Verified Web

நியூயோர்க் டைம்ஸ் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள்

2018-07-06 05:03:20 Administrator

ஏ.எல்.எம்.சத்தார்

2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அரசு ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இன்று வரை­யிலும் அர­சியல் அரங்கில் பர­ப­ரப்­பூட்டும் விட­யங்கள் சூடு­பி­டித்­துக்­கொண்டே வரு­கின்­றன. இவ்­வ­ரசை எப்­ப­டியும் கவிழ்த்து மீண்டும் அதி­கா­ரத்­திற்கு வர­வேண்டும் என்­ப­தி­லி­லேயே மகிந்த தரப்­பினர் பல்­வேறு வழி­க­ளிலும் காய்­களை நகர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். இந்த வகையில் பிணை­முறி விவ­காரம் சூடு­பி­டித்துக் கொண்­டி­ருக்­கிற நிலையில் எதிரும் புதி­ரு­மான குற்­றச்­சாட்­டுக்கள் ஆளும் தரப்பு மீதும் கூட்டு எதி­ரணி மீதும் எறி­யப்­பட்டுக் கொண்டே வரு­கின்­றன. இந்­த­வ­கையில் கடந்­த­வாரம் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வெளி­வரும் பிர­பல பத்­தி­ரி­கை­யான ‘த நியூயோர்க் டைம்ஸ்’ பத்­தி­ரி­கையில் வெளி­யான புல­னாய்வுக் கட்­டு­ரை­யொன்று உள்­நாட்டில் மட்­டு­மன்றி சர்­வ­தே­சமட்டத்­திலும் பாரிய தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

2015 ஜனா­தி­பதித் தேர்­தலின் போது மகிந்த ராஜ­பக்­ ­ஷவின் தேர்தல் பரப்­புரை நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சீனா­வி­ட­மி­ருந்து 7.6 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டமை குறித்தே மேற்­படி ஊடகம் அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஏற்­க­னவே கடந்த பொதுத் தேர்தல் பிர­சாரப் பணி­க­ளுக்­காக  பேர்­பச்­சுவல் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து 118 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பணம் பெற்ற விடயம் நாட்டில் சில மாதங்­க­ளாக பேசு பொரு­ளாக உள்­ளது. அவர்­களில் மூவர் தான் பெற்றுக் கொண்­ட­மையைப் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளனர். ஏனைய 115 பேரும் யார் என்­பது இன்னும் துலங்­க­வில்லை. சில­வேளை இக்­க­ணிப்­பீட்டில் எவ்­வ­ளவு தூரம் உண்மை உள்­ளதோ என்­பது ஒரு புற­மி­ருக்க, இப்­போது முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த மிகவும் பாரிய பணச்­சு­மை­யொன்றைப் பெற்­றுள்ள தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

தன் பத­விக்­கா­லத்தின் போது அபிவிருத்து போர்வையில் நாட்டைப் பெரும் கடன் சுமையில் தள்ளி நாட்­டைக்­குட்டிச் சுவ­ராக்­கி­யுள்ள குற்­றச்­சாட்டு மகிந்­த­மீது சுமத்­தப்­பட்­டுள்­ளதை நாம் அறிவோம். அந்தக் கடன் சுமையை இந்த அரசு சிறுகச் சிறுக விடு­வித்­துக்­கொண்­டி­ருப்­ப­தா­லேயே நாடும் மக்­களும் இன்று பெரும் பொரு­ளா­தார நெருக்­க­டியை சந்­தித்து கொண்­டி­ருக்­கி­றது. இந்த அவல நிலை­யையும் கூட்டு எதி­ர­ணியில் இருந்து கொண்டு மகிந்­தவும் அவ­ரது சகோ­த­ரர்கள் உள்­ளிட்ட அணி­யினர் அரசின் மீது சேறு பூசிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

எப்­ப­டியும் ஆட்­சியை பிடிக்க வேண்டும் என்­பதில் பகீரதப் பிர­யத்­த­னத்தில் ஈடு­பட்டுக் கொண்­டு­மி­ருக்­கின்­றனர். ஆரம்­பத்தில் இரண்டு போயா தினங்­க­ளுக்குள் ஆட்சி கவிழும் என்­றனர். அது பலிக்­காது போன­போது, இரண்டு வெசாக் போயா என்று பல்­டி­ய­டித்­தனர். இப்­போது 2020 என்று அரசின் பத­விக்­காலம் முடியும் தருணம் பார்த்திருக்கின்றனர் அதுவரை அர­சுக்கு சைட்டம் உள்­ளிட்ட பல்­க­லைக்­க­ழக மாணவர் போராட்டம், அரச பிர­தான நிறு­வ­னங்­க­ளது வேலை நிறுத்­தங்கள் என்று அர­சுக்கு முட்­டுக்­கட்டை போட்டுக் கொண்டே உள்­ளனர். அத்­த­னைக்கும் தம் அணியைச் சேர்ந்தோர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள எத்­த­கைய ஊழல் மோசடிக் குற­றச்­சாட்­டுக்­களும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என்ற தெம்­பு­டனே வீராப்புக் கணை வீசி­வந்­த­மையே கடந்த கால­வ­ர­லா­றாகும்.

