Verified Web

பொறுப்புதாரிகள் செயற்படுவார்களா

2018-07-10 05:06:41 Administrator

யூ.என்.ஏ. மஜீட்
சாய்ந்தமருது – 14.

இலங்­கையில் 2 மில்­லியன் முஸ்­லிம்கள் காணப்­ப­டு­கின்­றனர். ஆனால் மிகவும் அழ­கான கலி­மாவை மொழிந்து சிறப்­பான இஸ்­லாத்தில் வாழும் நாம் உண்­மை­யா­கவே எமது முஸ்லிம் சமூகம் சத்­தி­யத்தில் தான் உள்­ளோமோ என கேட்க தோன்று­கின்­றது. அந்­த­ள­வுக்கு எமது மத்­தியில் வீட்­டுக்கு வீடு வாசற்­படி என்ற நிலையில் முஸ்­லிம்­களின் அத்­தனை விட­யங்­க­ளிலும் ஒரு மெத்­தனப் போக்கைக் கொண்ட எந்­த­வொரு விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுக்கும் இட­ம­ளிக்க முடி­யாத ஓர் துர­திஷ்­ட­மான நிலை எமது மத்­தியில் தொடர்ந்த வண்­ணமே உள்­ளன. எமது முஸ்லிம் சமூ­கத்தை வழி நடத்திச் செல்­லக்­கூ­டிய பொறுப்­பு­தா­ரி­களின் பொறுப்­பற்ற நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக எமது முஸ்லிம் சமூகம் எத்­தனை கூறு­க­ளாக பிரிந்து சின்­னா­பின்­ன­மாகி இஸ்­லாத்தில் அனு­ம­தித்த அங்­கீ­க­ரித்த சட்டம், ஒழுங்கு விதி­க­ளை­யெல்லாம் உதா­சீனம் செய்­த­வர்­க­ளாக யாருக்கும் கட்­டுப்­ப­டாமல் தன்­னிச்­சை­யாக செயற்­படும் அதி­காரப் போக்­கா­னது அண்­மைக்­கா­ல­மாக மிகவும் உச்ச நிலையை எட்­டி­யுள்­ளது என்­ப­தனை நோன்புப் பெருநாள் பிறை விட­யத்தில் நாம் கண்டோம். ஆம் உண்­மை­யா­கவே இந்த பிறை பார்க்கும் விவ­கா­ரத்தை நோக்­கும்­போது 1989 இல் இது விட­ய­மாக பல பிரச்­சி­னைகள் முதலில் தோன்­ற­லா­கின. மேற்­படி அந்த வருடம் நோன்புப் பெரு­நா­ளுக்­கான பிறை நோன்பு (29) நிறை­வுற்ற நிலையில் பிறையை பொலன்­ன­றுவை, கிண்­ணியா போன்ற பிர­தே­சங்களில் கண்­ட­தாக உறுதி செய்­யப்­பட்­ட­போதும் ஜம்­இய்யத்துல் உலமா சபை அதனை ஏற்க மறுத்­து­விட்­டது. பின்னர் அன்­றி­ரவு சஹர் செய்யும் நேரத்தில் பெருநாள் என அறி­விக்­கப்­பட்­டது. மேற்­படி விடயம் அன்று முஸ்லிம் மக்­களின் மத்­தியில் பேசு பொரு­ளாக மாறி­யி­ருந்­தன. ஆனால் இவ்­வா­றான பின்­னல்­க­ளி­லி­ருந்து முஸ்லிம் மக்கள் விடு­பட்டு தங்­களின் மத விவ­கா­ரங்­களில் சுய­மாகச் செயற்­ப­ட­வேண்டும்  என்­ப­தற்­கா­கவே முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன புத்­த­சா­ச­னத்தில் இருந்து வந்த முஸ்லிம் கலா­சார பகு­தியை தனி­யாக செயற்­படும் வகையில் பிரித்துக் கொடுத்த­துடன் முஸ்­லிம்­களின் அனைத்து கலா­சார விட­யங்­களும் கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலை உள்­ள­டக்­கிய ஜம்­இய்­யத்துல் உலமா சபை மிகவும் திற­மை­யாக தங்­களின் கட­மை­களை நிறை­வேற்றி வந்­த­தனை எவ­ராலும் மறுக்க