Verified Web

நல்லாட்சியிலும் மக்களிடம் நகராத நுரைச்சோலை வீட்டுத் திட்டம்

2018-09-17 05:52:13 Administrator

-பி.எம்.எம்.ஏ.காதர்

ஆட்­சி­மாற்றம் ஒன்றின் மூலம் மக்­க­ளுக்கு நல்­லது நடக்­கு­மென்ற நம்­பிக்­கையில் காத்­தி­ருந்த மக்கள் இன்று நம்­பிக்­கை­யி­ழந்து நடைப்­பி­ண­மாக வாழ்­கின்ற நிலை தொடர்­கின்­றது. சிறு­பான்மை மக்­களின் நிலங்கள் பெரும்­பான்மை சமூ­கத்தால் திட்­ட­மிட்டு இர­க­சி­ய­மா­கவும், பகி­ரங்­க­மா­கவும், சண்­டித்­த­னத்தின் மூல­மா­கவும் சூரை­யா­டு­கின்ற நிலை தொடர்­கின்­றது.

ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு முண்­டு­கொ­டுத்து ஆட்­சியில் பங்­கா­ளி­யாகி அமைச்சுப் பத­வி­களைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் வாக்­க­ளித்த மக்­களின் பிரச்­சி­னை­களைப் புறந்­தள்­ளி­விட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு சொத்­துக்­களை சேர்ப்­ப­தி­லேயே குறி­யாக இருக்­கின்­றார்கள்.

இந்த நாட்­டிலே மக்­களின் பிரச்­சி­னைகள் எவ்­வ­ளவோ தேங்கிக் கிடக்­கின்­றன. அவற்­றை­யெல்லாம் கண்­டு­கொள்­ளா­த­வர்­களே தொடர்ந்தும் அர­சி­யல்­வா­தி­க­ளாக  மிளிர்­கின்­றார்கள். தங்­களை வளர்த்­துக்­கொண்டு தங்கள் பிள்­ளை­க­ளையும் அர­சி­ய­லுக்குள் கொண்­டு­வந்து குடும்ப அர­சியல் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஒவ்­வொரு தேர்தல் முடி­விலும் தங்­க­ளுக்கு கன­தி­யான அமைச்சுப் பொறுப்­புக்கள் கிடைக்க வேண்டும் என்­ப­திலும், திணைக்­களத் தலைமைப் பத­விகள் கிடைக்க வேண்டும் என்­ப­தி­லுமே முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் குறி­யாக இருந்து கொண்டு தங்­க­ளையும், தங்கள் கட்­சி­க­ளையும் வளர்த்துக் கொண்டு சுக­போகம் அனு­ப­விக்­கின்­றார்கள்.  

இந்த நிலையில் ஆழிப்­பே­ரலை அனர்த்­தத்தில் உயிர்­க­ளையும், உடை­மை­க­ளையும், வாழ்­வி­டங்­க­ளையும் இழந்து இன்­று­வரை துயரில் தோய்ந்து வாடும் மக்­க­ளுக்கு இந்த நல்­லாட்­சி­யி­லா­வது நுரைச்­சோலை வீட்டுத் திட்டம் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டுமா என்ற எதிர்­பார்ப்­புடன் நானூற்­றுக்கும் மேற்­பட்ட குடும்­பங்கள்; காத்­தி­ருக்­கின்­றன.

 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி  ஏற்­பட்ட ஆழிப்­பே­ரலை அனர்த்தம் நடை­பெற்று பதின்­மூன்று  வரு­டங்­களை (26.-12.-2017) கடந்­து­நிற்கும் நிலையில் இன்­று­வரை வாழ்­விடம் இல்லாமல் கொட்­டில்­க­ளிலும், கூடா­ரங்­க­ளிலும் உற­வி­னர்­களின் வீடு­க­ளிலும் பல்­வே­று­பட்ட துன்­பங்­க­ளுடன் வாழும் மக்­க­ளுக்கு நிம்­ம­தி­யா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் வாழும் நாள் எப்­போது?

ஆழிப்­பே­ர­லையில் அழிந்த சொத்­துக்­களை மீளத் தேடிக்­கொள்ள முடியும். ஆனால் இழந்த உற­வு­களை இனிமேல் வாழ்க்­கையில் ஒரு­போதும் நாம் சந்­திக்­கவே முடி­யாது. இவ்­வா­றான பிரி­வுகள் மனச் சஞ்­ச­லத்­தையும் உள­ரீ­தி­யான பாதிப்­புக்­க­ளையும் தொடர் கதை­யா­கவே கொண்­டி­ருக்கும்.

இவ்­வா­றான மன­நி­லை­யுடன் பதின்­மூன்று  வரு­டங்கள் கடந்த நிலையில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக கட்­டப்­பட்ட வீடுகள் உரிய மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கின்ற ஒரு வீட்டுத் திட்டம் நுரைச்­சோலை வீட்­டுத்­திட்­ட­மாகும். இன்று இந்த வீட்­டுத்­திட்டம் சோலைக்­கா­டாக மாறி செய­லி­ழந்து காணப்­ப­டு­கின்­றது.

ஆழிப் பேர­லையால் பாதிக்­கப்­பட்ட அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தை அண்­டிய பதுர்­நகர் பிர­தே­சத்தைச் சேர்ந்த  நானூற்­றுக்கு மேற்­பட்ட குடும்­பங்­க­ளுக்­கா­கவே இந்த வீட்­டுத்­திட்டம்  அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­லகப் பிரி­வி­வுக்­குட்ட நுரைச் சோலை என்ற பிர­தே­சத்­திலே 500 ஏக்கர் நிலப்­ப­ரப்­பிலே நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

சந்­தி­ரிகா அம்­மையார் ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலப்­ப­கு­தியில் அப்­போது  அமைச்­ச­ராக இருந்த பேரியல் அஷ்ரப்  உம்றா கட­மைக்குச் சென்ற வேளை சவூதி மன்னர் ஹுசைன் அவர்­களை சந்­தித்­த­போது ஆழிப்­பே­ரலை பற்­றிய வீடி­யோவை காண்­பித்தார். 

அதன் பயா­னா­கவே இந்த வீட்­டுத்­திட்டம் உரு­வாகும் வாய்ப்பு ஏற்­பட்­டது. இதன் பய­னாக 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி 'அல்-­ஹுசைன் மாதிரிக் கிராமம்' என்ற பெய­ரி­லான நுரைச்­சோலை வீட்­டுத்­திட்ட நிர்­மா­ணத்­திற்­கான ஒப்­பந்தம் செய்­யப்­பட்டு வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்டு  பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இந்த வீட்டுத் திட்­டத்தை நிர்­மா­ணிப்­ப­தற்கு சவூதி அரே­பிய  அர­சாங்கம் 150 கோடி ரூபாவை ஒதுக்­கி­யி­ருந்­தது. இந்த நிதியின் மூலம் 500 வீடு­களும், பள்­ளி­வாசல், வைத்­தி­ய­சாலை, ஆண்­களும், பெண்­களும் வெவ்­வேறாக் கற்­ப­தற்கு தனித் தனி­யாக இரண்டு பாட­சா­லைகள், சன­ச­மூக நிலையம், நூலகம், சந்தைக் கட்டடம், வீதி உள்­ளிட்ட சகல வச­தி­க­ளையும் கொண்­ட­தாக 'அல்-­ஹுசைன்  மாதிரிக் கிராமம்' உரு­வாக்­கப்­பட்­டது.

ஒவ்­வொரு வீடும் சுமார் 15 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யு­டை­ய­தாகும். இங்கு மின்­சார வசதி, நீர்­வ­சதி, விளை­யாட்டு மைதான வசதி என்­பன ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

2010 ஆம் ஆண்டு இவ் வீட்­டுத்­திட்டப் பணிகள் பூர்த்தி செய்­யப்­பட்­டன. இருந்­த­போ­திலும் பல­்வே­று­பட்ட பிரச்­சி­னை­களைக் காரணம் காட்டி இவ்­வீட்டுத் திட்­டத்தை மக்­க­ளிடம் கைய­ளிப்­பதில் பெரும் சிக்­கல்கள் எழுந்­தன.

