Verified Web

புதிய சிக்கல்கள்

2018-08-31 03:53:03 Administrator

எஸ்.றிபான்

மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் 139 வாக்­கு­க­ளினால் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. இச்­ச­சட்­டத்­திற்கு ஆத­ர­வாக யாரும் வாக்­க­ளிக்­க­வில்லை. இவ்­வ­றிக்­கையை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்த உள்ளூராட்சி, மாகாண சபைகள், விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­தபா கூட ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­வில்லை. அமைச்சர் ஒருவர் தான் முன்வைத்த ஒரு விட­யத்­திற்கு எதி­ராக வாக்­க­ளித்­தமை இதுவே முதற் தட­வை­யாகும். அத்­தோடு இலங்கைப் பாரா­ளு­மன்ற வர­லாற்றில் ஒரு வாக்­குத்­தானும் பெற்றுக் கொள்­ளா­த­தொரு அறிக்­கை­யா­கவும் இது­வுள்­ளது. மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்­ணய அறிக்கை தோல்வி கண்­டுள்­ள­மையால் மாகாண சபைக்­கான தேர்தல் இன்னும் கால­தா­மதம் ஆக­லா­மென்று தெரி­கின்­றது.

இதே வேளை, இந்த அறிக்கை தோல்வி கண்­டுள்­ள­மையால் எல்லாம் சரி­யாகி விட்­ட­தென்று கருத முடி­யாது. இதன் மூலம் மாகாண சபைத் தேர்­தலை விகி­தா­சார முறைப்­படி உட­ன­டி­யாக நடத்­த­லா­மென்று கூற முடி­யாது. கலப்பு தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு வகுக்­கப்­பட்ட எல்­லைகள் பற்­றிய அறிக்­கையே தோல்வி கண்­டுள்­ளது. ஆனால், மாகாண சபைத் தேர்­தலை கலப்பு முறை­யில்தான் நடத்த வேண்­டு­மென்ற சட்ட மூலம் இன்னும் அமுலில் உள்­ளது. விகி­சா­தார தேர்­தலின் அடிப்­ப­டையில் மாகாண சபைத் தேர்­தலை நடத்த வேண்­டு­மாயின் ஏற்­க­னவே நிறை­வேற்­றப்­பட்­டுள்ள சட்ட மூலத்தை இல்­லாமல் செய்ய வேண்டும். இதே வேளை, எல்லை நிர்­ணய அறிக்கை தோல்வியடைந்த கையுடன் இலங்­கையின் அர­சி­யலில் புதிய சிக்­கல்கள் தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளன.

மாகாண சபைத் தேர்தல்

விகி­த­சார முறையில் தேர்­தலை நடத்­து­வ­தனால் பண வீண்­வி­ரயம் செய்­யப்­ப­டு­கின்­றது. விருப்பு வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக ஒரு கட்­சியின் வேட்­பா­ளர்­க­ளி­டையே போட்­டி­களும், சண்­டை­களும் ஏற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. அத்­தோடு தெரிவு செய்­யப்­படும் பிர­தி­நிதி பொறுப்புக் கூறல் இல்­லா­த­தொரு முறை­யா­கவும் விகி­தா­சாரத் தேர்தல் உள்­ள­மையால் இதனை மாற்­றி­ய­மைக்க வேண்டும். இதற்கு பதி­லாக கலப்பு தேர்தல் முறையைக் கொண்டு வர வேண்­டு­மென்று பொது­வாக எல்லா அர­சியல் கட்­சி­க­ளி­னாலும் தெரி­விக்­கப்­பட்­டன.

இதற்கு அமை­வாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் காலத்தில் பல நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. இதற்­காக தினேஷ் குண­வர்­தன தலை­மையில் ஒரு குழுவும் அமைக்­கப்­பட்­டது. இதே வேளை 2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்­கமும் கலப்பு தேர்தல் முறையை  கொண்டுவர வேண்­டு­மென்று தெரி­வித்­தது.