இறாலைப் போன்று தம்மை சுத்­த­வான்கள் என்று போட்டு வந்த கூப்­பா­டு­க­ளுக்கு முத்­தாய்ப்பு வைக்கும் வகை­யிலே நியூயோர்க் டைம்ஸ் கட்­டு­ரையில் அழுத்தம் திருத்­த­மாக தக­வல்­களை வெளி­யிட்­டுள்­ளது.

மேற்­படி தகவல் வெளி­வந்­துள்ள குறித்த கட்­டு­ரையில்,

"சீனா­வுடன் மகிந்த ராஜபக் ஷ மிக நெருக்­க­மான உற­வு­களை வைத்­தி­ருந்தார். 2015 ஜனா­தி­பதித் தேர்தல் சூடு­பி­டித்­தி­ருந்­த­போது மகிந்த ராஜபக் ஷ வட்­டத்­திற்கு பெரு­ம­ள­வான நிதி பாய்ச்­சப்­பட்­டுள்­ளது. குறைந்த பட்சம் 7.6 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பணம் சீனாவின் பொறி­யியல் கட்­டு­மான நிறு­வ­னத்தின் ஸ்ரான்டட் சார்ட்டட் வங்கி கணக்­கி­னூ­டாக மகிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக வழங்­கப்­பட்­டுள்­ளது.

தேர்­த­லுக்கு 10 தினங்­க­ளுக்கு முன்­ன­தாக 3.7 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் தொகைக்­கான காசோலை வழங்­கப்­பட்­டுள்­ளது. 678,000 அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான ரீ–சேர்ட்­டுகள், இதர பொருட்கள், அச்­ச­டிக்­கப்­பட்ட பரப்­புரை பொருட்கள் வழங்­கப்­பட்­டுள்ளன.

297,000 டொல­ருக்கு ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு பெண்­க­ளுக்­கான சேலைகள் உள்­ளிட்ட அன்­ப­ளிப்புப் பொருட்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. மகிந்­தவின் முக்­கிய ஆத­ரவா­ள­ரான பௌத்த பிக்கு ஒரு­வ­ருக்கு 38,000 டொலர் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மகிந்­தவின் அதி­கா­ர­பூர்­வ­மான வசிப்­பி­ட­மாக இருந்த அல­ரி­மா­ளி­கைக்கு1.7 மில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான இரண்டு காசோ­லைகள் தன்­னார்­வ­லர்­களால் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இவற்றில் பெரும்­பா­லான கொடுப்­ப­ன­வுகள் சீனாவின் துறை­முக பொறி­யியல் கட்­டு­மான நிறு­வ­னத்தின் துணை கணக்­கு­களின் ஊடா­கவே வழங்­கப்­பட்­டுள்­ளன…….” என்று தொடரும் அக்­கட்­டு­ரையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

இது விட­ய­மாக ஆளும் தரப்பு சார்­பா­கவும் கூட்டு எதி­ரணி சார்­பா­கவும் எதிரும் புதி­ரு­மான விமர்­ச­னங்கள் எழுந்த வண்­ண­முள்­ளன. இரு­த­ரப்­புக்­களைச் சார்ந்த ஊடக மாநா­டுகள் கொழும்பில் சூடு­பி­டித்­துள்­ளன.

நாட்டை நஷ்­டத்தில் தள்­ளி­யுள்ள இந்த மோசடி குறித்து விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் பிணை­முறி விவ­கா­ரத்தை கையாண்­டது போன்று ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்று அமைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்றும் கோரிக்­கைகள் சிவில் அமைப்­புகள் பலவும் விடுத்த வண்­ண­முள்­ளன. ஆளுந்­த­ரப்பு அர­சி­யல்­வா­திகள் பலரும் விசா­ரணை நடத்­தப்­பட்ட வேண்­டு­மென வற்­பு­றுத்தி வரு­கின்­றனர்.

