Verified Web

பாதாள உலக செயற்பாடுகள் போதைப்பொருள் கடத்தல் ஆட்கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

11 days ago Administrator

பாதாள உலக செயற்பாடுகள் அதனுடன் கூடிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வரையிலான கடுமையான தண்டனைகளை நிறைவேற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்தார்.

இதற்கு ஜனாதிபதியும்,நீதி அமைச்சரும் அமைச்சரவையில் இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாராந்த அமைச்சரவைகூட்டம் நேற்று கூடிய வேளையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய இந்த கடுமையான சட்ட நகர்வுகளை எடுக்கும் தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சரிடம் வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில்   மேலும் கூறுகையில்.

நாட்டில் போதைப்பொருள் பரவல் மற்றும் அதனுடன் கூடிய குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால் இன்று நாடே பாரிய நெருக்கடியினை சந்திக்க நேர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் நாட்டில் எதோ ஒரு மூலையில் கொலை, கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பாதாள கோஷ்டிகளின் அடாவடித்தனம் காரணமாக சாதாரண பொதுமக்களின் நிம்மதி கெட்டுள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகமாக பரப்பப்படுகின்றன. இளம் சமூகத்தினை மீட்டெடுப்பதில்  பாரிய சவாலான நிலைமைகள் இன்று உருவாகியுள்ளன.

இந்த முக்கியமான  பிரச்சினை குறித்து அமைச்சரவையில் நாம் பேசினோம். அனைத்து அமைச்சர்களும் இந்த நிலைமையினை வன்மையாக கண்டித்து அதற்கான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து பேசினர். ஆகவே அமைச்சரவையில் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து இந்த குற்றவாளிகளை தண்டிக்க கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியிருந்தோம். நாட்டில் போதைபொருள் கடத்தல், ஆட்கடத்தல், பாதாள கோஷ்டிகளின் செயற்பாடுகள் ஆகியவற்றுடன்   தொடர்புபட்ட நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானம் எம்மத்தியில் உள்ளது. ஜனாதிபதிக்கு எமது நிலைப்பாட்டை தெரிவித்தோம். 

ஜனாதிபதியும் எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டார்.  அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதி அமைச்சருக்கும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சுக்களுடன் விரைவில் கலந்துரையாடி கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli