Verified Web

கற்பிட்டி சுற்றுலா அபிவிருத்திச் செயற்திட்டமும் தீவுகளில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களும்

2018-08-28 04:53:18 Administrator

ஜமாலியா சலீம்
அரசறிவியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

 

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளுள் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். ஆரம்பகாலம் முதலே சுற்றுலாத்துறைப் பயணிகளைக் கவர்ந்தெடுக்கும் ஒரு தீவாக இலங்கை காணப்படுகின்றது. கடந்த முப்பது வருடகால சிவில் யுத்தத்தின் பின்னர் இலங்கையின் மிகவும் துடிப்பான துறையாக இச்சுற்றுலாத்துறை மாறியது. ‘மஹிந்த சிந்தனை' தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்  இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா அபிவிருத்திச் செயற்றிட்டமாக கற்பிட்டி ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்திச் செயற்றிட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதற்கென கற்பிட்டி தீபகற்பத்திலுள்ள பதினான்கு தீவுகளை இலங்கையின் அரசாங்கமும், இலங்கை சுற்றுலா சபையும் (Ceylon Tourism Board (CDB))  2004ஆம் ஆண்டு கையகப்படுத்திக் கொண்டது.

2004ஆம் ஆண்டு அமைச்சரவை இதுகுறித்த தெளிவான முடிவிற்கு வந்தது. இத்தீர்மானத்தின்படி, 4000 ஏக்கர் தனியார் நிலப்பரப்பு அரசுைடமையாக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு Tourism Act No 38.of 2005  கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் மீனவர்களின் நிலங்களை வாங்குவதற்கான ஏற்பாடு முன்மொழியப் பட்டது. 2007, 2008ஆம் ஆண்டளவில் கற்பிட்டி பிரதேசமானது சுற்றுலாத்துறை வலயமாக வர்த்தமானி அறிவிப்பு இலக்கம்No 1508/18, No 1549/7 முறையே ஆகஸ்ட் 07, 2007 மற்றும் மே 13, 2008 ஆகிய திகதிகளில் வெளியி டப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் கற்பிட்டி ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்திச் செயற்றிட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் அமுல்படுத்தப்பட்டன. ((SLTDA, 2016).

இருப்பினும், இத்திட்டத்தினை முன்னாள் ஜனாதிபதியால் பூரணத்துவப்படுத்த முடியவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் அவருடைய ஆட்சிக் காலப்பகுதி எதிர்நோக்கிய அரசியல் ரீதியான தடைகளாகும். இதனால் அண்ணளவாக 2014ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதி தொடக்கம் 2017ஆம் ஆண்டு நடுப்பகுதி வரைக்கும் இச்செயற்றிட்டத்தின் வேலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. 2015ஆம் ஆண்டிற்குப் பின் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தமது அமைச்சரவைத் தீர்மானங்கள் (2017.05.16) அறிக்கை விடய இலக்கம் 11இற்கு அமைய மீண்டும் இத்திட்டத்தினை செயற்படுத்த முன்வந்தது.  இதன்படி 2020 ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறையின் வருமானத்தை 4.5 மில்லியனாக அதிகரிப்பதை நோக்காகக் கொண்டு கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 56.35 ஹெக்டேயர் இடப்பகுதியினை 05 பாகங்களாக, சுற்றுலா அதிகார சபைக்கு கையளிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதன் பிரகாரம் இடைநிறுத்தப்பட்ட செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியது.

கற்பிட்டி தீபகற்பமானது வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொழும்பிலிருந்து கற்பிட்டி தீபகற்பத்திற் கான தூரம் அண்ணளவாக 150 கிலோ மீற்றராகும். கற்பிட்டியில் சுமார் 67,352 மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 12,967 மக்கள் பிரிவினர் மீன்பிடித் தொழிலாளர்களாகவும், 25சதவீதமான பெண்கள் மீன்பிடி தொடர்புடைய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரதேசத்தில் பெரும் பான்மையாக கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களும், குறிப்பிட்டளவு எண்ணிக்கையான தமிழர்களும் வாழ்ந்து வருகின்றனர். ரோமன் கத்தோலிக்கம் மற்றும் இஸ்லாம் என்பன முதன்மை மதங்களாகக் காணப்படுகின்றன (கற்பிட்டி பிரதேச சபை கணக்கெடுப்பு, 2016).

இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா அபிவிருத்திச் செயற்றிட்டமாக கற்பிட்டி ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்திச் செயற்றிட்டம் கருதப்பட்டாலும் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தீவுகளில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் இடமாற்றல் ((Relocation)செய்யப்பட்டனர். அண்ணளவாக 2500 குடும்பங்கள் (நிரந்தர மற்றும் தற்காலிக வதிவிடம்) இத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டன. (IFFM 2011).

கற்பிட்டி ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தி செயற்றிட்டத்தை அமுல் படுத்துவதற்கான தீர்மானம் 2004ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதையடுத்து இப்பதினான்கு தீவுகளையும் கையகப் படுத்தும் செயற்பாட்டில் இலங்கையின் அப்போதிருந்த அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்திருந்தது. இதன் முதற்கட்டமாக கற்பிட்டி தீவுகளுக்குப் பொறுப்பான கிராம சேவகர் உட்பட சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவரை அத்தீவுகளுக்கு அனுப்பி வைத்தது. சிறிது காலம் கழித்து அப்போதைய பொருளாதார பிரதி அமைச்சராகக் கடமையாற்றிய  லக் ஷ்மன் யாபா  இத்தீவுகளில் வாழ்ந்த மக்களுக்குப் பொதுக்கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதனையடுத்து 2004ஆம் ஆண்டு அரசாங்கம் இந்நிலங்களில் இராணுவத்தினரைக் குடியமர்த்தியது. இத்தீவுகளில் இருந்து மக்களை வெளியேற்ற அரசாங்கம் கைக்கொண்ட முதலாவது தந்திரோபாயமென இதனை பின்னர் தான் மக்கள் அறிந்து கொண்டனர். நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்தவித கேள்விகளும் கேட்க முடியாது எனக் கருதிய இம்மக்களில் பலர் தாமாகவே இத்தீவுகளை விட்டு வெளியேற முற்பட்டனர்.

ஆனால், காலப்போக்கில் இத்தீவுகளில் இருந்த இராணுவத்தினரின் செயற்பாடுகளில் மாற்றம் அவதானிக்கப் பட்டது. இவர்கள் இராணுவப் பாதுகாப்புப் பலகைகளைக் கழற்றிவிட்டு சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட அரசாங்கப் பலகைகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இதனை அவதானித்த மக்கள் தம்மை அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டிருப்பதனை உறுதிப்படுத்திக் கொண்டனர். இதனால் மீண்டும் தம் சொந்த வீடுகளுக்கு வந்து குடியேறினர். இதனைத் தொடர்ந்து மக்களின் பலமான எதிர்ப்பு அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது. இவர்களுடன் மீனவச் சங்கங்கள் பலவும், அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் இணைந்து கோஷம் எழுப்பியதால் அரசாங்கத்திற்கு இவர்களை எதிர்த்து தம் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது கடினமாகவிருந்தது.

