Verified Web

நாட்­டுப்­பற்­று­மிக்க தேசியத் தலை­வ­ர் பாக்கிர் மாக்கார்

2018-09-10 05:35:04 Administrator

பீ.எம்.பாரூக்

தேசியத் தலைவர்,
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­க­ளின் சம்­மே­ளனம்

முஸ்­லிம்­களின் புகழ்­பெற்ற சமூகத் தலை­வ­ரா­கவும் பெரும்­பான்மை இனத்­த­வரின் நம்­பிக்­கை­யையும் ஆத­ர­வையும் பெற்ற அர­சி­யல்­வா­தி­யா­கவும் நாட்­டுப்­பற்­று­மிக்க தேசியத் தலை­வர்­களில் ஒரு­வ­ரா­கவும் மிளிர்ந்த மர்ஹூம் எம்.ஏ.பாக்கிர் மாக்கார் உலகத் தலை­வர்­களின் நன்­ம­திப்­பையும் பெற்றுத் திகழ்ந்­தவர்.

1917 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி பேரு­வளை மரு­தா­னையில் பிறந்த அவர், ஹக்கீம் எனும் புகழ்­பெற்ற வைத்­திய குடும்­பத்தைச் சேர்ந்த அலியார் மரிக்கார் முஹம்­ம­து­லெப்பை மரிக்கார் மற்றும் சாஹிரா உம்மா தம்­ப­தி­களின் அருமைப் புதல்­வ­ராவார்.

தனது ஆரம்பக் கல்­வியை பேரு­வளை மரு­தானை முஸ்லிம் பெண்கள் பாட­சா­லையில் கற்ற சிறுவன் பாக்கிர் மாக்கார். பின்னர் கொழும்பு சென். செபஸ்­தியன் கல்­லூ­ரி­யிலும் அதனைத் தொடர்ந்து கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரி­யிலும் கல்வி பயின்றார். கொழும்பு சாஹிரா கல்­லூ­ரியே அன்­னாரின் எதிர்­கால முன்­னேற்­றத்­திற்குக் களம் அமைத்துக் கொடுத்­தது.

சிறு பரா­யத்­தி­லேயே கல்­வியில் அக்­கறை காட்­டிய அவர், தனக்கு வாய்ப்புக் கிடைத்த சகல சந்­தர்ப்­பங்­க­ளிலும் தனது திற­மையை வெளிக்­காட்டி ஆசி­ரியர் குழாத்தின் நன்­ம­திப்­பையும் ஆசிர்­வா­தத்­தையும் பெற்றார்.

மாணவன் பாக்கிர் மாக்­காரின் திற­மையைக் கண்டு வியந்த ஸாஹி­ராவின் அப்­போ­தைய அதி­பரும் தலை­சி­றந்த கல்­வி­மானும், சமூகத் தலை­வரும், பிர­பல அர­சி­யல்­வா­தி­யு­மான டி.பி.ஜாயா, பாக்கிர் மாக்­காரின் எதிர்­கால முன்­னேற்­றத்­திற்குக் கைகொ­டுக்க முன்­வந்து அதற்­கான சந்­தர்ப்­பங்­க­ளையும் வழங்­கினார். பள்ளிப் பரு­வத்தில் ஒரு சிறந்த பேச்­சா­ள­ரா­கவும் மும்­மொ­ழி­க­ளிலும் ஆளு­மை­மிக்­க­வ­ரா­கவும் விளங்­கிய மாணவன் பாக்கிர் மாக்கார், கல்­லூரி மஜ்­லிஸின் சபா­நா­ய­க­ரா­கவும் சிங்­கள, தமிழ் மன்­றங்­களின் தலை­வ­ரா­கவும் தெரிவு செய்­யப்­பட்டார். அத்­துடன் நில்­லாது கிரஸண்ட், இளம்­பிறை ஆகிய கல்­லூரி சஞ்­சி­கை­களில் பிர­தம ஆசி­ரி­ய­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்டார். தமக்கு கொடுக்­கப்­பட்ட பொறுப்­பு­க­ளை­யெல்லாம் செவ்­வனே நிறை­வேற்றி பேரும் புகழும் பெற்றார்.