நாட்டில் நல்­லாட்­சியை விரும்பும் அமைப்புகளும் தனி நபர்களும் தம் ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர். தம்­பர அமி­ல­தேரர் சீனாவின் நிதி வழங்­கி­யுள்ள இத்­த­கைய முறைமை நாட்டின் இறை­யாண்­மைக்கு அச்­சு­றுத்­த­லாகும் என்று எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். இது விட­ய­மாக பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் ஒன்று உட­ன­டி­யாக மேற்­கொள்­ள­வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் புர­வசி பலய என்ற அமைப்பு கொழும்பில் நடத்­திய ஊடக மாநாட்டில் உரை­யாற்றும் போதே தம்­பர அமி­ல­தேரர் மேற்­கண்ட கருத்­தையும் வெளி­யிட்­டுள்ளார். மேலும் அவர் தெரி­விக்­கையில்,

"ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் ராஜபக் ஷ மிகவும் பாரி­ய­ளவில் பணச் செல­வீ­டு­களை மேற்­கொண்­டதை நாம் அறிவோம். இத்­தொகைப் பணம் நாம் எங்­கி­ருந்து வந்­தது என்­பதை எங்­களால் ஊகித்துக் கொள்­ள­மு­டி­ய­வில்லை. ஹம்­பாந்­தோட்டை துறை­முக அபி­வி­ருத்திக் கணக்­கிற்கே இப்­பணம் அனுப்­பப்­பட்­டுள்­ளது. ஆனால், துறை­முக அபி­வி­ருத்தி பணி­யெ­தற்கும் இப்­பணம் செல­வி­டப்­ப­ட­வில்லை.

அத்­துடன் பாரிய வட்­டிகே இப்­பணம் பெறப்­பட்­டுள்­ளது. இந்த வட்டிச் சுமையும் இந்­நாட்டு மக்கள் தலை­யிலே விழு­கி­றது. எனவே இப்­போது இந்த வட்டித் தொகையைக் கணக்­கிட்டு மகிந்­த­வி­ட­மி­ருந்தே பெற்றுக் கொள்ள அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

சீனாவின் நட­வ­டிக்­கை­யா­னது, எமது நாட்டின் இறை­யாண்­மையை மீறும் செய­லாகும். வட்டி குட்­டிப்­போட்டு கடனைத் திருப்பிச் செலுத்­த­மு­டி­யாத பட்­சத்தில் நாட்டின் முக்­கிய பிர­தே­சங்­களை சீனா­வுக்கு தாரை­வார்த்துக் கொடுக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­ப­டு­வது உறுதி. இது மிகவும் பார­தூ­ர­மான விளைவு. ஆனால், பிணை முறி­வுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்த ஊட­கங்கள் இதனை அவ்­வ­ள­வாக அலட்டிக் கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை. இந்தப் பணத்தைக் கொண்­டுதான் கடந்த மேதி­னத்­திலும் பாரிய செல­வு­களைச் செய்­யுள்­ளார்கள் என்று தேரர் தெரி­வித்­துள்ளார்.

சீன துறை­முக நிறு­வ­னத்தால் எனக்கு பணம் எதுவும் வழங்­கப்­ப­ட­வில்லை என்று மஹிந்த ராஜபக் ஷ நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையின் கூற்றை மறுத்­துள்ளார். 2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் நடந்­த­தாக கூறும் இவ்­வி­டயம் 2020 ஆம் ஆண்டு தேர்­தலை முன்­னிட்டு என்­மீது சேறு பூசவே எடுத்தாளப்பட்டுள்ளது என்று மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

மேலும் இவ்­வி­டயம் 2015 ஜூலை மாதம் ரொய்டர் நிறு­வனம் ஏற்­க­னவே வெளி­யிட்­டி­ருந்­தது. அப்­போது நல்­லாட்சி அரசும் சீனாவின் அபி­வி­ருத்திப் பணி­களை இடை­நி­றுத்­தி­யி­ருந்­தது. விசா­ர­ணை­க­ளையும் நடத்­தி­யது. சுமார் 1 ½ வரு­டங்­க­ளாக இடம்­பெற்ற விசா­ர­ணையில் எதுவும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. அதன் பின்­னரே சீன நிறு­வ­னத்தின் பணிகள் மீண்டும் தொடர அரசு அனு­மதி வழங்­கி­யது.

எனவே இப்­போது எழுந்­துள்ள முறைப்­பா­டு­க­ளுக்கு நான் எத்­த­கைய விசா­ர­ணை­க­ளையும் எதிர்­கொள்ளத் தயா­ரா­கவே உள்ளேன் என்று மகிந்த ராஜபக் ஷ தன்­பக்க நியா­யங்­களை முன்­வைத்து அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்ளார்.

