Verified Web

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் ஷரீஅத்தின் வரையறைகளை பேண வேண்டும்

Sheikh Irfan Mebeen (Rahmani)

செய­லாளர் கொழும்பு மாவட்டக் கிளை
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா.

2018-08-13 06:07:33 Sheikh Irfan Mebeen (Rahmani)

நீதி­ய­மைச்­ச­ரிடம் சம்ர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்­பான இரு தரப்பு அறிக்­கை­க­ளையும் படித்துப் பார்த்­ததில் சில கேள்­விகள் எழுந்­தன. வெவ்­வே­றான இரண்டு சமர்ப்­பிக்­கப்­ப­டு­வதை தவிர்ந்­து­கொள்ளும் வண்ணம் இரண்டு குழு­வி­னரும் ஆரம்­பத்தில் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வில்­லையா? மகளிர் சங்­கங்­களை அழைத்துப் பேச­வில்­லையா? அமைச்சர் ரவூப் ஹக்கீம் நீதி அமைச்­ச­ராக இருந்­த­போது இப்­பி­ரச்­சி­னைக்கு முடிவு காணா­தது ஏன்? என்­பது போன்ற கேள்­விகள் மீளவும் எழுப்­பப்­ப­டு­வதைப் பார்க்­கின்றோம்.

நீதி­ய­மைச்சு வெளி­யிட்ட இரண்டு அறிக்­கை­க­ளையும் வாசித்துப் பார்த்­த­போது,  இரு குழு­வி­ன­ருக்கும் மத்­தியில் அடிப்­படை விட­யங்­களில் தோன்­றி­யுள்ள மாறு­பட்ட கருத்­துக்­களே அவை என்­பது விளங்­கு­கின்­றது.  மகளிர் வட்டம் கூறு­வ­தைப்போல் ஷரீ­அத்­துக்கு மாற்­ற­மில்­லாத ஒன்றை விரும்­பியே ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா குழு­வி­னரின் அறிக்கை அமைந்­துள்­ளதை பார்க்­கின்றோம். இதே அடிப்­ப­டை­யில்தான் முன்னாள் காதிகள் சிலர் வெளி­யிட்ட அறிக்கை அமைந்­தி­ருக்­கின்­றது.

உல­மாக்கள் சன்­மார்க்­கத்­திற்கு முர­ணான கருத்­துக்­க­ளுக்கு துணை நிற்க முடி­யாது என்­ப­த­னால்தான் நீதி­ய­ரசர் சலீம் மர்ஸூப் அவர்­களின் அறிக்­கையின் சில விட­யங்­க­ளுக்கு உடன்­ப­டாது மாற்றுக் கருத்­துக்­களை சமர்ப்­பித்­துள்­ளனர்.  காதி நீதி­மன்றில் சட்­டத்­த­ர­ணிகள் வாதி­டுதல், திரு­மண வய­தெல்லை, திரு­மணம் நிறை­வேற வலீயின் அவ­சியம், திரு­மணப் பதி­வாளர், பெண் பதி­வா­ளர்கள், பல­தார மணம் மற்றும் தலாக்கின் சட்டம், மதாஉ எனும் கொடுப்­ப­னவு என்­ப­வற்றில் காணப்­படும் தவ­றான முடி­வு­க­ளுக்­கான தீர்­வு­களே இரண்­டா­வது அறிக்­கையில் காணப்­ப­டு­கி­றன.

இரண்­டா­வ­தாக சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்கை தயா­ரிப்புக் குழுவில் முன்னாள் நீதி­பதி அப்துஸ் ஸலாம்,  நீதி­பதி மக்கீ முஹம்மத், முன்னாள் அட்­டோர்னி ஜெனரல் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஷிப்லி அஸீஸ்,  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, சட்­டத்­த­ரணி திரு­மதி பஸ்லத் சஹாப்தீன், கலா­நிதி எம்.ஏ.எம். சுக்ரி,  அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க்  எம்.ஐ.எம் ரிஸ்வி முப்தி,  அதன் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாரக் ஆகியோர் உள்­ளனர்.

நீதி­ய­ரசர் சலீம் மர்ஸூப் தலை­மையில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்ட குழுவில் சட்­டத்­த­ரணி ராஸ்­மரா ஆப்தீன், சட்­டத்­த­ரணி சபானா குல் பேகம், சட்­டத்­த­ரணி சர்­மிலா ரஸூல், திரு­மதி ஜெஸீமா இஸ்­மாயில் (முஸ்லிம் மகளிர் கல்­லூரி முன்னாள் அதிபர்), திரு­மதி பளீலா ஜுரம்­பதி, சர்யா சுரங்­கவேல் (சட்­டக்­கல்­லூரி போத­னா­சி­ரியர்), முன்னாள் நீதி­ய­மைச்சின் செய­லாளர் சுஹத கம்லத் ஆகியோர் இடம்­பெ­று­கின்­றனர்.