முடி­யாது. ஆனால் மேற்­படி முஸ்லிம் கலா­சாரப் பிரிவு புத்த சாச­னத்­தோடு இணைந்­தி­ருந்த சந்­தர்ப்­பங்­களில் கூட மேற்­படி பிறை பிரச்­சினை உரு­வா­க­வில்லை. உதா­ர­ண­மாக இலங்­கையில் 1974, 1978, 1994, 1995, 2004, 2006, 2009 ஆண்­டு­களில் நோன்பு 29 ஆகவும் 30 ஆகவும் நிறைவு செய்த நிலையில் ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் நோன்பு பெரு­நாளை மிகவும் சிறப்­பாகக் கொண்­டா­டி­னார்கள். ஆனால் 1989 இந்த பிறை பிரச்­சினை உரு­வா­கி­ய­துடன் 2015 லும் மேற்­படி விடயம் முஸ்­லிம்­களின் மத்­தியில் பேசு ­பொ­ரு­ளாக மாறி­ய­துடன் பிறையைக் கண்­ட­வர்கள் ஆதா­ரத்­துடன் ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு தெரி­வித்­த­போதும் அது நிரா­ரிக்­கப்­பட்ட நிலையில் அன்று சிலர் பர­வ­லாக நோன்புப் பெரு­நாளை கொண்­டா­ட­லா­யினர். இதே பிரச்­சினை மீண்டும் வந்து விடக்­கூ­டாது என பல­ராலும் எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் இந்த வரு­டமும் இது ஒரு தீராத பிரச்­சி­னை­யாக பிறை விவ­காரம் மேலோங்­க­லா­கி­யது. ஆனால் ஜம்­இய்­யத்துல் உலமா சபையில் பணி­யாற்­றிய சிலர் மன்னார், திகா­ரிய, அக்­க­ரைப்­பற்று போன்ற இடங்­களில் பிறை தென்­பட்­ட­தாகக் கூறப்­பட்­ட­தனை வெள்­ளிக்­கி­ழமை இரவு எட்டு மணிக்குப் பின்னர் இது விட­ய­மாக ஆராய்ந்து முடி­வெ­டுக்க இருந்­த­நி­லையில் கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லுக்குள் நுழைந்த சில கும்­பல்கள் ஜம்­இய்­யத்துல் உலமா சபைத் தலை­வரை தாக்க முற்­பட்­ட­துடன் வெள்­ளிக்­கி­ழமை நோன்பு என அறி­விக்­கு­மாறு உலமா சபை­யி­னரை அச்­சு­றுத்­தியும் உள்­ளனர். இந்த கும்­பல்­க­ளுக்கு அஞ்­சிய உலமா சபை­யி­னரும் செய்­வ­த­றி­யாது தடு­மா­றிய நிலையில் வெள்­ளிக்­கி­ழமை நோன்பு என அறி­விக்கும் நிலைக்கு தள்­ளப்­பட்­டனர். ஆனால் இலங்­கையில் அநே­க­மான இடங்­களில் சில பிரி­வி­னர்கள் வெள்­ளிக்­கி­ழமை பெரு­நாளை கொண்­டா­டி­யதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. மேலும் பலர் வெள்­ளிக்­கி­ழமை நோன்பு நோற்­கா­மலும் மேலும் பலர் நோன்பு நோற்­ற­வர்­க­ளா­கவும் மறுநாள் சனிக்­கி­ழமை பெரு­நாளைக் கொண்­டா­ட­லா­கினர். உண்­மை­யாக எமது ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொறுப்­பா­னது 2005 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் ஒரு மெத்­த­னப்­போக்கைக் கொண்­ட­தா­கவே காணப்­ப­டு­வ­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

