Verified Web

முஸ்லிம் தனியார் சட்டம்: இனியும் வேண்டாம் தாமதம்

A.R.A Fareel

சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவி வகிக்கிறார்.

 

2018-07-20 04:36:57 A.R.A Fareel

‘முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு இரண்­டாகப் பிள­வு­பட்டு இரு வேறான அறிக்­கைகளை என்­னிடம் சமர்ப்­பித்­துள்­ளது. அவர்­களை இணக்­கப்­பாட்­டுக்கு கொண்­டு­வர நான் மேற்­கொண்ட முயற்­சிகள் தோற்­றுப்­போய்­விட்­டன.

முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபா­ரிசு அறிக்­கை­யினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க முடி­யா­மைக்கு திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட குழுவின் பிளவே கார­ண­மாக உள்­ளது என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்­தி­ருக்­கிறார்.

நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ர­ளவின் கருத்­துப்­படி முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவினர் இரண்­டாகப் பிரிந்து தத்தம் நிலைப்­பா­டு­களில் உறு­தி­யாக இருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்குள் விட்டுக் கொடுக்கும் மனப்­பான்மை உள்­ள­தாகத் தெரி­ய­வில்லை.

முஸ்லிம் தனியார் சட்ட

திருத்த சிபா­ரிசு குழு

தற்­போது அமு­லி­லுள்ள 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் இக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது.

ஐரோப்­பிய ஒன்­றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை தொடர்­பாக 2009 ஆம் ஆண்டு வெளி­யிட்ட இடைக்­கால அறிக்­கையில் இலங்­கையில் அமு­லி­லுள்ள முஸ்லிம் தனியார் சட்டம் ஐக்­கிய நாடுகள் சபையின் உடன்படிக்­கைக்கு முர­ணா­னது என்று குறிப்­பிட்­டி­ருந்­ததைத் தொடர்ந்தே முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்று அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இந்த நிபந்­த­னை­யி­னை­ய­டுத்தே 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்­ச­ராக இருந்த மிலிந்த மொர­கொ­ட­வினால் இக்குழு நிய­மிக்­கப்­பட்­டது. இக் குழு­வுக்கு முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலைமை வகித்தார். அவர் தலை­மையில் 19 உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டனர். இக் குழுவில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர், செய­லாளர், நீதி­ப­திகள், ஜனா­தி­பதி சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்­ன­ணியின் பிர­தி­நி­திகள் அடங்­கி­யி­ருந்­தனர். இவர்களில் இருவர் அறிக்கை தயாராவதற்கு முன்பே காலமாகிவிட்டனர்.

இணக்­கப்­பாடு

எட்­டப்­ப­ட­வில்லை

2009 ஆம் ஆண்டு இக்­குழு தனது பணி­யினை ஆரம்­பித்து பல­கட்ட கலந்­து­ரை­யா­டல்கள், சந்­திப்­பு­களை நடத்­தியும் இறு­தியில் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­ட­போது சில விட­யங்­களில் முரண்­பட்டுக் கொண்­டமை வருந்­தத்­தக்­க­தாகும். எட்டு வரு­டங்கள் ஒன்­றாக அமர்ந்து கருத்­து­களைப் பரி­மாறிக் கொண்­டாலும் ஏன் இவர்­களால் ஒன்­று­பட முடி­யாமற் போனது என்­பது சமூ­கத்தில் இன்று பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.

2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து இக்­கு­ழு­விற்கு முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தங்கள் தொடர்­பான முன்­மொ­ழி­வுகள் கிடைத்த வண்­ணமே இருந்­தன. சில அமைப்­புகள் ஷரீ­ஆ­வுக்கு முர­ணான முன்­மொ­ழி­வு­க­ளையும் முன்வைத்­தி­ருந்­தன. அவற்­றை­யெல்லாம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய அதன் தலை­வரும், செய­லா­ளரும் எதிர்த்­தனர். குழு அங்­கத்­த­வர்கள் இரண்­டாகப் பிள­வு­பட வேண்­டிய நிலை உரு­வா­கி­யது. முஸ்லிம் தனியார் சட்­டத்தின் சில விட­யங்­களில் அதா­வது ஷரீ­ஆ­வுக்கு முர­ணான சிபா­ரி­சு­களை வழங்­கு­வ­தற்கு உலமா சபையும், உலமா சபையின் கருத்­து­களை ஆத­ரிப்­ப­வர்­களும் இணங்­க­வில்லை. இதனால் அறிக்­கையைத் தயா­ரிப்­பதில் குழுவின் தலைவர் சலீம் மர்சூப் பல சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது.