ஷரீஅத் பார்­வையில் சரி­யா­னதை முன்­வைக்­கவே ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா குழு­வினர் முயன்­றுள்­ளனர் என்­பது தெளி­வா­கின்­றது. இதற்கு முன்னர் நிய­மிக்­கப்­பட்ட (டாக்டர் பாரூக் கமிட்டி - 1972),  (டாக்டர் சஹாப்தீன் கமிட்டி-1990) என்­ப­னவும் அந்தக் குழுக்­களில் இருந்த உல­மாக்கள் கருத்தை ஏற்று ஷரீஆ விட­யங்­களில் தலை­யி­ட­வில்லை என்­பதை அக்­கு­ழுக்­களின் பரிந்­து­ரை­க­ளி­லி­ருந்து விளங்க முடி­கின்­றது.  2009 இல் நிய­மிக்­கப்­பட்ட ஸலீம் மர்­ஸூபின் குழுவே ஷரீஆ விட­யங்­களில் தலை­யிட்­டுள்­ளது  என்­ப­தனால், அதனை ஆத­ரிக்­கா­த­வர்கள் பிறி­தொரு பரிந்­துரைத் தொகுப்பை வெளி­யிட்­டுள்­ள­தாக அறி­ய­மு­டி­கி­றது.

முரண்­பா­டான பரிந்­து­ரைகள்: மத்ஹப் என்ற பிர­யோ­கத்தை நீக்­குதல்

நடை­மு­றை­யி­லுள்ள 16ஆம் பிரிவில் கூறப்­பட்­டுள்ள 'மத்ஹப்' என்ற சொல் எங்­கெல்லாம் காணப்­ப­டு­கி­றதோ அந்த சொல் நீக்­கப்­பட்டு 'இஸ்­லா­மிய சட்டம்' எனும் பதம் இடப்­பட வேண்­டு­மென என சலீம் மர்ஸூப் குழு பரிந்­து­ரைத்­துள்­ளது. அவ்­வாறு 'இஸ்­லா­மிய சட்டம்' என்று மாத்­திரம் குறிப்­பிட்டால் இஸ்­லாத்தை விட்டும் பிரிந்­துள்ள காதி­யா­னிகள், ஷீஆக்கள் உள்­வாங்­கப்­பட குறித்த வார்த்தை வழி­ய­மைத்­து­விடும். ஏனெனில், அவர்கள் தம்மை ‘அஹ்­ம­தியா முஸ்­லிம்கள்' என்றும் ‘ஷியா முஸ்­லிம்கள்' என்றும் கூறிக் கொள்­கின்­றனர். அவ்­விரு பிரி­வி­னரும் கொள்கை ரீதி­யாக நம்­பிக்கை சார்ந்த விட­யங்­களில் தனி­வழி முறையை நம்­பிக்கை கொண்­டுள்­ளனர். மாறாக ஹனபி, ஷாபிஈ, மாலிகி என்­பன கொள்கை ரீதி­யாக பிரிந்­த­வை­யல்ல. அவற்றை நிறு­விய இமாம்கள் தமது ஆய்­வின்­படி பெற்றுக் கூறிய சட்­டங்­களே வேறு­பட்­ட­வை­யாகும்.

அத­னா­லேயே குறித்த நான்கு மத்­ஹ­பு­களும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை சார்ந்த மத்­ஹ­புகள் எனப்­ப­டு­கின்­றன. அஹ்­மதீ, ஷீஈ அஹ்லுஸ் ஸுன்னத்  வல் ஜமா­அத்தைச் சேர்ந்­தவை அல்ல.

மேலும் இந்­நாட்டில் வாழும் பெரும்­பான்மை முஸ்­லிம்கள் ஷாஃபி மத்­ஹபை தொடர்­ப­வர்கள். ஹன­பி­களும் ஒரு­சாரார் உள்­ளனர். அவர்­க­ளுக்­கென்று தனிப் பதி­வாளர் காதி உள்ளார். எனவே, 16ஆம் பிரிவை நீக்­காது வைப்­பதே ஆரோக்­கி­ய­மா­னது. மத்­ஹபில் பிடி­வாதம் இருக்­க­லா­காது என்­பதை எவரும் ஏற்பர். அதை­வி­டுத்து மத்­ஹ­பையே நீக்­கி­விட்டுப் பெரும் விப­ரீ­தங்­களை நாம் தேடிப் பெற்றுக் கொள்­ள­லா­காது.

அத­னால்தான் மத்ஹப் என்ற வார்த்தை நீக்­கப்­ப­ட­லா­காது. அப்­படி நீக்­கப்­படும் பட்­சத்தில் பொது­மக்கள் தாம் விரும்­பி­ய­படி திரு­மண விட­யங்­களை கையாள்­வது பிழை­யான முடி­வையே தரும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