தனது அசியல் குரு­வான டாக்டர் ஜாயாவின் தொடர்பே இளைஞர் பாக்கிர் மாக்­காரின் எதிர்­கால உயர்­வுக்கு வழி­வ­குத்­தது எனலாம். அதே­போன்று முஸ்லிம் தலை­வரும், ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ள­ரு­மான டாக்டர் எம்.சி.எம்.கலீலின் தொடர்பும் அவ­ருக்குப் பெரிதும் கை கொடுத்­தது. ஸாஹிரா கல்­லூ­ரி­யிலும் அவர் விடுதி மேற்­பார்­வை­யா­ள­ரா­கவும் பின்னர் ஆசி­ரி­ய­ரா­கவும் கட­மை­யாற்­றினார்.

ஒரு வழக்­க­றி­ஞ­ராக வரு­வ­தற்கு ஆசைப்­பட்ட இளைஞர் பாக்கிர் மாக்கார், 1940 ஆம் ஆண்டில் சட்­டக்­கல்­லூ­ரியில் சேர்ந்தார். ஆயினும் இரண்டாம் உலக மகா­யுத்தம் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த அவ்­வேளை அவர் தன் சட்­டப்­ப­டிப்பை இடை­நி­றுத்­தி­விட்டு, 1942 ஆம் ஆண்டு தேசிய பாது­காப்பு சபையில் இணைந்து விமானப் பாது­காப்புப் படை­யின (ஏ.ஆர்.பி.) ஆலோ­ச­க­ராகப் பத­வி­யேற்றார். இத்­து­றையில் விசேட பயிற்­சிக்­காக இந்­தி­யாவில் ஹைத­ராபாத் சென்றார். 1946 ஆம் ஆண்டு போர் முடி­வுற்ற பின்னர் சட்­டக்­கல்­லூ­ரியில் மீண்டும் சேர்ந்து சட்­டப்­ப­டிப்பைத் தொடர்ந்தார். அதில் தேர்ச்­சி­பெற்ற இளம் பாக்கிர் மாக்கார், 1950 ஆம் ஆண்டு சட்­டத்­த­ர­ணி­யாகப் பதவிப் பிர­மாணம் செய்தார். களுத்­துறை மஜிஸ்­திரேட் நீதி­மன்றில் தலை­சி­றந்த வழக்­க­றி­ஞ­ராகத் திகழ்ந்த அன்னார், விரும்­பி­யி­ருந்தால் கோடிக்­க­ணக்கில் பணம் சம்­பா­தித்­தி­ருக்­கலாம். ஆனால் அவர் தன்னை நாடி வந்­தவர் ஏழை­யாக இருந்­தாலும் அவர்­க­ளுக்குத் தனது வாதத்தின் மூலம் உரிய நிவா­ர­ணங்­களைப் பெற்­றுக்­கொ­டுத்து, அவர்­க­ளது உளம் மகிழச் செய்தார். இதனால் அவ­ரது புகழ் மென்­மேலும் மேலோங்­கி­யது. அவர் களுத்­துறை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலை­வ­ராக தெரி­வு­செய்­யப்­பட்டு சிறப்­புற செய­லாற்­றினார்.