உட­ன­டி­யாக அறிக்­கையைக்

கோரிய நீதி­ய­மைச்சர்

எட்டு வருட கால­மாக முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபா­ரிசு அறிக்கை நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­ப­டாது கால தாம­தப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. குழுவின் உறுப்­பி­னர்கள் தமக்குள் முரண்­பட்டுக் கொண்­ட­மையே இதற்குக் காரணம்.

இந்­நி­லையில் பெண்கள் அமைப்­பு­களும் சில சமூக அமைப்­பு­களும் தாமதம் குறித்து நீதி­ய­மைச்­ச­ருக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தனர். தாம­தத்­திற்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் ஏற்­பாடு செய்­தனர்.

இந்தச் சூழ்­நி­லையில் கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் 19 ஆம் திகதி நீதி­ய­மைச்சின் செய­லாளர் ஜய­மான்ன, குழுவின் தலைவர் முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூ­புக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்தார். கடி­தத்தில் குழுவின் அறிக்­கையை கால­தா­ம­தப்­ப­டுத்­தாமல் உடன் நீதி­ய­மைச்­சுக்குச் சமர்ப்­பிக்­கும்­படி கோரி­யி­ருந்தார். அத்­தோடு எதிர்­கா­லத்தில் குழு தனது அமர்­வு­களை நீதி­ய­மைச்சின் கேட்போர் கூடத்­திலே நடத்த வேண்­டு­மெ­னவும் வேண்­டி­யி­ருந்தார். நீதி­ய­மைச்சின் அவ­தானம் குழுவின் மீது திரும்­பி­யுள்­ள­மையை இதன் மூலம் அறியக் கூடி­ய­தாக இருந்­தது.

குழு­வுக்குள் கருத்து

முரண்­பா­டுகள்

குழு தனது அறிக்­கையைத் தயா­ரித்து கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி ஒன்று கூடி­யது. அன்­றைய தினம் அறிக்­கையில் உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்­களைப் பெற்­றுக்­கொள்­ள­வி­ருந்­தது. எனினும் அன்­றைய தினம் அமர்­வுக்கு சில உறுப்­பி­னர்கள் சமு­க­ம­ளிக்­கா­தி­ருத்­த­மையும் ஒரு சில விட­யங்­களில் இணக்கம் காணப்­ப­ட­வேண்­டி­யி­ருந்­த­மையும் கார­ண­மாக அன்­றைய தினம் கையொப்பம் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அமர்வு நவம்பர் மாதம் 26 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி குழு அதன் தலைவர் சலீம் மர்சூப் தலை­மையில் கூடி­ய­போது குழுவின் சில உறுப்­பி­னர்­களால் தயா­ரிக்­கப்­பட்ட மற்­றுமோர் அறிக்கை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்­தி­யினால் கைய­ளிக்­கப்­பட்­டது. அவ்­வ­றிக்­கையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்தம் தொடர்பில் 10 சிபா­ரி­சுகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

எனினும் அன்­றைய தினம் உலமா சபையின் தலை­வ­ரினால் குழுவின் தலைவர் சலீம் மர்­சூ­பிடம் கைய­ளிக்­கப்­பட்ட அறிக்­கையில் கையொப்­ப­மிட்­ட­வர்­களில் சிலர் சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை. அத்­தோடு கையொப்­ப­மிட்­டி­ருந்த ஒரு உறுப்­பினர் அன்று சுக­யீனம் கார­ண­மாக அமர்­வி­லி­ருந்தும் வெளி­யேறிச் சென்றார். அதனால் அன்று குறித்த அறிக்கை தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை.

குழுவின் தலைவர் சலீம் மர்சூப் ஏற்­க­னவே அறிக்­கை­யொன்­றினைத் தயா­ரித்து உறுப்­பி­னர்கள் அனை­வ­ரதும் கையொப்­பங்­களைப் பெற்­றுக்­கொள்ளத் தயார் நிலையில் இருந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே குழுவின் உறுப்­பி­னர்கள் சிலர் கையொப்­ப­மிட்டு மற்­றுமோர் அறிக்கை தலை­வ­ரிடம் கைய­ளித்ததனால் பிரச்­சி­னைகள் பூதா­க­ர­மா­கின. குழு இரண்­டாகப் பிள­வு­பட்­டது. இதனால் முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபா­ரிசு அறிக்­கை­யாக எந்த அறிக்­கையை நீதி­ய­மைச்­ச­ரிடம் சமர்ப்­பிப்­பது என்ற பிரச்­சினை எழுந்­தது. இந்தப் பிரச்­சினை கால­தா­ம­தத்தை மேலும் நீடித்­தது.

