Verified Web

அதிகரிக்கும் போதை களியாட்ட கலாசாரம்

2018-08-29 01:11:49 Administrator

நாட்டில் போதைப் பொருள் பாவனையுடன் கூடிய களியாட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதும் இக் கலாசாரம் வேகமாகப் பரவி வருவதும் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் தொடர்பில் பலத்த அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

கடந்த வார இறு­தியில் கல்­கிசை பகு­தியில் இடம்­பெற்ற இவ்­வா­றான நிகழ்­வொன்றில் பங்­கேற்ற சுமார் 30 இளைஞர் யுவ­திகள் போதைப் பொருட்­க­ளுடன் பொலி­சா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர்  வாதுவ, கடற்கரை ஹோட்டலொன்றில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டவர்களில் சுமார் 30 பேர் திடீரென சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் நால்வர் மரணித்தமை ஞாபகமிருக்கும்.  20, 38, 28 மற்றும் 36 வயதுகளையுடையவர்களே இவ்வாறு மரணித்திருந்தனர்.

இவ்வாறான களியாட்ட நிகழ்வுகள் சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டே ஏற்பாடு செய்யப்படுகின்றன.  இதற்காக ஆயிரக் கணக்கான ரூபா கட்டணமும் அறவிடப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் நடைபெறுவது புதிதல்ல. கடந்த பல வருடங்களாக நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு ஹோட்டல்களிலும் இவ்வாறான போதையுடன் கூடிய களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. கடந்த  மே மாதம் ஹிக்கடுவை கடற்கரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் போதைப் பொருள் பயன்படுத்திய 19 இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோன்று  கடந்த வருடம் பதுளையில் உள்ள ஒரு ஹோட்டலில் இவ்வாறான நிகழ்வு நடைபெற்ற சமயம் அதில் கலந்து கொண்ட 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 200 இளைஞர் யுவதிகளை பொலிசார் கைது செய்திருந்தனர். இவர்களில் அப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இவர்களிடமிருந்து 6500 மில்லி கிராம் கஞ்சா, 1195 மில்லி கிராம் ஹெரோயின் உட்பட போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டிருந்தன.

இவ்வாறு நாளுக்கு நாள் இந்த நாட்டின் இளைஞர் யுவதிகள் மத்தியில் போதைப் பொருள் பாவனையைத் தூண்டுவதற்கான நிகழ்வுகள் மிகப் பகிரங்கமாகவே நடைபெற்று வருகின்றன. வாதுவையில் நடைபெற்ற நிகழ்வு கூட ஒரு விளம்பர முகவர் நிறுவனத்தினால் சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரங்கமாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறெனில் இந்த சட்டவிரோத நிகழ்வை முன்கூட்டியே தடுத்து நிறுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம், பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன. போதை வியாபாரிகள் தமது போதைப் பொருட்களை சந்தைப்படுத்தவும் போதைப் பொருள் பாவனையாளர்களை புதிதாக உருவாக்கும் நோக்கிலுமே இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றனர். இவற்றுக்கு பொலிசாரும் துணைபோகின்றனர்.

இந்த நாட்டின் எதிர்கால சமூகத்தை போதையின் பிடியிலிருந்து மீட்டெடுக்க அரசாங்கம், பாதுகாப்புத் தரப்பினர், அதிகாரிகள், மத தலைவர்கள், பெற்றோர், வர்த்தகர்கள் , பொது மக்கள் என சகல தரப்பினரும் இதய சுத்தியுடன் கைகோர்த்துச் செயற்படாதவரை நமது எதிர்கால சந்ததியை ஒருபோதும் காப்பாற்ற முடியாது.

அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்பு தரப்பினதும் எதிர்காலங்களில் இவ்வாறான போதைக் களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதைத் தடுக்க முன்வர வேண்டும். அத்துடன் அவற்றுக்கு அனுமதி வழங்க முடியாதவாறு சட்டத்தையும் இறுக்கமாக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli