Verified Web

இஸ்ரேலின் கபளீகரத்துக்குள் காஸா

2018-07-19 06:12:55 Administrator

எம்.எம்.ஏ.ஸமட்

உல­க­ளவில் மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ரா­கவும், சிறு­வர்கள் மற்றும் பெண்கள் கொல்­லப்­ப­டு­வ­தற்கும், அவர்­களின் உரி­மைகள் பறிக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ரா­கவும், விலங்­கி­னங்கள் சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டு­வ­தற்கும், கொல்­லப்­ப­டு­வ­தற்கும், எதி­ரா­கவும் குரல் கொடுக்­கின்ற, சட்டம் வகுக்­கின்ற உலக ஆட்­சி­யா­ளர்­களும், அமைப்­புக்­களும் கொலை­வெறி பிடித்த இஸ்ரேல் படை­க­ளினால் காலத்­திற்குக் காலம் பலஸ்­தீ­னத்தின் நில­பு­லன்­க­ளை­யும் அப்­பாவி பலஸ்­தீன சிறு­வர்கள் உட்­பட பெண்­க­ளையும் கொன்­ற­ழிப்­பதைத்  தடுப்­ப­­தற்­கான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

ஒரு­சில நாடு­களில் மனித உரி­மைகள் மீறப்­ப­டு­வ­தற்­காக வரிந்து கட்­டிக்கொண்டு அவற்­றிற்­காக செயற்­ப­டு­கின்ற, அறிக்­கைகளை விடு­கின்ற மனித உரிமை அமைப்­புக்கள் பலஸ்­தீன சிறு­வர்­க­ளி­னதும், மக்­க­ளி­னதும்; உரி­மை­களை மீறி ஒட்­டு­மொத்த காஸா­வையும் கப­ளீ­கரம் செய்­வ­தற்கு முயற்­சித்துக் கொண்டு வரும்  இஸ்­ரேலின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டும் காணாமல் செயற்­ப­டு­கின்­றன.

சர்­வ­தேச சட்­டங்­களும் மனித உரி­மைகள் அமைப்­புக்­களும் மௌனித்­தி­ருக்கும் நிலையில், வந்­தேறு குடி­க­ளான இஸ்­ரே­லிய கல்­நெஞ்சம் கொண்ட  கொலை வெறி­யர்­க­ளினால் வளரும் பச்­சிளம் பால­கர்­களும், சிறு­வர்­களும், இளை­ஞர்­களும், பெண்­களும், முதி­ய­வர்­களும் கொல்­லப்­ப­டு­வ­தையும் காஸாவின் நிலங்கள் அங்­கு­ல­மங்­கு­ல­மாக பறிக்­கப்­ப­டு­வ­தையும் தடுப்­ப­தற்கு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான சமா­தா­னத்தை நிலை­நாட்­டு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட இந்த ஐ.நா.வும் அதன் பாது­காப்பு சபையும் அவற்றின் அதி­கா­ரங்­களை இஸ்ரேல் அர­சுக்கு எதி­ராக முழு­மை­யாகப் பிர­யோ­கிக்­காமல் இருப்­பது ஏன்?

அமெ­ரிக்­கா­வி­னதும், பிரித்­தா­னி­யா­வி­னதும் வளர்ப்புப் பிள்­ளை­யான இஸ்ரேல், காலா கால­மாக பலஸ்­தீன மக்­களைப் பந்­தாடி வரு­வதை உலகின் ஜன­நா­யக அர­சுகள் பார்­வை­யா­ளர்­க­ளாக தொடர்ந்தும் பார்த்துக் கொண்­டி­ருக்­கப்­போ­கி­றதா? என்ற கேள்­வி­களை மனி­தா­பி­மானம் உள்ள மானிட வர்க்கம் எழுப்­பு­கின்ற போதிலும், இஸ்ரேல் படை­களின் உயிர் அறு­வடைக் காணொ­லி­களை  ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­ற­போ­திலும் உலக சமா­தா­னத்­திற்­காக உரு­வாக்­கப்­பட்ட ஐ.நா.வும் அதன் அமைப்­புக்­களும் இன்­னுமே இஸ்ரேல் முன்­னெ­டுக்கும் அத்­து­மீ­றல்­க­ளுக்கும் உயிர் அறு­வ­டைகளுக்கும் முற்­றுப்­புள்ளி வைக்­க­வில்லை.

இந்­நி­லை­யில்தான் ஐ.நா.வின் மனித உரி­மைகள் பேரவை இஸ்­ரே­லுக்­கெ­தி­ரான தமது நட­வ­டிக்கை குறித்து கடந்த மாதம் பிரஸ்­தா­பித்­த­வேளை அதற்கு ஆட்­சே­பனை தெரி­வித்து அமெ­ரிக்கா ஐ.நாவின் மனித உரி­மைகள் பேர­வை­யி­லி­ருந்து தன்னை விலக்கிக் கொண்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவின் இஸ்ரேல் ஆத­ரவு

மத்­தி­ய­கி­ழக்கில் அமெ­ரிக்­காவின் ஆதிக்கம் தொடாந்து நிலைத்­தி­ருக்க வேண்­டு­மாயின் மத்­திய கிழக்கில் வந்­தே­று­கு­டி­யாக வந்­த­மர்ந்து இன்று முழு மத்­திய கிழக்­கிற்கும் அச்­சு­றுத்­த­லாக விளங்கும் இஸ்ரேல் பல­முள்­ள­தாக இருக்க வேண்டும்.

இஸ்­ரேலின் பலம்தான் அமெ­ரிக்கா தனது ஆதிக்­கத்தை மத்­திய கிழக்கின் மீது பிர­யோ­கிப்­ப­தற்கும் மத்­தி­ய­கி­ழக்கில் தொடர்ந்து அமை­தி­யின்மை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் இல­கு­வாக அமையும். கடந்த காலங்­களில் மத்­தி­ய­கி­ழக்கு நாடு­களில் ஏற்­பட்ட அமை­தி­யின்­மைக்கு திரை­ம­றைவில் செயற்­பட்­டது உலக பொலிஸ்­காரன் என அழைக்­கப்­படும் அமெ­ரிக்­காதான் என சர்­வ­தேச அர­சியல் ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஈராக் மீதான படை­யெ­டுப்பு முதல் ஜெரூ­சலம் இஸ்­ரேலின் தலை­நகர் எனப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது வரை மத்­தி­ய­கி­ழக்கின் வர­லாற்று நெடு­கிலும் அமை­தி­யின்­மையை அமெ­ரிக்கா வலிந்து உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது என்­பதை அர­பு­லகில் இடம்­பெற்று வரு­கின்ற வன்­மு­றை­க­ளையும் அவற்றின் அழி­வு­க­ளி­னதும் பின்­ன­ணி­களைக் கொண்டு உணர்ந்­து­கொள்ள முடியும்.

மத்­தி­ய­கி­ழக்கில் இயங்கும் பல்­வேறு கிளர்ச்­சிக்­கு­ழுக்­க­ளுக்கு நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் ஆயு­தங்­களை விற்­பனை செய்தும் ஆயு­தங்­களை வழங்­கியும் முஸ்­லிம்­களை முஸ்­லிம்­க­ளோடு மோத­விட்டு இன அழிப்­புச்­செய்து கொண்­டி­ருக்கும் அமெ­ரிக்கா போன்ற ஏகா­தி­பத்­திய நாடு­களின் திட்ட வரி­சையில் ஒன்­றாக சிறிது காலம் அமை­தி­யாக இருந்த பலஸ்தீன் மண்ணில் மீண்டும் இஸ்ரேல் மூலம் இன அழிப்புச் செய்யும் நட­வ­டிக்­கைக்கு உந்­து­சக்தி வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அந்த உந்­து­சக்­தியின் ஒரு வெளிப்­பாடே ஜெரூ­ச­லத்தை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக அங்­கீ­க­ரித்து கடந்த மே மாதம் ஜெரூ­சலம் நகரில் அமெ­ரிக்கத் தூத­ரகம் திறக்­கப்­பட்­ட­தாகும்.