இதே­போன்றே பஷில், கோத்­தா­பய, நாமல் ராஜபக் ஷாக்­களும் மேற்­படி டைம்ஸ் பத்­தி­ரிகைத் தக­வல்­களைக் கண்­டித்தும், மறுத்தும் கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளனர். நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கைக்கும் அர­சாங்­கத்­துக்­கு­முள்ள தொடர்பை தேடிப்­பார்க்­க­வேண்டும். அப்­பத்­தி­ரி­கைக்கு இத்­த­க­வல்­களை வழங்­கி­யவர் யார் என்­ப­தை­யெல்லாம் கண்­ட­றிய அர­சாங்கம் விசா­ரணை நடாத்­த­வேண்டும். இப்­பத்­தி­ரி­கையில் வெளி­யான செய்­தி­களின் உண்மைத் தன்மைக் குறித்து கடந்த காலங்­களில் பிரச்­சி­னைகள் எழுந்­துள்­ளன.

அப்­போது வெளி­யான தக­வல்கள் பிழை­யா­ன­வை­யென்று பின்னர் அப்­பத்­தி­ரி­கையே ஏற்­றுக்­கொண்ட சம்­ப­வங்­களும் உள்­ளன. சிலரின் அர­சியல் தேவை­க­ளுக்­காக குறித்த பத்­தி­ரிகை தகவல் வெளி­யி­டு­வ­தா­கவும் உல­க­ளா­விய ரீதியில் அபிப்­பி­ராயம் நில­வு­வ­தா­கவும் நாமல் ராஜபக் ஷ ஊடக மாநாட்டில் கருத்துத் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் மகிந்த தரப்­பி­ட­மி­ருந்து குறித்த பத்­தி­ரி­கையின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சமூக நலன்­புரி இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க இலஞ்ச ஊழல் மோசடி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­யொன்­றுக்குச் சென்­றி­ருந்­த­போது டைம்ஸ் பத்­தி­ரிகை தகவல் விட­ய­மாக ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கேள்வி எழுப்­பி­ய­போது, மேற்­படி பத்­தி­ரிகை செய்­தியை மகிந்­தவால் மறுக்­க­மு­டி­யாது. முன்னாள் ஜனா­தி­பதி மகிந்­தவும் அவ­ரது சகாக்­களும் பணம் பெற்­றுள்­ளமை பொய்­யல்ல. அது பொய்­யென்றால், குறித்த பத்­தி­ரிகை மீது அவர்கள் வழக்குத் தாக்கல் செய்­ய­வேண்டும். இப்­பத்­தி­ரிகை ஆய்­வுகள் செய்தே தகவல் வெளி­யி­டு­கி­றது. அது உலகின் நம்­பிக்­கைக்குப் பாத்­தி­ர­மான பத்­தி­ரி­கை­யாகும். அது உண்மைத் தக­வ­லையே வெளி­யி­டு­கி­றது.

சீன துறை­முக அபி­வி­ருத்­தி­யுடன் தொடர்­பு­டைய சைனா ஹார்பர் நிறு­வனம் ஊடாக பணம் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஹிட்­லரின் ஆட்சி பற்­றிக்­கூறி பிர­பல்­ய­மான தேரர் ஒரு­வரும் பணம் பெற்­றுள்ளார். எனவே மகிந்­தவும் இத்­தே­ரரும் சம்­பந்­தப்­பட்ட அர­சி­யல்­வா­தி­களும், சீனா­வி­ட­மி­ருந்து தாம் பணம் பெற­வில்­லை­யென்று நாட்டு மக்­க­ளிடம் சான்று பக­ர­வேண்டும் என்று அதன் போது ரஞ்சன் ராம­நா­யக்க சவால் விட்­டுள்ளார்.

இது இவ்­வா­றி­ருக்க, ஹம்­பாந்­தோட்டை துறை­முகம் குறித்து அமெ­ரிக்­காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையில் வெளி­யான செய்தி தொடர்­பாக இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷவுக்கு ஏதேனும் பிரச்­சினை இருக்­கு­மாயின், இலங்கை பத்­தி­ரி­கை­யா­ளர்­களை அச்­சு­றுத்­தாது, நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையின் சிரேஷ்ட ஆசி­ரி­யரை தொடர்பு கொள்­ளு­மாறு அப்­பத்­தி­ரி­கையின் செய்திப் பிரிவு ஆசி­ரியர் மைக்கல் சிலக்மன் ஊடக அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்ளார்.