குறிப்­பாக 2010 இல் நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வா­தி­க­ளினால் கொண்டு வரப்­பட்ட ஹலால், ஹபாயா போன்ற விட­யங்­க­ளிலும் இறுதி நேரத்தில் எவ­ரி­னதும் ஆலோ­ச­னை­க­ளையும் பெறாது இன­வா­தி­க­ளிடம் சர­ணா­க­தி­யா­கி­யது என்ற குற்­றச்­சாட்­டுக்கள் இந்த உலமா சபையின் மீது பல­ராலும் குற்றம் சுமத்­தப்­பட்டு வந்­தது. இவ்­வாறு அண்மைக் கால­மாக பிறை பிரச்­சினை உட்­பட முஸ்­லிம்­களின் பல­த­ரப்­பட்ட விட­யங்­க­ளிலும் எந்­த­வொரு காட்­ட­மான முடி­வு­க­ளையும் உலமா சபை மேற்­கொள்­ள­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்கள் அண்­மையில் பிறை விவ­கா­ரத்தில் பல முஸ்லிம் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும், கல்­வி­மான்கள், புத்­தி­ஜீ­விகள், மார்க்க அறி­ஞர்கள், சிவில் அமைப்­புக்கள், பாமர மக்கள் உட்­பட பல நூற்­றுக்­க­ணக்­கா­னோர்கள் மின்­னஞ்சல் வாயி­லா­கவும் மேலும் பல தொடர்பு சாத­னங்கள் ஊடா­கவும் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை முன்­வைத்­தி­ருந்­தனர். உண்­மை­யா­கவே இலங்­கையில் வாழும் 2 மில்­லியன் முஸ்­லிம்­களின் நிலையை நோக்­கும்­போது முஸ்­லிம்­களின் மஸ்ஜி­ஸு­துகள், வக்பு சபைகள், காதி நீதி­மன்­றங்கள், ஊர் பள்­ளி­வா­சல்கள், மத்­ர­ஸாக்கள், அதி­காரம் பெற்ற இஸ்­லா­மியப் பணி­ம­னைகள், நிர்­வாக சபைகள், அர­சியல் செயற்­பா­டுகள் போன்­ற­வற்றில் பல பிள­வுகள் காணப்­ப­டு­வ­துடன் மேற்­கூ­றப்­படும் விட­யங்­களில் அர­சியல் செல்­வாக்கும் பணத்தின் பலமும் ஊடு­ருவி இருப்­ப­தனைக் காணலாம். மேலும் நம்­நாட்டில் வாழும் முஸ்­லிம்­களின் இஸ்­லா­மிய வாழ்க்கை முறையை நோக்­கினால் ஐந்து பிரி­வு­க­ளாகப் பிரிந்து காணப்­படும் ஒரு துர­திஷ்­ட­வ­ச­மான நிலையைக் காணலாம். ஜம்­இய்­யத்துல் சுன்னத் ஜமாத் என்றும் தௌஹீத் ஜமாத் என்றும் மேலும் பல பெயர்­களில் செயற்­படும் ஜமாத்­தி­னர்கள் நபி­க­ளாரின் வழி­மு­றையும் சுன்­னாவும் மிகவும் தெளி­வாக காணப்­படும் நிலையில் மேற்­கூ­றப்­படும் ஒவ்­வொரு பிரி­வி­னர்­களும் முஸ்­லிம்­களின் மத்­தியில் ஒவ்­வொரு கருத்­துக்­களை முன்­வைப்­ப­துடன் இதுதான் அல்­லாஹ்வின் கட்­டளை, இதுதான் நபி­களார் எமக்குக் காட்டித் தந்த வழி­மு­றை­யென பிர­சாரம் செய்­வ­துடன் இறை இல்­லங்­களை பல பெயர் சூட்­டியும் அழைக்­கின்­றனர். மேலும் எம்மில் ஒரு சில பிரி­வி­னர்கள் ஐவே­ளையும் தொழத்­தே­வை­யில்லை. திக்­ர்கள் செய்தால் போதும் என்ற மன­நி­லையில் செயற்­ப­டு­கின்­றனர். ஆனால் இந்த நாட்டில் வாழும் மிகவும் குறைந்த வீத­மாகக் காணப்­படும் எமது முஸ்லிம் சமூ­கத்­தி­னர்க்கு ஒரு சிறந்த இஸ்­லா­மியத் தலை­மைத்­துவம் கிடை­யா­தது ஒரு சாபக்­கே­டா­கவே காணப்­ப­டு­கின்­றது.