உலக நாடு­களின் எச்­ச­ரிக்­கை­யையும் மீறி, பல தசாப்­தங்­க­ளாக அமெ­ரிக்கத் தலை­வர்கள் கடைப்­பி­டித்­து­வந்த  பலஸ்தீன் தொடர்­பான கொள்­கை­க­ளையும் புறந்­தள்ளி கடந்த வருடம் டிசம்பர் 6ஆம்  திகதி அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் டிரம்­பினால் இஸ்­ரேலின் தலை­நகர் ஜெரூ­ச­ல­மென அறி­விக்­கப்­பட்டு கடந்த மே மாதம் ஜெரூ­ச­லத்தில் அமெ­ரிக்கத் தூத­ரகம் திறக்­கப்­பட்ட நாள் முதல் காஸா மக்­க­ளினால் முன்­னெ­டுத்து வரும் ஆர்ப்­பாட்­டங்­களை தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தாக உலக அரங்­கிற்கு தமது ஊடகப் பயங்­க­ர­வாதத்தின் ஊடாகப் புலப்­ப­டுத்தி வரும் இஸ்­ரே­லியப் படை­யினர் அப்­பாவி மக்­களின் உயிர்­களைக் காவு­கொண்டு வரு­கின்­றனர் என்­பதே உண்மை.

இஸ்­ரேலின் வர­லாற்று நெருக்­கு­வா­ரங்கள்

1948ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி அமெ­ரிக்க மற்றும் பிரித்­தா­னிய வல்­ல­ர­சு­களின் அழுத்­தங்­களின் கார­ண­மாக ஐக்­கிய நாடுகள் சபை­யினால் சட்­ட­வி­ரோ­த­மாக அரபு மண்ணில் ஸ்தாபிக்­கப்­பட்ட இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் மற்றும் நெருக்­கு­வா­ரங்கள் வர­லாற்று நெடு­கிலும் பலஸ்­தீன மண் மீதும் மக்கள் மீதும் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­ன்றன.

பலஸ்தீன் மீதான ஆக்­கி­ரமிப்பு மற்றும் இனச்­சுத்­தி­க­ரிப்பு தொடங்­கிய 1948ஆம் ஆண்டு  முதல் இற்­றை­வ­ரை­யான 69 வருட காலப்­ப­கு­தியில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இன்­னு­யிர்­களின் உதி­ரங்­க­ளினால் பலஸ்­தீன மண் செந்­நி­ற­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. கோடா­ன­கோடி சொத்­துக்களை அம்மண் இழந்­துள்­ளது.

1948 முதல் 1949 வரை­யான ஒரு­வ­ருட காலப்­ப­கு­தியில் இஸ்­ரே­லினால் மேற்­கொள்­ளப்­பட்ட அடா­வடி, அட்­டூ­ழியத் தாக்­குதல்  நட­வ­டிக்­கை­களின் கார­ண­மாக பலஸ்­தீ­னத்தை சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி மக்கள் உயி­ரி­ழந்தும், 15ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் காயமும் பட்­டனர். இவ்­வாறு உயி­ரி­ழந்த, காயப்­பட்­ட­வர்­களில் அதி­க­மானோர் சிறு­வர்­க­ளாவர்.

இந்­நி­லை­யில்தான், ஜோர்­தா­னி­னாலும் எகிப்­தி­னாலும் ஆளப்­பட்ட பஸ்­தீ­னத்தின் மேற்­குக்­க­ரையும் காஸாவும் இணைந்­த­தாக 1948ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி அரபு லீக்­கினால் பலஸ்தீன் அர­சாங்கம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

அரபு தேசத்தில் ஸ்தாபிக்­கப்­பட்ட இஸ்ரேல், 69 வருட காலப் பகு­தியில் 275 தடவை பலஸ்தீன் மீது தாக்­கு­தல்­க­ளையும் ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ள­தாக சர்­வ­தேச வர­லாற்று ஆசி­ரி­யர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

பலஸ்­தீன மண்ணில் வாழும் பலஸ்­தீ­னர்­க­ளையும், இஸ்­லா­மிய அடை­யா­ளங்­க­ளையும் அழித்­து­விட்டு முழு காஸா உட்­பட முழு பலஸ்­தீன மண்­ணையும் கப­ளீ­கரம் செய்ய முயற்­சிக்கும் இஸ்ரேல், போராட்ட வர­லா­று­களை மறந்து செயற்­ப­டு­கி­றது.

