Verified Web

ஜனநாயக போராட்டங்களை கேலிக்கூத்தாக்கிய பேரணி

2018-09-10 03:26:55 Administrator

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணியினர் கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி கொழும்பில் நடத்திய "மக்கள் பலம் கொழும்புக்கு" எனும் தலைப்பிலான அரசாங்க எதிர்ப்பு பேரணி தோல்வியில் முடிந்தது என்பதை அன்றைய தினமே உணர்ந்து கொள்ள முடியுமாகவிருந்தது.

குறித்த பேரணி மூலம் நாட்டுக்கோ சர்வதேச சமூகத்துக்கோ எந்தவித ஆக்கபூர்வமான செய்தியும் சொல்லப்படவில்லை. சர்வதேச ஊடகங்கள் இதனை "இலங்கையில் எதிரணியினர் வீதியை ஆக்கிரமித்தனர்" என்றே தலைப்பிட்டு செய்தியாக்கியிருந்தன. இதற்கு ஒரு போராட்டம் என்ற அந்தஸ்தைக்கூட  அவை வழங்கியிருக்கவில்லை.

அரசாங்கத்தை எதிர்க்கப் போகிறோம், ஆட்சியைக் கவிழ்க்கப் போகிறோம் என்றெல்லாம் கடந்த ஒரு மாத காலமாக ஊடக மாநாடுகளிலும் பொது நிகழ்வுகளிலும் பிரஸ்தாபித்து வந்த பொது எதிரணியினர் வரலாறு காணாத வகையில் 10 இலட்சம்பேரை கொழும்புக்கு கொண்டு வருவோம் என்றும் சவால் விட்டிருந்தனர். எனினும் 50 ஆயிரம் பேரளவிலேயே குறித்த பேரணியில் கலந்து கொண்டிருந்ததாக ஊடகங்கள் கணிப்பிட்டுள்ளன.

ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கெடுத்தவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் தாம் ஏன் இதில் கலந்து கொள்கிறோம் என்ற தெளிவற்றவர்களாக இருந்தமையும் கலந்து கொள்ளாதோர் ஏன் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தமையுமே இதன் தோல்விக்குக் காரணமாகும்.

பேரணியில் பங்கேற்க வந்த பலர் மது அருந்திவிட்டு வீதியின் நடுவிலும் நடைபாதைகளிலும் வீழ்ந்து கிடந்ததை சமூக ஊடகங்கள் படம்பிடித்துக்காட்டின. போதையின் உச்சத்திற்குச் சென்ற இருவர் வீதி மின்கம்பத்தின் உச்சியில் ஏறி நின்ற புகைப்படங்கள் இன்று அதிகம் நகைச்சுவைக் கதைகளோடு பகிரப்படுகின்றன.

குறித்த பேரணி காரணமாக அன்றைய தினம் கொழும்பில் அரச மற்றும் தனியார் துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்திருந்தது. வெளியிடங்களிலிருந்து வழக்கம் போல மக்கள் அன்று கொழும்புக்கு வரவில்லை. இதனால் வியாபாரம் கூட கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.  பாடசாலைகள், கல்வி நிலையங்கள் வழமை போன்று இயங்கவில்லை. இவற்றின் மூலமாக அன்றைய தினம் இழக்கப்பட்ட பெறுமதியான மனித மணித்தியாலங்களின் எண்ணிக்கை அளவிட முடியாததாகும். நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் செல்வதாக குற்றம்சாட்டிய பொது எதிரணியினர் 2018 செப்டம்பர் 5 இல் நடத்திய பேரணி மூலம் நாட்டின் பொருளாதரத்தில் பலத்த வீழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளனர்.

உண்மையில் இந்த பேரணியானது ஜனநாயகப் போராட்டங்களை கேலிக்கூத்தாக்கியிருக்கிறது என்பதே யதார்த்தமானதாகும். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் இதனையே குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்தில் பல தவறுகளை இழைத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பொருளாதார நெருக்கடி, விலையேற்றம், கடந்த கால ஊழல் மோசடிகளுக்கு எதிராக போதிய நடவடிக்கை எடுக்காமை,  அபிவிருத்திகளின்மை என பலதரப்பட்ட குறைபாடுகளுடனேயே இந்த அரசாங்கம் பயணிக்கிறது. இவற்றைச் சுட்டிக்காட்டி மக்கள் அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவது எதிரணியின் கடமைதான். எனினும் அதனைச் செய்வதற்கான போதிய தகுதி ராஜபக் ஷ சகாக்களிடம் இல்லை என்பதே இந்தப் பேரணியின் தோல்விக்கு காரணமாகும்.

இந்தப் பேரணி தோற்றுவிட்டது என்பதற்காக அரசாங்கம் தன்னில் குறைகளேதுமில்லை என அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. அரசாங்கம் இருக்கின்ற ஒன்றரை வருட காலத்திற்காவது மக்களுக்கு நன்மைகளைக் கொண்டுவரும் கொள்கைகளை, வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திடவுறுதி பூண வேண்டும்.

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
-Vidivelli