திரு­மண வய­தெல்லை

இஸ்­லாத்தின் பார்­வையில் திரு­ம­ணத்­திற்கு வய­தெல்லை கிடை­யாது. (புலூக்) பருவ வயதை அடைதல், ருஷ்த் எனப்­படும் சுய­மாக செயற்­படும் ஆற்­ற­லி­ருத்தல் என்­பன திரு­ம­ணத்தின் போதும் ஏனைய கொடுக்கல் - வாங்­க­லின்­போதும் கவ­னிக்­கப்­ப­டு­கி­றது. எனவே சிறுவர் திரு­மணம் என்று ஒன்று இருக்க முடி­யாது. அது காலத்தின் தேவையும் மண­மகன் மணப்பெண் ஆகி­யோ­ரது பக்­கு­வமும் கருத்­திற்­கொள்­ளப்­படும் ஒன்­றாகும். நடை­மு­றை­யி­லுள்ள முஸ்லிம் விவாக - விவா­க­ரத்து சட்­டத்தில் திரு­மண வய­தெல்லை 12 எனக் குறிப்­பி­டப்­பட்­டாலும், அவ்­வா­றான திரு­ம­ணங்கள் தற்­போது மிக மிக அரி­தா­கவே நடை­பெ­று­கின்­றன என்­பதை நாம் மறுக்க முடி­யாது. வயதைக் குறிப்­பிட்டு பிரச்­சி­னைப்­ப­டுத்­து­வது ஒரு பிழை­யான அணு­கு­மு­றை­யாகும். பதி­வாளர் நாய­கத்தின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து பெறப்­படும் தக­வல்­களில் குறைந்த வயது திரு­ம­ணங்கள் எத்­தனை நடந்­தி­ருக்­கின்­றன என்­பதை கண்­ட­றிந்து கொள்ள முடியும். வயதைக் குறிப்­பிட்டு வீண்­பு­ரளி ஏற்­ப­டுத்த வேண்­டி­ய­தில்லை. கடந்த காலங்­களில் இந்த வயதில் பெண் பிள்­ளை­க­ளுக்குத் திரு­மணம் நடந்­துள்­ளதை நாம் மறுக்­க­வில்லை. இதனை வைத்து சிறுவர் திரு­மணம் என்று போர்க்­கொடி தூக்க வேண்­டி­ய­தில்லை. நமது சன்­மார்க்கம் அனு­ம­தித்த ஒன்று என அங்­கீ­க­ரிப்­பதே அறி­வு­டைமை. அதனை எத்­தனை வருடம் என வைத்துக் கொள்­வது என்­ப­தில்தான் இரண்டு பரிந்­து­ரை­களும் வேறு­ப­டு­கின்­றன. நீதி­ய­ரசர் சலீம் மர்ஸூப் குழு ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் 18 வய­தெல்லை என்று கூறும் அதே­நேரம், ஆண்­க­ளுக்கு 18 என்றும், பெண்­க­ளுக்கு 16 என்றும் வகுக்­கலாம் என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா குழு பரிந்­து­ரைத்­துள்­ளது.

இத­னி­டையே 6.11.2016 இல் நடை­பெற்ற குழுக் கூட்­ட­மொன்றில் திரு­மண வய­தெல்லை பற்­றிய வாக்­கெ­டுப்­பொன்று நடை­பெற்­றுள்­ளது. அதில் மணப்­பெண்ணின் வயது 18 ஆக இருத்தல் வேண்­டு­மென்று சட்­டத்­த­ரணி சர்யா சுரங்­கவேல், ரஸ்­மரா ஆப்தீன், சபானா குல் பேகம் ஆகி­யோரும், 16 வய­தாக இருத்தல் வேண்­டு­மென நீதி­ய­ரசர் சலீம் மர்ஸூப் மற்றும் திரு­மதி எஸ். ஜெஸீமா இஸ்­மாயில், திரு­மதி பளீலா ஜுரம்­பதி ஆகி­யோரும், 15 வய­தாக இருத்தல் நல்­லது என சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, சட்­டத்­த­ரணி பஸ்லத் ஷஹாப்தீன், சட்­டத்­த­ரணி ஷிப்லி அஸீஸ், அஷ்ஷெய்க் முப்தி ரிஸ்வி, அஷ்ஷெய்க் முபாரக் ஆகியோர் அபிப்­பி­ரா­யப்­பட்­டுள்­ள­தாகக் காண­மு­டி­கி­றது. (6.11.2016 கூட்­ட­றிக்கை)

இந்­நி­லையில், எல்லாக் கருத்­துக்­களும் உள்­வாங்­கப்­பட்டு பெண் பிள்­ளையின் திரு­மண வய­தெல்லை 16 என பாயிஸ் முஸ்­தபா குழு­வினர் சிபா­ரிசு செய்­துள்­ளது மிகவும் பொருத்­த­மா­ன­தே­யாகும்.

தற்­கா­லத்தில் சூழ்­நி­லை­யையும் குற்றச் செயல்­க­ளையும் வைத்து நோக்­கு­கின்­ற­போது இரண்­டா­வது குழு­வி­ன­ரது சிபா­ரிசு மிகவும் பொருத்­த­மாக இருக்­கி­றது. நியா­ய­மான காரணம் ஒன்­றுக்­காக 16 வயதை விடக் குறைந்த ஒரு பிள்­ளைக்கு திரு­மணம் முடித்­துக்­கொ­டுக்­கப்­ப­டு­மாயின் காதியின் அனு­ம­தி­யோடு நடை­பெற வேண்­டு­மெனக் கூறப்­பட்­டுள்­ளது வர­வேற்­கத்­தக்­கது. அதே­நேரம், 18 வயதை அடை­யாத ஒரு பெண் பிள்ளை தான் விரும்­பிய ஆட­வனை மணம் புரிந்­து­கொண்டால் அதனை விப­சா­ர­மாகக் கொள்­வதா? அதற்கு மாற்­று­வழி இல்­லையா? என்­பதை முதல் குழு­வினர் கவ­னத்திற் கொள்­வது அவ­சி­ய­மாகும். மேலும், பெண் பிள்­ளைகள் குறிப்­பிட்ட ஒரு பரு­வத்­தில்தான் திரு­ம­ணத்­திற்குப் பொருத்­த­மா­ன­வ­ளாகத் தோன்­றுவாள். வயது ஏற ஏற இது மாறி­விடும். அப்­படி வய­தேறி வீட்டில் முடங்கிக் கிடக்கும் எத்­தனை நூறு கும­ரிகள் உள்­ளனர் என்­பதை பெண்கள் விட­ய­மாக அக்­கறை கொள்வோர் யோசிக்க வேண்டும். இன்­னொரு இர­க­சியம் யாதெனில், தற்­போ­தைய வாலிபர் இளம் குமரிப் பெண்­ணையே மணம்­பு­ரிந்து தரு­மாறு கேட்­கின்­றனர் என்­பதை நாம் மறுக்­கா­விட்­டாலும் திரு­மணத் தர­கர்­க­ளிடம் கேட்டால் அறிந்­து­கொள்­ளலாம். அல்­லது பதி­னாறு வயதை விடவும் குறைந்த பெண் பிள்­ளைகள் பெற்றோர் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து  விலகி தான் விரும்­பிய இளை­ஞ­னோடு ஓடிச் செல்­வதை கண்டும் காணா­தோ­ராக பெண்கள் வட்டம் இருப்­பது ஆச்­ச­ரி­யமே.                