கலப்பு தேர்தல் முறை சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தை பாதிக்கச் செய்­யு­மென்று தெரி­விக்­கப்­பட்­டது. இதனை சிறு­பான்மைக் கட்­சி­களோ, பெரும்­பான்மைக் கட்­சி­களோ காதில் போட்டுக் கொள்­ள­வில்லை. கடந்த 2017.09.20ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் மாகாண சபைத் தேர்தல் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி கலப்பு தேர்தல் முறையை அறி­முகம் செய்­வ­தற்­கு­ரிய சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் கொண்டுவரப்­பட்­டது. ஆத­ர­வாக 154 வாக்­கு­களும், எதி­ராக 43 வாக்­களும் அளிக்­கப்­பட்­டன. இதன் பிர­காரம் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் மாகாண சபைத் தேர்தல் சட்ட மூலம் நிறை­வே­றி­யது. இச்­சட்ட மூலத்தை கூட்டு எதி­ர­ணி­யினர் எதிர்த்­தனர். பாரா­ளு­மன்­றத்தில் கூச்சல் போட்டு குழப்பம் விளை­வித்­தனர்.  இதனால் அன்­றைய தினம் சபை 15 நிமி­டங்­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இச்­சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­பட்ட போது அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மிகவும் தீவி­ர­மாக தமது எதிர்ப்பைக் காட்­டி­யது. ஆயினும், இறுதி நேரத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­சிங்­கவின் தலை­யீட்டால் முஸ்லிம் காங்­கி­ர­ஸோடு இணைந்து மக்கள் காங்­கி­ரஸும் ஆத­ரவு அளித்­தது.

இவ்­வாறு சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட்­டாலும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தேர்தல் தொகு­தி­களை நிர்­ணயம் செய்ய வேண்டி ஏற்­பட்­டது. அதற்­காக ஒரு குழுவும் அமைக்­கப்­பட்­டது. இக்­கு­ழு­வினால் தயா­ரிக்­கப்­பட்ட எல்லை நிர்­ணய அறிக்­கையில் பல குறை­பா­டுகள் உள்­ளன. இதனை பொது­வாக எல்லா அர­சியல் கட்­சி­களும் ஏற்றுக் கொண்­டன.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்தில் எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் தோற்­க­டிக்­கப்­பட்டால் பிர­தமர் தலை­மையில் குழு­வொன்று அமைக்க வேண்­டு­மென்ற தீர்­மா­னத்­திற்கு அமை­வாக சபா­நா­யகர் 2017இன் 17ஆம் இலக்க மாகாண சபை திருத்தச் சட்­டத்தின் 4(12) மூலத்­திற்கு ஏற்ப எல்லை நிர்­ணய அறிக்­கையை மீளாய்வு செய்­வ­தற்­காக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐவர் அடங்­கிய குழு­வொன்றை சபா­நா­யகர் நிய­மித்­துள்ளார். இக்­குழு இரண்டு மாதங்­க­ளுக்குள் தமது மீளாய்வு அறிக்­கையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் வழங்க வேண்டும். அப்­போ­துதான் மாகாண சபைத் தேர்­தலை நடத்த முடியும்.

பாரா­ளு­மன்­றத்தில் எல்லை நிர்­ணய அறிக்கை தோல்வி கண்­டுள்­ள­தே­யன்றி மாகாண சபைத் தேர்­தலை கலப்பு முறையில் நடத்த வேண்­டு­மென்ற சட்ட மூலம் அமுலில் உள்­ளது. மாகாண சபைத் தேர்­தலை பழைய விகி­தா­சார அடிப்­ப­டையில் நடத்த வேண்­டு­மாயின் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் கலப்பு தேர்தல் முறையை இரத்துச் செய்யும் சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட வேண்டும். எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு எதி­ராக 139 வாக்­கு­களே அளிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் புதிய தேர்தல் முறையை இரத்துச் செய்­வ­தற்­கு­ரிய மூன்றில் இரண்டு (150 வாக்­குகள்) பெரும்­பான்மை கிடைக்­குமா என்ற சந்­தேகம் எழு­கின்­றது. இந்த சிக்­க­லுக்கு விடை காணாது எல்லை நிர்­ணய அறிக்­கையை தோல்­வி­யடைச் செய்து விட்­டோ­மென்று கூறிக் கொள்­வதில் அர்த்­த­மில்லை.

