Verified Web

நன்மைகளைக் கொண்டு தீமைகளை தடுக்கும் கலை

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2018-07-20 06:22:31 T.M.Mufaris Rashadi

அல்லாஹ் தனது திரு­ம­றையில் கூறு­கிறான்: “நன்­மையும் தீமையும் சம­மாக மாட்­டாது. நீர் (தீமையை) நன்­மையைக் கொண்டே தடுப்­பீ­ராக! அப்­பொ­ழுது, யாருக்கும் உமக்­கி­டையே, பகைமை இருந்­ததோ, அவர் உற்ற நண்பர் போலா­கி­வி­டுவார். (41:34)

மனிதன் தவ­றுகள், பிழைகள், செய்­யக்­கூ­டிய பல­வீ­ன­மான நிலை­யிலே படைக்­கப்­பட்­டுள்ளான். இமாம் கஸ்­ஸாலி (ரஹ்) அவர்கள் தமது இஹ்யா உலூ­முத்தீன் என்ற நூலில் கூறு­வது போல் மனிதன் சில பண்­பு­களால் மலக்­கு­மார்கள் போன்றும் சில பண்­பு­களால் மிரு­கங்கள் போன்றும் மாறி­வி­டு­கின்றான். அதி உயர்ந்த, மிகத்­தாழ்ந்த  இந்த இரண்டு நிலை­க­ளுக்­கு­மி­டையே அவன் படைக்­கப்­பட்­டுள்ளான்.

தவ­று­க­ளையும் பிழை­க­ளையும் கையா­ளு­கின்ற விதத்தைப் பொறுத்தே குறித்த அந்தத் தவறை ஒரு நொடிப்­பொ­ழுதில் எம்மால் மாற்­றி­வி­டவும் முடியும் அல்­லது அதை குறித்த நப­ரிடம் அப்­ப­டியே தொடர்ந்­தி­ருக்கச் செய்­யவும் முடியும்.

கலை­களில் மிக உன்­ன­த­மான கலை மனி­தர்­களைப் படித்தல் என்ற கலை­யாகும். குறிப்­பாக இந்­தக்­கலை தஃவாக் களத்­தி­லி­ருப்­ப­வர்­க­ளுக்கு மிக அவ­சி­ய­மா­ன­தாகும். இதோ அதற்­கான ஒரு சிறிய அழ­கான முன்­மா­திரி.

மாலிக் பின் தீனார் (ரஹ்) வீட்­டிற்கு ஒரு திருடன் வந்­து­விட்டான்.

வீட்டில் திரு­டு­வ­தற்கு எந்தப் பொருளும் இல்லை வீட்டின் ஒரு புறத்­திலே மாலிக் (ரஹ்) அவர்கள் தொழு­து­கொண்­டி­ருந்­தார்கள்,

தொழு­து­மு­டித்து ஸலாம் கொடுக்­கும்­போது திரு­டனைப் பார்த்­து­விட்­டார்கள்.

திரு­டனை பார்த்து "நீ துன்­யாவின் பொருளைக் கேட்டு (திருட) வந்தாய்  உனக்கு அது கிடைக்­க­வில்லை. உன்­னிடம் மறு­மையின் பொருள் ஏதா­வது உண்டா?”

என்று கேட்க,

திருடன் இந்த வார்த்­தை­களை கேட்டு ஆச்­ச­ரி­ய­ம­டைந்து "இல்லை" என்று பதி­ல­ளித்­து­விட்டு அவர்கள்  முன்னால் அமர்ந்­து­விட்டான்.

 மாலிக் பின் தீனார் அவர்கள் உப­தேசம் செய்­தார்கள். அந்த திருடன் அழுது (தவ்பா செய்து திருந்தி) விட்டார். பின்பு இரு­வரும் சுப்ஹு தொழு­கைக்­காகப் பள்­ளி­வாசல் சென்று இரு­வரும் (ஒரே ஸஃப்பில்) அருகே நின்று தொழு­ததைப் பார்த்த மக்கள் இப்­படிக் கூறி ஆச்­ச­ரி­யப்­பட்­டார்கள்

 "எவ்­வ­ளவு பெரிய அறி­ஞ­ருக்கு அருகில் எவ்­வ­ளவு பெரிய திருடன்.

அதற்கு இமா­ம­வர்கள், "அவர் எனது பொருட்­களைத் திரு­ட­வந்தார். நான் அவ­ரது இத­யத்தை திரு­டி­விட்டேன்" என்­றார்கள்.

நூல் - தாரீஹுல் இஸ்லாம் - தஹபி ரஹ் 2/144

இமா­ம­வர்கள் திரு­டனைப் பிடித்து அடித்­தி­ருந்தால் அல்­லது அனை­வ­ரது முன்­னி­லையில் அவனை மான­பங்­கப்­ப­டுத்தி யிருந்தால் இமா­ம­வர்­களின் கோபம் தணிந்­தி­ருக்கும். ஆனால் அவர்கள் அப்­படிச் செய்­ய­வில்லை.

இமா­ம­வர்கள் திரு­ட­வந்­த­வ­னிடம் இறைவன் திருடச் சொன்ன இத­யத்தை திரு­டி­யதால் அவன் ஈரு­ல­கிலும் பாக்­கியம் பெற்­ற­வ­னா­கிறான்.

