Verified Web

சமூகப் பிரச்சினையில் முதலிடம்

2018-07-12 05:20:25 Administrator

எம்.எம்.ஏ.ஸமட்

கடந்த ஒரு­சில நாட்­க­ளாக நாட்டில் என்ன நடக்­கி­றது என்ற சிந்­தனைக் குழப்­பத்தில் மக்கள் காணப்­ப­டு­கின்­றனர்.   கடத்­தல்கள், கொலை, கொள்ளை, தற்­கொலை, சிறுவர் பெண்கள் மீதான பாலியல் பலாத்­காரம் மற்றும் வெறிக்­கொ­லைகள், வாள்­வெட்டு வன்­முறை, வாகன விபத்­துக்கள், கணினிக் குற்­றங்கள், பாதாள உலகக் கோஷ்­டி­யி­ன­ருக்­கி­டை­யி­லான மோதல்கள், காட்டு யானை­களின் தாக்­கு­தல்கள் எனத் தொடரும் சம்­ப­வங்­களால் மக்கள் திண­றிப்­போ­யுள்ள நிலையில், நள்­ளி­ரவில் அமுல்­ப­டுத்­தப்­படும் எரி­பொருள் விலை­யேற்றம் அதி­கா­லையில் நீக்­கப்­பட்டு மீண்டும் நள்ளி­ரவில் அதி­க­ரிக்­கப்­பட்டு அமுல்­ப­டுத்­தப்­படும் அரச நட­வ­டிக்­கைகள் என்­பன மக்­களின் வாழ்­வி­யலை அச்­சத்­துக்கும் சுமைக்கும் தள்­ளி­யி­ருக்­கி­றது

இந்­நி­லை­யில்தான் போதைப்­பொருள் வர்த்­த­கமும், பாவ­னையும்,  கடத்­தல்­களும், கடத்­தல்­கா­ரர்­களின் கைது­களும் தின­சரி நிகழ்­வாக நடந்­தே­று­கின்­றமை இந்­நாடும் மக்­களும் எதிர்­நோக்­கு­கின்ற பாரிய சமூகப் பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருப்­பது மாத்­தி­ர­மின்றி, சம­கால சமூகப் பிரச்­சி­னையில் முத­லி­டத்­தையும் பெற்­றி­ருப்­ப­தா­கவே காண முடி­கி­றது.

தற்­கா­லத்தில் போதைப்­பொருள் வர்த்த்­த­கத்தின் மூலம் ஆடம்­பர வாழ்க்­கைக்­கான சொத்து, செல்­வங்­களைத் தேடு­வ­தற்கு பிணத்தைக் கூடப் பயன்­ப­டுத்தும் நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. புகைப்­பி­டித்தல், மது அருந்­துதல், போதைப்­பொருள் பாவனை மற்றும் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் சமூ­கத்தின் மத்­தியில் பாரிய பிரச்­சி­னை­யாகக் கரு­தப்­பட்டு அவற்றைத் தடுப்­ப­தற்­கான பல நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் இது­வரை அவை வெற்­றி­ய­ளித்­துள்­ளதா என்றால் இல்லை  என்றே கூற வேண்­டி­யுள்­ளது.

போதைப்­பொ­ருளும் தாக்­கமும்

உடல் உள பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­வதும் சமூகப் பிரச்­சி­னை­களைத் தோற்­று­விப்­ப­து­மான நுக­ரப்­படும் அல்­லது உட­லினுள் செலுத்­தப்­படும் பொருட்கள் போதைப்­பொ­ருட்கள் எனப்­ப­டு­கி­றது. சொற்ப அளவில் தேகத்தை அடைந்­து­வி­டினும் எந்­த­வொரு உயி­ரி­னதும் தொகு­தியில் கணி­ச­மான மாற்­றத்­தினை விளை­விக்கக் கூடிய ஓர் இர­சா­யனப் பண்டம் போதைப்­பொருள் அல்­லது அபா­ய­க­ர­மான மருந்து எனவும் வரை­யறை செய்­யப்­ப­டு­கி­றது.