அம்­பாறை மாவட்ட முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளுக்குள் ஏற்­பட்ட புரிந்­து­ணர்­வின்மை கார­ண­மா­கவும், முரண்­பா­டு­க­ளாலும் போட்டி பொறா­மைகள் கார­ண­மா­கவும் இந்த வீட்டுத் திட்டப் பிரச்­சினை பேரி­ன­வா­தி­கனின் கைக­ளுக்குள் சென்­ற­டைந்­தன இதனால் இந்த விடயம்  பூதா­க­ர­மாகி இன­வா­த­மாக மாற்­றப்­பட்­டது. இதன் பின்­ன­ணியில் ஆட்­சி­யா­ளர்­களின் பங்கும் கணி­ச­மாக இருந்­தது. முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் மௌனமும் துணை­நின்­றது.

முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் ஒற்­று­மை­யின்மை கார­ண­மாக பேரி­ன­வா­தி­களின் கை ஓங்­கி­யது. இதனால் இவ் வீட்­டுத்­திட்டம் தொடர்­பாக ஜாதிக ஹெல உறு­மய உயர் நீதி­மன்­றத்தில் வழக்­கொன்றை தாக்கல் செய்­தது. இதனால் இவ் வீட்டுத் திட்­டத்தை உரிய நேரத்தில் மக்­க­ளுக்கு வழங்க முடி­யாமல் போனது துர­திஷ்­ட­மாகும். இதனால் இன்று இந்த வீட்­டுத்­திட்­டத்தின் வீடுகள் உடைக்­கப்­பட்டு பொருட்கள் திரு­டப்­பட்டு காடுகள் வளர்ந்து காணப்­ப­டு­கின்­றன.

ஜன­நா­யக அடிப்­டையில் இவ்­வீ­டுகள் ஆழிப்­பே­ர­லையால் பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் மக்­க­ளுக்கே வழங்­கி­யி­ருக்க வேண்டும். ஆனால் ஜாதிக ஹெல உறு­மய தாக்­கல்­செய்த வழக்கின் அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்ட நீதி­மன்ற தீர்ப்­பின்­படி இவ்­வீட்டுத் திட்ட  வீடு­களை தனி இன­மொன்றைச் சார்ந்­த­வர்­க­ளுக்கு மட்டும் வழங்கக் கூடா­தென்றும், அனைத்து இனத்­த­வர்­க­ளையும் உள்­ள­டக்கி இந்த வீடுகள் நீதி­யாகப் பகிர்ந்­த­ளிக்­கு­மாறும் அந்தத் தீர்ப்பில் தெரி­விக்­கப்­பட்­டது.

முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா தலை­மை­யி­லான நீதி­ப­திகள் குழு இந்தத் தீர்ப்பை வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பிடத் தக்­கது.

முஸ்லிம் நாடு ஒன்று பணத்தை அன்­ப­ளிப்­பாக வழங்கி பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் மக்­க­ளுக்­காக உரு­வாக்­கிய இந்த வீட்டுத் திட்டம் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் உடன்­ப­டாத போக்கும் குரோத மனப்­பான்­மையும் மக்­க­ளையே பாதிப்­டையச் செய்­தி­ருக்­கின்­றது.

தேர்தல் வரு­கின்ற போதெல்லாம் மக்­களின் கால­டிக்கு சென்று வாக்­குப்­பிச்சை கேட்­கின்ற அர­சி­யல்­வா­திகள், தேர்தல் முடிந்­ததும் மக்­களை மறந்து கொழும்­புக்குப் போய் உறைந்து விடு­கின்­றனர். வாக்­க­ளித்த மக்­களை சந்­திப்­ப­தாக இருந்தால் அவர்­க­ளுக்கு மாலை­களும், மரி­யா­தை­களும், பேண்ட் வாத்­தி­யங்­களும், பொன்­னா­டை­களும் வேண்டும்.  இதுதான் இன்­றைய முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் நிலை என்று மக்கள் அங்­க­லாய்க்­கின்­றனர்.