நீதி­ய­மைச்­ச­ரிடம்

அறிக்கை கைய­ளிப்பு

சமூ­கத்தின் நல­னுக்­காக முஸ்லிம் தனியார் சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு 8 வரு­டங்­க­ளாக கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தியும் திருத்­தங்கள் தொடர்பில் ஒரு­மித்த இணக்­கப்­பாட்­டுக்கு வர முடி­யாமற் போனது. குழுவின் தலைவர் அறிக்­கையை இரண்­டாகச் சமர்ப்­பித்தார்.

ஒரு அறிக்கை அவ­ரது தலை­மையை ஆத­ரித்த ஒரு பிரி­வி­னரின் அறிக்­கை­யாகும். அடுத்த அறிக்கை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலை­மையை ஆத­ரித்த பிரி­வி­ன­ர­தாகும்.

கடந்த ஜன­வரி மாதம் 22 ஆம் திகதி நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ர­ள­விடம் முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபா­ரிசு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சரும் குழுவின் தலை­வ­ரு­மான சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரது 313 பக்­கங்­களைக் கொண்ட அறிக்­கையும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்­தியை தலை­மை­யாகக் கொண்ட பிரி­வி­னரின் 9 பக்­கங்கள் கொண்ட அறிக்­கையும் நீதி­ய­மைச்­ச­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

முரண்­பா­டுகள்

குழுவின் தலை­வ­ரான முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தன்­னிடம் அறிக்­கையைச் சமர்ப்­பித்து குழு அங்­கத்­த­வர்கள் அனை­வரும் ஒரு­நி­லைப்­பாட்டில் இல்லை என தன்­னிடம் தெரி­வித்­த­தாக நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள கூறி­யி­ருக்­கிறார்.

குழுவில் அதன் தலைவர் சலீம் மர்­சூ­புடன் 9 பேர் ஒரு நிலைப்­பாட்­டிலும் சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தலை­மையில் உல­மாக்கள் மற்றும் சட்­டத்­தர­ணிகள் அடங்­கிய மற்றும் 9 பேர் வேறு நிலைப்­பாட்­டிலும் இருக்­கின்­றனர் எனவும் சலீம் மர்துபின் குழுவில் நீதியமைச்சின் செயலாளரையும் உள்ளடக்கியிருக்கிறார். நீதி­ய­மைச்சர் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் இரண்டு அல்­லது மூன்று விட­யங்கள் தொடர்பில் இரு பிரி­வி­னரும் முரண்­பட்டுக் கொள்­கின்­றனர். அவர்கள் இவ்­வி­ட­யங்­களில் உடன்­பாட்­டுக்கு வர மறுக்­கின்­றனர்.

திரு­மண வய­தெல்லை தொடர்பில் இக்­குழு முரண்­பட்­டுள்­ளது. அறிக்­கையில் முஸ்லிம் ஆண்­களின் வய­தெல்லை 18 எனவும் பெண்­களின் வய­தெல்லை 16 எனவும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் பெண்­களின் வய­தெல்லை 16 என்­பதை மற்றப் பிரிவு எதிர்க்­கி­றது. முஸ்லிம் பெண்­களின் வய­தெல்லை நிர்­ண­யத்தில் ஷரீஆ சட்டம் உள்­வாங்­கப்­பட வேண்­டு­மெனத் தெரி­விக்­கி­றது.

அடுத்து, பெண் காதி நீதி­ப­திகள் நிய­மிக்­கப்­ப­டலாம் என அறிக்­கையில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் இதற்கு ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தலை­மை­யி­லான பிரி­வினர் எதிர்ப்பு தெரி­விக்­கின்­றனர். பெண்கள் காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மனம் பெற முடி­யா­தென அவர்கள் மறுக்­கின்­றனர். இவ்­வாறு ஒரு சில விட­யங்­க­ளி­லேயே இணக்­கப்­பாட்­டுக்கு வரா­துள்­ளனர். காதி நீதிமன்றங்களில் சட்டத்தரணிகளை ஆஜர்படுத்தும் விடயத்திலும் முரண்பாடுகள் நிலவுகின்றன.