சாதி, மத, வர்க்க பேத­மின்றி எல்­லாத்­த­ரப்­பி­ன­ரையும் உடல், உள, குடும்ப, சமூக, பொரு­ளா­தார, ஆன்­மிக, சூழ­லியல் சார் பாதிப்­புக்­களை உரு­வாக்­கு­கின்ற ஓர் அம்சம் போதைப் பொருட்­பா­வ­னை­யாகும் என பொது­வாகக் கூறப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான போதைப்­பொருள் பாவ­னை­யா­னது உள்­நாட்டு யுத்­தத்­திற்கு அடுத்­த­ப­டி­யாக இலங்கை சமூ­கத்தைப் பெரிதும் பாதித்­தி­ருப்­பதில் முத­லிடம் பெறு­கி­றது என்­பதை கடந்த  சனிக்­கி­ழமை 124 கோடி ரூபா  பெறு­ம­தி­யான ஹெரோயின்  போதைப் பொரு­ளுடன் களு­போ­வில மற்றும் பத்­த­ர­முல்லைப் பிர­தே­சத்தில் இருவர் கைது செய்­யப்­பட்­டதன் மூலம் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

புகைத்தல், மது­பா­வனை மற்றும் போதைப்­பொருள் பாவ­னை­யினால் தினமும் நூற்றுக் கணக்­கானோர் இறந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இலங்­கையில் 30 வருடம் நடை­பெற்ற யுத்­தத்­தினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் மொத்தத் தொகையை விடவும் போதைப்­பொருள் பாவ­னை­யினால் உயி­ரி­ழப்­போரின் எண்­ணிக்கை அதி­க­மா­கவே உள்­ளது. வரு­டந்­தோறும் 47 ஆயிரம் பேர் போதைப் பொருள் பாவ­னை­யினால் உயி­ரி­ழப்­ப­தாக சுகா­தா­ரத்­து­றையின் தர­வுகள் குறிப்­பி­டு­கின்­றன.

நாட்­டுக்கும் சகல சமூ­கத்­திற்கும் மிகப்­பெரும் சவா­லாகக் காணப்­ப­டு­கின்ற போதைப்­பொருள் கடத்தல், விற்­பனை மற்றும் பாவனை செயற்­பா­டு­களை நாட்­டி­லி­ருந்து ஒழித்து  போதைப் பொரு­ளற்ற நாடு என்ற இலக்கை அடைந்­து­கொள்­வ­தற்­காக பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

2020ஆம் ஆண்டை இலக்­காகக் கொண்டு இப்­போ­தைப்­பொருள் ஒழிப்­புக்­கான வேலைத்­திட்­டங்கள் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன. இருப்­பினும், போதைப்­பொருள் பாவனை, விற்­பனை மற்றும் அவற்­றுடன் தொடர்­பற்ற செயற்­பா­டுகள் தற்­கா­லத்தில் இலங்கை எதிர்­நோக்கும் பெரும் சவால்­களுள் ஓர் அங்­க­மாக மாறி­விட்­டது.

சவா­லாக மாறி­யுள்ள போதைப்­பொருள் பாவ­னை­யி­லி­ருந்து  இலங்­கையை மீட்­டெடுப்­ப­தற்­காக  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுகா­தார அமைச்­ச­ராக இருந்த காலத்­தி­லிருந்தே செயற்­றிட்­டங்­களை வகுத்துச் செயற்­பட்டு வரு­கிறார். போதைப் பொருள் ஒழிப்­புக்­கான ஜனா­தி­பதி செய­லணி உரு­வாக்­கப்­பட்டு  தற்­போதும் பல நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஹெரோயின், கொக்கெய்ன், ஹஸிஸ், ஐஸ்பேக், கேரளா கஞ்சா, அபின், சாராயம், கசிப்பு, பியர், சிகரட், சுருட்டு, பீடி போன்ற முழு அள­விலும், குறைந்த அள­விலும் போதையை ஏற்­ப­டுத்தும் அல்­லது உட­லுக்குத் தீங்கு விளை­விக்கும் இப்­பொ­ருட்கள் இலங்­கையில் அதி­க­ளவில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. போதைப்­பொருள் விற்­ப­னை­யா­னது குறுக்­கான வழியில் செல்வம் தேடும் ஒரு முலோ­பா­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. தனக்­காக வாழ்­வ­திலும் பார்க்க பிற­ருக்­காக வாழும் பேரா­சையின் நிமித்தம் பலர் இத்­தொ­ழிலில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். மறு­பக்கம் போதைப்­பொருள் பயன்­பாட்­டுக்­கான பழக்கம் வெறு­மனே ஏற்­ப­டு­வ­தில்லை. ஒரு­வரின் சமூ­க­ம­ய­மாக்கல், முக­வர்­களின் தவ­றான பழக்­கங்கள், செயற்­பா­டுகள் மற்றும் சமூ­கக்­கற்­ற­லி­னூ­டாக தோன்­று­கி­றது.