தேச விடு­த­லைக்­காகப் போரா­டு­கின்­ற­வர்­களை அடி­யோடு அழித்த வர­லாறு இந்ந பூமியில் இல்லை. விடு­த­லைக்­காகப் போராடும் இனத்தின் ஓர் உயிர் வாழும்­வரை இன அழிப்­பா­ளர்­களுக் கெதி­ரான போராட்டம் தொட­ரத்தான் செய்

யும்.

பலஸ்­தீ­னத்தின் எதிர்­கால சந்­த­தி­க­ளான சிறு­வர்­க­ளையும், இளை­ஞர்­க­ளையும் அறு­வடை செய்­து­விட்டு காஸா உள்­ளிட்ட மொத்த பலஸ்­தீன தேசத்­தையும்  கப­ளீ­கரம் செய்யும் நட­வ­டிக்­கை­களை மிகவும் வேக­மாக இஸ்ரேல் முன்­ன­கர்த்தி வரு­கி­றது.

1967ஆம் ஆண்டு பலஸ்­தீ­னத்தின் காஸா மேற்­குக்­க­ரை­யையும் கிழக்கு அல்­குத்­ஸையும் ஆக்­கி­ர­மித்து கப­ளீ­கரம் செய்­த­துடன் சர்­வ­தச அங்­கீ­கா­ர­மின்றி கிழக்கு குத்ஸும் இஸ்­ரேலால் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்­புக்­களை இஸ்ரேல்  அமைத்து வருகி­றது. இது­வரை 6 இலட்சம் இஸ்­ரே­லி­யர்கள் இக்­கு­டி­யி­ருப்­புக்­களில் வசித்­து­வ­ரு­வ­தாக சர்­வதேச ஊட­கங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

இந்­நி­லையில் இஸ்­ரேலின் திட்­ட­மிடல் மற்றும் கட்­ட­டக்­குழு மேலும் ஆறு புதிய குடி­யேற்­றங்­களை, கப­ளீ­கரம் செய்­யப்­பட்ட பிர­தே­சங்­களில் நிர்­மா­ணிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தாக சர்­வ­தேச  ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

பலஸ்­தீன மண்ணை மாத்­தி­ர­மின்றி மண்ணின் மைந்­தர்­க­ளையும் காவு­கொள்ளும் இன­வெ­றியில் இஸ்ரேல் செயற்­பட்டு வரு­வதை இஸ்­ரேலியப் படைகளின் துப்­பாக்கி சன்­னங்­க­ளுக்கு பலி­யாகும் சிறு­வர்­களின் காட்­சிகள் புடம்­போ­டு­கின்­றன.

இஸ்­ரேலின் பிடிக்குள் பலஸ்­தீனச் சிறு­வர்கள்

1948ஆம் ஆண்­டி­லி­ருந்து ஒவ்­வொரு ஆண்­டிலும் அல்­லது ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டு இஸ்ரேல், பலஸ்­தீனப் பகு­தி­களை ஆக்­கி­ர­மித்து தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டுள்­ளது. 2004 மற்றும் 2005ஆம் ஆண்­டு­களில் இஸ்ரேல் மேற்­கொண்ட இனச் சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­க­ளின்­போது 1000க்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்டும் 6000க்கும் மேற்­பட்­டடோர் காய­மு­ம­டைந்­தனர். இவ்­வாறு கொல்­லப்­பட்­ட­வர்­களில் 200 பேர் சிறு­வர்­க­ளா­கவும் காயப்­பட்­ட­வர்­க­ளிலும் அதி­க­ள­வி­லானோர் சிறு­வர்­க­ளா­க­வுமே இருந்­தனர்.