இதனால்  பேச்சுவார்த்தைக்கான செயற்பாடுகளைக் கையாள முற்பட்டனர். இதன் முதற்கட்டமாக இத்தீவுகளுக்குப் பொறுப்பான கிராம சேவகர் மூலம் இத்திட்டத்திற்கான இவர்களின் அனுமதியைப் பெறும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எச்சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் தமது செயற்றிட்டம் குறித்து நேரடியாக இம்மக்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கவில்லை. இம்மக்களில் பெரும்பாலானோர் இத்திட்டம் குறித்து அறிந்திருக்கவில்லை. இருப்பினும், இம்மக்கள் எடுத்த எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அரசாங்கம் தொடர்ந்தும் இம்மக்களை வேறிடங்களுக்கு இடமாற்றுவதிலே தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இறுதியாக அரசாங்கம் இவர்களுக்கு கற்பிட்டி நிருவாக அலகிற்குட்பட்ட பகுதிகளில் நிலங்களை வழங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனால் இம் மக்களும் தம் நிலங்களை ஒப்படைக்க முன்வந்தனர். ஆனால், அவர்கள் பல கோரிக்கைகளை அரச தரப்பிடம் முன்வைத்திருந்தனர். அரசாங்கமும் இவர்களின் கோரிக்கை களை நிறைவேற்றித் தருவதாக வாக்களித்திருந்தது.

அந்தவகையில், இக்கற்பிட்டி சுற்றுலா ஒருங்கிணைந்த அபிவிருத்திச் செயற்றிட்டத்தினால் இத்தீவுகளில் வாழ்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களின் கருத்துப்படி, ‘அரசாங்க அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் பல காகிதத்தில் மாத்திரமே காணக்கூடியதாக இருந்தன. செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் தாம் இதனால் இன்று பல்வேறு சவால்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்" எனக் குறிப்பிட்டிருந்தனர். அதே சமயம் அரசாங்க அதிகாரிகளும் இம்மக்களுக்கு அடிப்படையில் பல சவால்கள் காணப்படுவதாக உறுதிப்படுத்தியிருந்தனர். இதனால் இம்மக்கள் இன்று வாழிடம், வாழ்வாதாரம், போக்குவரத்து, சூழலியல், சுகாதாரம், கல்வி, சமூக மற்றும் கலாசார ரீதியான சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டது.

வாழிடம் தொடர்பான சவால்கள் என்ற வகையில் காணி உறுதி தொடர்பான சவால்கள், முறையான வீடற்ற தன்மை, நில ரீதியான பற்றாக்குறை போன்றனவும், வாழ்வாதாரம் தொடர்பான சவால்கள் எனும் போது கடற்றொழில் சார்ந்த சவால்கள், கால்நடை வளர்ப்பு சார்ந்த சவால்கள் மற்றும் தோட்டப் பயிர்ச்செய்கை சார்ந்த சவால்கள் போன்றனவும், போக்குவரத்து சார்ந்த சவால்கள் எனும்போது, போக்குவரத்திற்கான தூரம் மற்றும் செலவீனங்கள் தொடர்பிலான சவால்கள் போன்றனவும், சூழலியல் சார்ந்த சவால்கள் எனும் போது இயற்கை அனர்த்தங்கள், தூசு வெளியாகுதல் மற்றும் கொசுத்தொல்லை போன்றனவும், சுகாதாரம் தொடர்பான சவால்கள் எனும்போது சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாமை, ஊட்டச்சத்து குறைபாடு, கழிவறைகளின் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாமை மற்றும் அதிகரித்த மன அழுத்தம் என்பனவும், கல்வி ரீதியான சவால்கள் எனும்போது பாடசாலைகளின் இடப்பற்றாக்குறை, பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கான அதிகரித்த செலவீனம், பிள்ளைகளின் சமூகமயமாக்கல் செயன்முறையில் காணப்படும் தடங்கல் மற்றும் பாடசாலை இடைவிலகல் என்பனவும், சமூக மற்றும் கலாசார ரீதியிலான சவால்கள் எனும்போது, வறுமை, சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்படுதல், சமூக மற்றும் கலாச்சார ரீதியிலான சீரழிவுகள் போன்றனவும் கண்டறியப்பட்டது.