வாழும் சூழல் மற்றும் சமூ­கத்­திற்கு ஏற்ற வகையில் வாழப் பழகிக் கொள்ளும் நெடுங்­கால செயன்­மு­றையை சமூ­க­ம­ய­மாக்கல் என்று கூறப்­ப­டு­கி­றது. ஒரு­வரின் சமூக மய­மாக்­கலில் குடும்பம், சம வயதுக் குழுக்கள், பாட­சாலை, கல்வி நிறு­வ­னங்கள், மத வழி­பாட்­டுத்­த­லங்கள் என்­ப­வற்­றிற்கு மேலாக ஊட­கமும் தாக்கம் செலுத்­துகி­றது.

 ஒரு பிள்ளை ஒழுக்க விழு­மி­ய­முள்ள பண்­பாட்டுக் கலா­சா­ரத்­துடன் வீட்டுச் சூழலில் வளர்க்­கப்­ப­டு­மாயின் அப்­பிள்ளை பாட­சாலை, பல்­க­லைக்­க­ழகம் மற்றும் இதர கல்வி நிலையச் சூழலில் ஏற்­படும் பண்­பாட்டு மாற்­றத்­தி­னாலும் சம­வ­யதுக் குழுக்­களின் அழுத்­தங்­க­ளி­னாலும் வழி­த­வறிச் செல்­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் குறை­வா­கவே காணப்­படும். பிள்­ளையின் நடத்தை, மன­வெ­ழுச்சி செயற்­பா­டுகள் தொடர்பில் பெற்­றோர்­களும் குடும்­பத்­தாரும் கவ­னத்­திற்­கொள்­ளாது செயற்­ப­டு­கின்­ற­போது, அப்­பிள்ளை சம வயதுக் குழுக்­க­ளினால் திசை­மாற்­றப்­ப­டுவதைத் தடுக்க முடி­யாது. இவ்­வாறு திசை­மா­று­கின்ற பிள்­ளை­களே பல்­வேறு சமூகப் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கு­ப­வர்­க­ளாக மாறு­கின்­றனர். இவர்கள் இத்­த­கைய போதைப்­பொருள் கடத்தல், விற்­பனை மற்றும் பாவ­னைக்கும் உள்­ளா­கி­றார்கள்.

அத்­தோடு, தொழில் வாய்ப்­பின்மை, இலக்­கு­களை அடை­வதில் தோல்வி, மேலத்­தேய நாக­ரிக மோகம் கலா­சா­ர­மாக உரு­வெ­டுத்தல், தனிமை, கடின உழைப்பு, மகிழ்ச்சி, திருப்தி, உல்­லாசம், பிரச்­சி­னை­களை மறத்தல், உடற்­க­ளைப்பைப் போக்கல் போன்ற போதைப்­பொருள் தொடர்­பான தவ­றான நம்­பிக்கை, திட்­ட­மிட்ட விளம்­ப­ரங்கள், சின்­னத்­திரை, மற்றும் சினி­மா நடி­கர்­களின் செயற்­பா­டு­களை முன்­மா­தி­ரி­யாகக் கொள்ளல், கௌரவம் போன்ற கார­ணி­களும் ஒரு தனி­ம­னிதன் போதைப் பொருள் பாவ­னைக்கு அடி­மைப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­து­வி­டு­கி­றது.

இக்­கா­ர­ணி­க­ளினால் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மைப்­ப­டு­கின்­ற­வர்கள் சமூ­க­மட்­டத்தில் வயது குறைந்­த­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர். இலங்­கையில் பல்­வேறு போதைப்­பொருள் பாவ­னைக்­கு­மாக 250,000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இதில் 60,000  இளைஞர், யுவ­திகள் ஹெரோயின் போதைப்­பொருள் பாவ­னைக்கு அடி­மைப்­பட்­டி­ருப்­ப­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.    15 முதல் 20 வய­துக்கும் 20 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களும் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மைப்­ப­டு­வது அதி­க­ரித்­துள்­ளது. இதனால் இவ்­வ­யதுப் பரு­வத்­தி­ன­ரி­டையே பல்­வேறு சமூக விரோத செயற்­பா­டுகள் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வதை அண்­மைக்­கா­ல­மாக வடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் அவ­தா­னிக்க முடி­கி­றது. இதில் மிகவும் கவ­லைக்­கு­ரி­யதும் அவ­தா­னத்­திற்­கு­ரி­ய­து­மான விட­ய­மென்­ன­வெற்றால் மாணவ சமூ­கத்­தி­னர் போதைக்கு அடி­மை­யா­கு­வ­தாகும்.