இது போலவே எகிப்­திய அறிஞர் ஷெய்க் முகம்மத் அல் கஸ்­ஸாலி (ரஹ்) அவர்கள் பின்­வ­ரு­மாறு கூறு­கி­றார்கள் :

நான் ஒரு­த­டவை குடிப்­ப­ழக்­கத்­திற்கு அடி­மை­யான ஒரு­வரைப் பார்த்து - "நீ தௌபா செய்யக் கூடாதா?” என்று கேட்டேன்

அவன் குற்ற உணர்­வோடு என்னைப் பார்த்தான்,  கண்கள் பனித்­தி­ருந்­தன.

"எனக்­காகப் பிரார்த்­தி­யுங்கள்" என்றார்.

அவ­ரது நிலையைப் பார்த்து எனது மனம் வருந்­தி­யது.

அல்­லாஹ்வின் விட­யத்தில் தவறு செய்­து­விட்­ட­தற்­கான உணர்வு தான் அந்தக் கண்ணீர். திருந்த வேண்டும் என்ற நிலை அவரில் தெரிந்­தது. உண்­மையில் அவர் விசு­வாசி என்­றாலும் சோதிக்கப் பட்­டவர். அவ­ருக்­காக அல்­லாஹ்­விடம் பிரார்த்­திக்­கு­மாறு

என்­னி­டமும் வேண்­டு­கிறார். அப்­போது நான் எனக்­குள்­ளேயே பேசிக்­கொண்டேன்.

"எனது நிலையும் இவ­ரது நிலையைப் போன்­ற­துதான் அல்­லது அதனை விடவும் மோச­மா­னது.

நான் மது­வ­ருந்­தி­யது கிடை­யாது. நான் வாழ்ந்த சூழலும் அப்­ப­டி­யா­ன­தல்ல. என்­றாலும் பொடு­போக்கு என்ற மதுவை

அருந்­தி­யி­ருக்­கிறேன். அல்­லாஹ்வை அதிகம் மறந்து அவ­னது கட­மை­களில் தவறி இருக்­கிறேன்.

இவர் தான் விட்ட குறைக்­காக அழு­கிறார். நானும் என்னைப் போன்­றோரும் நாம் விடும் குறைக்­காக அழு­தது கிடை­யாது.

நாம் எம்மைப் பார்த்தே ஏமாந்து விட்டோம் "

குடிப்­ப­ழக்­கத்தை விடப் பிரார்த்­திக்­கு­மாறு என்­னிடம் வேண்­டிய அந்த சகோ­த­ரனை நோக்கி நான் நெருங்­கினேன்.

"வாருங்கள் நாம் பரஸ்­பரம் பிரார்த்­திப்போம்" என்று கூறினேன்

"இறைவா ! நாம் எமக்கே அநி­யாயம் செய்து விட்டோம் , நீ எம்மை மன்­னிக்­க­விட்டால் நாம் நஷ்­ட­வா­ளி­களே!" (அல்­குர்ஆன்)

என்று இரு­வ­ரு­மாக பிரார்த்­தித்­தனர்.

பிற­ரது தவ­று­களை காண்­கின்ற நாம் அவர்­க­ளது தவ­று­களை வைத்து அவர்­களை இழி­வு­ப­டுத்த வேண்­டிய எந்த அவ­சி­யமும் எமக்­கில்லை. ஏனெனில் மனி­தர்கள்  அடிப்­ப­டையில் தவ­றி­ழைப்­ப­வர்­களே. ஒரு­வ­ரது தவறு வெளியில் தெரி­கி­றது, ஆனால்  எத்­த­னையோ மனி­தர்கள் தவ­று­களை மறைத்து தவ­றற்­ற­வர்கள் போல் வாழ்­கின்­றனர் என்ற வித்­தி­யாசம் மாத்­திரே எமக்குள் உண்டு. எனவே அழ­கிய வார்த்­தைகள், மென்மை, கருணை, இரக்க சுபாவம் போன்­ற­வற்றை மூல­த­ன­மா­கக்­கொண்டு மனித மனங்­க­ளோடு உற­வாட வேண்­டுமே தவிர அவர்­க­ளது மானங்­க­ளோடு விளை­யாடி விட­லா­காது.

நிச்­ச­ய­மாக அல்லாஹ் மென்­மை­யா­னவன். அவன் அனைத்துக் காரி­யங்­க­ளிலும் மென்­மையே விரும்­பு­கின்றான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (அறி­விப்­பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி, முஸ்லிம்).

அல்லாஹ் மனி­தர்­களை இல­குவில் தண்­டிப்­ப­தில்லை. அவன் தனது அடி­யார்­களை தண்­டிக்க விரும்­பு­வதும் இல்லை. அவன் அவர்­க­ளுக்குப் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களை வழங்­கிக்­கொண்டே இருக்­கிறான். காரணம், தனது அடியான் என்­றா­வது ஒருநாள் தன் தவ­று­களை உணர்ந்து தன்­பக்கம் வர­மாட்­டானா என்ற நோக்­கத்­தி­லாகும். மனி­தர்­களும் இறை­வனின் இந்த அழ­கிய பண்பைக் கடைப்­பி­டிப்­ப­தையே அவன் எதிர்­பார்க்­கிறான்.

தவ­று­களை குத்­திக்­கட்­டாது அதற்குப் பக­ர­மாக நன்­மை­யான மாற்­றீ­டு­களை முன்­வைத்து மென்­மை­யாக அதனை சுட்­டிக்­காட்­டு­கின்­ற­போது  ஏற்படும் விளைவுகள் காரசாரமான ஏச்சுப் பேச்சுக்களாகவோ,  வசைபாடல்களாகவோ ஒருபோதும் இருக்கப்போவதில்லை.

அல்லாஹ் இதனையே தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கறிவான். (அல்-குர்ஆன் 16:125)
-Vidivelli