சட்­டக்­கல்­லூரி மாண­வ­னாக இருக்­கும்­போதே டாக்டர் எம்.சி.எம்.கலீலின் தொடர்பில் அகில இலங்கை முஸ்லிம் லீக்கில் இணைந்த அவர், அதன் ஆரம்ப உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ராவார். அவர் செனட் சபை சபா­நா­ய­க­ரா­கவும் தெரி­வு­செய்­யப்­பட்ட இளைஞர் பாக்கிர் மாக்கார் அதன் உப­த­லை­வர்­களில் ஒரு­வ­ரா­கவும் பணி­யாற்­றி­யுள்ளார். அகில இலங்கை முஸ்லிம் மாணவர் இயக்­கத்தின் தலை­வ­ரா­கவும் ஜம்­இய்­யத்துல் முஸ்லிம் இயக்­கத்தின் ஸ்தாபகத் தலை­வ­ரா­கவும், அன்னார் ஆற்­றிய சேவை அளப்­ப­ரி­யது. லயன்ஸ் கிளப்­பிலும் பல உயர் பத­வியை வகித்­துள்ள அவர் ஐ.தே.க. ஆரம்ப கால உறுப்­பி­னர்­களில் ஒருவர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. கொழும்பு ஸாஹிரா கல்­லூரி ஆளுநர் சபைத் தலை­வ­ரா­கவும் பணி­யாற்­றி­யுள்­ள­தோடு, 1978 இல் தென்­னிந்­தி­யாவில் நடை­பெற்ற அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்­டிலும் பங்­கு­பற்­றி­யுள்ளார். அவர் ஆற்­றிய அரும் பணிக்­காக இலங்கை அர­சாங்கம் அவ­ருக்கு ‘தேச­மான்ய’ என்ற கௌரவ நாமம் வழங்கி கௌர­வித்­தது. 1947 ஆம் ஆண்டு பொதுத்­தேர்­தலில் கொழும்பு மத்­திய தொகு­தியில் ஐ.தே.க. சார்பில் போட்­டி­யிட்ட தனது அர­சியல் குரு டி.பி.ஜாயாவின் வெற்­றிக்­காக பொறுப்­பாக நின்று வெற்­றி­பெறச் செய்தார். அதனைத் தொடர்ந்து இளைஞர் பாக்கிர் மாக்கார், ஐ.தே.க. மூல­மாக அர­சி­யலில் பிர­வே­சித்து, 1949 ஆம் ஆண்டு பேரு­வளை நகர சபைத்­தேர்­தலில் போட்­டி­யின்றித் தெரி­வு­செய்­யப்­பட்டார். அதே­போன்று 1950 ஆம் ஆண்டு பேரு­வளை நகர சபைத் தலை­வ­ரா­கவும் போட்­டி­யின்றித் தெரி­வு­ செய்­யப்­பட்டார். சுமார் 20 வரு­டங்கள் நகர சபையில் அங்­கத்­துவம் வகித்த அவர், முன்­னொ­ரு­போதும் இல்­லா­த­வாறு மக்கள் நல­னுக்­கா­கவும் நகர அபி­வி­ருத்­திக்­கா­கவும் அய­ராது உழைத்து மக்கள் மனதைக் கவர்ந்தார்.

1959 ஆம் ஆண்டு தல்­கொ­டப்­பிட்டி தேர்தல் நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் முன் டாக்டர் எம்.சி.எம்.கலீல் தலை­மையில் சாட்­சி­ய­ம­ளித்த அகில இலங்கை முஸ்லிம் லீக் தூதுக்­கு­ழுவில் எம்.ஏ.பாக்கிர் மாக்­காரே பிர­தம பேச்­சா­ள­ராகக் கலந்­து­கொண்டார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அன்று அவரால் முன்­வைக்­கப்­பட்ட காத்­தி­ர­மா­னதும் ஆதா­ர­பூர்­வ­மா­ன­து­மான ஆலோ­ச­னை­களின் பய­னா­கவே முஸ்­லிம்கள் பய­ன­டையும் வகையில் பேரு­வளை உள்­ளிட்ட இரட்டை அங்­கத்தர் தொகு­திகள் உரு­வாக்­கப்­பட்­டன.

இதனைத் தொடர்ந்து தேசிய அர­சி­யலில் பிர­வே­சித்த அவர், 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி சார்­பாகப் போட்­டி­யிட்டு பேரு­வளை தொகு­தியின் முதல் அங்­கத்­த­வ­ராகத் தெரி­வு­செய்­யப்­பட்டார். குறு­கிய காலத்தில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து அவ்­வ­ருடம் ஜூலை மாதம் நடை­பெற்ற பொதுத்­தேர்­தலில் பெரும்­பா­லான தொகு­தி­களில் ஐ.தே.க.வுக்கு ஏற்­பட்ட தோல்­வியைப் போன்று பாக்கிர் மாக்­காரும் தோல்­வியைத் தழு­வினார். தனது ஈடி­ணை­யற்ற சேவையின் மூலமும் பெரும்­பான்மை மக்­க­ளி­டையே ஏற்­பட்ட நம்­பிக்­கையின் மூலமும் 17% மட்­டுமே முஸ்­லிம்கள் வாழக்­கூ­டிய பேரு­வளை தொகு­தியில் 1965 தேர்­தலில் மீண்டும் வெற்­றி­வாகை சூடினார். 1977 பொதுத் தேர்­த­லிலும் இரண்­டா­வது அங்­கத்­தவர் பெற்ற வாக்­கு­களை விட 27,000 வாக்­கு­களை மேல­தி­க­மாகப் பெற்று முதல் அங்­கத்­த­வ­ராகத் தெரி­வானார்.

