டோர்  தகுதிபெற்றிருந்த போதும், 03.02.2010 மற்றும் 21.12.2010 போன்ற தினங்களில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற நேர்முகப் பரீட்சை மூலம் 148 பேருக்கு மாத்திரமே நியமனங்கள் வழங்கப்பட்டன.

தகுதியானவர்களில் எஞ்சியுள்ள 276 பேருக்கான நியமனங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரிடமும் அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் உட்பட பல அமைப்புகள் பல கோரிக்கைகளை விடுத்ததுடன் பல முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வந்தன. பல முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தனர். கல்வியமைச்சரையும் நேரில் சந்தித்து இதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தனர். இதனடிப்படையில் கல்வி அமைச்சும் அரசியல் தலைமைத்துவங்களும் இதற்கு தீர்வுகாண ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றமை வரவேற்கத்தக்கதாகும்.

எனினும் இஸ்லாம் பாட ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளோருக்கு அங்கீகரிக்கப்பட்ட அரபுக் கல்லூரிகளினால் வழங்கப்பட்ட மௌலவி சான்றிதழ் அவசியம் என கல்வியமைச்சின் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் அவசியமான நிபந்தனையாகும். முஸ்லிமாக இருக்கிறார்கள் என்பதற்காக இஸ்லாம் பாடத்தை எல்லோராலும் கற்பிக்க முடியாது. இஸ்லாமிய கோட்பாடுகள், நடைமுறைகள் தொடர்பான அறிவும் தெளிவும் உள்ளவர்களால் மாத்திரமே மாணவர்களுக்கு அழகிய முறையில் அதனைக் கற்பிக்க முடியும். அந்த வகையில் மௌலவி சான்றிதழ் தகைமைக்கு அப்பால் இஸ்லாத்தை கற்பிக்கும் ஆற்றலும் திறமையும் கூட நியமனத்தின்போது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

சில சிங்களப் பாடசாலைகளில் பௌத்த மத ஆசிரியர்களே இன்று இஸ்லாம் பாடத்தை கற்பிக்கின்ற துரதிஷ்ட நிலை நிலவுகின்றது. அதேபோன்று பல பௌத்த பாடசாலைகளில் கல்வி பயிலும்  முஸ்லிம் மாணவர்கள் தமக்கு கற்பிப்பதற்கு மௌலவி ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் அவர்கள் மாற்று மத பாடங்களையே கற்கின்றனர். இதனால் அவர்கள் அடிப்படை இஸ்லாமிய அறிவு குறைந்தவர்களாகவும் சில சமயங்களில் முற்றாகவே மாற்றுமத அனுஷ்டானங்களைப் பின்பற்றுபவர்களாகவும் மாறவிடுகின்ற துயரம் நிகழ்கிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சிங்கள மொழி ஆற்றல் கொண்ட மௌலவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.

விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது என்பதற்காக நியமனம் வழங்கப்படுவது உறுதி என்றும் எம்மால் சொல்ல முடியாது. கடந்த காலங்களில் பல தடவைகள் பல நியமனங்களின் போது விண்ணப்பம் கோரப்பட்டு, நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்ட பிறகும் ஏமற்றங்கள் நிகழ்ந்துள்ளன.  எனவேதான் இந்தநியமனங்கள் வழங்கப்படும் வரை விழிப்பாக இருப்பதும் அழுத்தங்களை வழங்குவதும்  சம்பந்தப்பட்ட தரப்புகளின் கடமையாகும்.

அந்த வகையில் அர­சாங்கப் பாட­சா­லை­களில் நிலவும் 1000 க்கும் மேற்­பட்ட இஸ்லாம் மற்றும் அரபு மொழி போதிக்கும் மௌலவி ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை காலம் தாழ்த்­தாது நிரப்­ப வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். நல்லாட்சி அரசாங்கம் இதன் மூலமாக தேர்தல் கால வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றும் என நம்புகிறோம்.  
-Vidivelli