திரு­மணம் நிறை­வேற வலீ அவ­சி­யமா?

வலீ என்­பவர் மணப்­பெண்ணின் பாது­கா­வலர். தகப்பன் அதில் முத­லிடம் பெறு­கிறார். அவர் இல்­லா­த­போது தகப்பன் வழி­வந்த ஆண்கள் வலீ­யாக இருப்பர் என்­பது யாவரும் அறிய வேண்­டிய ஒன்று. வலீ இன்றி திரு­மணம் நிறை­வே­றாது என்­பது நபி­மொ­ழி­யாகும். இவ்­வாறு இருக்க சலீம் மர்ஸூப் குழு­வி­னரின் பரிந்­து­ரையில் வலீ இல்­லா­வி­டினும் மணப்­பெண்ணின் சம்­ம­தத்­துக்கு அடை­யா­ள­மாக கையொப்­ப­மி­டா­விட்டால் திரு­மணம் செல்­லு­ப­டி­யா­காது என்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

“வலீ இன்றி திரு­மணம் நிறை­வே­றாது" என்­பது நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்­களின் கூற்­றாகும். ஆதலால், முதல் குழுவின் பரிந்­துரை மேற்­கு­றித்த ஹதீ­ஸிற்கு முற்­றிலும் மாற்­ற­மா­னது என்று குறிப்­பிடும் பாயிஸ் முஸ்­தபா குழு, மணப்­பெண்ணின் கையொப்­பத்தை விருப்­பத்­துக்­கு­ரி­ய­தெ­னவும் அதின்றி நடை­பெறும் திரு­மணம் செல்­லு­ப­டி­யாகும் என்றும் தெரி­வித்­துள்­ளது. வலீ இருந்­தாலும் மணப்­பெண்ணின் கையொப்பம் இல்­லா­விடில் அத்­தி­ரு­மணம் செல்­லு­ப­டி­யா­காது என்று முத­லா­வது குழு தனது பரிந்­து­ரையில் கூறி­யுள்­ளது ஹதீ­ஸுக்கு மாற்­ற­மாகும். மேலும் மணப் பெண்ணின் சம்­ம­த­மின்றி திரு­மணம் செய்­விக்­கும்­போது அதனை காதி­யிடம் முறை­யிட்டுத் தீர்­வு­காணும் வழியும் இரண்­டா­வது (பாயிஸ் முஸ்­தபா குழு) பரிந்­து­ரையில் கூறப்­பட்­டுள்­ளது.

திரு­மணப் பதி­வாளர்

இந்தப் பத­விக்கு பெண்கள் அமர்த்­தப்­பட வேண்டும் என்­பதை சலீம் மர்ஸூப் குழு­வினர் மிகவும் வலி­யு­றுத்­தி­யுள்­ளதை காணக் கிடைக்­கி­றது. தற்­கா­லத்தில் பெரும்­பான்­மை­யான திரு­ம­ணங்கள் பள்­ளி­வா­சல்­க­ளி­லேயே நடை­பெ­று­கின்­றன. ஆண்கள் நிறைந்த ஒரு சபை நடுவே பெண் பதி­வாளர் வந்து அமர்­வது மிகவும் சிர­ம­மாக இருக்­கலாம். அவ்­வாறு பதி­வா­ள­ராக ஒரு பெண் கடமை புரி­கின்­ற­போது அவரால் பள்­ளி­வா­ச­லினுள் நுழைய விலக்­கப்­பட்ட நேர­மாக இருக்­கலாம். எனவே, நடை­முறைச் சாத்­தி­ய­மில்­லாத இந்த விட­யத்தை விட்­டு­வி­டு­வதே ஆரோக்­கி­ய­மா­னது.

திரு­மணப் பதிவு நடை­பெற வேண்டும். பிறக்கும் பிள்­ளை­களின் கல்வி மற்றும் தேவை­க­ளுக்கும் திரு­மணப் பதிவு உதவும். ஒருவர் திரு­மணம் புரிந்து அதனைப் பதி­யாது வாழ்ந்­தபின் விவாக விடு­தலை தலாக் செய்தால் அப்­பெண்­ணுக்கு தாப­ரிப்பு மற்றும் செல­வி­னங்கள் பற்றி கூறு­வ­தற்கு ஆதா­ர­மாக திரு­மணப் பதிவே அமை­கின்­றது. ஆத­லால்தான் திரு­மணப் பதிவு அவ­சியம் என்று பாயிஸ் முஸ்­தபா குழு கூறி­யுள்­ளது. பதி­வின்றித் திரு­மணம் நடை­பெற்றால் திரு­ம­ணமே செல்­லு­ப­டி­யா­காது என்று கூறு­வது பிழை­யென்­பது பாயிஸ் முஸ்­தபா குழு­வி­னரின் அபிப்­பி­ரா­ய­மாகும்.