ஒவ்­வொரு வரு­டத்­திலும் இஸ்­ரே­லினால் பலஸ்தீன் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களின் போது உயி­ரி­ழந்­த­வர்­களின்,  காயப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்­கையில் பெரும் வீதத்­தினர் சிறு­வர்­கள்தான்.

இவ்­வாறு சிறு­வர்­களை இலக்­கு­வைத்து இஸ்ரேல் மேற்­கொள்ளும் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் பலஸ்­தீன எதிர்­கால சந்­த­தி­யி­னர்­க­ளான சிறு­வர்­களை அழிக்கும் இஸ்­ரேலின் சதித்­திட்டம் புலப்­ப­டு­கி­றது.

அரே­பிய முஸ்­லிம்­களின் அமை­திப்­பூங்­கா­வாக விளங்­கிய பலஸ்­தீன தேசத்தில் பலாத்­கா­ர­மாக ஸ்தாபிக்­கப்­பட்ட இஸ்ரேல், பலஸ்­தீன்­மீது தொடர்­சி­யாக அழுத்­தங்­களை பல்­வேறு வழி­க­ளிலும் மேற்­கொண்டு வந்­தது.

இதனால் பலஸ்­தீன மக்­களின் தொழில், கல்வி, பொரு­ளா­தார, சுகா­தார, வாழ்­வா­தார நட­வ­டிக்­கைகள் யாவும் முடக்­கப்­பட்­டுள்­ளன.

இஸ்­ரேலின் நிலப்­ப­ரப்­பி­லி­ருந்து காஸா­வுக்குக் கிடைக்­கின்ற மனி­தா­பி­மான அடிப்­படைத் தேவை­யா­கிய நீர், மின்­சாரம் மற்றும் எரி­பொருள் என்­ப­வற்றின் விநி­யோ­கத்தை இஸ்ரேல் படிப்­ப­டி­யாகக் குறைத்து வந்­துள்­ளது. இதனால் பலஸ்­தீன மக்­களின் அன்­றாட வாழ்­நிலை மிகவும் பாதிப்­ப­டைந்­துள்­ளது.

200ஆம் ஆண்டில் காஸாவில் 95 வீத­மான தொழில் நிறு­வ­னங்கள் முடக்­கப்­பட்­டன. 3,900 தொழில் நிறு­வ­னங்­களில் பணி­பு­ரிந்த 35ஆயிரம் பலஸ்­தீ­னிய தொழி­லா­ளர்கள் பாதிக்­கப்­பட்­டனர். இதனால்  2010ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் காஸாவில் 40க்கும் 80க்கும் இடைப்­பட்ட வீதத்­தினர் தொழி­லற்­ற­வர்­க­ளாகக் காணப்­பட்­டனர். அத்­தோடு காஸா­விலும், மேற்­குக்­க­ரை­யிலும் நில ஆக்­கி­ர­மிப்­புக்­களை மேற்­கொண்டு சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்­புக்­களை தொடர்ச்­சி­யாக இஸ்ரேல் இன்று வரை முன்­னெ­டுத்து வரு­கி­றது.

இஸ்­ரேலின் நெருக்­கு­வா­ரங்­களும், அட்­டூ­ழி­யங்­களும் தாக்­குதல் களும் தரை, கடல், வான் வழி­யாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 1967முதல் 2010ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் இஸ்­ரேலின் தாக்­கு­தல்­க­ளினால் 4 இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

1987ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில்  இஸ்­ரே­லி­யர்­க­ளினால் கொல்­லப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை 7,978 ஆகும். இதில் 1,620 பேர் 18 வய­துக்கும் குறைந்­த­வர்கள்.