இன்று எமது முஸ்­லிம்­க­ளின சகல துறை­க­ளிலும் லஞ்சம், ஊழல், அர­சியல், ஆதிக்கம், பணத்தில் செல்­வாக்கு, சுய­நலம், வசை­பா­டுதல், புறம்­பே­சுதல், பழி­வாங்கல், போட்டி, பெறாமை, சண்­டித்­தனம், காழ்ப்­பு­ணர்ச்சி, அகங்­காரம், தான்­தோன்­றித்­தனம், தர­மற்­ற­வர்­களை பொறுப்­பு­தா­ரி­க­ளாக நிய­மித்தல், பக்­கச்­சார்­பான செயற்­பா­டுகள் போன்ற இஸ்லாம் எதை எதை­யெல்லாம் நிரா­க­ரித்­ததோ அவை­க­ளை­யெல்லாம் மிகவும் கச்­சி­த­மாக எமது முஸ்லிம் தலை­மைகள் பொறுப்­பு­தா­ரிகள் போன்­ற­வர்கள் ஏனை­யோர்­களின் கருத்­துக்­களை கவ­னத்தில் கொள்­ளாது நான் பிடித்த முய­லுக்கு மூன்று கால் என்ற நிலையில் நான் சொன்னால் நீங்கள் செய்ய வேண்டும். அப்­படி முடி­யா­விட்டால் வெளி­யே­றி­விட வேண்டும் என்ற தார்பார் நிர்­வாக முன்­னெ­டுப்­பு­களே முஸ்­லிம்­களை வழி­ந­டத்­தக்­கூ­டிய பொறுப்­பு­தா­ரி­க­ளிடம் நிறைந்து விரிந்து காணப்­ப­டு­கின்­றன. அத்­துடன் இன்று பல பொறுப்புவாய்ந்த பணி­களில் போதிய கல்­வி­ய­றிவும் அனு­ப­வமும் இல்­லாத பலர் அர­சியல் செல்­வாக்கு, பணம் போன்­ற­வை­க­ளினால் பத­வி­களில் அமர்த்­தப்­ப­டு­கின்­றனர். ஆனால் இவர்­க­ளுக்கு தங்­களின் கையெ­ழுத்­தைக்­கூட சரி­யாக இடத்­தெ­ரி­யா­த­வர்­க­ளா­கவும் உள்­ளனர். ஆனால் நன்கு கற்­ற­றிந்த துடிப்­புள்ள துணி­வுடன் நீத­மாக செய­லாற்­றக்­கூ­டி­ய­வர்கள் அர­சியல் செல்­வாக்கு, பணம் போன்­ற­வைகள் இல்­லாமல் ஒரு நடுத்­த­ர­மா­ன­வ­ராக அல்­லது ஒரு ஏழைக் குடி­சையில் பிறந்து படித்­தவர் என்­ப­தனால் இந்த அநீதி அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்று வரு­வ­தனை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இன்று முஸ்­லிம்­களின் சன்­மார்க்கம் உட்­பட அர­சி­யல்­வரை வியா­பா­ர­ம­ய­மாக்­கப்­பட்­டுள்ள தனைக் காணலாம். எமது பொறுப்­பு­தா­ரி­க­ளாக காணப்­ப­டு­ப­வர்­க­ளிடம் மனித நேயமோ? மன­சாட்­சியோ? பொறு­மையோ அல்­லது விட்டுக் கொடுப்­பு­களோ? கிடை­யவே கிடை­யாது. அவர்­க­ளிடம் சமூ­கப்­பற்றோ, நாட்­டுப்­பற்றோ, சமூ­கத்­தினர் பற்­றிய கவ­லை­களோ இல்லை. யார் எப்­ப­டிப்­போ­னாலும் பர­வா­யில்லை. நான் சொகு­சாக வாழ­வேண்டும், என்னை விட மற்­றவர் உயர்ந்­து­வி­டக்­கூ­டாது எனும் சுய­நலம் காலூன்­றி­யதன் கார­ண­மா­கவே இன்று எமது முஸ்லிம் சமூகம் பல கூறு­க­ளாகப் பிரிக்­கப்­பட்டு தவ­றான வழியில் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. கடந்த