Verified Web

பயன்­தரும் கல்வி

2018-07-19 06:33:07 Administrator

எம்.என்.யசிரா இஸ்ஸத்

விடுகை வருடம்
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை சிறப்புக்கற்கை,
கிழக்குப் பல்கலைக்கழகம்,

உலகில் வல்­ல­ர­சு­களாய் உயர்ந்­துள்ள ஒவ்­வொரு நாட்டின் அபி­வி­ருத்­தி­யிலும் கல்வி என்ற மூல­தனம் விதைக்­கப்­பட்­டி­ருப்­பதை காணலாம். அதற்­காகக் கல்­வியை வழங்­கினால் மாத்­திரம் வல்­ல­ர­சு­க­ளாக மாறி­விட முடியும் என்றால் உலகில் காணப்­படும் அனைத்து நாடு­களும் என்றோ வல்­ல­ர­சு­க­ளாக ஆகி­விடும். விடயம் அவ்­வா­றில்லை. சிறந்த கல்­வியை முத­லீடு செய்யும் நாடு­களே முன்­னே­றி­யுள்­ளது. பய­னுள்ள கல்­வியைப் பெற்று உயர்­வ­டை­வ­தற்கு எது சிறந்த கல்வி? என்ற வினா­விற்கு விடை­தேட வேண்டும்.

அந்­த­வ­கையில் கல்­வி­யா­னது ஒவ்­வொரு தனி மனி­த­னையும் உரு­வாக்கும் சக்­தி­யா­கவும், அவ­னது நடத்­தையை சீர்­செய்யும் ஊட­க­மா­கவும் காணப்­ப­டு­கின்­றது. சமூ­கத்தில் காணப்­படும் ஒவ்­வொரு மனி­தனும் பூரண விருத்­தி­ய­டைய வேண்டும். அதற்கு கல்வி மனி­தனின் அத்­தி­யா­வ­சிய தேவை­களில் ஒன்­றாக உள்­ளதை உணர்ந்­து­கொள்ள வேண்டும். கல்­வியின் மூலம் மனிதன் மனி­த­னாக வாழக் கற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும். சுருக்­க­மாகக் கூறினால் கல்வி “வாழக்­கற்றுக் கொடுக்கும் கலை"யாகக் காணப்­பட வேண்டும்.

கல்­வியால் நற்­பி­ர­ஜைகள் உரு­வாக்­கப்­பட வேண்டும். கல்­வியைக் கொண்டு தனி­ம­னிதன் ஆளுமை மிக்­க­வ­னாக, நல்­லொ­ழுக்­க­முள்­ள­வ­னாக, மனி­த­நே­ய­மிக்­க­வ­னாக சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அப்­போ­துதான் அது பய­னுள்ள கல்­வி­யாக அமையும். எந்த சமூ­கத்தில் குற்­றங்கள் அதி­க­ரித்து மனித குணங்கள் இழி­நி­லையில் காணப்­ப­டு­கின்­றதோ அங்கு சிறந்த கல்வி வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் அக்­கல்வி தன் இலக்கை அடை­ய­வில்லை என்றும் அறிந்­து­கொள்ள முடியும்.

எமது நாடான இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் இல­வ­ச­மாகக் கல்வி, இல­வ­ச­மாக சுகா­தார சேவைகள் வழங்­கு­வதில் பிற நாடு­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாகத் திகழும் ஒரு நாடாக உள்­ளது. ஆரம்­பக்­கல்வி தொடக்கம் உயர்­கல்வி வரைக்­கு­மான இல­வ­சக்­கல்வி வசதி என்­பது எமக்கு கிடைத்த வர­மாக உள்­ளது. இத­னால்தான் உலக அரங்கில் இலங்­கையின் எழுத்­த­றிவு வீதம் உயர்­மட்­டத்தில் காணப்­ப­டு­கின்­றது. இது எழுத்­த­றிவு வீதப்­பட்­டி­யலில் 83 ஆவது இடத்தை பெற்றுக் கொடுத்­துள்­ளது.