2018, ஜூலை 3 ஆம் திகதி வெளி­யான அந்த அறிக்­கையின் சாரம்:

"த.நியூயோர்க் டைம்ஸ், ஹம்­பாந்­தோட்டை துறை­முகம்  தொடர்­பாக பாரிய குற்­றச்­சாட்­டுடன் சரி­யான ஆய்வு மேற்­கொண்டே மேற்­படி புல­னாய்வு கட்­டு­ரையை கடந்த ஜூன் 26 ஆம் திகதி வெளி­யிட்­டி­ருந்­தது.

இரண்டு பத்­தி­ரி­கை­யா­ளர்­களை விமர்­சிப்­ப­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ மற்றும் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அடங்­கிய குழு­வொன்று பத்­தி­ரி­கை­யாளர் மாநா­டொன்றை நடத்­தி­யுள்­ளது.

இவ்­வாறு பத்­தி­ரி­கை­யா­ளர்­களை அச்­சு­றுத்­து­வதை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. இந்த முயற்சி இலங்­கையில் விமர்­ச­னங்­களை மேற்­கொள்ளும் ஊடக சுதந்­தி­ரத்தை சீர்­கு­லைப்­பதாகவுள்ளது. அத்துடன் பொது மக்­க­ளுக்குப் பாத­க­மான தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்ளும் உரி­மையை இலங்­கை­ய­ருக்கு இல்­லா­தொ­ழிக்கும் நட­வ­டிக்­கை­யா­கவே தெரி­கி­றது.

மிகவும் சிர­மத்­துக்கு மத்­தியில் இந்த தக­வ­லுக்கு இரண்டு ஊட­க­வி­ய­லா­ளர்கள் உத­வி­யுள்­ளனர். இது தொடர்­பாக இந்த செய்­தி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக ஊடக மாநாட்டில் பகி­ரங்­க­மாக விமர்­சித்­துள்­ளனர்.

எனவே, இலங்கை பத்­தி­ரி­கை­யா­ளர்­களை மிரட்­டு­வதை விடுத்து த நியூயோர்க் டைம்ஸ் உடன் தொடர்பு கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­கிறோம் என்று அப்­பத்­தி­ரிகை அறிக்­கையின் சுருக்கம் அமைந்­துள்­ளது.

இந்­நி­லையில், இலங்­கையில் சூடு பிடித்­துள்ள இவ்­வி­வ­காரம் குறித்து  பாரா­ளு­மன்­றத்தில் எஸ்.எம்.மரிக்கார் எம்.பி எழுப்­பிய கேள்­வி­யொன்­றுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதி­ல­ளிக்­கையில் நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை செய்தி விட­ய­மாக முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷவிடம் விசா­ரணை மேற்­கொள்ளும் பொறுப்பை இலங்கை புல­னாய்வுப் பிரி­விடம் ஒப்­ப­டைத்­துள்ளேன். 600 பேரைக் கொன்றவருக்கு தம் கட்சியில் உப தலைவர், இராணுவ தலபதியாக இருந்தவரை சிறையில் அடைத்தனர். இது கடந்த ஆட்சியினரின் கைங்கரியம். டைம்ஸ் தகவல் விடயமாக விசா­ரணை அறிக்கை கிடைத்த பின்னர் ஆணைக்­கு­ழு­வொன்று அமர்த்தப்பட்டு விசாரணை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்; "முன்னாள், ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதைப்போலவே இன்று எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து ரஞ்சன் ராமநாயக்க பொலிஸ் முறைப்பாடொன்றை செய்துள்ளார். இது குறித்து குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணை முடிவின் பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்த விடயம் குறித்து மேற்படி பத்திரிகையின் ஊடகவியலாளர் கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

இது முன்னாள் ஆட்சியாளர்களின் பழக்கதோசமாகும். அவர்களது ஆட்சிக்காலத்தில் லசந்த, எக்னொலிகொட ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். கீத்நொயர், உபாலி தென்னக்கோன் ஆகியோர் தாக்கப்பட்டனர். இந்த நிலையில், நியூயோர்க் டைம்ஸ் ஊடகவியலாளர் மீதும் இவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன் உச்சகட்டம் இன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நிலைக்கு வந்துள்ளது. ஜனநாயகம் பற்றி பேசும் இவர்கள் முதலில் தாம் முன்வைத்த இந்த கருத்தினை மீளப்பெற வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்" நிலைமை இவ்வாறு பல வழிகளிலும் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. இதன் முடிவு குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-Vidivelli