பெண் காதி

இரண்டு அறிக்­கை­களும் பல நியா­யங்­களை எடுத்துக் கூறு­வது போலவே அதிலே ஷரீ­அத்தின் கண்­ணோட்டம் அவ­சியம் என்­பதை மறுக்­க­மு­டி­யாது. காதி நீதி­மன்­றங்கள் சில­வற்றில் பெண்கள் நடத்­தப்­படும் முறை­களும் அவர்­க­ளுக்கு ஏற்­படும் அசௌ­க­ரி­யங்­களும் பெண் காதியின் அவ­சி­யத்தை வேண்­டி­நிற்­பதைப் பார்க்­கின்றோம். இதனை வைத்தே ஸலீம் மர்ஸூப் குழு­வினர் பெண் காதியை வலி­யு­றுத்­து­கின்­றனர்.

இஸ்­லாத்தின் போத­னை­க­ளை­க­ளின்­படி பெண்கள் காதி­க­ளாகப் பணி­யாற்ற முடி­யாது என்று நான்கு மத்­ஹ­பு­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இமாம் பத்தி, இமாம் சுப்­ருமா என்­போ­ரது கூற்று ஷரீஆ சட்­ட­வாக்­கத்தில் பல­வீ­ன­மான ஒன்­றாகக் கொள்­ளப்­ப­டு­கின்­றது. இமாம் அபூ­ஹ­னீபா (ரஹ்) அவர்கள் கூறி­ய­தாகக் கூறப்­படும் பெண்கள் காதி­க­ளாகப் பணி­யாற்­றலாம் என்­பது, பொருள் சம்­பந்­த­மான விஷ­யங்­க­ளில்தான் என்று கூறப்­பட்­டுள்­ளது. இது மாத்­தி­ர­மன்றி வலீ இல்­லாத பெண்­ணுக்கு காதியே வலீ­யாவார் என்ற ஹதீ­ஸுக்கு பெண் காதி முறை முர­ணாக இருக்­கின்­றது. வலீ­யாக இருப்­பவர் ஆணாக இருக்க வேண்டும். அதுவும் பெண்­களின் தகப்பன் வழி சார்ந்­த­வ­ராக இருக்க வேண்டும். எனவே, பெண் திரு­மண விட­யங்­க­ளுக்­காக வலீ­யாக வர­மு­டி­யா­தெனப் பாயிஸ் முஸ்­தபா குழு­வி­னரின் சிபா­ரிசு கூறு­கி­றது. அதற்கு மாற்­றீ­டாக அந்தக் குழு காதியின் ஜூரி­மா­ராக பெண்­களின் விட­யங்­களை கேட்­ட­றி­ப­வர்­க­ளாக அல்­லது சமா­தானத் தர­கர்­க­ளாக கணி­ச­மா­ன­ளவு பெண்கள் கட­மை­யாற்­றலாம் என்­ப­தையும் காதி உயர் மன்­ற­மொன்று நிறு­வப்­பட்டு அதில் கணி­ச­மா­ன­ளவு பெண் பிர­தி­நி­தித்­துவம் இருக்க வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அதே­நேரம் காதி நீதி­மன்­றங்­களின் தரம் உயர்த்­தப்­பட வேண்டும், காதிகள் தகு­திகாண் பரீட்சை மூலம் தெரிவு செய்­யப்­பட வேண்டும், காதி­நீ­தி­மன்றக் கட்­ட­மைப்பு நல்ல முறையில் இருக்க வேண்டும், காதி­களின் ஊதியம் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட வேண்டும், காதி­யாக வருவோர் ஷரீஆ சட்டம், குடும்­ப­வியல் சட்டம் என்­ப­வற்றை அறிந்­தி­ருக்க வேண்டும் என்று இரண்டு அறிக்­கை­களும் கூறு­கின்­றன.

காதி நீதி­மன்­றங்­களில் சட்­டத்­த­ர­ணிகள் தோன்­றுதல்

இந்த விட­யத்தில் சலீம் மர்ஸூப் குழு­வி­னரின் அறிக்கை இதற்கு சாத­க­மா­கவே உள்­ளது. இருப்­பினும், நிதா­ன­மாக சிந்­திக்கும் எவ­ராலும் அங்­கீ­க­ரிக்க முடி­யாத ஒன்­றா­கவே இது இருப்­பதை காண முடி­கி­றது. காதி நீதி­மன்றம் என்­பது சமா­தானம் செய்­விக்கும் இட­மாக, குடும்ப விவ­கா­ரங்­க­ளுக்­கான நீதி­மன்­ற­மா­கவே செயற்­பட வேண்டும். அதை விடுத்து சட்­டத்­த­ர­ணிகள் வாதிடும் இட­மாக அது இருக்­க­லா­காது. வாதத் திற­மையால் ஒருவர் அடுத்த சாரா­ருக்கு நியாயம் கிடைக்­கா­தி­ருக்கச் செய்­யலாம். அது மாத்­தி­ர­மன்றி தன் செல­வி­னங்­க­ளுக்­காக விண்­ணப்­பிக்கும் ஒரு பெண் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு எங்­கி­ருந்து பணம் செலுத்­துவாள்? காதி நீதி­மன்­றுக்கு வரும் செல­வையே தாங்­கிக்­கொள்ள முடி­யாத ஒரு பெண், சட்­டத்­த­ர­ணிக்கு எவ்­வாறு பணம் கொடுக்க முடியும்?