இலங்­கையின் எழுத்­த­றிவு வீதம் 2016 ஆம் ஆண்டின் ஆய்­வின்­படி 92 ஆகும்.  ஆண்கள் 93%,  பெண்கள் 91%மாகவும் ஆண்­க­ளுக்கும் பெண்­க­ளுக்­கு­மி­டை­யி­லான வித்­தி­யாசம் 1.9%மாக  உள்­ளது. இலங்­கையின் நிலை உலக சரா­ச­ரி­யிலும், பிராந்­திய சரா­ச­ரி­யிலும் மேம்­பட்­ட­தாகும். இது எமக்கு மகிழ்­வூட்டும் ஒரு விட­ய­மாகும்.

ஆனால், எமது நாட்டுக் கல்­வி­மு­றை­யிலும் பல்­வேறு சிக்­கல்கள் காணப்­ப­டு­கின்­றன. காலத்­திற்­கேற்ற மாறு­தல்கள் கல்­வியில் கட்­டாயம் தேவை என்­பதை உணர மறுக்­கி­றது. கல்­வியின் உள்­ள­டக்கம் மாண­வர்­க­ளுக்கு பய­னுள்­ளதா? மாண­வர்­களை சமூ­கத்­திற்­கேற்­ற­வர்­களாய்? தன்னை, தன­தாற்­றலை அடை­யா­ளப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வர்­களாய், சமூ­கத்தை சிறந்­த­மு­றையில் கட்­டி­யெ­ழுப்பக் கூடி­ய­வர்­களாய் கல்வி உரு­வாக்­கு­கி­றதா? என்ற வினா­விற்கு மிகுந்த வருத்­தத்தை ஏற்­ப­டுத்தக் கூடிய பதிலே கிடைக்­கப்­பெ­று­கி­றது.

நமது கல்வி முறையில் விழு­மியம் என்­பது இல்­லா­ம­லேயே போய்­விட்­டது. எவன் ஒருவன் ஒழுக்கம் தவ­று­கி­றானோ அவன் சமூ­கத்தை கட்­டிக்­காப்­ப­வ­னாக நிச்­ச­ய­மாக இருக்­க­மாட்டான்.

“ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயி­ரினும் ஓம்பப் படும்"

அதி­காரம் ஒழுக்­க­மு­டைமை குறள் எண் 131

என்ற திருக்­குறள் கற்­றுத்­தரும் பாடம் என்ன என்­பதை மறந்­து­விட்­டது கல்வி நடை­மு­றைகள். பிள்­ளை­க­ளி­டத்தில் செயற்­பாட்­டுத்­தி­றனை வளர்க்க முயற்­சிக்கும் கல்வி விட்­டுக்­கொ­டுக்கும் மனப்­பான்­மையை வளர்த்­திட முயற்­சிக்­க­வில்லை. அறிவை மெரு­கூட்­டிடத் தேவைப்­படும் கல்­வி­ய­றிவைப் பயன்­ப­டுத்த கற்­றுக்­கொ­டுப்­ப­தில்லை. இதனால் பிள்­ளைகள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்­ளவும், பிறரை காயப்­ப­டுத்­தவும், சண்­டை­யிட்டுக் கொள்­ளவும், தன்னைத் தானே தாழ்­வு­ப­டுத்திக் கொள்­ள­வுமே சொல்­லிக்­கொ­டுப்­ப­தாக அமை­கி­றது. பிள்­ளைகள் பரீட்சை எழு­தவும், புள்­ளிகள் பெறவும், உயர்­கல்­விக்­கான வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும் வழிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். எனது நாடு, எனது சமூகம், எனது உற­வுகள், எனது இயற்கை என்ற தூய சிந்­த­னை­களை மனதில் தோன்றச் செய்­ய­வில்லை.

சாதா­ர­ண­மாக பரீட்­சையில் அதி­கூ­டிய புள்­ளி­களைப் பெற்று சித்­தி­ய­டை­யக்­கூ­டிய பிள்­ளை­க­ளி­டத்தில் கூட சமூ­கத்தில் ஒன்­றி­ணைந்து வாழ்­வ­தற்­கான மனி­த­நேயப் பண்­புகள் காணப்­ப­டாமை கவ­லைக்­கு­ரிய விட­ய­மாக உள்­ளது. பிற இனங்­களை, அவர்­க­ளு­டைய கலா­சா­ரத்தை மதித்தல், பொது­நலன், பொறுமை, சகிப்­புத்­தன்மை என்­ப­வற்றை கைக்­கொள்­வது அவ­மா­னத்­திற்­கு­ரிய விட­ய­மாக கரு­து­கி­றார்கள்.

மேலும், இன்­றைய மாண­வர்கள் மனதால் பல­வீ­ன­மா­ன­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கி­றார்கள். பரீட்­சையில் குறைந்த சித்தி எய்­து­வ­தையும், தோற்­றுப்­போ­வ­தையும் ஏற்­றுக்­கொள்ளும் தன்­னம்­பிக்­கையை இழந்­துள்­ளனர். இவற்­றை­யெல்லாம் மாற்­றி­விட எமது நாட்­டுக்­கல்வி முறையில் எவ்­வ­ள­வுதான் சீர்­தி­ருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட்ட போதிலும் பரம்­பரை பரம்­ப­ரையாய் மனதில் நிலை­நாட்­டப்­பட்­டுள்ள கொள்­கை­யான பரீட்­சையில் சித்­தி­ய­டை­வதும், முதலாம் மாண­வராய் பரீட்­சையில் வரு­வதும், உயர் சம்­பளம் பெறக்­கூ­டிய கல்­வியை நாடு­வ­துமே வழக்­க­மாக உள்­ளதால் காலத்­திற்­கேற்ற மாற்­றங்கள் தட்­டிக்­க­ழிக்­கப்­பட்டு வழக்­கொ­ழிந்து போய்­வி­டு­கின்­றன. அவை ஏட்­டி­லேயே முடங்­கி­வி­டு­கின்­றன.

பெற்றோர், பாட­சாலை, சமூகம் அனைத்தும் கல்­வியின் பெயரால் பிள்­ளை­களை சுய­ந­ல­மிக்­க­வர்­களாய் தன்­னார்­வ­மற்­ற­வர்­களாய் மாற்­றி­விட்­டது. பிள்­ளை­களால் சுமக்க முடி­யா­த­வை­க­ளையும் சுய­கௌ­ர­வத்­திற்காய் பெற்­றோர்கள் பிள்­ளைகள் மீது திணிக்­கி­றார்கள். பாட­சாலை  தனது அடை­வு­மட்­டத்தை உயர்­வாகக் காட்டிக் கொள்­வ­தற்­காக பிள்­ளை­களை பரீட்­சையில் சித்தி எய்­து­வ­தற்­காக மாத்­திரம் வழிப்­ப­டுத்­து­கி­றது. பிள்­ளைகள் வீட்டுச் சூழல், பாட­சாலை சூழல், சமூகம் எங்­கிலும் தனது சுதந்­தி­ரத்தை இழந்து தவிக்­கி­றார்கள். கல்வி என்­பதன் உண்­மை­யான அர்த்­தமே மாறி­விட்­டது.