2007ஆம் ஆண்டில் பலஸ்­தீன சனத்­தொ­கை­யில 17 வீதத்­தினர் 5 வய­துக்குக் குறைந்­த­வர்கள். 46 வீத­மானோர் 15 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். காஸாவின் 1.7 மில்­லியன் சனத்­தொ­கையில் 8 இலட்சம் பேர் சிறு­வர்­க­ளாவர். எதிர்­கால பலஸ்­தீன சந்­த­தி­களின் வளர்ச்சி, அதி­க­ரிப்பு இஸ்­ரே­லுக்கு பெரிய சவா­லா­கவே உள்­ளது. அதனால் பாட­சா­லை­க­ளையும், பாட­சாலை செல்லும் மாண­வர்­களின் பஸ்­க­ளையும் விளை­யாட்டு மைதா­னத்தில் விளை­யாடும் சிறு­வர்­க­ளையும் தமது கொடூர தாக்­கு­தல்­களின் ஊடாக கொன்­றொ­ழித்து வரு­கி­றது இஸ்ரேல் என்­பதை மறுக்க முடி­யாது.

ஐ.நா.வின் சிறு­வர்­க­ளுக்­கான அமைப்பின் தக­வல்­களின் பிர­காரம். 2013ஆம் ஆண்­டுக்கு முற்­பட்ட ஒரு தசாப்த காலப் பகு­திக்குள் 12 வய­துக்கு குறை­வான 7,000 பலஸ்­தீன சிறு­வர்கள் இஸ்­ரே­லினால் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

ஒவ்­வொரு வரு­டமும் 12 முதல் 17 வய­துக்­குட்பட்ட 7,000 சிறு­வர்கள் இஸ்ரேல் இரா­ணு­வத்­தினால் கைது செய்­யப்­ப­டு­வ­தாக சர்­வ­தேச ஆய்­வ­றிக்­கைகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

சர்­வ­தேச சிறுவர் உரி­மை­க­ளுக்­கான சட்­டங்­க­ளையும் மீறி கைது செய்­யப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­கெ­தி­ராக போலிக் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி நீதி­மன்­றங்­க­ளினால் தீர்ப்­பு­க­ளையும் இஸ்­ரே­லிய இரும்பு இதயம் கொண்ட  இரா­ணுவம் பலஸ்­தீன சிறு­வர்­க­ளுக்குப் பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளது.

கைது செய்­வ­தும் கொன்­றொ­ழிப்­பதும் என சிறு­வர்­களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் பலஸ்­தீன எதிர்­கால சந்­ததி அந்த மண்ணில் வாழக்­கூ­டா­தென்ற இஸ்­ரேலின் நிலைப்­பாட்டைத் தெளி­வாகப் புலப்­ப­டுத்­து­கின்­றது.

சிறு­வர்கள் உலகில் மிகவும் பாது­காப்­பாக வாழ்­வ­தற்­காக   ஐ,நா.வினால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள சிறுவர் உரி­மைகள் பட்­ட­யத்தில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களும் சிறுவர் உரி­மை­களை மீறு­வோ­ருக்கு வழங்­கப்­படும் தண்­ட­னை­களும் எந்­த­ளவு தூரத்தில் பலஸ்­தீன சிறு­வர்­களின் உரி­மைகள் பறிக்­கப்­ப­டு­வது தொடர்­பிலும் கைது செய்­யப்­ப­டு­வது தொடர்­பிலும் கொல்லப் படு­வது தொடர்­பிலும் செயற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பது கேள்­விக்­கு­ரி­ய­தாகும்.

இஸ்­ரேலின் அக்­கி­ர­மங்­க­ளினால் பலஸ்­தீ­னத்தில் அதிகம் பாதிக்­கப்­ப­டு­வது சிறு­வர்கள் என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.

சிறு­வர்­களை வாழ­வி­டாது, அவர்­களை வளர விடாது அழிப்­பதன் பின்­னணி என்ன?  என்­ப­தற்­கான விடை­யினை மிகவும் வெளிப்­ப­டை­யா­கவே இஸ்­ரே­லிய ஆட்­சியில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்கள் கடந்த காலங்­களில்; இஸ்­ரே­லிய ஊட­கங்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இது­த­விர, காஸா­விலும் மேற்குக் கரை­யிலும் இஸ்­ரேலின் அத்­து­மீ­றல்­களும் தாக்­கு­தல்­களும் ஏற்­ப­டுத்­தி­யுள்ள தாக்­க­மா­னது மன­வடு உள­நோ­யினால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான சிறு­வர்­களைப் பாதிக்கச் செய்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்டும் சர்­வ­தேச ஆய்­வ­றிக்­கைகள் காஸாவில் 54 வீத­மான சிறு­வர்­களும் மேற்குக் கரையில் 43 வீத­மான சிறு­வர்­களும் இந்த உளப்­பி­ரச்­சினை யினால் பாதிப்­ப­டைந்­துள்­ள­தா­கவும் குறிப்­பி­டு­கி­றது.