எனவே, சட்­டத்­த­ர­ணி­களை காதி நீதி­மன்றில் தோன்ற அனு­ம­திக்­க­லா­காது. முத­லா­வது குழு­வி­னரின் அறிக்கை பிழை மாத்­தி­ர­மன்றி ஷரீ­ஆவின் வழி­காட்­ட­லுக்கு அப்­பாற்­பட்­டதும் நடை­முறைச் சாத்­தி­ய­மற்­ற­தாகும்.

கடந்த காலங்­களில் பள்­ளி­வா­சல்­களில் இணக்க சபைகள் இருந்­தன. இன்றும் சில இடங்­களில் அவை காணப்­ப­டு­கின்­றன. கொழும்பில் தெமட்­ட­கொட, வெள்­ள­வத்­தையில் இணக்க சபை இல்­லா­வி­டினும் உள­வள நிலை­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. இந்த நடை­மு­றையே நமக்கு மிகவும் பொருத்­த­மாகும். காதி நீதி­மன்­றங்­களை நாடமுன் அல்­குர்ஆன் போத­னைப்­ப­டி­யான வழி­காட்­டல்கள் பின்­பற்­றப்­ப­டாமை கவலை தரு­கி­றது. அழ­கான வழி­மு­றைகள் கூறப்­பட்­டி­ருந்தும் சட்­டத்­த­ர­ணி­களை காதி நீதி­மன்­றத்­துக்கு ஏறச் செய்­வது பிழை­யா­ன­தாகும்.

பல­தார மணம்

இவ்­வி­டயம் சம்­பந்­த­மான பரிந்­து­ரை­களில் இரண்­டா­வது (பாயிஸ் முஸ்­தபா) குழுவின் பரிந்­துரை மிகவும் தீர்க்­க­த­ரி­ச­ன­மாக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளதை காண்­கின்றோம். அல்லாஹ் அனு­ம­தித்­ததை தடுக்­கும்­வண்ணம் நமது சிபா­ரி­சுகள் அமை­ய­லா­காது. அந்த அனு­ம­தியை ஏற்­ப­டுத்­து­வதை நெறிப்­ப­டுத்த வேண்டும். அதற்­கான முறைகள் இரண்­டா­வது குழு­வி­னரின் சிபா­ரிசில் தெளி­வா­கவே காணப்­ப­டு­கின்­றன.

அதா­வது, எந்த ஓர் ஆணும் காதியின் அனு­ம­தி­யின்றி பல­தார மணம் செய்­ய­லா­காது. பல­தார மணம் நாடி எவ­ரேனும் ஒருவர் விண்­ணப்­பித்தால் காதி, தற்­போ­துள்ள மனை­விக்கு அறி­வித்து விண்­ணப்­பத்­திற்கு அவளின் கருத்தை கேட்­ட­றிய வேண்டும். பூரண விசா­ர­ணையின் பின்னர் பின்­வரும் விட­யங்­களை கவ­னத்­திற்­கொண்டு காதி திருப்­திப்­படும் பட்­சத்­தில்தான் அனு­மதி வழங்க வேண்டும்.

1. ஷரீஆ நடை­மு­றைக்­கேற்ப விண்­ணப்­ப­தா­ரியின் மறு­மண விண்­ணப்­பங்கள் இருத்தல் வேண்டும்.

2. தன் மனை­வி­களை பரா­ம­ரிக்கும் போதிய உடல், பொருள் வளம் விண்­ணப்­ப­தா­ரி­யிடம் காணப்­படல் வேண்டும்.

மேலும், ஒருவர் காதியின் அனு­ம­தி­யின்றி மணம் முடித்தால் அது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகக் கரு­தப்­பட வேண்டும், குறிப்­பிட்ட ஒரு­காலம் அவர் சிறையில் இடப்­பட வேண்டும் என்­பன இரண்­டா­வது குழுவின் பரிந்­து­ரை­க­ளாகும்.