காணி உறுதிகள் தம் கைவசம் இல்லாததால் எந்த சந்தர்ப்பத்திலும் தம்மை மீண்டும் அரசாங்க அதிகாரிகள் வெளியேற்ற முடியும் எனும் அச்சம் இம்மக்களிடம் காணப்படுகின்றது. அதேசமயம் பல்லாண்டு காலம் இம்மண்ணில் இவர்கள் வாழ்ந்தாலும் காணி உறுதிகள் தம் கைவசம் இல்லாததால் தமது வீடுகளை வசதியாகக் கட்டிக் கொள்ளவோ, பெருப்பித்துக் கொள்ளவோ முடியவில்லை. காணி உறுதிகள் வழங்கப்படாததால் பல சந்தர்ப்பங்களில் தமது எல்லையைத் திட்டவட்டமாக அடையாளப்படுத்திக் கொள்வதில் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்ள வேண்டியிருப்பதாக இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் குறிப்பிடும் போது, ‘இக் குடிசைகள் பலகையினாலும், தகரத்தினாலுமே அமைக்கப்பட்டிருப்பதால் வெயில் காலங்களில் அதிகரித்த வெப்பமும் அதேபோல் மழை காலங்களில் வீடுகளுக்குள் நீர் வருவதால் தமக்கு கடும் அசௌகரியமாகக் காணப்படுவதாகவும்,  தமது வீடுகள் கடற்கரையை அண்மித்துக் காணப்படுவதால் சில சமயங்களில் கடல் மட்டம் அதிகரிக்கும் போதும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி விடுகின்றன. அதுமாத்திரமன்றி, இக் குடிசைகள் மிகவும் சிறியதாகவிருப்பதால் மூன்றிற்கு மேற்பட்டோர் தங்குவது கடினமாகவிருப்பதாகவும்” இவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

கற்பிட்டி மீன்பிடிச் சங்கத் தலைவர் குறிப்பிடும் போது, ‘உலர்ந்த மீன் உற்பத்தி என்பது எம்மக்களின் வாழ் வாதாரத்தில் பாரிய வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு தொழில் முறையாகும். தீவுகளில் இருந்தபோது எங்களால் ஒரு நாளைக்கு 500 – 600 கிலோ கிராம் உலர்ந்த மீன்களை உற்பத்தி செய்ய முடிந்தது. இத் தொழிலை முறையாக செய்வதற்கு அப்போது எம்மிடம் பரந்த நிலப்பரப்பு காணப்பட்டது. ஆனால், இச்சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தினால் எமக்கு பிரத்தியேகமாக மீன்களை உலர வைப்பதற்கு நிலம் வழங்கப்படவில்லை. இத்தகைய நிலப்பற்றாக்குறை எம்மக்களிடையே வாழிடம் சார்ந்த சவாலை மாத்திரமன்றி வாழ்வாதாரம் சார்ந்த சவாலையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் எமது அந்நிய செலாவணி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்கின்றது" எனவும் குறிப்பிட்டிருந்தார். இம்மக்களுக்குப் பொறுப்பான கிராம சேவகர் குறிப்பிடும் போது, ‘இம்மக்களின் கடல் தொழில் சார்ந்த துறையில் பிறிதொரு முதலீட்டினைப் பெற்றுத் தரும் தொழிலாக இறால் வளர்ப்பு காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இம்மக்கள் சுதந்திரமாக இவ் இறால்களை பிடித்து வந்தாலும் இத்திட்டத்தின் பிற்பாடு எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும் பிடிக்க முடியவில்லை. குறிப்பாக, பெப்ரவரி, செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இறால் பிடிப்பது இவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இக்காலத்தில் இக்கடற்பரப்புக்களில் பயணித்து வருவதால் போக்குவரத்துசார் இடைஞ்சலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் விதித்த ஒரு விதிமுறையாகும்” என குறிப்பிட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் பலர் குறிப்பிடும் போது, ‘தாம் குடியேற்றப்பட்டுள்ள பகுதிகளில் முறையான பாதை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. தாம் அன்றாடப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக அதிகளவு தூரம் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இரவு நேரங்களில் மின்சார வசதிகள் இல்லாததால் விஷமூட்டும் பிராணிகள் நடமாடுவதை தம்மால் இனங்கண்டு கொள்வது கடினமாகவிருப்பதால் மிகுந்த அச்சத்துடனே தாம் பயணிக்க வேண்டியிருப்பதாகவும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.”

