Verified Web

மண்டலோவின் முன்மாதிரிகளை இலங்கை பின்பற்றுமா

2018-07-18 05:04:24 Administrator

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் 100 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு உலக நாடுகள் பலவற்றிலும் அவரை நினைவுகூர்ந்து பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

நேற்றைய தினம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற நெல்சன் மண்டேலா 16 ஆவது வருட நினைவுப் பேருரையை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நிகழ்த்தினார். அதேபோன்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இது தொடர்பில் விசேட செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ''ஆயுத மோதல் ஒன்றிலிருந்து விடுபட்டு வெளிக்கிளம்புகின்ற தேசம் என்ற வகையில் இலங்கையர்களாகிய நாம் எம்மை எதிர்நோக்குகின்ற பல்வகைப்பட்ட சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைந்து அயராது பாடுபட வேண்டும். தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மரபிலிருந்து நாம் படிப்பதற்கு நிறையவே பாடங்கள் உள்ளன'' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் ஒரு சுதந்திரப் போராளியாக, பிறகு ஒரு அரசியல்வாதியாக இறுதியில் உலகப்புகழ் பெற்ற மக்களைச் சார்ந்த அரசியல்வாதியாக மிளிர்ந்த மண்டேலா சமூக நீதி மற்றும் மனித கௌரவத்துக்குப் பாடுபடுகின்ற '' மூத்தவர்கள் " என்ற செல்வாக்குமிக்க சர்வதேச இயக்கத்தை முன்னெடுத்தார். தனிப்பட்ட உதாரணத்தின் மூலமாக உண்மையான தலைமைத்துவத்தின் குணாதிசயங்களை மண்டேலா எமக்குக் காட்டினார். வேறுபட்ட சமூகங்கள் மத்தியில் ஐக்கியம் பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எமக்கு அவர் காண்பித்தார். மனித கௌரவத்துக்கான வேட்கையை உலகில் எந்த சக்தியாலும் நிர்மூலம் செய்ய முடியாது என்பதை சொல் மூலம் நிரூபித்தவர் அவர்.

தென்னாபிரிக்காவில் பாராளுமன்றத்தில் 1999 பெப்ரவரியில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நிகழ்த்திய உரை மூலமாக மண்டேலா எம் எல்லோரையும் ஒழுக்கத்தில் மேம்படச் செய்தார். ' எமது மக்களின் வளமான பல்வகைமையை மதித்து , ஒவ்வொரு பிரஜைக்கும் பொதுவான பிரஜாவுரிமையையும் உரிமைகளையும் பொறுப்புக்களையும் வழங்கக் கூடியதான இனப்பாகுபாடற்ற ஜனநாயக ரீதியான ஐக்கியப்பட்ட தேசத்தை அடைவதற்கான இலக்கிலிருந்து நல்லிணக்கம் பிரிக்கப்பட முடியாதது என்று அவர் பிரகடனம் செய்தார். எமது காலத்தில் வாழ்ந்த மகத்தான மனிதப் பிறவிகளில் மண்டேலா ஒருவர். சரியானது எதுவோ அதற்காக அவர் போராடினார் என்பது மாத்திரமல்ல உலகமே வியக்கும் உண்மை எதிரிகளை அவர் வியக்கவும் செய்தார் என்றும் சந்திரிகா குமாரதுங்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரினாலும் இன வன்முறையினாலும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் அதன் வடுக்களிலிருந்து மீண்டு வருவதற்கு இலங்கை முயற்சிக்கின்ற நிலையில் மண்டேலாவின் போராட்டம் , அரசியல் தலைமைத்துவம் மற்றும் அவரது சிந்தனைகளிலிருந்து படிப்பதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றை முன்மாதிரியாகக் கொள்வதன் மூலம் இலங்கையையும் அமைதியும் சௌஜன்யமுமிக்க இன நல்லுறவும் கொண்ட ஒரு தேசமாக கட்டியெழுப்ப முடியும் என்பதில் சந்தேகமில்லை.
-Vidivelli