இரண்டு அறிக்­கை­க­ளையும் விமர்­சன நோக்­கோடு பார்க்­கும்­போது இரண்­டா­வது குழுவின் அறிக்­கையில் நல்ல திருப்தி காண முடி­கி­றது. ஏனெனில், நீதி­ய­ரசர் மர்ஸூப் குழு­வி­னரின் சிபா­ரி­சின்­படி கணவன் இரண்­டா­வது திரு­ம­ணத்­திற்கு அனு­மதி கேட்டு காதி­யிடம் சமர்ப்­பிக்­கப்­படும் விண்­ணப்பம் தொடர்­பாக கண­வனின் முதல் மனை­வியும் இரண்­டா­வ­தாக மணம்­பு­ரிய விரும்பும் பெண்­ணையும் அழைத்து விசா­ரிக்­கப்­பட வேண்டும் என்று சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது. அதன்­படி காதி நீதி­மன்றம் யுத்­த­க­ள­மா­கவே மாறும் என்­பதை யாவரும் புரிந்து கொள்­ளலாம். விண்­ணப்­ப­தா­ரரின் தக­வல்­களை அறிந்து திட்­டப்­ப­டுத்­திய பின்பே காதி இரண்டாம் தாரத்­துக்கு அனு­ம­திக்க வேண்டும். அதே­நேரம் இரண்­டா­வது மனை­விக்­கு­ரிய செல­வுகள், இல்­லறத் தேவைகள் என்­ப­வற்றை நிறை­வேற்றும் சக்­தி­யு­டை­ய­வரா என்று பார்க்க வேண்டும். முத­லா­வது மனை­விக்குப் போன்றே இரண்­டா­வ­தாக மணக்க நாடி இருக்கும் பெண்­ணுக்கும் சக­ல­தையும் நிறை­வேற்றும் சக்தி பெற்­ற­வரா என்றும் பார்க்க வேண்டும். முத­லா­வது மனை­விக்கு போன்று இரண்­டா­வ­தாக மணக்க இருப்­ப­வ­ளுக்கும் வீடு மற்றும் தேவை­களை ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்று இரண்­டா­வது சிபா­ரிசு அறிக்கை கூறு­கி­றது.

மேலும், தன் கணவன் தன் வாழ்­நாளில் மற்­றொரு பெண்ணை மணம் புரி­ய­லா­காது என்று நிபந்­த­னை­யி­டலாம் என்ற நிபந்­த­னை­யோடு திரு­மணம் செய்து கொள்ள முதல் மனை­விக்கு அனு­ம­தி­யி­ருக்­கி­றது என டாக்டர் சஹாப்தீன் கமிட்­டிக்கு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்­னணி சமர்ப்­பித்­துள்ள அறிக்­கையை பாயிஸ் முஸ்­தபா குழு­வி­னரும் அங்­கீ­க­ரித்­துள்­ளதைக் காண்­கின்றோம். 

எனவே, பல­தார மணம் என்­பதை மலிந்­து­ரைக்கும் வண்ணம் எமது சிபா­ரி­சுகள் இருக்­க­லா­காது. ஒரு­சிலர் துஷ்­பி­ர­யோகம் செய்­தார்கள் என்­ப­தற்­காக பல­தா­ர­ம­ணத்தை தடுக்­கக்­கூ­டாது. இதன் மூலம் நமது சன்­மார்க்கம் அனு­ம­தித்த ஒன்றை மறுத்த குற்­றத்­திற்கு ஆளா­குவோம். இரண்­டா­வது குழுவின் சிபா­ரிசின் படி பல­தார மணத்தை அனு­ம­திப்­பதே அறி­வு­டை­மை­யாகும். நம் சமூ­கத்தில் காணப்­படும் பிரச்­சி­னை­களில் ஒன்­றான வித­வை­க­ளுக்கு ஒரு விடி­வையும் காண­மு­டியும். பெண்­க­ளுக்­காக குரல் கொடுக்கும் எந்த வட்­டங்­களும் இது சம்­பந்­த­மாக சிந்­திக்­காது இருப்­பது ஆச்­ச­ரி­யமே.

தலாக்

இல்­லற வாழ்வின் முடிவு பிரி­வாக அமையக் கூடாது என்று இஸ்லாம் கூறு­கி­றது. அல்­லாஹ்­வுக்கு மிகவும் வெறுப்­பான செயல், தலாக் சொல்­வ­தாகும் என்று நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­னார்கள். எனவே, கணவன், மனை­வி­ய­ருக்கு மத்­தியில் ஏற்­படும் பிணக்­கு­களைத் தீர்த்துக் கொள்ளும் வழியை அல்­குர்ஆன் 4:34,35 ஆம் வச­னங்­களில் தெளி­வாகக் குறிப்­பிட்­டுள்­ளது.

அது மாத்­தி­ர­மன்றி எந்த நியா­ய­மு­மின்றி தன் கண­வ­னி­ட­மி­ருந்து தலாக்கை வேண்­டி­நிற்கும் பெண் சுவன வாடை­யைக்­கூட நுகர மாட்டாள் என நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்­ச­ரித்­துள்­ளார்கள். இந்­நி­லையில், ஒருவன் தன் மனை­வியை தலாக் என்ற வச­னத்தைக் கொண்டு கூறி­விட்டால் அது தலாக் எனும் பிரி­வாக நிகழ்ந்­து­விடும். “மூன்று விட­யங்கள் பரி­கா­ச­மா­கவோ உண்­மை­யா­கவோ கூறி­விட்டால் அது உண்­மை­யா­கவே நிகழ்ந்­து­விடும்" என நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­னார்கள். அவை நிகாஹ் எனும் மணம்­பு­ரிதல், தலாக் எனும் திரு­மண விடு­தலை, இத்க் எனும் அடிமை உரி­மை­யிடல் என்­றார்கள். அதா­வது ஒருவன் மேற்­கு­றித்­த­வற்றைக் குறிப்­பிட்டு நான் செய்து விட்டேன் என்றால் நிகழ்ந்­து­விடும். எனது மகளை உனக்கு திரு­மணம் செய்து தந்தேன், உன்னை தலாக் சொல்­லி­விட்டேன், உன்னை உரி­மை­யிட்டேன் என்­பன போன்ற வார்த்­தைகள் உறு­தி­யாகக் கூறப்­பட்­ட­தா­கவே கரு­தப்­படும்.