மூன்றில் இரண்டு தேவை

மாகாண சபைத் தேர்தல் சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்டு வரப்­பட்ட போது அது அர­சியல் யாப்­புக்கு எதி­ரா­ன­தென்று நீதி­மன்றம் தெரி­வித்­தது. இதனால், குறிப்­பிட்ட சட்ட மூலத்தை நிறை­வேற்­று­வ­தற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை தேவைப்­பட்­டது. குறிப்­பிட்ட சட்ட மூலம் தமிழ், முஸ்­லிம்­க­ளுக்கு பாதக நிலையை ஏற்­ப­டுத்தும் என்று தெளி­வு­ப­டுத்­திய போதிலும் தமிழ், முஸ்லிம் கட்­சிகள் ஆத­ரவு அளித்­தன.

மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட சட்ட மூலத்தை இரத்துச் செய்­வ­தாக இருந்தால் அதற்கும் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை தேவை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதே வேளை, அர­சியல் யாப்­புக்கு முர­ணான ஒரு விட­யத்­திற்கே மூன்றில் இரண்டு பெரும்­பான்மை தேவை. இச்­சட்ட மூலத்­திற்கு மூன்றில் இரண்டு தேவை­யில்லை. சாதா­ரண பெரும்­பான்­மை­யுடன் சட்ட மூலத்தை இல்­லாமல் செய்ய முடியும். இதன் மூல­மாக அர­சியல் யாப்பில் உள்ள முரண்­பாடு நீங்­கு­கின்­றது என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

இதே வேளை, அர­சியல் யாப்­புக்கு முர­ணாகக் காணப்­பட்ட கலப்பு தேர்தல் முறை மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேறும்போது அது அர­சியல் யாப்­புக்­கு­ரிய ஒன்­றா­கி­வி­டு­கின்­றது. ஆதலால், இதனை சாதா­ரண பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்ற முடி­யாது என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

சாணக்­கி­யத்தின் வெற்றி

இவ்­வாறு மாகாண சபைத் தேர்­தலில் பிரச்­சி­னைகள் உள்ள நிலையில் எல்லை நிர்­ணய அறிக்கை எங்­களின் சாணக்­கி­யத்­தி­னால்தான் தோல்­வி­யடைச் செய்­யப்­பட்­டுள்­ள­தென்று அர­சியல் இலாபம் தேடிக் கொள்ளும் பிரச்­சா­ரங்­களும் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக முன்னால் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதிர் அணி­யி­னரின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வ­தற்கு ரவூப் ஹக்­கீமே கார­ண­மாகும் என்று அதீத பிரசா­ரங்கள் சமூக இணை­ய­த­ளங்­களில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. மாகாண சபைத் தேர்தல் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் 2017.09.20ஆம் திகதி கொண்டு வரப்­பட்ட போது மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதிரணி­யினர் கடும் எதிர்ப்பைக் காட்­டி­னார்கள். அந்த அணி­யினர் எல்லை நிர்­ணய அறிக்­கைக்கும் எதி­ரா­கவே வாக்­க­ளிப்­பார்கள் என்­பதில் ஐயம் காண முடி­யாது. காகம் உட்­கார பனம்­பழம் விழுந்­துள்­ளது. அதற்­காக காகம் என்­னு­டைய பாரத்­தி­னால்தான் பனம்­பழம் விழுந்­துள்­ள­தென்று கூற முடி­யாது.

மேலும், மாகாண சபைத் தேர்தல் சட்ட மூலம், எல்லை நிர்­ணயம் ஆகி­ய­வற்றில் முஸ்லிம் காங்­கி­ரஸும், மக்கள் காங்­கி­ரஸும் சமூகம் சார்ந்த தமது கட­மை­களைச் சரி­யாகச் செய்­ய­வில்லை. அர­சாங்­கத்தின் நகர்­வு­களை ஒரு எல்­லைக்கு அப்பால் எதிர்க்கும் சக்தி முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு கிடை­யாது என்­ப­தனை முஸ்­லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முறைப்­பாடு