வர­லாற்று நெடு­கிலும் தொடரும் இஸ்­ரேலின் நெருக்­கு­வா­ரங்­களும் தாக்­கு­தல்­களும் சிறு­வர்­க­ளி­லி­ருந்தே ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

கடந்த 2014 ஜுலை மாதம் இஸ்­ரே­லிய சிறுவன் ஒருவன் கடத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­பட்டு அதற்குப் பழி­தீர்க்கும் திட்டத் திற்­கேற்ப பலஸ்­தீன சிறுவன் கடத்­தப்­பட்டு உயி­ருடன் எரிக்­கப்­பட்டும் 3 பலஸ்­தீன சிறு­வர்கள் சுட்டும்  கொல்லப் பட்­டனர்.

அதைத் தொடர்ந்து  உரு­வெ­டுத்த போரா­னது 2000க்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னர்­களை அவ்­வாண்டில் காவு­கொண்­டது. இதில் 50க்கும் மேற்­பட்ட சிறு­வர்கள் பலி­யெ­டுக்­கப்­பட்­டார்கள். பால­கர்கள், சிறு­வர்கள், பெண்கள், முதி­யோர்கள் என  1000க்கும் அதி­க­மானோர் படு­கா­ய­ம­டைந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர்.

அத்தோடு பள்ளிவாசல்கள், குடியிருப்புக்கள், தொழில் நிறுவனங்கள் பொருளாதார மையங்கள், எரிபொருள் நிலையங்கள், மின்சார நிலையங்கள் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் எனப் பல இடங்கள் அழிக்கப்பட்டு பலஸ்தீன் மக்கள் சகலவற்றிலும் முடமாக்கப்பட்டனர்.

இவ்வாறு காஸா மற்றும் மேற்குக்கரையில் இஸ்ரேலின் கொடூர படைகளின் துப்பாக்கி சன்னங்களுக்கு 2015இல் 200க்கு மேற்பட்ட பலஸ்தீனர்களும் 2016இல் 100க்கு மேற்பட்டவர்களும் பலியாக்கப் பட்டிருக்கிறார்கள்.

காஸாவின் சமகாலம்

முழு காஸாவையும் கபளீகரம் செய்யும் இலக்கை அடைவதற்காக காலத்திற்குக் காலம் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல், கடந்த வெள்ளிக்கிழமையும் காஸா பிராந்தியத்தில் உக்கிர வான் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதனால் பல சிறுவர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.

காஸா பிராந்தியத்தில் ஹமாஸ் இயக்கத்தின் நடவடிக்கை களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன்  முன்னெடுக்கப் பட்டுள்ள இந்த வான்தாக்குதல்கள் கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட தாக்குதல்களுக்குப் பின்னரான மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை என சர்வதேச ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலினால் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள்  தொடருமெனவும், பலஸ்தீனர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும், இத்தாக்குதல்களினால் பலஸ்தீனர்களை அடிபணியச் செய்ய முடியாதெனவும் ஹமாஸ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் முழு காஸாவையும் காவுகொள்ளும் இலக்குடன் காஸா பள்ளத்தாக்குடனான தனது பொருட்களை கொண்டு செல்வதற்கான கடவையினை இஸ்ரேல் மூடியமையை ஐ.நா. சபை கடுமையாக விமர்சித்துள்ளதுடன் இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துமென சுட்டிக்காட்டியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் காஸாவை இஸ்ரேல் கபளீகரம் செய்யாமலிருப்ப தற்காக வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக!
-Vidivelli