 

போதைப் பொருள் பாவ­னையில்

மாண­வர்கள்

2020ஆம் ஆண்டில் போதைப் பொருள் பாவ­னை­யற்ற நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற இக்­கா­ல­கட்­டத்தில், போதைப் பொருள் நாட்­டிற்குள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தையும்,  விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தையும், பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும் இன்னும் தடுக்க முடி­யா­மலே உள்­ளமை துர­திஷ்­ட­மா­ன­தாகும்.

சட்டம் முறை­யாக செயற்­ப­டுத்­தப்­ப­டா­மையும் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­ப­வர்­களின் பணியில் காணப்­படும் வழுக்­க­லுமே போதைப்­பொ­ருட்கள் நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தையும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும் விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தையும் தடுக்க முடி­யாமல் உள்­ள­தாக சமூ­க­வி­ய­லா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

தற்­போது நமது மாண­வர்கள் மத்­தியில் பாபுல், பீடா, பன்­பராக், மாவா, ஐஸ்பேக் போன்­ற­வற்றின் பாவ­னைகள் அதி­க­ரித்­து­விட்­ட­தாக அறிய முடி­கி­றது. சில மாண­வர்கள் வகுப்­ப­றை­க­ளுக்­குள்­ளேயே இவற்றைப் பயன்­ப­டுத்­து­வ­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது. ஏறக்­கு­றைய 13 வீத­மான 14 வய­துக்கு மேற்­பட்ட மாண­வர்கள் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­பட்­டுள்­ள­தாகத் தர­வுகள் மூலம் அறி­ய­மு­டி­கி­றது.

மிகவும் வெளிப்­ப­டை­யா­கவும் மறை­மு­க­மா­கவும் வீதி­யோரக் கடை­க­ளிலும் பாட­சாலை சூழ­லிலும் விற்­கப்­படும் இத்­த­கைய பொருட்கள், 2006 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட  மது­சாரம் மற்றும் புகை­யிலைத் தடைச் சட்­டத்தின் கீழ் தடுக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், தடுக்­கப்­பட்­டுள்ள இப்­பொ­ருட்கள் தடை­யின்றி விற்­பனை செய்­யப்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்கு சட்டம் சரி­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டாமல் இருப்­பது இந்­நாட்டின் எதிர்­கா­லத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கலாம்.

அநா­க­ரிக கலா­சா­ரத்­திற்குள் மூழ்கித் தத்­த­ளிக்கும் மாண­வர்கள் ‘மாவா’,  கேரளா கஞ்சா, ஐஸ்பேக் போன்ற போதை தரக்­கூ­டிய பாவனைப் பொருட்­களின் பயன்­பாட்­டுக்கும் ஆளாகித் தங்­களைத் தாங்­க­ளாகவே அழித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். உலக பிர­பல்­யங்கள், சினிமா நட்­சத்­தி­ரங்கள் மற்றும் கைய­டக்கத் தொலை­பே­சி­களின் பெயர் போன்று தற்­கா­லத்­தில் மாவா, கேரளா கஞ்சா, ஐஸ்பேக் என்ற போதையை ஏற்­ப­டுத்தும் பொருட்களின் பெயர்­களும் கட்­டி­ளமைப் பரு­வத்­தினர்  மத்­தியில் பிர­பல்­ய­ம­டைந்­துள்­ளன.