இந்த விட­யத்தில் நான் தொடர்­பு­ப­டாமல் இரண்டு பிரி­வி­ன­ரையும் ஒரே நேரத்தில் அழைத்து தீர்­மானம் ஒன்­றினை மேற்­கொள்ள முயற்­சித்தேன். ஆனால் அது சாத்­தி­ய­மா­க­வில்லை. இவர்­களை இணக்­கப்­பாட்­டுக்குக் கொண்டு வரு­வ­தற்கு என்­னா­லான அனைத்து முயற்­சி­க­ளையும் எடுத்தேன். ஆனால் சாத்­தி­யப்­பா­டில்லை என்று நீதி­ய­மைச்சர் தெரி­வித்­துள்ளார். இதி­லி­ருந்து இரு பிரி­வி­னரும் தமது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கின்­றமை உறு­தி­யா­கி­றது.

அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில்

சமர்ப்­பிக்­கப்­படும்

நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள குழுவின் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்து அதற்­கான அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்ளத் தீர்­மா­னித்­தி­ருக்­கிறார் என்­றாலும் பிள­வு­பட்­டி­ருக்கும் குழுவின் உறுப்­பி­னர்கள் பொது­வான இணக்­கப்­பாட்­டுக்கு வரும் வரைக்கும் என்னால் எதுவும் செய்ய முடி­யாது என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

அத்­தோடு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டமும் இவ் அறிக்­கையைப் பகிர்ந்­த­ளிக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

உலமா சபைத்  தலைவர்

ரிஸ்வி  முப்தி

முஸ்லிம்  தனியார்  சட்­டத்­தி­ருத்த  சிபார்சுக்  குழுவில்  அங்கம்  வகித்­த­வ­ரான  அகில  இலங்கை  ஜம்­இய்­யத்துல் உலமா  சபையின் தலைவர்  அஷ்ஷெய்க்  ரிஸ்வி  முப்தி நீதி­ய­மைச்சர்  முஸ்லிம்   தனியார்   சட்­டத்­தி­ருத்த  அறிக்­கையை அமைச்­ச­ர­வையில்  சமர்ப்­பிப்­ப­தற்கு  முன்பு  முஸ்லிம்  பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள்  21  பேரி­டமும்   கைய­ளிக்க  வேண்டும்.  அவர்­களின்  கருத்­து­களும்  பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும் என கோரிக்கை  விடுத்­துள்ளார்.

ஷரீ­ஆ­வுக்கு  முரண்­பா­டற்ற திருத்­தங்­க­ளையே அகில  இலங்கை ஜம்­இய்­யத்துல்  உலமா சபை உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட  குழு  முன்­மொ­ழிந்­துள்­ளது. முஸ்லிம்  தனியார்  சட்டத் திருத்த சிபார்சுக் குழு இரண்­டாகப் பிரிந்து  வேறு­பட்ட  முன்­மொ­ழி­வு­களை  சமர்ப்­பித்­துள்­ளதால் இது தொடர்பில்  முஸ்லிம்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்  ஆராய்ந்து  இறு­தித்­தீர்­மா­னத்­துக்கு வரலாம். அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் அல்­லாத  அமைச்­சர்கள் இருப்­பதால்  முஸ்லிம் தனியார்  சட்டம்  பற்­றிய  அறிவு அவர்­க­ளுக்கு இருக்­காது. அத­னா­லேயே  தனியார் சட்­டத்­தி­ருத்த அறிக்கை  முதலில்  முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கைய­ளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

முஸ்லிம் எம்.பி.க்களின் 

பங்­க­ளிப்பு  பயன்­த­ருமா?

முஸ்லிம்  தனியார்  சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய  திருத்­தங்கள் பற்றி ஆரா­யப்­பட்டு எமது துறைசார் நிபு­ணர்­களால் ஒரு­மித்த இணக்­கப்­பாட்­டுக்கு  வர­மு­டி­யாமற் போனது  மிகவும்  கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.  அவர்­களை நீதி­ய­மைச்­ச­ரால்­கூட ஒன்­றி­ணைக்க முடி­யாமற்   போயுள்­ளது.