1977 ஆம் ஆண்டு இலங்கை தேசிய அர­சுப்­பே­ர­வையின் பிரதி சபா­நா­ய­க­ராவும் 1978 செப்­டெம்­பரில் இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் சபா­நா­ய­க­ரா­கவும் தெரி­வு­செய்­யப்­பட்ட பாக்கிர் மாக்கார் 1983 ஆம் ஆகஸ்ட் வரை அப்­ப­த­வியில் நீடித்தார். இலங்கை பழைய பாரா­ளு­மன்­றத்தின் இறுதி சபா­நா­ய­க­ரா­கவும் புதிய பாரா­ளு­மன்­றத்தின் முதல் சபா­நா­ய­க­ரா­கவும் கட­மை­யாற்றும் அரிய வாய்ப்பும் அவ­ருக்குக் கிடைத்­தது.

இலங்கை வர­லாற்றில் எந்­த­வொரு சிறு­பான்­மை­யி­ன­ருக்கும் கிடைக்­காத அதி­உன்­னத பத­வி­யாக நாட்டின் தலை­வ­ராகும் (பதில் ஜனா­தி­பதி) அரிய வாய்ப்பும் அன்­னா­ருக்குக் கிடைத்­தது. 1980 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­த­னவும் பிர­தமர் ஆர்.பிரே­ம­தா­ஸவும் இள­வ­ரசர் சார்ள்ஸ் – டயானா திரு­ம­ணத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக இங்­கி­லாந்து சென்­ற­போது இலங்கை அர­சியல் யாப்­பின்­படி மூன்­றா­வது பிர­ஜை­யா­க­வி­ருந்த சபா­நா­யகர் பாக்கிர் மாக்கார் பதில் ஜனா­தி­ப­தி­யாகக் கட­மை­யாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றார். இது இலங்கை சிறு­பான்­மை­யி­ன­ருக்குக் கிடைத்த வர­லாற்று முக்­கி­யத்­துவம் பெற்ற நிகழ்­வாகும்.

அர­சாங்கக் கட்சி, எதிர்க்­கட்சி என்ற பாகு­பா­டின்றி நேர்­மை­யு­டனும் ஆளு­மை­யு­டனும் சபையை நடத்­திய சபா­நா­யகர் பாக்கிர் மாக்கார் பாரா­ளு­மன்­றத்தில் சகல அங்­கத்­த­வர்­க­ளி­னதும் நன்­ம­திப்­பையும் கௌர­வத்­தையும் பெற்றார். குடி­யு­ரி­மையை இழந்த ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தை விட்டுச் செல்­கையில் சபா­நா­யகர் பாக்கிர் மாக்­காரின் நேர்­மையைப் பாராட்டிப் பேசி­யமை இதற்கு ஒரு சிறந்த உதா­ர­ண­மாகும்.

பாரா­ளு­மன்­றத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் தொழு­வ­தற்­காக பிரத்­தி­யேக தொழுகை அறையைப் பெற்­றுக்­கொ­டுத்­த­மையும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் நோன்பு துறப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்து கொடுத்­த­மையும் அவ­ரது மதப்­பற்­றுக்கு ஒரு எடுத்­துக்­காட்­டாகும்.

மர்ஹூம் பாக்கிர் மாக்கார் தனது பத­விக்­கா­லத்தில் நாட்­டுக்­கா­கவும் சமூ­கத்­துக்­கா­கவும் துடி­து­டிப்­புடன் அரும்­தொண்­டாற்­றிய இணை­யில்­லாத தலை­வ­ராகத் திகழ்ந்தார். 1975 ஆம் ஆண்டில் அவர் பிரதி சபா­நா­ய­க­ராக இருந்­த­போது இந்­தோ­னே­சிய விமானம் கட்­டு­நா­யக்­கவில் விபத்­துக்­குள்­ளான வேளை வெகு­வி­ரை­வாக தொண்­டர்­க­ளுடன் அங்கு சென்று இரவு, பக­லாக மீட்பு வேலை­களில் ஈடு­பட்டு, ஜன­ஸாக்­களைத் தேடி நாட்­டுக்கு அனுப்பும் பெரும் கைங்­க­ரி­யத்­தையும் அவர் செய்தார். இதனால் அவர் இந்­தோ­னே­சிய அர­சாங்­கத்தின் நன்­ம­திப்பைப் பெற்றார்.

