Verified Web

முன்மாதிரிமிக்க ஆளுமை பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்

2018-08-27 03:25:35 Administrator

ஹஜ் பெருநாள் விடு­மு­றை­யிலும் கொண்­டாட்­டங்­க­ளிலும் இலங்கை முஸ்­லிம்கள் திளைத்­தி­ருந்த நிலை­யில்தான் நேற்று முன்­தினம் காலையில் பேரா­சி­ரியர் எஸ்.எச். ஹஸ்­புல்லாஹ் அவர்கள் மர­ணித்த அந்தக் கவ­லையும் அதிர்ச்­சி­யு­மிக்க செய்தி எம்மை வந்­த­டைந்­தது.

மாகாண எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்கை அதற்கு முந்­திய தினம்தான் பாரா­ளு­மன்­றத்தில் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதற்கு ஆத­ர­வாக ஒரு வாக்கு கூட அளிக்­கப்­ப­ட­வில்லை. இந்த ஆணைக்­கு­ழுவின் உறுப்­பினர் என்­ற­வ­கையில் குறிப்­பாக முஸ்லிம் உறுப்­பினர் என்ற வகையில் சிறு­பான்மை சமூ­கங்­களை முற்று முழு­தாகப் பாதிக்கும் இந்த அறிக்கை தோற்­க­டிக்­கப்­பட வேண்டும் என்­பதே பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் அவர்­களின் விருப்­ப­மா­கவும் எதிர்­பார்ப்­பா­கவும் இருந்­தது. குறித்த அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த விட­யங்­க­ளுடன் பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் முரண்­பா­டு­களைக் கொண்­டி­ருந்தார். இதன் கார­ண­மாக அவர் தானாக தயா­ரித்த மற்­று­மொரு அறிக்­கை­யையும் அமைச்­ச­ரிடம் கைய­ளித்­தி­ருந்தார்.

பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் எப்­போ­துமே சமூக அக்­கறை கொண்ட ஒரு கல்­வி­மா­னா­கவே கடந்த 50 வரு­டங்­க­ளுக்கும் மேலாக செயற்­பட்டு வந்­துள்ளார். குறிப்­பாக தான் சார்ந்த வடக்கு முஸ்­லிம்­களின் வர­லாற்­றையும் இருப்­பையும் பாது­காப்­ப­தற்­காக அவர் தன்­னையே அர்ப்­ப­ணித்துச் செயற்­பட்­டுள்ளார். வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை தொடர்பில் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் காத்­தி­ர­மான பங்­க­ளிப்பைச் செய்யத் தவ­றி­யி­ருந்த நிலையில், தனி மனி­த­ராக நின்று ஆய்­வு­க­ளையும் ஆவ­ணப்­ப­டுத்­தல்­க­ளையும் செய்து அவற்றை அறிக்­கைகள், நூல்­க­ளாக்கி கொழும்பு முதல் ஜெனீவா வரை சென்று போரா­டினார். குறிப்­பாக ஐக்­கிய நாடுகள் சபையும் ஏனைய சர்­வ­தேச அமைப்­பு­களும் வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு அகதி அந்­தஸ்த்து வழங்­கு­வ­தற்கு மறுத்த போது அதனை எதிர்த்துப் போரா­டினார். அந்த மக்­க­ளுக்­குள்ள மீளத்­தி­ரும்­பு­வ­தற்­கான உரி­மையைப் பெற்றுக் கொடுக்கத் தேவை­யான ஆவண மற்றும் புத்­தி­ஜீ­வித்­துவ ரீதி­யான சகல முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுத்தார். வில்­பத்து விவ­காரம் பூதா­க­ர­மாக்­கப்­பட்ட சம­யத்­திலும் அவர் அதனைத் தெளி­வு­ப­டுத்த விரி­வான நூல் ஒன்­றையே ஆங்­கி­லத்தில் வெளி­யிட்டு தனது சமூகப் பங்­க­ளிப்பைச் செய்தார்.

அதே­போன்று முஸ்லிம் சமூ­கத்தைப் பாதிக்கும் வகையில் திருத்­தங்கள், சட்ட ஏற்­பா­டுகள் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­படும் போது அவை தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் முஸ்லிம் சிவில் சமூக தலை­மை­க­ளுக்கும் உரிய விளக்­க­ம­ளித்து இவற்றை எவ்­வாறு கையாள வேண்டும், எவ்­வா­றான சிபா­ரி­சு­களை வழங்க வேண்டும் என்­பது பற்­றிய ஆலோ­ச­னை­களை அவர் தொடர்ச்­சி­யாக வழங்கி வந்­ததை இந்த இடத்தில் மறக்க முடி­யாது.

பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் அவர்கள் ஊட­கங்­க­ளு­டனும் நெருக்­க­மான தொடர்பைக் கொண்­டி­ருந்தார். சமூ­கம்சார் விவ­கா­ரங்­களில் அவ­ரது கருத்தை அறிய நாம் முற்­ப­டும்­போது துணிச்­ச­லு­டனும் தூர நோக்­கு­டனும் அவர் எமக்கு தக­வல்­களைத் தந்­து­த­வுவார். சமூ­கத்தைப் பாதிக்கும் வகையில் திரை­ம­றைவில் முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டுகள் தொடர்பில் தக­வல்­களை வழங்கி அவற்றை மக்கள் மயப்­ப­டுத்தி சமூ­கத்தை எச்­ச­ரிக்­கு­மாறு அவர் எம்மை வேண்­டுவார். வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம், வில்­பத்து விவ­காரம் மற்றும் மாகாண எல்லை நிர்­ணய அறிக்கை ஆகிய விவ­கா­ரங்­களை அறிக்­கை­யி­டு­வதில் அவர் எப்­போ­துமே மனங்­கோ­ணாது 'விடி­வெள்ளி'க்கு பெறு­ம­தி­வாய்ந்த தக­வல்­களை வழங்­கி­யி­ருக்­கிறார்.  மாகாண எல்லை நிர்­ணய அறிக்கை பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு சில நாட்­க­ளே­யி­ருந்த நிலையில் இது விட­யத்தில் சமூ­கத்தை விழிப்­பூட்டும் செய்தி ஒன்றை வெளி­யி­டு­மாறு எம்மைக் கோரினார். இதற்­க­மைய '' மாகாண எல்லை நிர்­ணயம் முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பு ; அர­சியல் தலை­மைகள் பொறுப்­புடன் செயற்­பட்டால் சமூ­கத்தைப் பாது­காக்­கலாம் என்­கிறார் பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ்'' எனும் செய்­தியை நாம் பிரா­தான தலைப்­பாக  வெளி­யிட்­டதை இந்த இடத்தில் நினை­வு­ப­டுத்­து­கிறோம்.

இவ்வாறு அவர் பல்வேறு தளங்களிலும் சமூகப் பங்களிப்பை வழங்கிய குறிப்பிடத்தக்க இலங்கையின் முஸ்லிம் புத்திஜீவிகள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார். அந்தவகையில் சமகால கல்விமான்களுக்கும் எதிர்கால கல்விச் சமூகத்திற்கும் ஒரு சிறந்த முன்மாதிரிமிக்க ஆளுமையாகவே அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக.
-Vidivelli