மாகாண சபைத் தேர்தல் முறைமை, எல்லை நிர்­ணய அறிக்கை ஆகி­யவை கார­ண­மாக அர­சாங்­கத்தின் பணம் வீண்­வி­ரயம் செய்­யப்­பட்­டுள்­ளது என்று அமைச்சர் பைஸர் முஸ்­தபா, அமைச்சின் செய­லாளர் மற்றும் எல்லை நிர்­ணய ஆணைக் குழுவின் தலைவர் கன­க­ரத்னம் தவ­லிங்கம் ஆகி­யோர்­க­ளுக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக் குழு­விடம் முறைப்­பாடு ஒன்று செய்­யப்­பட்­டுள்­ளது. சுமார் 212 இலட்சம் செல­வீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அந்த முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பதவி விலக வேண்டும்

இதே வேளை, அமைச்சர் பைஸர் முஸ்­தபா தவ­றுகள் உள்ள அறிக்­கையை சமர்ப்­பித்­தது மட்­டு­மல்­லாது அச்­சட்ட மூலத்­திற்கு தானும் எதிர்த்து வாக்­க­ளித்­துள்ளார். இதனால் அவர் தமது அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்ய வேண்­டு­மென்று கூட்டு எதிரணி­யினர் வலி­யு­றுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

பாரா­ளு­மன்­றத்தில் என்னால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையில் பல குளறு­ப­டிகள் உள்­ளன. அதனை ஏற்றுக் கொள்­கின்றேன்.  என்னை அமைச்சர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­மாறு சொல்­லு­கின்­றார்கள். அந்த அறிக்­கையை நான் தயா­ரிக்­க­வில்லை. எல்லை நிர்­ணய ஆணைக் குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கை­யையே நான் முன்வைத்­துள்ளேன். அது என்­னு­டைய அறிக்­கை­யில்லை என்று அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்­துள்ளார்.

பொறுப்புவாய்ந்த அமைச்சர் தான் முன் வைக்கும் அறிக்­கையில் தவ­று­களும், முரண்­பா­டு­களும் உள்­ளன என்று தெரிந்து கொண்டே அதனை பாரா­ளு­மன்­றத்தில் முன்வைத்­த­மையை ஏற்றுக் கொள்ள முடி­யாது. முஸ்லிம் காங்­கிரஸ், மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் தலை­வர்கள் எல்லை நிர்­ணய அறிக்­கையை ஏற்றுக் கொள்ள முடி­யாது. முஸ்­லிம்­க­ளுக்கு பாதக நிலை காணப்­ப­டு­கின்­ற­தென்று சுட்­டிக்­காட்­டிய போது அவர்­களின் இக்­க­ருத்­திற்கு எதி­ராக மிகக் கடு­மை­யாக விமர்­ச­னங்­களை முன்வைத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

எல்லை நிர்­ணய அறிக்கை தோல்வி அடையும் என்று முன் கூட்­டியே அறிந்து கொண்­ட­மையும், சிறு­பான்­மை­யினக் கட்­சிகள் ஓர் அணியில் நின்று எதிர்க்­கின்­ற­மை­யா­லுமே பைஸர் முஸ்­தபா தான் சமர்ப்­பித்த அறிக்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்­துள்ளார். அதா­வது நாங்­களும் சிறு­பான்­மை­யி­னரின் உணர்­வு­களை மதிக்­கின்றோம் என்று காட்­டு­வ­தற்­கா­கவே அவர் எதிர்த்து வாக்­க­ளித்­துள்ளார். எதிர்த்து வாக்­க­ளிக்கும் முடி­வினைக் கூட அவர் தனித்து எடுத்­தி­ருக்­க­மாட்டார். ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­னையின் பிர­கா­ரமே செய்­தி­ருப்பார். மேலும், தற்­போது பெரும்­பான்­மை­யினக் கட்­சிகள் சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆதலால், எல்லை நிர்­ணய அறிக்கை ஊடாக பெரும்­பான்மைக் கட்­சி­களும், சிறு­பான்மைக் கட்­சி­களும் அர­சியல் செய்து கொண்­டி­ருக்­கின்­றன.