1979 ஆம் ஆண்டு கிழக்கு மாகா­ணத்தில் ஏற்­பட்ட கடும் சூறா­வளி அனர்த்­தத்­தின்­போது அங்கு ஓடோ­டிச்­சென்று நிவா­ரணப் பணி­களில் ஈடு­பட்­ட­தோடு அம்­மக்­க­ளுக்­காக ஈராக் அர­சாங்­கத்­திடம் 100 வீடு­களைப் பெற்று சதாம் ஹுஸைன் கிரா­மத்­தையும் அமைத்துக் கொடுத்தார்.

1986 ஆம் ஆண்டு கந்­தளாய்க் குளம் உடைந்து அனர்த்தம் ஏற்­பட்­ட­போது அங்கு விரைந்­து­சென்று மக்­க­ளுக்கு ஆறுதல் கூறி நிவா­ரண உத­வி­களை மேற்­கொண்ட ஒரே ஒரு முஸ்லிம் தலைவர் மர்ஹூம் பாக்கிர் மாக்கார் தான் எனலாம். அதே ஆண்டு கிழக்கில் ஏற்­பட்ட தமிழ் – முஸ்லிம் இனக்­க­ல­வ­ரத்­தின்­போது துணிச்­ச­லுடன் அங்கு சென்று தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டார்.

அதே­போன்று நாட்டின் எந்தப் பகு­தி­யிலும் அனர்த்­தங்கள், அசம்­பா­வி­தங்கள் ஏற்­பட்­ட­போ­தெல்லாம் அங்கே அன்­னாரின் ஆளு­மையைக் காணக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்­தது. அவர் சமூக நல்­லி­ணக்கம், சமா­தானம், சக­வாழ்­வுக்­காக அய­ராது உழைத்தார். முன்னாள் அமைச்­சரும் தேசிய ஊடக மத்­திய நிலை­யத்தின் தலை­வ­ரு­மா­கிய அன்­னாரின் புதல்வர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்­காரும் தந்­தையைப் போன்று நாட்டின் நல்­லி­ணக்கம், சக­வாழ்­வுக்­காக துடி­து­டிப்­புடன் செயற்­பட்டு வரு­வது வர­வேற்­கத்­தக்­கது. அவ­ரது முயற்சி வெற்­றி­பெற வாழ்த்­து­கிறோம்.

மர்ஹூம் பாக்கிர் மாக்கார் பல சந்­தர்ப்­பங்­களில் அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­யா­கவும், ஜனா­தி­ப­தியின் பிர­தி­நி­தி­யா­கவும் வெளி­நாட்டுப் பய­ணங்­களை மேற்­கொள்ளும் வாய்ப்­புக்­கிட்­டி­யது. 1975 இல் போர்த்­துக்கல் லிஸ்­பனில் நடை­பெற்ற பாரா­ளு­மன்ற மகா­நாட்டில் இலங்கைப் பிர­தி­நி­தி­யாகக் கலந்­து­கொண்டார். அதே­போன்று பெரிய பிரித்­தா­னி­யா­வுக்கும் விஜயம் செய்த அவர், ஈராக்கின் பக்தாத் நக­ருக்கும் சென்றார்.

1979 ஆம் ஆண்டில் ஈராக் அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரில் மீண்டும் ஈராக் சென்ற அன்னார், அங்கு பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை பெரிதும் வர­வேற்பைப் பெற்­றது. ஈராக் – இலங்கை நட்­பு­றவு சங்­கத்தின் தலை­வ­ரா­கவும் அவர் அரும்­ப­ணி­யாற்­றினார்.