புகை­யி­லையைப் பயன்­ப­டுத்தி தயா­ரிக்­கப்­ப­டு­கின்ற சிகெரட் போன்ற பொருட்­களைப் பயன்­ப­டுத்­து­வதால் ஏற்­ப­டு­கின்ற உடற்­பா­திப்பு போன்றே இப்­பொ­ருட்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தாலும் ஏற்­ப­டு­வ­தாக அறி­யப்­பட்­டுள்­ளது.  இளை­ஞர்கள் மற்றும் மாண­வர்­க­ளி­டையே அதி­க­ளவில் காணப்­படும் இத்­த­கைய போதை தரக்­கூ­டிய பொருட்­களின் பயன்­பாட்டின் விளை­வுகள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் பிர­காரம் மாவாவை பயன்­ப­டுத்­து­பவர்­க­ளி­டையே இதய மற்றும் சுவாசப் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக இந்­தியன் எக்ஸ்­பிரஸ் இணை­யத்­தளம் குறிப்­பி­டு­கி­றது.

உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் கடந்த வருட அறிக்­கையின் பிர­காரம், இலங்­கையில் 13 முதல் 15 வய­துக்கு இடைப்­பட்ட பாட­சாலை மாண­வர்­களில் 11 சத வீதத்­தினர் புகைத்தல் பழக்­கத்­திற்கு ஆளா­கி­யுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தோடு,  பாட­சாலை மாண­வர்­களில் ஆயி­ரத்தில் ஒருவர் புகை­யிலை பாவ­னைக்கு ஆளா­கி­யுள்­ளனர். இத­னால்தான் புகை­யி­லையை அதி­க­ளவில் உற்­பத்தி செய்­யப்­படும் யாழ். மாவட்­டத்தில் புகை­யிலை உற்­பத்­தியைக் குறைக்­கு­மாறு அல்­லது உற்­பத்­தி­யியைக் கைவிட முன்­வர வேண்­டு­மென மது­பானம் மற்றும் போதைப்­பொருள் தகவல் நிலையம் கடந்த வருடம் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அறி­வு­றுத்­தி­யி­ருந்­தது.

பணத்தை மாத்­திரம் மையப்­ப­டுத்தி போதைப்­பொருள் விற்­ப­னையில் ஈடு­ப­டுவோர். வளரும் இளம் சந்­த­தி­யி­னரை ஆண்­மை­யற்­ற­வர்­க­ளாக பிள்­ளைப்­பேற்றில் பல­வீ­ன­மா­ன­வர்­க­ளாக இன்னும் பல்­வேறு உடல் உபா­தைக்கு தள்­ளப்­படக் கூடி­ய­வர்­க­ளாக மாற்­று­கி­றார்கள் என்­பதை மறந்து இவர்கள் பணத்தில் கொண்ட பேரா­சை­யினால் இத்­த­கைய போதைப்­பொ­ருட்­களின் விற்­ப­னையில் ஈடு­ப­டு­கி­றார்கள். இத்­த­கை­ய­வர்­களின் பண ஆசைக்குப் பலி­யாகும் அப்­பாவி மாண­வர்­களைக் காப்­பாற்ற வேண்­டி­யது பெற்­றோர்­க­ளி­னதும், ஆசி­ரி­யர்­க­ளி­னதும் முழுச் சமூ­கத்­தி­னதும் கட்­டாய பொறுப்­பா­க­வுள்­ளது.

இவ்­வாறு மாண­வர்கள் இத்­த­கைய போதைக்கு அடி­மை­யாகி வரு­கின்­ற­வேளை, அர­சினால் அங்­கீ­கா­ர­ம­ளிக்­கப்­பட்டு திறந்து வைக்­கப்­பட்­டுள்ள, வைக்­கப்­ப­டு­கின்ற மது­பான சாலை­க­ளினால் வளர்ந்­த­வர்­களும் அவர்­க­ளது குடும்பம் மற்றும் சமூகச் சூழலும் சமூக, பொரு­ளா­தார, ஆன்­மிக கட்­ட­மைப்­புக்­களும்  பெரிதும் பாதிக்­கப்­ப­டு­வதை மது­பாவனை சாலை­களை மூடு­மாறு அங்­காங்கே இடம்­பெ­று­கின்ற எதிர்ப்புப் போராட்­டங்கள் நன்கு வலி­யு­றுத்­துகின்­றன.