பாதிக்­கப்­பட்ட மக்கள் பல­முறை ஆர்ப்­பாட்­டங்­களை நடாத்­திய போதும் எந்­த­வி­த­மான பயனும் கிட்­ட­வில்லை. இறு­தி­யாக 2012.12.26 ஆம் திகதி பாதிக்­கப்பட்ட மக்கள் ஒன்­றி­ணைந்து அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­ல­கத்­திற்கு முன்­பாக பிர­தான வீதியை மறித்து தங்கள் வேத­னை­களை வெளிக்­காட்டி ஆர்ப்­பாட்­ட­மொன்றை நடாத்­தி­னார்கள்.

இந்த ஆர்ப்­பாட்­டத்தை கட்­டுப்­ப­டுத்­துவ­தற்கு பிர­தேச செய­லா­ளரும், பொலி­ஸாரும் முயன்­ற­போ­திலும் முடி­யாமல் போனது.  அதன்­பின்னர் அப்­போது அம்­பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராக இருந்த அஜித் ரோஹண ஸ்தலத்­திற்கு வந்து மூன்று வாரங்­க­ளுக்குள் வீடு கிடைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென்ற எழுத்­து­மூ­ல­மான கடிதம் வழங்­கி­யபின் மக்கள் கலைந்து சென்­றனர். இந்த ஆர்ப்­பாட்டம் நடந்து சுமார் ஐந்து வரு­டங்­களை எட்டும் நிலையில் இந்தப் பிரச்­சி­னையை மீட்­டிப்­பார்க்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

இதன் கார­ண­மாக இந்த வீட்டுத் திட்­டத்தின் இன்­றைய  கள நிலை­வரம் தொடர்­பாக அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­லாளர் ஏ.எம்.அப்துல் லத்­தீ­புடன் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது, "நீதி­மன்றத் தீர்ப்­பின்­படி இந்த வீட்­டுத்­திட்டம் 'சமா­தானக் கிராமம்' என்ற பெயரில் முஸ்லிம், சிங்­கள, தமிழ் சமூ­கங்­களைச் சேர்ந்த குடும்­பங்­களை குடி­ய­மர்த்த 2008-4 சுற்­ற­றிக்­கைக்கு அமை­வாக காணிக் கச்­சேரி நடாத்தி உரி­ய­வர்­களை தெரிவு செய்­வ­தற்கு மாவட்ட செய­லாளர் துசித்த பி. வணி­க­சிங்க  மூலம் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதன் அடிப்­ப­டையில் அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­லகப் பிரிவில் 308 குடும்­பங்கள் தெரிவு செய்­யப்­பட்டு இரண்­டரை இலட்சம் ரூபா நஷ்­ட­ஈட்டுக் கொடுப்­ப­னவில் முதலாம் கட்டக் கொடுப்­ப­னவு வழங்­கப்­பட்­டுள்­ளது. விரைவில் இந்த வீட்­டுத்­திட்டம் காணிக் கச்­சேரி மூலம் தெரிவு செய்­யப்­படும் குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­படும். காணி ஆணை­யா­ள­ரினால் காணிக்கச்சேரி வைப்பதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப் பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த வீட்டுத்திட்ட வீடுகளை நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக மக்களிடம் கையளிக்கும் நோக்கத்துடன் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அமைச்சரவைக்கு பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, அமைச்சர் றிஷாட் பதியுதீன் எடுத்திருக்கும் முயற்சிக்கு  எதிராக ஊடகங்களில் அறிக்கை விட்டு வருகின்றார். இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை. இருந்த போதிலும் இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய அக்கறை செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு  இந்த வீடுகளை விரைவாகக் கையளிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டியது  அவர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

இன்றைய நல்லாட்சி அரசில் மக்களுக்கு நல்லது நடந்தால் நல்லதே.
-Vidivelli