Verified Web

ஹிஜ்ரி 1440 புதுவருடம் மாற்றத்திற்கான ஆண்டாகட்டும்

10 days ago Administrator

ஹிஜ்ரி 1440 ஆம் ஆண்டின் முதல் நாள் இன்றாகும். இஸ்லாமிய புதுவருடக் கணிப்பீட்டின் அடிப்படையில் உலக முஸ்லிம்கள் முஹர்ரம் மாதத்திலிருந்தே தமது வருடக் கணிப்பீட்டை ஆரம்பிக்கின்றனர். இதற்கமைய இலங்கை முஸ்லிம்களும் தமது இஸ்லாமிய புதுவருடத்தை இன்று முதல் ஆரம்பிக்கின்றனர்.

எனினும் ஆங்கில வருடக் கணிப்பீட்டின் அடிப்படையிலேயே இலங்கையின் சகல அரச மற்றும் தனியார் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் இஸ்லாமிய நாட்காட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

எது எப்படியிருப்பினும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் முஹர்ரம் போதிக்கும் சிந்தனைகளை தமது வாழ்வில் எடுத்து  நடக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினதும் அடிப்படைக் கடமையாகும்.

அந்த வகையில் கடந்த ஹிஜ்ரி ஆண்டில் நாம் கடந்து வந்த பாதையை ஒரு கணம் மீட்டிப் பார்த்து பிழைகளை திருத்தி இன்றிலிருந்து புதிய வாழ்க்கைக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். எவ்வாறு ரமழான் மாதத்தில் நாம் எம்மை தூய்மைப்படுத்திக் கொள்கிறோமோ எவ்வாறு ஹஜ் யாத்திரை மூலமாக எமது பாவங்களை நீக்கி புதிய மனிதர்களாக மாறுகிறோமோ அதேபோன்-றுதான் இந்த முஹர்ரம் மாதமும் நமது வாழ்வைப் புதிய பாதையில் இட்டுச் செல்ல சந்தர்ப்பம் அமைத்துத் தருகிறது.

நாம் எவ்வாறு தனிமனிதர்களாக நம்மை மாற்றிக் கொள்கின்றோமோ அதேபோன்றுதான் இலங்கை முஸ்லிம் சமூகம் என்ற வகையிலும் நம்மை நாம் மீள்பரிசீலனை செய்து மாற்றங்களுக்குத் தயாராக வேண்டும். இன்றைய நாளில் அதற்காக உறுதி பூண வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மார்க்கம் மற்றும் அரசியல் விவகாரங்களில் நிலவும் பிளவுகள் இன்று பெரும் சாபக்கேடாக மாற்றம் பெற்றுள்ளன. இலங்கை முஸ்லிம்களின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் இரு பெரும் காரணங்களாக எம்மால் இவற்றை அடையாளப்படுத்த முடியும்.

மார்க்க ரீதியாக ஏராளமான கொள்கை முரண்பாடுகள் மலிந்துவிட்டதால் ஒருவரை ஒருவர் விமர்சித்து சண்டை பிடித்தே காலத்தைக் கடத்துகின்றனர். இதனால் உலமாக்கள் மக்களை நல்வழிப்படுத்துகின்ற தமது தூதுத்துவ பணியை மறந்து முரண்பாடுகளில் மூழ்கிக் கிடக்கின்றனர். முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விவகாரத்தில் எழுந்துள்ள கருத்து முரண்பாடுகளும் அதனைக் கையாள்வதில் வெளிப்படும் முதிர்ச்சியற்ற தன்மைகளும் இதற்கு நல்ல உதாரணமாகும்.

மறபுறம் சமூகத்தின் உரிமைகளை வென்று கொடுக்க வேண்டிய அரசியல் தலைமைகளோ  உறக்கத்தில் இருக்கின்றன. பட்டம் பதவிகளை பெறுவதிலும் அவற்றைத் தக்க வைப்பதிலுமே அவர்கள் குறியாக இருக்கின்றனர். முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியாக உரிமைகளை வென்றெடுப்பதில் தொடர்ச்சியாக நமது தலைமைகள் கோட்டைவிட்டே வருகின்றன.

எனவேதான் முஹர்ரம் எவ்வாறு தனிமனிதர்களில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறதோ அதே போன்று சமூகத் தலைமைகளிலும் மாற்றம் வர வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத் தலைவர் என்ற அடிப்படையிலேயே ஹிஜ்ரத் மேற்கொண்டு மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

அவ்வாறானதொரு மாற்றத்தை நமது சமூகத் தலைமைகளும் ஏற்படுத்த முன்வர வேண்டும். அது நாடு விட்டு நாடு செல்வதால் வரும் மாற்றம் அல்ல. மாறாக தமது மார்க்க மற்றும் அரசியல் கொள்கை நிலைப்பாடுகளில் ஏற்படும் மனப்பாங்கு மாற்றமேயாகும்.

அனைவருக்கும் முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்கள்.
-Vidivelli