போதை ஒழிப்பின் தடைகள்

இலங்­கையின் திறந்த பொரு­ளா­தாரக் கொள்கை, உல்­லாசப் பய­ணி­களின் வருகை, மது­பா­ன­சா­லைகள் என்­ப­வற்றால் நாட்டில் போதைப்­பொருள் பாவ­னை­யையும், விற்­ப­னை­யையும் கடத்தல் செயற்­பா­டு­க­ளையும் அதி­க­ரிக்கச் செய்­துள்­ள­தா­கவும்  அவையே போதைப்­பொருள் ஒழிப்­புக்குத் தடை­யாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது

போதைப்­பொ­ருட்கள் என்ற வரை­ய­றைக்குள் மது­பா­னமும் ஒன்று. இலங்­கையில் மது­பா­னங்­களை விற்­பனை செய்­வ­தற்­காக ஏறக்­கு­றைய 3000 அங்­கீ­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட மது­பானக் கடைகள் நாடு­பூ­ரா­கவும் உள்­ளன. இதே­வேளை, வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் மது­பான கடை­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன.

இலங்­கையில் போதைப்­பொருள் அல்­லது மது­பானம் அதி­க­ளவில் பயன்­ப­டுத்­தப்­படும் மாவட்­டங்­களின் தர­வ­ரி­சையில் யாழ்ப்­பாண மாவட்டம் முத­லி­டத்­தையும், மட்­டக்­க­ளப்பு மாவட்டம் இரண்டாம் இடத்­தையும், மூன்றாம் இடத்தை நுவ­ரெ­லியா மாவட்­டமும் வகிக்­கின்­றன.

தமிழ் பேசும் மக்கள் அதி­க­ளவில் வாழும் இம்­மா­வட்­டங்­களில் மது­பா­ன­சா­லைகள் அதி­க­ரித்­துள்­ளமை அல்­லது மது­பா­னத்தின் பாவனை அதி­க­ரித்­துள்­ளமை தொடர்பில் அக்­கறை கொள்ள வேண்­டி­யது சமூக ஆர்­வ­லர்­களின் தலை­யாய கட­மை­யாகும்.

குறிப்­பாக, இப்­பி­ர­தே­சங்­களில் இம்­ம­து­பா­ன­சா­லைகள் பாடசாலைகளின் அருகாமைத் தூரத்திலும் வழிபாட்டுத் தலங்களின் அருகாமையிலும்   நிறுவப்பட்டுள்ளதனால் அவை சமூக, ஆன்மிக சூழலியல் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருப்பதாக இவற்றுக்கு எதிராக எழுப்பப்படும் எதிர்ப்புக் கோஷங்களின் மூலம் அறிய முடிகிறது.

வெளி மாவட்டங்களில் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மதுபான சாலைகளை திறப்பதைக் கட்டுப்படுத்துவதற்கும் அதைத் தடுத்து நிறுத்துவதற்குமான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ் பேசும் அரசியல் தலைமைகளிடம் தார்மீகப் பொறுப்பாகவுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவது காலத்தின் தேவையாகவுள்ளது

இருப்பினும், ஒவ்வொருவரும் மாறாதவரை மாற்றங்களைக் காண  முடியாது. மாற்றங்கள் தானாக வருவதில்லை. மாற்றங்களுக்கான முயற்சிகளும் செயற்பாடுகளும் வினைத்திறன் மிக்கதாக முன்னெடுக்கப்படுவதும் அந்த முயற்சிகளுக்கும் செயற்பாடுகளுக்கும் தடையாக எவை எல்லாம் இருக்கிறதோ அத்தடைகளை அகற்றும்போதுதான் மாற்றங்களை அடைய முடியும்.

அந்தவகையில், இந்நாட்டை போதைப்பொருளற்ற நாடாக மாற்ற வேண்டுமானால் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தடையாக இருப்பதாகக் கூறப்படும் மதுபானசாலைகள் தொடர்பிலும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.

இவ்வாறு சமூகங்களினதும், பிரதேசங்களினதும் சமூக, பொருளாதார, குடும்ப, ஆன்மிக, சூழலியல் சார் விடயங்களிலும் பிரச்சினைகளையும் தாக்கத்தையும் செலுத்தி சமூகப் பிரச்சினையில் முதலிடம் பெறுவதாகக் கருதப்படும் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனையை ஒழித்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கவேண்டியது மக்கள் ஆணையைப் பெற்றுள்ள அரசாங்கத்தினதும் சமூகத்தின் மத்தியில் பொறுப்புள்ளவர்களாகக் கருதப்படுவோரினதும் முக்கிய பொறுப்புக்களில் முக்கியமானதாகும்.
-Vidivelli