 

NAFSO  2016ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, பல்வேறுபட்ட சூழலியல் சார்ந்த சவால்கள் இனங்காணப்பட்டன.

குறிப்பாக, இத்திட்டத்தினால் இயற்கை மணல் குன்றுகள், பவளப்பறைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், நீர் மாசடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடி நீர் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், இவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ள இடத்தில் அதிகரித்த கொசுத் தொல்லை காணப்படுவதாகவும், அடிக்கடி கடற் பகுதிகளில் ஏற்படும் கடல் மட்டம் அதிகரித்தல் செயற்பாட்டினால் இவர்களின் இருப்பிடங்களுக்கு வெள்ளப்பெருக்கு மற்றும் புயற் காற்று வீசுவதாகவும் கண்டறியப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களின் கருத்துப்படி, ‘தொழில் ரீதியாக ஏற்பட்ட சவால்கள் அனைத்தும் மறுபுறம் எம்மை பாரிய வறுமை நிலைக்கு மாற்றியது. அதிகரித்த செலவினம், கடன் சுமை, வேலையில்லாப் பிரச்சினை என்பன வறுமையை இயல்பாகவே உண்டு பண்ணியிருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.” அதிகரித்த வறுமையால் முறையான உணவு வகைகளை தங்களால் உட்கொள்ள முடியவில்லை.

இதனால் ஊட்டச்சத்து குறைபாடு, வயிற்றுளைவு மற்றும் வாந்திபேதி போன்ற நோய்களுக்கு தம்மில் பலர் அடிக்கடி முகங்கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.” இம்மக்கள் எதிர்நோக்கும் மற்றொரு முக்கிய சவாலாக கல்வி காணப்படுகின்றது. இவர்கள் தரம் 6 வரை மாத்திரமே தீவுகளில் இருந்த பாடசாலைகளில் கல்வி கற்க முடிந்திருந்தது. மேலதிக கல்வியைத் தொடர இவர்கள் எவ்வாறேனும் கல்பிட்டி பிரதேச சபைகளில் உள்ள உயர்தர பாடசாலைகளுக்கு வர வேண்டியுள்ளது.

அந்தவகையில், பெரும்பாலான மக்களின் கருத்துப்படி, ‘இத்திட்டம் அவர்களுக்கு திருப்தியாகவில்லை என்றே குறிப்பிடுகின்றனர். அரசாங்கம் தமக்கு வாக்களித்தது போல் பண உதவியையோ, முறையான வீடுகளையோ கட்டித் தரவில்லை. இதனால் நாம் இன்று வாழ்விடம், வாழ்வாதாரம், சூழலியல், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மற்றும் பாதுகாப்பு சார்ந்து பல சவால்களுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும், மேலும், இடமாற்றலின் போதும் தம்மை நாகரிகமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடத்தவில்லை” என்றும் இவர்கள் குறிப்பிடுகின்றனர். இத்திட்டத்திற்குப் பின்னர் இவர்களுக்கு செய்து தருவதாகக் கூறப்பட்ட பல வாக்குறுதிகள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. சுற்றுலா அபிவிருத்தித் திட்டப்பணிகள் ஆரம்பமாகி ஒரு வருடமாகியும் இதுவரை இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அத்திவாரத்திற்கான அடிக்கல் மாத்திரமே நடப்பட்டிருக்கின்றது இப்பகுதி மக்களை மேலும் விரக்தி நிலைக்குத் திருப்பியுள்ளது. இவர்களுக்குச் சுத்தமான குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. முறையான கழிவறைகளும் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இவர்களின் மீன்பிடிசார் தொழில்களுக்குத் தேவையான பணவுதவிகளையும் அரசாங்கம் இதுவரை பெற்றுக் கொடுக்கவில்லை. போக்குவரத்தை இலகுபடுத்த முறையான பாலங்களும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.