காலங்­களில் இந்த முஸ்லிம் சமூகம் எத்­த­னையோ சவால்­க­ளுக்கு முகம் கொடுக்க நேரிட்­டது. ஆனால் எமது முஸ்லிம் மார்க்க அறி­ஞர்­களோ மற்றும் முஸ்­லிம்­களின் குரல் நாங்­களே எனக் கூக்­குரல் போடும் அர­சி­யல்­வா­தி­களோ எந்­த­வொரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் முஸ்­லிம சமூ­கத்தின் விட­யங்­களில் விட்­டுக்­கொ­டுத்து ஒன்­று­பட்டு செயற்­பட்­டது கிடை­யாது. காரணம் இஸ்­லாத்தை போதிக்கும் மார்க்க வழி­காட்­டிகள் மத்­தியில் பல பிரி­வுகள் போட்டா போட்­டிகள், அர­சி­ய­லிலும் பல பிரி­வுகள், ஆளுக்­கொரு தலை­மைத்­துவம், ஆளுக்­கொரு கொள்கை, பள்­ளி­வாசல் நிர்­வாக குழு மற்றும் செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு மத்­தியில் இடம்­பெறும் உட்­பூ­சல்கள், கருத்து முரண்­பா­டுகள், இதற்குப் பின்னால் ஆதிக்கம் செலுத்தும் அர­சியல் செல்­வாக்கு, பண­பலம் போன்­றவை சகல பொறுப்­ப­தி­கா­ரி­களின் மத்­தி­யிலும் ஒரு மெத்­தனப் போக்கை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தனை மறுக்­கவோ மறைக்­கவோ முடி­யாது. ஆனால் ஒரு சில பொறுப்­பு­தா­ரிகள் இறை­வ­னுக்குப் பயந்து தங்­களின் மன­சாட்­சிக்கு கட்­டுப்­பட்டு நீதி­யாக தங்­களின் கட­மை­களைச் செய்ய முற்­ப­டும்­போது அதற்கும் சிலர் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்த முனை­கின்­றனர். இதுதான் இன்­றைய எமது முஸ்­லிம்­களின் பின்­ன­டை­வுக்கும் அன்­னிய மதத்­த­வர்கள் இஸ்­லாத்தை கொச்­சைப்­ப­டுத்­து­வ­தற்கும் கார­ண­மில்­லாமல் தாக்­கு­வ­தற்கும் நாங்­களே கார­ண­மாக உள்ளோம். ஆனால் முஸ்­லிம்­க­ளா­கிய நாம் இந்­நாட்டில் பல மில்­லியன் ரூபாய்­களை செலவு செய்து பல மாடிகள் கொண்ட பள்­ளி­வா­சல்­களை உரு­வாக்­கு­கின்றோம். இவ்­வாறு இலங்­கையில் 2000 க்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் எம்மில் தொழு­ப­வர்­களின் வீதத்தைப் பார்த்தால் வெறும் 15 வீதம் மட்­டுமே. ஆனால் எம்மில் எண்­பது வீத­மா­னோர்­க­ளிடம் நாங்கள் முஸ்லிம் இஸ்­லாத்தை பின்­பற்­று­கின்றோம் என்ற பெய­ர­ளவில் மட்­டுமே செயற்­ப­டு­கின்­றனர். உதா­ர­ண­மாக கூறின் பௌத்த, கிறிஸ்­தவ, யூதர்­களின் மத்­தியில் காணப்­படும் கடவுள் மீதான இறுக்­க­மான நம்­பிக்கை கூட எமது முஸ்­லிம்கள் அல்­லாஹ்வின் மீதோ அவ­னது தூதர் நபி (ஸல்) அவர்கள் மீதோ அச்­சமோ நேசமோ காட்­டப்­ப­டு­வ­தில்லை. ஆனால் இஸ்லாம் எமக்கு