கல்வி உழைப்­ப­தற்­காக என்றே கற்­றுக்­கொ­டுக்­கப்­ப­டு­கி­றது. பிறரை வீழ்த்தி எழும்­பு­வதே வெற்றி என்று காண்­பிக்­கப்­ப­டு­கி­றது. எமது நாட்டில் இடம்­பெற்­று­வரும் வர­லாற்று சம்­ப­வங்­க­ளான இனக்­க­ல­வ­ரங்கள் எம்­மத்­தியில் தொலைந்­து­விட்ட விழு­மி­யத்தை வெளிப்­ப­டுத்­து­கி­றது. ஏனெனில் பாட­சாலை, பல்­க­லைக்­க­ழகம், கல்­வி­யியற் கல்­லூரி என கல்­வி­பெறும் அனைத்து ஸ்தலங்­களும் அனை­வ­ருக்கும் பொது­வா­னதாய், அனை­வரும் ஒன்­றித்துக் கல்வி கற்கும் இட­மாக உள்­ளது. ஆனால் இங்கு சகோ­த­ரத்­துவம், சமத்­துவம் கற்­றுக்­கொ­டுக்­கப்­ப­டு­கி­றதா? அவ்­வாறு கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டி­ருப்பின் இனக்­க­ல­வ­ரங்­களும், வேத­னை­யூட்­டக்­கூ­டிய இழப்­புக்­களும் நேர்ந்­திட வாய்ப்­புக்கள் இருக்­காது.

கல்வி என்­பது பய­னுள்­ள­தாக அமைய வேண்டும். ஏட்­டிலே உள்­ள­வற்றை அப்­ப­டியே மூளையில் சேமித்­து­வைப்­ப­தாக இருக்கக் கூடாது. கனடா நாட்டில்  பரீட்­சையின் போது பிறரை பார்த்து எழு­து­வது கூட ஒழுக்­க­மற்ற செயல் என வழிப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள் மாண­வர்கள். ஜப்­பானில் நாம் சாதா­ரண பொருட்கள் என நினைக்­கக்­கூ­டிய நகம்­வெட்டி, பென்­சிலை கூர்­மை­யாக்கும் கருவி, கைக்­குட்­டைகள், முகச்­ச­வரம் செய்யும் பொருள், எழுதும் மை என அனைத்­திலும் வானில் பறக்க விடக்­கூ­டிய இயந்­தி­ரங்­களை தயா­ரிப்­பதில் காட்­டக்­கூ­டிய ஆர்­வத்­திற்கு இணை­யாக இப்­பொ­ருட்­களின் தயா­ரிப்பின் தரத்­திலும், நேர்த்­தி­யிலும் ஆர்­வத்தை காட்­டு­கி­றார்கள். இதற்கு காரணம் அந்­நாட்டுக் கல்வி முறையும், சமூ­கத்தின் தேவை­களை அறிந்து அதனை தீர்ப்­ப­தற்­கான ஆர்­வத்­தையும் பிள்­ளை­க­ளுக்கு ஊட்டும் பெற்­றோர்­களும் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். ஏனெனில், பிள்­ளைகள் எதில் ஆர்வம் காட்டுகிறார்களோ அதில் வளப்படுத்துவது பயனுள்ள செயல் என்பதை அவர்கள் அறிந்து செயற்படுகிறார்கள். ஆனால் நாம் அவ்வாறு சிந்திப்பதில்லை.

அறிவை பெற்றுக்கொள்வது முக்கியம் என்பது போல அறிவாற்றலை மேம்படுத்துவது மிகமிக இன்றியமையாத ஒன்றாகும். பிள்ளைகளை அவர்கள் வழியில் ஊக்குவிப்பதும் சிறந்த பழக்க வழக்கங்களை அவர்களிடத்தில் கட்டியெழுப்புவதும் நாட்டையும், சமூகத்தையும் அபிவிருத்திக்கு இட்டுச்செல்லும். ஒரு நாட்டின் அபிவிருத்திக்கான மூலதனங்களில் மிகப் பிரதானமானதும், பெறுமதிமிக்கதும் மனிதவளமாகக் காணப்படுகிறது. எனவே மனிதவளத்தை விரயம் செய்வது நாட்டின் ஆரோக்கியத்தில் கேடு விளைவிப்பதாக அமைகிறது. எனவே சிந்தித்து செயற்படுவதும் கல்வியில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதும் எதிர்காலத்தை சிறக்கச் செய்திடும்.
-Vidivelli