Verified Web

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது சரமாரியான துப்பாக்கிச் சூடு

2018-08-21 05:06:02 M.I.Abdul Nazar

துருக்கியத் தலைநகர் அங்காராவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டு சென்றதாகவும் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸாரும் தூதரகப் பேச்சாளரும் திங்கட்கிழமையன்று தெரிவித்தனர்.

ஈதுல் அழ்ஹா விடுமுறைக்காக இந்த வாரம் தூதரகம் மூடப்பட்டுள்ள வேளையில் அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் பல துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. இதில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பியோடிய தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் தேடி வருகின்றனளர். நான்கு அல்லது ஐந்து துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், அதனால் பாதுகாப்புக் கூட்டின் கண்ணாடி ஜன்னல் உடைந்துள்ளதாகவும், உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படைவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதரகமும், இஸ்தான்பூலிலுள்ள கவுன்சிலேட் அலுவலகமும் கிளர்ச்சிக்காரர்களின் தாக்குதல் இலக்குகளாக அமைந்துள்ளதோடு, கடந்த காலங்களை பல தாக்குதல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டன.

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாடடுக்களின் அடிப்படையில் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க மதகுரு அன்ரூ பிரன்சன் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அமெரிக்கா மற்றும் அங்காரா ஆகியவற்றினிடையே பதற்றநிலை உருவாகியுள்ள நிலையில் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
-Vidivelli