இல­கு­வாக்­கப்­பட்ட ஒரு சன்­மார்க்­க­மாகும். எமக்கு (நபி) அவர்­களின் வழி­காட்­டலில் எத்­த­னையோ முன்­மா­தி­ரிகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் நாம் இதனை எம்மில் எத்­தனை பேர்கள் பின்­பற்­று­கின்றோம் என்று பார்த்தால் அது வெறும் ஐந்து வீதம் மட்­டுமே. குறிப்­பாக நபி (ஸல்) அவர்கள் மர­ணித்த வேளையில் ஸஹா­பாக்கள் நிலை­கு­லைந்து காணப்­பட்­டார்கள். ஆனால் கிலா­பத்தை ஏற்றுக் கொண்ட அபூ­பக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் மிகவும் நிதா­ன­மாக செயற்­பட்டு அனை­வ­ரையும் ஒன்­று­ப­டுத்தி இஸ்­லா­மிய ஆட்­சியை சிறப்­பாக மேற்­கொண்­டார்கள்.

ஒரு சமயம் இந்­திய பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு இந்­திய லோக் சபையில் உரை­யாற்­றி­ய­போது தலை­மைத்­து­வத்­துக்கு மீண்டும் ஒரு உமர் பிறந்து வர வேண்டும் எனக் குறிப்­பிட்டார். ஒரு சமயம் (நபி ஸல்) அவர்கள் சில ஸஹா­பாக்­க­ளுடன் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­தார்கள். அப்­போது அங்கே வந்த ஒரு மனிதர் (நபி ஸல்) அவர்­க­ளிடம் கியாமத் நாள் எப்­போது வரு­மெனக் கேட்டார். அதற்கு நபி­ய­வர்கள் கூறி­னார்கள்; தகு­தி­யற்­ற­வர்கள் பத­வி­களில் அமர்த்­தப்­ப­டு­வார்கள். இதுவும் கியாமத் நாளின் அடை­யா­ளங்­களில் ஒன்­றாகும் என பதி­ல­ளித்­தார்கள். இதுதான் இன்று எமது முஸ்­லிம்­களின் மத்­தியில் மேலோங்கி காணப்­ப­டு­கின்­றன. மிகவும் குறைந்த பெரும்­பான்­மை­யுடன் வாழும் எமக்கு மத்­தியில் எத்­தனை பிரி­வுகள், கருத்து முரண்­பா­டுகள், ஆளுக்­கொரு மார்க்கம், ஆளுக்­கொரு கொள்கை, ஆளுக்­கொரு அர­சியல், ஆளுக்­கொரு தலை­மைத்­துவம், ஆளுக்­கொரு பிறை, ஆளுக்­கொரு பெருநாள் என தடி எடுத்­த­வர்கள் எல்லாம் வேட்­டைக்­காரன் என்ற நிலை எமது சமூ­கத்­திற்குள் ஊடு­ருவி எதுவும் அறி­யாத அப்­பாவி முஸ்­லிம்­களை அர­சியல் ரீதி­யா­கவும், மார்க்க ரீதி­யா­கவும் பல கூறு­க­ளாகப் பிரித்து தங்­களின் சுய­நலத் தேவை­க­ளையும், அதி­கா­ரங்­க­ளையும், பட்டம் பத­வி­க­ளையும் அடைந்து கொள்­வ­தற்­காக எதையும் செய்­வ­தற்குத் துணிந்­த­வர்­க­ளாக சண்­டி­யர்­க­ளாக செயற்­ப­டக்­கூ­டிய ஓர் துர­திஷ்­ட­மான நிலையே காணப்­ப­டு­வ­துடன் இஸ்லாம் எமக்குக் காட்டித் தந்த அனைத்து நற்­பண்­பு­களும் ஒழுக்க விழு­மி­யங்­களும் இல்­லாமல் செய்­யப்­பட்டு இப்­ப­டித்தான் வாழ வேண்டும் என்ற இஸ்­லாத்தின் கண்­டிப்­பான கட்­ட­ளை­களை