1980 இல் பிலிப்பைன்ஸ், இந்­தோ­னே­சியா ஆகிய நாடு­க­ளுக்கும், 1981 இல் இந்­தியா, பங்­க­ளாதேஷ் ஆகிய நாடு­க­ளுக்கும் விஜயம் செய்த அன்னார், 1981 ஆம் ஆண்டில் மாலை­தீவு குடி­ய­ரசின் 50 ஆவது வரு­டாந்த விழாவில் இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­யாகக் கலந்­து­கொண்­ட­தோடு, அதே ஆண்டு எகிப்தில் அதிபர் அன்வர் சதாத்தின் மரணச் சடங்­கிலும் இலங்கை அரசின் சார்­பாக ஜனா­தி­ப­தியின் பிர­தி­நி­தி­யாகக் கலந்­து­கொண்டார். 1983 இல் பங்­க­ளா­தே­ஷுக்கு விஜயம் செய்த அன்னார், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நடந்­தே­றிய சமா­தான கலா­சார மகா­நாட்­டிலும் கலந்­து­கொண்டார். இங்­கி­லாந்து பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் மண்­ட­பத்தில் நடை­பெற்ற இராப்­போ­சன விருந்­தின்­போது அன்னார் ஆற்­றிய உரை அனை­வ­ரி­னதும் பாராட்டைப் பெற்­றது.

மர்ஹூம் அப்துல் பாக்கிர் மாக்­காரின் அரும் பணி­க­ளிலே அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ள­னத்தை ஆரம்­பித்­தது. மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. பதவி அந்­தஸ்­தை­விட சமூக நலமே பெரி­தெனக் கரு­திய அன்னார், முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் மூலம் சமூ­கத்­துக்குப் பெரும் தொண்­டாற்ற முற்­பட்டார்.

முஸ்லிம் இளை­ஞர்­க­ளி­டையே சமூக உணர்­வையும் நாட்­டுப்­பற்­றையும் ஏற்­ப­டுத்தி, நாட்­டுக்கும் சமூ­கத்­துக்கும் பய­னுள்ள இளம் தலை­மு­றையை உரு­வாக்கும் முயற்­சியில் ஈடு­பட்டார். இதன்­பொ­ரு­டடு சர்வ கலா­சா­லை­களில் பட்டப் படிப்பை மேற்­கொண்­டி­ருந்த இளை­ஞர்­களைத் தட்­டி­யெ­ழுப்பி அவர்­களை சமூ­கத்­திலும் அர­சி­ய­லிலும் தலை­மைத்­துவம் பெறக்­கூ­டிய பயிற்­சி­யையும் வழி­காட்­டல்­க­ளையும் நல்­கினார். இத்­து­றையில் கட்சி பேத­மின்றி சக­ல­ருக்கும் சந்­தர்ப்பம் அளிக்­கப்­பட்­டது. கொழும்பு பிர­தான வீதி 213 ஆம் இலக்­கத்தில் அமைந்­தி­ருந்த சம்­மே­ள­னத்தின் காரி­யா­ல­யத்­துக்கு நாளாந்தம் பின்­னேரம் சமு­க­ம­ளிக்கும் அன்னார், இரவு வரை அங்கு காத்­தி­ருந்து மக்கள் சேவையில் ஈடு­பட்டார். அச்­ச­மயம் அவ்­வ­லு­வ­லகம் இளை­ஞர்­க­ளாலும் சமூக ஆர்­வ­லர்­க­ளாலும் வழிந்து நிறைந்­த­ததைக் காணக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்­தது.

இக்­கா­லப்­ப­கு­தியில் தமது பத­வி­யையும் பாவித்து நாட்டின் சகல பாகங்­க­ளுக்கு சூறா­வளிப் பயணம் மேற்­கொண்டு, 550 க்கும் மேற்­பட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களை நிறு­வினார். இவ்­வாறு சகல முஸ்லிம் கிரா­மங்­க­ளுக்கும் விஜயம் செய்த ஒரே முஸ்லிம் தலைவர் அல்ஹாஜ் பாக்கிர் மாக்­கார்தான் என்றால் மிகை­யா­காது.

அன்­னாரின் வழி­காட்­டல்கள் முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் பாச­றையில் பயிற்­சி­பெற்ற இளை­ஞர்கள் பலர் பின்னர் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அங்­கத்­த­வர்­க­ளா­கவும் தலை­வர்­க­ளா­கவும் மாகாண சபை­களின் அங்­கத்­த­வர்­க­ளா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் வரும் வாய்ப்பைப் பெற்­றார்கள். அவர்கள் பல்­வேறு கட்­சி­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­ய­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அன்­னாரின் முயற்­சியின் பய­னாக இலங்­கையின் பல பாகங்­க­ளி­லு­முள்ள குக்­கி­ரா­மங்­களைச் சேர்ந்த இளை­ஞர்கள் பலர் தேசியத் தலை­வர்­க­ளாக மிளிரும் வாய்ப்புக் கிடைத்­த­மையும் ஈண்டு குறிப்­பி­டத்­தக்­கது.