இந்­நி­லையில் இரண்டு அறிக்­கை­க­ளையும் பார்க்­கின்­ற­போது முத­லா­வது அறிக்­கையின் சிபா­ரி­சுப்­படி, காதி முன்­னி­லை­யில்தான் தலாக் மொழி­யப்­பட வேண்டும் என்­பதன் மூலம் ஒருவன் தன் வீட்டில் வைத்து தலாக் என்று சொன்­னதன் பின் காதி முன்­னி­லையில் வந்து சொல்­லும்­போது இரண்­டா­வது தலாக்­காக அது நிகழ்ந்­து­விடும். இதன் கார­ண­மாக ஒருவன் தனது இரண்டு தலாக்­கு­களை மொழிந்­த­வ­னா­கின்றான். மட்­டு­மன்றி, தலாக் நிறை­வேற காதி முன்­னி­லையில் சொல்­லப்­பட வேண்டும் என்­பது ஷரீஅத் விதி­யல்ல என்று கூறும் இரண்­டா­வது பரிந்­து­ரையில் ஒரு கணவன் காதி­யிடம் வந்து தன் மனை­வியை தலாக் கூறி­விட்­ட­தாகக் கூறி­விட்டால் அதனை ஏற்கும் காதி அதனை பதிவு செய்­து­கொள்ள வேண்டும் என இரண்­டா­வது பரிந்­துரை கூறு­கி­றது.

மதாஉ எனும் கொடுப்­ப­னவு

திரு­ம­ணத்தின் நோக்­கமே நிம்­ம­தி­யான வாழ்க்­கையை அமைத்துக் கொள்­வ­தாகும். அது கலைந்­து­வி­டு­மாயின் என்ன நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என அல்­குர்ஆன் 4: 34, 35இல் தெளி­வாகக் கூறு­கி­றது.

“மேலும், தலாக் கொடுக்­கப்­பட்ட பெண்­க­ளுக்கு நியா­ய­மான முறையில் சம்­ரட்­சணை பெறு­வ­தற்குப் பாத்­தி­ய­முண்டு (இது) முத்­தகீன் (பய­பக்­தி­யு­டை­யவர்)கள் மீது கடமையாகும்.”

முடியாதபோது தலாக் கூறி மனைவியை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு பிரியும் மனைவிக்கு கொடுக்கப்படும் ஒருவகை கொடுப்பனவு ‘மதாஉ’ எனப்படுகிறது. தலாக் கூறப்பட்ட பெண்ணுக்கு ‘மதாஉ’ எனப்படும் கொடுப்பனவு கொடுக்கப்பட வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும்.

விவாக பந்தத்திலிருந்து பிரிவதென்பது, தலாக் (எனும் கணவன் மனைவியை விடுதலை), குல்உ (நியாய காரணங்களுக்காக கணவனை விட்டும் பிரித்து விடுமாறு மனைவி ஏதும் செலுத்தி கணவனிலிருந்து பிரியக் கோருதல்), பஸ்கு (குறைபாடுகள், வேறு காரணங்களை வைத்து இருவரையும் பிரித்து விடுதல்) என்ற மூன்று வகைப்படும்.

இந்த மூன்று வகையிலும், முதலாவது பரிந்துரையில் பஸ்கு செய்யப்படும் பெண்ணுக்கும் ‘மதாஉ’ எனும் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது குழு (பாயிஸ் முஸ்தபா)வின் பரிந்துரையில் மேற்குறிப்பிடப்பட்டபடி ‘மதாஉ’ என்றொன்ரு ஷரீஅத்தில் கூறப்படவில்லையாதலால் நாம் கடமைப்படுத்த முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரு கணவன் தன் மனைவியை பஸ்க் செய்துகொள்ளும் அளவு நிர்ப்பந்திக்கும்போது காதி தன் சுய அதிகாரத்தின் அடிப்படையில் அப்பெண்ணை தலாக் சொல்லி மதாஉவை விதிக்கலாம் என்ற தீர்ப்பை முன்வைத்துள்ளது. ஏனெனில் பஸ்க் செய்து கொள்ளும் பெண் ‘மதாஉ’ பெற முடியாது. அவளாகப் பிரிந்து செல்ல பஸ்க் செய்து கொள்ளட்டும் என்று கணவன் நிர்ப்பந்திப்பதாகக் காணும் காதி அப்பெண்ணை தலாக் மூலம் விடுவித்து மதாஉவை விதிக்கலாம் என இரண்டாவது பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் சிறந்த ஒரு முடிவாகும்.

எனவே, முஸ்லிம் சமூகத்துக்கு யாதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பதை அழித்துவிடாமல் முடியுமானவரை பொருத்தமானவற்றை மாத்திரம் செய்து கொள்வதே அறிவுடமையாகும். ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச் சலுகையைக் காரணம் காட்டி முஸ்லிம் தனியார் சட்டத்தை முடிச்சுப் போடுவதை தவிர்ந்துகொள்வதே ஆரோக்கியமானதாகும்.

இறுதியாக ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதாவது, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் என்பது முஸ்லிம்களுக்கென்று பொதுவானதாக இருப்பினும் சன்மார்க்கத்தோடு தொடர்புடையது என்பதால் ஷரீஅத் வரையறை பேணியே மேற்படி விடயம் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறன்றி மேற்படி தனியார் சட்டத்தை நினைத்தபடி கையாள இடமளிக்காமலிருப்பதே முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பும் கடமையுமாகும்.
-Vidivelli