உதா­சீனம் செய்­த­வர்­க­ளாக எப்­ப­டியும் வாழலாம் என்ற மன­நி­லையில் எமது பொறுப்­பு­தா­ரிகள் மட்­டு­மின்றி பெரும்­பா­லான முஸ்­லிம்கள் இதற்குள் அகப்­பட்ட சீர­ழிந்து சின்­னா­பின்­ன­மாகிக் கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் அப்­பா­ஸி­யரின் கிலா­பத்­திற்குப் பின்னர் மேற்­படி இந்த முஸ்லிம் சமூ­கத்­திற்கு வழிகாட்­டக்­கூ­டிய கலீ­பாவோ ஒரு சிறந்த தலை­மைத்­து­வமோ இன்­று­வரை கிடை­யா­ததே முஸ்­லிம்­களின் இன்­றைய நிலைக்கு பிர­தான கார­ண­மாகக் காணப்­ப­டு­கின்­றது. ஆனால் பொறுப்­பு­தா­ரி­களும் இவை­களை உணர்ந்து நாம் யார், எமது பணி என்ன எதற்­காக நாம் இந்தப் பணியில் அமர்த்­தப்­பட்டோம், எமது கட­மையை இஸ்­லாத்தின் அடிப்­ப­டையில் நிறைவு செய்­கின்­றோமா, இதன் முன்பின் விளை­வு­களை அறிந்து செயற்­ப­டு­கின்­றோமோ என்ற சிந்­தனை ஏற்படாதவரை தொடர்ந்தும் எமது முஸ்லிம் சமூகம் உட்பட எமது எதிர்கால சந்ததியினர்கள் கூட எதிர்காலத்தில் சீரழியும் ஒரு நிலைமையினைத் தோற்றுவிக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

பொதுவாக ஒரு பாடசாலையின் அதிபராகக் காணப்படுபவர் வெறும் பார்வையாளராக மட்டும் இருக்க முடியாது. மாறாக அவர் அந்தப் பாடசாலையின் உயர்ச்சி, எழுச்சி, ஒழுக்க மேம்பாடு, திட்டமிடல், அதன் சிறந்த பெறுபேறுகள் போன்ற மேலும் பல விடயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஒரு பாடசாலை ஒரு சமூகத்தின் கண்ணாடியாகவும் ஒரு சமூகத்தின் கண்ணாடியாக பாடசாலையும் காணப்படுகின்றன. இவ்வாறு அனைத்து துறைகளிலும் பொறுப்புதாரிகளாகக் காணப்படுபவர்கள் முதலில் தங்களின் ஈமானை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் இறையச்சம் எப்போதும் காணப்படல் வேண்டும். இறைவன் எமது செயல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு பொறுப்புதாரிகளிடம் மட்டுமின்றி ஒவ்வொரு முஸ்லிம்களின் உள்ளங்களிலும் மலர வேண்டும். ஏனெனில் (நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்; கியாமத் நாளில் முதன் முதலாக விசாரிக்கப்படுவர்கள் முஸ்லிம்களை வழிநடத்திய உலமாக்கள், ஆலிம்கள், அரசியல் தலைமைகள், பொறுப்புதாரிகளே எனக் கூறினார்கள். ஆகவே நாம் யாராக இருந்தாலும் இறைவனின் கேள்வி கணக்குகளிலிருந்தும் அவனது தண்டனைகளிலிருந்தும் எவருமே தப்பவே முடியாது என்ற உண்மையை உணர்ந்தவர்களாக இஸ்லாத்தின் வழிகாட்டலில் எமது பணியைத் தொடர முயற்சிப்போமாக.
-Vidivelli