Verified Web

யெமனின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்போம்: யெமன் உப ஜனாதிபதி சூளுரை

2018-09-12 06:20:41 M.I.Abdul Nazar

 

சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட யெமன் அரசாங்கம் ஹெளதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள யெமனின் இறுதியான ஒரு அங்குலமும் கைப்பற்றப்பட்டு பொது மக்களின் துன்பங்களுக்கு முடிவுகட்டப்படும் வரை தனது போராட்டத்தை முன்னெடுக்கும் என யெமன் உப ஜனாதிபதி லெப்டினென்ட் ஜெனரல் அலி மொஹ்ஸின் அல்-அஹ்மர் தெரிவித்தார்.

றியாதில் முதல் படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஹெய்கால் மொஹமட் ஹந்தாபைச் சந்தித்த பின்னர் உப ஜனாதிபதியின் இந்த அறிக்கை வெளியானதாக யெமனின் அரச செய்தி முகவரகமான சபா நியூஸ் தெரிவித்துள்ளது.

ஆறு மாகாணங்களைக் கொண்ட சமஷ்டி யெமனைக் கட்டியெழுப்புவதற்கு மக்களுக்கிடையேயான வேறுபாடு களையப்பட்டு அவர்களின் ஒருமித்த ஆதரவினைப் பெற வேண்டும் என பிரிகேடியர் ஹந்தாப் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தினார்.

கடந்த தடவை கலந்துரையாடலின்போது பேசப்பட்ட அல்-ஜேளப் உள்ளடங்கலான வெற்றிகளும் முன்னேற்றங்களையும் இராணுவத்தினர் அடைந்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த வாரம் யெமன் சமாதானத்திற்கான பேச்சுவார்த்தை முயற்சி ஹெளதி இயக்கத்தின் தூதுக்குழு வருகை தராததன் காரணமாக மூன்று நாட்கள் எதிர்பார்த்திருந்ததன் பின்னர் கைவிடப்பட்டது.  
-Vidivelli