ஆகவே, மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்கும் போது, இத்திட்டத்தினால் முறையான வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என்பது தெளிவாகின்றது. அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படுகின்ற பாதிப்புக்களின் போது சம்பந்தப்பட்ட தரப்பினர் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என சர்வதேச கொள்கை வழிகாட்டல்கள் பரிந்துரை செய்கின்றன. ஆனால், இத்திட்டத்தில் இலங்கையின் அரசாங்கம் இக்கொள்கை வழிகாட்டல்களைப் பயன்படுத்தாமை தெட்டத் தெளிவாகின்றது. இவர்கள் முறையான வழிமுறைகளைக் கையாண்டிருப்பின் இவ்வளவு தூரம் இம்மக்கள் இத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கத் தேவையில்லை என்பதே உண்மை.

எந்தவொரு முன்னேற்றத்துக்கும் சில நிபுணத்துவம் தேவை. ஆனால், இத்திட்டத்தினூடே இலங்கையின் அரசாங்க அதிகாரிகள் அந்நிபுணத்துவத்தை முறையாகக் கையாளவில்லை என்பது தெளிவாகின்றது. வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வாய் வார்த்தைகளில் மாத்திரமே காணப்படுகின்றது. மாறாக, நடைமுறையில் அவதானிக்க முடியவில்லை. வெறுமனே அபிவிருத்தித் திட்டங்களை மாத்திரம் திட்டமிட்டு செயற்படுத்தியுள்ளனரே தவிர அதனால் வரும் பாதிப்புக்கள் குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. உலகளவில் பயன்படுத்தப்படும் நடைமுறைகளை மறுத்துவிட்டு தாம் நினைப்பது தான் அபிவிருத்தி என்று இவர்கள் இத்திட்டத்தில் செயற்பட்டிருக்கின்றனர். இத்திட்டத்தில் இலங்கையின் அரசாங்கம் கொள்கை மற்றும் நடைமுறைப்படுத்தல் என்ற இரு விடயங்களிலும் தோல்வியையே அடைந்துள்ளனர்.

ஆகவே, இங்கு தெளிவாக அடையாளம் கண்டு கொண்ட  விடயம் யாதெனில் இத்திட்டத்தினூடே அரசாங்கம் முறையான கொள்கை வழிகாட்டல்களைப் பயன்படுத்தவில்லை. நாட்டின் பொருளாதாரத்தில் மாத்திரமே கவனம் செலுத்தியுள்ளது. மாறாக, நாட்டு மக்களின் நலன்கள் குறித்து கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒட்டு மொத்தத்தில் பொறுப்புணர்ச்சியற்ற நிருவாகிகளாகச் செயற்பட்டிருக்கின்றனர். இதனால்தான் இன்றுவரை இம்மக்கள் இத்தகைய பல சவால்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர் என்பது தெளிவாகின்றது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுடனான மறைமுக தொடர்பாடல்களைத் தவிர்த்து நேரடியாக அம்மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிய முயற்சிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் முடிந்தவரை இம்மக்கள் வேறு தொழில் முறைகளைக் கற்றுக் கொள்வதற்காக பயிற்சிகளை வழங்கியோ அல்லது சிறிதளவு முதலைக் கொடுத்தோ உற்சாகப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்கட்டமைப்புசார் வசதிகளான குடி நீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, கழிவறைகள், மதநிலையங்கள் போன்றவற்றை தாமதப்படுத்தாமல் முடிந்தவரை அவசரமாக செய்து கொடுக்க முயற்சிக்க வேண்டும். எனவே, இது போன்ற பரிந்துரைகளைக் கையாளும் போது இத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீண் சவால்களை ஓரளவிற்கேனும் தவிர்க்க முடியும்.
-Vidivelli