சில தொகு­தி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே சென்­றி­ராத பல முஸ்லிம் குக்­கி­ரா­மங்­க­ளுக்கு அவர்­க­ளையும் அழைத்­துச்­சென்று மக்கள் குறை­களைத் தீர்த்து வைத்­த­மையும் ஒரு விசேட அம்­ச­மாகும்.

வெகு­சன ஊட­கங்­க­ளோடு நெருங்­கிய தொடர்பை வைத்­தி­ருந்த மர்ஹூம் பாக்கிர் மாக்கார் முஸ்­லிம்­க­ளுக்கும் தனி­யான ஊடகம் தேவை என்­பதை உணர்த்­தக்­கூ­டி­ய­வ­ராக இருந்தார். அன்னார் அகில இங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ள­னத்தின் மூலம் ‘உதயம்’ என்ற தமிழ் மொழிப் பத்­தி­ரி­கை­யையும் ‘டோன்’ என்ற ஆங்­கில பத்­தி­ரி­கை­யையும் வெளி­யிட்டு, அவற்றின் வளர்ச்­சியில் கண்ணும் கருத்­து­மாக இருந்தார். பல சந்­தர்ப்­பங்­களில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அது தொடர்ந்து வெளி­வர வழி­வ­குத்தார். முஸ்­லிம்­க­ளுக்­கான ஒரு தனித் தின­சரி வெளி­வர வேண்டும் என்­பதே அவ­ரது அவா­வாக இருந்­தது. தற்­பொ­ழுது அவ­ரது அவா நிறை­வே­றி­யுள்­ளதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

தேவை­யான சந்­தர்ப்­பங்­களில் சமூ­க­நலன் காக்க துணிச்­ச­லுடன் செயற்­பட்ட அஞ்சா நெஞ்சம் படைத்த தலை­வர்தான் மர்ஹூம் தேச­மான்ய பாக்கிர் மாக்கார். மஹ­ர­கம கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியின் 20 ஏக்கர் காணியை மஹ­ர­கம அபி­வி­ருத்தித் திட்­டத்தின் கீழ் அப்­போ­தைய அர­சாங்கம் சுவீ­க­ரிக்க முற்­பட்­ட­போது தான் சபா­நா­ய­க­ராகப் பத­வி­யி­லி­ருந்து கொண்டே அதற்கு எதிராக துணிச்சலுடன் செயற்பட்டு அச்சொத்தை மீட்டுக்கொடுத்த அபார ஆளுமை படைத்தவர் அவர். இவ்வாறான தலைமைகளைக் காண்பது மிகமிக அரிது.

நாட்டுப்பற்றும் சமூகப்பற்றும் ஒருங்கே அமைந்த அன்னார், பெரும்பான்மைச் சமூகத்துடன் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் எமது சமூகத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்பதை உணர்ந்து அதன்படி செயல்பட்டார். முஸ்லிம்களுக்காக மாத்திரமின்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகவும் அவர் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.

எவருடனும் இன்முகத்துடன் பழகும் அன்னார் யாரையும் ஒருமுறை கண்டால் மறுமுறை சந்திக்கும்போது அவரை பெயர் சொல்லி அழைக்கும் அபார ஞாபக சக்தியைப் பெற்றவர்.

1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி தனது 80 ஆவது வயதில் இவ்வுலகைவிட்டு அன்னாரின் இன்னுயிர் பிரிந்தது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மறைந்த தலைவர்களுக்குப் பொதுவாக வருடத்தில் ஒருமுறைதான் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆனால் மகான் மர்ஹூம் பாக்கிர் மாக்காரின் பிறந்த தினத்தை வருடாந்தம் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் அதன் ஸ்தாபகத் தினமாக அனுஷ்டித்து வருகின்றது. அதேபோன்று அன்னாரின் மறைந்த தினத்தையொட்டி தேசிய ஒருமைப்பாட்டுக்கான பாக்கிர் மாக்கார் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நினைவு சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

நாட்டுக்கும் சமூகத்துக்கும் அழியாப் புகழ் தேடித்தந்த மர்ஹூம் தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கிர் மாக்கார் அவர்களின் நினைவு மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கம் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்.
-Vidivelli