9 வரு­டங்­களை வெறு­மனே  வீணே  கடத்­தி­விட்­ட­தா­கவே  குறிப்­பிட்ட  குழு மீது  சமூகம்  குற்றம் சுமத்­து­கி­றது.  இந்­நி­லையில் குழுவின்  உறுப்­பி­ன­ரான அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின்  தலைவர்  ரிஸ்வி  முப்தி தனியார்  சட்­டத்­தி­ருத்த  அறிக்கை  முஸ்லிம் பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­க­ளிடம்  கைய­ளிக்­கப்­பட்டு அவர்­க­ளது  கருத்­துக்கள்  பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டு­மென  தெரி­வித்­தி­ருக்­கின்­றமை பயன்­த­ருமா என்­ப­துதான்  பிரச்­சினை.

 துறைசார்  நிபு­ணர்கள், உல­மாக்கள், நீதி­ப­திகள், சிரேஷ்ட  சட்­டத்­த­ர­ணிகள், பெண்கள் அமைப்பின்  பிர­தி­நி­திகள்  என்று நிபு­ணத்­துவம்  பெற்­ற­வர்­க­ளாலே 9 வரு­டங்­க­ளாக   கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்­தியும்  உறு­தி­யான  ஒரு நிலைப்­பாட்­டினை  எட்ட முடி­யாமற் போயுள்­ளது.

300 க்கும்  மேற்­பட்ட  பக்­கங்­களைக் கொண்ட  அறிக்­கையை  கைய­ளித்தால் அவர்கள் அறிக்­கையை  முழு­மை­யாக  வாசிப்­பார்­களா?  என்­பது  சந்­தேகம். அவ்­வாறு  வாசித்­தாலும் அவர்­க­ளது அபிப்­பி­ரா­யங்­களை  முன்­வைப்­ப­தற்கு  நீண்­ட­காலம்  செல்லும்.

கடந்த காலங்­களில்  முஸ்லிம்  சமூ­கத்தைப் பாதிக்கும் சட்ட திருத்­தங்கள் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­ட­போது   தமது சுய­நலன் கருதி, அர­சி­யல்­நலன் கருதி அவற்­றுக்குக் கைதூக்­கி­ய­வர்கள் எமது முஸ்லிம்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள். 

புதிய தேர்தல்  முறைக்கு ஆத­ர­வாக  கைதூக்­கி­ய­வர்கள் அம்­முறை  எமது பிரதிநிதித்துவத்தைப்  பாதிக்கும்  என்று இன்று  பழைய தேர்தல்  முறையை  கோரி  நிற்கிறார்கள்.  எமது  பாராளுமன்ற உறுப்பினர்களிடம்  தூரநோக்கு   செயற்பாடுகள்  இல்லை என்பதை  இவ்வாறான   முன்னெடுப்புகள் உறுதி  செய்கின்றன.

உடன்பாடு  எட்டப்பட்ட திருத்தங்கள்

முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபார்சுக்குழு  ஒருசில  விடயங்களைத் தவிர  ஏனைய விடயங்களில்  உடன்பட்டிருக்கின்றது. முஸ்லிம் பெண்களின் திருமண  வயதெல்லை, பெண் காதிகள்  நியமனம் போன்ற விடயங்களிலே  கருத்து வேறுபாடுகள்  காணப்படுகின்றன.

இந்த விடயங்கள் ஷரீஆவுடன்  தொடர்புபட்ட  விடயங்களாகும். முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் ஏனைய பெண்கள்  அமைப்புகளுடன்  இணைந்து தமக்கு  சில உரிமைகள்  வழங்கப்பட வேண்டும் என்று அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன. இஸ்லாமிய   பெண்கள்  தமது மார்க்கம், கலாசாரம்,  இஸ்லாமிய  சட்டங்களுக்கு உட்பட்டு  தமது உரிமைகளைப்  பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே  உலமா  சபை தெரிவிக்கிறது.

குழுவின்  உறுப்பினர்கள் இணக்கப்பாட்டுக்கு உட்படாதவை  ஷரீஆவுடன் தொடர்புபட்டதாகும்.

இந்நிலையில்  ஷரீஆ  சட்டம் தொடர்பான  விடயங்களில்  முஸ்லிம்  பாராளுமன்ற உறுப்பினர்களின்  கருத்துகளைப்  பெற்றுக்கொள்ள முயற்சிப்பது பயனற்றதாகும்.

ஷரீஆவுடன்  தொடர்புபட்ட சட்ட திருத்தங்களை உலமாக்களும், மார்க்கத் தலைவர்களுமே  தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம்  தனியார் சட்டத்தில் திருத்தங்கள் விரைவுபடுத்தப்படவேண்டும் என சமூகம்  எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
-Vidivelli