அர­சியல் இலாபம்

எல்லை நிர்­ணய அறிக்­கையை முஸ்லிம் கட்­சிகள் சமூகம் சார்ந்­த­தாகக் காட்டிக் கொண்­டாலும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்­களில் அர­சியல் இலாபம் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. மாகாண சபைத் தேர்­தலில் எந்த மாற்றம் செய்­யப்­பட்­டாலும் அது சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்­காக செய்­யப்­படும் மாற்றம் என்று சிறு­பான்­மை­யினர் கருதிக் கொள்ளக் கூடாது. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கு பெரும்­பான்மைக் கட்­சிகள் விரும்­பு­வ­தில்லை. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அதி­கா­ரங்­களை வழங்கி பெரும்­பான்மை மக்­க­ளி­டையே தமது செல்­வாக்கை இழந்துவிடக் கூடா­தென்­பதில் பெரும்­பான்மைக் கட்­சிகள் உறு­தி­யாக உள்­ளன. ஆதலால், மாகாண சபையின் நொண்டிக் காலையும் உடைப்­ப­தற்கும், சிறு­பான்­மை­யி­னரை தங்­களில் தங்­கி­யி­ருப்­ப­தற்­கா­க­வுமே மாற்­றங்கள் கொண்டு வரப்­ப­டு­கின்­றன. அத்­த­கை­ய­தொரு நட­வ­டிக்­கையே மாகாண சபை தேர்தல் முறை மாற்­றமும், எல்லை நிர்­ண­ய­மு­மாகும். ஏற்­க­னவே மாகாண சபைத் தேர்தல் முறைக்கு வாக்­க­ளித்த முஸ்லிம் கட்­சிகள் தங்­களின் எஜ­மான்­க­ளா­கிய ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோர்­களை திருப்­திப்­ப­டுத்­தி­னார்கள். எல்லை நிர்­ணய அறிக்­கையை ஏற்றுக்கொண்டால் தங்­களில் அர­சியல் முற்­றாக மூழ்­கி­விடும் என்­ப­தற்­கா­கவே முஸ்லிம் கட்­சிகள் எதிர்க்­கின்­றன.

இதேவேளை, சிறு­பான்மைக் கட்­சி­களின் தலை­வர்கள் தங்­களின் கைக­களில் உள்ள கறைகள் கார­ண­மாக அர­சாங்­கத்தின் அனைத்து சட்ட மூலங்­க­ளையும் கண்­களை மூடிக் கொண்டு ஆத­ரவளித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆத­ரவளித்­ததன் பின்னர் அர­சாங்கம் எங்­களை ஏமாற்றி விட்­ட­தென்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மொத்­தத்தில் பெரும்­பான்மைக் கட்­சி­களும், சிறு­பான்மைக் கட்­சி­களும் தங்­களின் அர­சியல் இலா­பத்­திற்­கா­கவே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. மாறாக அவற்றின் நட­வ­டிக்­கை­களில் நாட்­டுப்­பற்றோ, சமூ­கப்­பற்றோ, இன ஐக்­கிய உணர்வோ கிடை­யாது.இதே வேளை, மாகாண சபை­க­ளுக்­கு­ரிய தேர்தல் 50வீதம் தொகு­தி­வா­ரி­யா­கவும், 50வீதம் விகி­தா­சாரப் படியும் மக்கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்யும் வகையில் நடக்­கு­மாயின் பாரா­ளு­மன்ற தேர்­தலும் கலப்பு முறையில் நடப்­ப­தற்கு வாய்ப்­புக்கள் உள்­ளன. பாரா­ளு­மன்ற தேர்தல் கலப்பு தேர்தல் முறையில் நடக்­கு­மாயின் தமிழ், முஸ்லிம், சிங்­கள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல­ருக்கு தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தொகு­திகள் கிடைக்­காது போய்­விடும். இத­னால்தான் தாம் ஆத­ரவளித்த தேர்தல் முறை­மையில் மாகாண சபைத் தேர்­தலை நடத்தக் கூடா­தென்றும், விகி­தா­சார அடிப்­ப­டை­யி­லேயே தேர்­தலை நடத்த வேண்­டு­மென்று கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

உள்­ளூராட்சி சபை­களின் தேர்தல் தமிழ், முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளுக்கு மாத்­தி­ர­மின்றி பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுக்கும் பாத­க­மா­கவே அமைந்­துள்­ளன. இந்த அனு­ப­வத்தை முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் பெற்­றுள்­ளார்கள். நெருப்பை தொட்டுப் பார்த்து சுடு­கின்­றது என்று சொல்லும் நிலை­யி­லேயே முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் அர­சியல் நட­வ­டிக்­கைகள் அமைந்­துள்­ளன. உள்­ளன.

இதே வேளை, கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தல் நடை­பெற்றால் மாகாண சபை­களில் 43ஆக உள்ள முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் எண்­ணிக்கை 13ஆகக் குறைந்­து­விடும். 30 பிர­தி­நி­தி­களை இழக்க வேண்­டி­யேற்­படும் என பாரா­ளு­மன்­றத்தில் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார். எல்லை நிர்­ணயம் அவ்­வாறு முஸ்­லிம்­க­ளுக்கு அநியாயம் ஏற்­படும் வகையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் மாகாண சபை­க­ளுக்­கு­ரிய தேர்தல் எதிர்­வரும் 2019 ஜன­வரி மாதம் அளவில் நடக்­காது என்­ப­தற்­கு­ரிய கருக்­களே அதி­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

எல்லை நிர்­ணய மீளாய்வு

இதே வேளை, பாரா­ளு­மன்­றத்தில் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்ள எல்லை நிர்­ணய அறிக்­கையை மீளாய்வு செய்து மீண்டும் முன் வைக்­கப்­பட்­டாலும் அத­னையும் பாரா­ளு­மன்­றத்தில் உள்ள பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்கள் எதிர்க்­கவே செய்­வார்கள். எல்லை நிர்­ணய அறிக்­கையை தோல்வி அடையச் செய்­துள்­ளமை ஊடாக கலப்பு தேர்தல் முறையை சிறு­பான்மைக் கட்­சிகள் எதிர்த்­துள்­ளன என்­பதே அதன் அர்த்­த­மாகும்.

இதே வேளை, சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தை பாதிக்­காத வகையில் எல்லை நிர்­ணயம் செய்­துள்ளோம் ஆத­ரவு தாருங்கள் என்று கேட்டால் சிறு­பான்மைக் கட்­சிகள் என்ன செய்யும் என்று நிச்­ச­யிக்க முடி­யாது. பொது­வாக உள்­ளூராட்சி சபைத் தேர்தல் முடி­வு­களின் அடிப்­ப­டையில் பார்க்­கின்றபோது கலப்பு தேர்தல் முறை வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ், முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் எண்­ணிக்­கையில் வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்­த­வில்லை. ஆனால், கட்­சி­களின் தனிச் செல்­வாக்கில் வீழ்ச்­சியை ஏற்படுத்தியுள்ளது. பல உள்ளூராட்சி சபைகளில் அதிகாரங்களை தனித்துப் பெற்றுக் கொள்வதில் அரசியல் கட்சிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கட்சியின் தலைவர்களும், அமைச்சர்களும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சாதாரண ஒரு உறுப்பினரின் கோரிக்கைகள், தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கும், அவருக்கு பணிந்து செல்வதற்குமுரிய சூழலை கலப்பு தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத்திற்காக ஒரு உறுப்பினருக்கு 50 இலட்சம் முதல் வேறு தேவைகளும் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டன. அந்தளவிற்கு மிக மோசமான நிலையை கலப்பு தேர்தல் முறை கொண்டு வந்துள்ளது.

இவ்வாறு விகிதாசாரத் தேர்தல் முறையை விடவும் அதிக பணச் செலவீடும், குளறுபடிகளும், செல்வாக்கு இழப்புக்களும், சாதாரண உறுப்பினர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள மவுசு காரணமாக அர்த்தராத்திரியில் குடை பிடிக்கும் நிலைமையையும் தோற்றுவித்துள்ள கலப்பு தேர்தல் முறையை எந்த வகையிலும் சிறுபான்மைக் கட்சிகள் ஆதரிக்கக் கூடாது. அத்தோடு சிறுபான்மையினரின் முதுகில் பயணித்து ஆட்சி அமைத்துக் கொண்ட நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் சிறுபான்மையினரின் அரசியல் இருப்புக்கு வேட்டு வைக்கும் கலப்பு தேர்தல் முறைமையை முற்றாக கைவிட வேண்டும். விகிதாசாரத் தேர்தல் முறைமையில் உள்ள குறைபாடுகளை நீக்கி அதனை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்தோடு மாகாண சபைத் தேர்தலை காலதாமதம் செய்யாது 2019 ஜனவரிக்கு முன்னதாக தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டும்.
-Vidivelli